Sunday, January 30, 2011

ஜோதிடம் கற்கலாம் வாங்க-1

ஜோதிடம் என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம்முடைய ரிஷி முனிகள் தொகுத்து வைத்த புள்ளி விவரங்களாகும் ( Statistics). ஜோதிட வல்லுனர்கள், பல்லாயிரக் கணக்கான மனிதர்களை, உற்று நோக்கி, அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த, நிகழ்வுகளை பதிவு செய்து, ஆராய்ந்து அதனை, முறைப்படி குரு சிஷ்யப் பரம்பரையாக மக்களுக்கு கணிதம் செய்து, பலன்களை கூறி வருகின்றனர். இந்த நேரத்தில், இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்ற புள்ளி விவரங்களை வைத்தே பலன் கூறப்படுவதால், ஜோதிட சாஸ்திரம் பொய் இல்லை, அது ஒரு கணிதமே என்று நடைமுறையில் நிரூபிக்கபட்டு வருகிறது.

உயர்நிலை கணக்கு பாடங்களில் ஒன்றே, Numerical Analysis என்ற ஒரு வகை கணக்குப் பாடமாகும். இந்த பாடத்தில் Forward & Backward Interpolations, Newton-Raphson Fomula போன்ற சூத்திரங்களை பயன்படுத்தி, கடந்த 1970, 1980, 1990, 2000, 2010 ஆம் ஆண்டுகளில் சென்னையின் மக்கள் தொகை (புள்ளி விவரங்கள்) தெரிந்து இருந்தால், 2020 ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் என்று சொல்லி விடலாம்.

இதேபோல் கணக்கில் மற்றொரு பிரிவு, Permutation and Combination என்ற வகையாகும். இதன் பயன்பாடு ஜோதிடத்தில் கூடுதலாக இருக்கிறது. ஆயிரக் கணக்கான யோகங்கள் இம்முறையிலேயே வகைப் படுத்தப் படுகிறது. இவ்வாறு ஜோதிடத்திற்கும், கணிதவியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதனால் தான், வாழும் கணித மேதை சகுந்தலா தேவி, ஜோதிடத்தையும் பிராக்டிஸ் செய்கிறாரோ!

ஜோதிடமும் அதைப்போல, நம்மிடம் இருக்கும், உலக நன்மை கருதி நம் முன்னோர்கள் நம்மிடம் கொடுத்துச் சென்ற, ஆயிரக்கணக்கான வருடங்களாக, லட்சக்கணக்கான மக்களிடம் எடுக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், அவர்கள் காட்டிய வழியில், சூத்திரங்களை வைத்து கணக்கீடு செய்து, பலன் கூறுவதால், ஜோதிடம் எப்போதும் பொய்யாகாது. அதனால் ஜோதிடமும் ஒரு அறிவியலேயாகும்.

ஃபிரெண்ட்ஸ் என்ற படத்தில், 100 ஆண்டுக்கும் மேற்பட்ட ஒரு கடிகாரத்தை, வடிவேலு உடைத்துவிடுவார். அதன் அருமை தெரியாமல், பழசா, நான் புதுசோ என்று நினைத்தேன் என்பார். நம்மிலும் பலர் இது போல, நம்முடைய அருமை பெருமைகளைத் தெரியாமல் இருக்கிறோம். அமெரிக்காவில் 100 ஆண்டு பழமை வாய்ந்த செருப்பைக் கூட பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள். ஆனால், நாம் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நம்மோடு இருக்கும் பொக்கிஷங்களின் அருமை தெரியாமல் இருக்கிறோம். அதனை தெரிந்துகொள்ளவோ, பாதுகாக்கவோ நினைப்பதுகூட இல்லை.

விஷயம் இல்லாமல் எந்த ஒரு கலையும், இலக்கியமும், சாஸ்திரமும் ஆயிரக்கணக்கான வருடங்களாக தாக்குப் பிடித்து நிலைத்து நிற்க முடியுமா? என்ற கேள்வியுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற முழக்கத்துடன்,
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க - 2


Wednesday, January 26, 2011

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-6

6 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-5)

நம்முடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த, மறக்கப்பட வேண்டிய, மறைக்கப் பட்ட விஷயத்தை ஜோதிடர் கூறிவிடுவாரோ என்ற அச்சம் பலருக்கு, இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக, ஜோதிடர் எவரும், ஜாதகரின் எதிர்காலத்தைக் குறித்தே பலன் கூறுவார்கள். ஆனால், ஜோதிடரை கலாய்க்கலாம், அல்லது அவரை சோதிப்பதற்காக கடந்த காலத்தைப் பற்றி கேட்பார்கள், ஏனெனில் கடந்த காலத்தில், நினைவு தெரிந்த காலத்தில் இருந்து, நடந்தவை அனைத்தும், ஞாபகத்தில் இருப்பதால், ஜாதகர் ஜோதிடரை சோதிக்க வேண்டி கடந்த காலத்தைப் பற்றி கேள்வி கேட்பதை, நான் பார்த்திருக்கிறேன். மற்றபடி பொதுவாக ஜோதிடர்கள், ஜாதகம் அவருடையது தானா என்று உறுதி செய்வதற்காக கடந்த காலத்தில் நடந்த ஒரு சில விஷயங்களை சொல்லுவார். இதற்கு அவர் சொல்லும் பதிலை வைத்து, ஜாதகம் அவருடையதுதானா என்று கண்டு பிடிப்பார். ஜாதகம் நல்ல முறையில் கணிதம் செய்யப்பட்டுள்ளதா, என்றும் கண்டு பிடிக்கலாம். அவ்வாறு உறுதி செய்வதற்காக, கேட்கப்படும் கேள்விகள் அந்தரங்கமாக இருக்காது. உதாரணத்திற்கு, இந்த வயதில், உங்களுக்கு காலில் அடிபட்டு இருக்கலாமே! போன்ற கேள்விகளாகத்தான் இருக்கும். ஜாதகர் கேட்டால் மட்டுமே, அந்தரங்கமான விஷயங்களை, உடன் யாரும் இல்லாத தருணத்தில் சொல்லுவார். ஒரு மருத்துவரிடம் ஆலோசிப்பதைப் போல், ஒரு நல்ல ஜோதிடரிடம் ஆலோசிக்கலாம். அவர்களும், தொழில் தர்மத்தை (Professional Ethic) கடைபிடிப்பார்கள். அதனால், அவசியமற்ற பயம் வேண்டாம்.

ஒரு வழியாக ஜாதகம் பார்க்கலாம் என்று முடிவெடுத்திருப்பீர்கள் என்று நினக்கிறேன். நல்ல விஷயம் எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும், தெரிந்து கொள்ளலாம். எல்லாம் வல்ல இறைவன், உங்களை வழி நடத்துவான்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க-1


ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-5

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-5

5 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-4)

இது பொதுவாக, அனைவருக்கும் வரும் பயம் தான். ஜாதகத்தில், உங்களுக்கு தோஷம் உள்ளது என்று கூறி, பணம் பறிப்பாரோ என்று பயப்படுவது இயற்கையே! பெரும்பாலான ஜாதகத்தில், தோஷம் இருப்பது அறிந்து நானும் வியப்புற்றுள்ளேன். தோஷம் இல்லாத ஜாதகத்தைப் பார்ப்பதே மிகவும் அரிது. நாம் இப்போது எடுத்துள்ள இப்பிறவி, போன ஜென்மத்தில் விதைத்ததை, இந்த ஜென்மத்தில் அறுவடை செய்யத்தானே! போன ஜென்மத்தில், புண்ணியம் செய்திருந்தால், இப்பிறவி எடுக்க அவசியம் இல்லையே. பிறவா நிலையை அடைந்து இருப்போம். கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ, பரலோகத்திலோ அல்லது ஜன்னத்திலோ இறைவன் அருகில் இருந்து, பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்து கொண்டு அல்லவா இருப்போம். அவதாரப் புருஷர்களான ஸ்ரீராமரின் ஜாதகமும், ஸ்ரீகிருஷ்ணரின் ஜாதகமும் தோஷம் உள்ள ஜாதகங்களே! அதனால், தோஷம் குறித்து பயப்படாமல், கவலைப்படாமல், இப்பிறவியை நன்கு அமைத்துக் கொண்டாலே போதும்.

தோஷம் உள்ள எல்லா ஜாதகத்திலும், ஏதோ ஒரு வகையில் தோஷ நிவர்த்தியும் அதே ஜாதகத்தில், இறைவன் அமைத்துக் கொடுத்திருப்பான். அதனை ஜோதிட வல்லுனர்கள், ஆராய்ந்து, அது எப்பொழுது நிவர்த்தியாகும் என்று தசா புத்தியையும், கோச்சாரத்தையும் ஆராய்ந்து சொல்லுவர், அதுவரை நீங்கள் சிறிது காத்திருக்க வேண்டும். அந்த காத்திருப்பு காலத்தில், இறைவனை மனசார வேண்டினாலே போதுமானது. ரிலீஸான அன்றே, பிளாக்கில் டிக்கட் வாங்கியாவது சினிமா பார்த்து விட வேண்டும், என்று நினைத்தால், அது உங்கள் தவறே! ஜோதிடர் தவறல்ல ! பரிகாரம் என்று சொல்லுவது, அதற்காக பணம் செலவு செய்வது, என்ற விஷயங்கள் எல்லாம், பிளாக்கில் டிக்கட் வாங்கி படம் பார்ப்பது போலத்தான் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.

மேற்கூறிய விளக்கங்கள் யாவும் தோஷத்திற்கு பொருந்துமேயொழிய, நோய்க்கு அல்ல. நோய் வந்தவுடன், உடனடியாக, அதற்கான காரணத்தையும், வைத்தியத்தையும் செய்ய வேண்டும். இதைத்தான் வள்ளுவர்,

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்று கூறினார். வள்ளுவர் நாடி, நாடி என்று சொல்கிறாரே என்று, தவறாகப் புரிந்து கொண்டு, நாடி ஜோதிடரிடம் போய் விடாதீர்கள். நோய்க்கு, ஜோதிட சாஸ்திரம், ரண-ருண ஸ்தானம் என்ற ஒரு வீட்டை, ஜாதகத்தில் ஒதுக்கியுள்ளது. அதனைக்கொண்டு, முன் கூட்டியே உங்களுக்கு வரக்கூடிய நோய்களை அறிந்து, உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளலாம். வருமுன் காப்பவனே அறிவாளி !

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்த பதிவு:

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-6


ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-4

4 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-3)

பாவத்தின் சம்பளம் மரணம். பாவ மன்னிப்பு கோருதல். உலகில் பிறந்த அனைத்து உயிர்களும், என்றோ ஒரு நாள் இறக்கத்தான் செய்யும், இதில் மனிதன் விதி விலக்கல்ல. அப்படி என்றால், 100 % மக்கள், எல்லோரும் பாவம் செய்கிறார்கள், அதனால் தான் மரணம் சம்பவிக்கிறது என்று சொல்லுகிறார்களா? பைபிள் வழி வந்த அனைத்து அப்போஸ்தலரும், கிறிஸ்துவும், அவர் சீடர்களும், போப் ஆண்டவர் உட்பட அனைவரும் பாவம் செய்தவர்கள்தான், அதனால் தான் அவர்களுக்கும் இறப்பு ஏற்படுகிறது, என்று ஒப்புக் கொள்கிறார்களா? கிறிஸ்து மீண்டும் உயிர்த்து எழுந்தார், அதனால் அவரைச் சொல்ல இயலாது, அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று வாதிடுவோரும் உளர். அவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் பதிவை பிறகு இடுகிறேன்.

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால், உலகில் எத்தனையோ குழந்தைகள் பல காரணங்களால் இறக்கின்றன. அக்குழந்தைகள் என்ன பாவம் செய்தன? அவ்வளவு சிறிய வயதில் பாவம் செய்ய இயலுமா? இதற்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன? அக்குழந்தைகள் போன ஜென்மத்தில் பாவம் செய்து இருக்கும், அதனால் இந்த ஜென்மத்தில், இந்த சிறிய வயதில் மரணம் நேருகிறது என்று சொல்லுவார்களோ? அப்படியென்றால், அவர்கள் முற்பிறவிப் பயன், ஊழ்வினை போன்ற பாரத நாட்டின், தத்துவங்களை, மெய்ஞானத்தை, ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தானே அர்த்தம். எனக்குத் தெரிந்த வரை, பைபிளிலும், அதனைத் தொடர்ந்து வந்த குரானிலும், பல பிறவிக் கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.

திருவள்ளுவர், ஊழ்வினைக்கு ஒரு அதிகாரம் ஒதுக்கியுள்ளார். ஜோதிட சாஸ்திரத்திலும், நமது ஞானிகள் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஜாதகத்தில் ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளார்கள். அதனைக் கொண்டு, உங்கள் முற்பிறவிப் பயனை அறிந்து கொள்ளலாம். முற்பிறவியின் வழியாக, இப்பிறவியில் உங்களுக்கு கிடைக்கும் யோக, அவயோகங்களை சொல்லலாம்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்த பதிவு:

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா-5


ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-3

3 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-2)
மூன்றாவதாக, மற்ற மதத்திற்கும், நமக்கும் உள்ள வேறுபாட்டை அல்லது தனித்தன்மையை, இழந்து விடக்கூடாது என்ற எண்ணமும் ஒரு காரணமே! எந்த மதத்திற்கும் தனித் தன்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லா மதங்களும் போதிப்பது அன்பைத்தான், எல்லா மதங்களும் காட்டுவது இறைவனை சென்றடையும் வழியைத்தான். கிறிஸ்து போதிக்கும் அன்பை, உலகப் பொதுமறையாம் திருக்குறளில், திருவள்ளுவர் அன்புடைமை என்ற ஒரு தனி அதிகாரம் ஒதுக்கி அதில் 10 குறட்பாக்களை எழுதியுள்ளார். அவர் கிறிஸ்து காலத்திற்கு முற்பட்டவர் என்று வரலாறு கூறுகிறது. அதற்காக, அவரை நாம் ஒரு மதத் தலைவராகவோ, இறைவனுக்கு இணையாகவோ கூறவில்லை. (திருவள்ளுவரும் ஒரு கிறிஸ்துவரே என்று கூறுகிற, வரலாறு தெரியாத ஒரு கிறிஸ்துவக் கூட்டமும் தமிழ் நாட்டில் உண்டு. அதைப் பற்றி இன்னொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்). கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகள் முன்பு பிறந்த புத்தரும் ஒரு படி மேலே போய், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய் என்று போதித்தார். அவரையும் தெய்வமாக பாரத நாட்டில் வழிபடவில்லை. (ஆனால் அவரையே தெய்வமாக வழிபடும் ஒரு அரக்கர் கூட்டம், தென்னிலங்கையில், முள்ளி வாய்க்காலில், என்ன வெறியாட்டம் போட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அன்பு என்றால் 1 கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒரு கூட்டம், அன்பை போதிக்கும் புத்தனை வழிபடுகிறது. வெட்கக் கேடு!).

பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், நீ எந்த கடவுளை வழிபட்டாலும், என்னை வழிபட்டதாகவே அர்த்தம் என்று கூறுகிறார். இதனையே நம்முடைய பேரறிஞர் அண்ணா, “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!“ என்று ரத்தின சுருக்கமாக சொன்னார். பாரத நாட்டில், சுதந்திரமாக சிந்திக்கும் வாய்ப்பு அனைவருக்கும் இருந்ததால், தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக, எவ்வித பயமும் இன்றி, சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களாகவும், தமிழில் செய்யுட்களாகவும் பதிவு செய்துள்ளனர். சைவ சித்தாந்தம், இறைவனை மூன்று விதத்தில் (உருவம், அருவம், அருவுருவம்) வழிபட நமக்கு வழி காட்டுகிறது. இறைவனின் தொழிலாக, ஐந்தொழிலையும் (படைத்தல், காத்தல், அழித்தல், காட்டல், மறைத்தல்) நமக்கு உணர்த்துகிறது. அதனால், அருவ வழிபாடு என்பது தமக்கே உரிய, தம்முடைய மதத்திற்கே உள்ள தனித்தன்மை, என்று வாதிடும் ஒரு சில மத வாதிகளை என்னெவென்று சொல்ல? நம்முடைய அறிவுக்கு எட்டிய வரை, எந்த ஒரு சித்தரும், முனிவரும் கோவிலில் உட்கார்ந்து தவமிருந்ததாகத் தெரியவில்லை. காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் தனியே அமர்ந்து, தவம் இருந்து, தாம் இருக்கும் இடத்திற்கு, இறைவனை வரவழைத்தாகவே, அறிகிறோம். அருவ வழிபாட்டை அவர்கள், பின்பற்றியுள்ளனர். இன்றளவிலும், ஞானிகள் அருவ வழிபாட்டை கடை பிடித்து, முக்தி நிலையை அடைகின்றனர். அதனால் எந்த மதத்திற்கும் தனித்தன்மை என்று ஒன்று கிடையாது, வழி பாட்டு முறைகளும், பழக்க வழக்கங்களுமே வேறுபடுகிறது என்பது, என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.


கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்த பதிவு :

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா? - 4