Wednesday, January 26, 2011

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-5

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-5

5 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-4)

இது பொதுவாக, அனைவருக்கும் வரும் பயம் தான். ஜாதகத்தில், உங்களுக்கு தோஷம் உள்ளது என்று கூறி, பணம் பறிப்பாரோ என்று பயப்படுவது இயற்கையே! பெரும்பாலான ஜாதகத்தில், தோஷம் இருப்பது அறிந்து நானும் வியப்புற்றுள்ளேன். தோஷம் இல்லாத ஜாதகத்தைப் பார்ப்பதே மிகவும் அரிது. நாம் இப்போது எடுத்துள்ள இப்பிறவி, போன ஜென்மத்தில் விதைத்ததை, இந்த ஜென்மத்தில் அறுவடை செய்யத்தானே! போன ஜென்மத்தில், புண்ணியம் செய்திருந்தால், இப்பிறவி எடுக்க அவசியம் இல்லையே. பிறவா நிலையை அடைந்து இருப்போம். கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ, பரலோகத்திலோ அல்லது ஜன்னத்திலோ இறைவன் அருகில் இருந்து, பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்து கொண்டு அல்லவா இருப்போம். அவதாரப் புருஷர்களான ஸ்ரீராமரின் ஜாதகமும், ஸ்ரீகிருஷ்ணரின் ஜாதகமும் தோஷம் உள்ள ஜாதகங்களே! அதனால், தோஷம் குறித்து பயப்படாமல், கவலைப்படாமல், இப்பிறவியை நன்கு அமைத்துக் கொண்டாலே போதும்.

தோஷம் உள்ள எல்லா ஜாதகத்திலும், ஏதோ ஒரு வகையில் தோஷ நிவர்த்தியும் அதே ஜாதகத்தில், இறைவன் அமைத்துக் கொடுத்திருப்பான். அதனை ஜோதிட வல்லுனர்கள், ஆராய்ந்து, அது எப்பொழுது நிவர்த்தியாகும் என்று தசா புத்தியையும், கோச்சாரத்தையும் ஆராய்ந்து சொல்லுவர், அதுவரை நீங்கள் சிறிது காத்திருக்க வேண்டும். அந்த காத்திருப்பு காலத்தில், இறைவனை மனசார வேண்டினாலே போதுமானது. ரிலீஸான அன்றே, பிளாக்கில் டிக்கட் வாங்கியாவது சினிமா பார்த்து விட வேண்டும், என்று நினைத்தால், அது உங்கள் தவறே! ஜோதிடர் தவறல்ல ! பரிகாரம் என்று சொல்லுவது, அதற்காக பணம் செலவு செய்வது, என்ற விஷயங்கள் எல்லாம், பிளாக்கில் டிக்கட் வாங்கி படம் பார்ப்பது போலத்தான் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.

மேற்கூறிய விளக்கங்கள் யாவும் தோஷத்திற்கு பொருந்துமேயொழிய, நோய்க்கு அல்ல. நோய் வந்தவுடன், உடனடியாக, அதற்கான காரணத்தையும், வைத்தியத்தையும் செய்ய வேண்டும். இதைத்தான் வள்ளுவர்,

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்று கூறினார். வள்ளுவர் நாடி, நாடி என்று சொல்கிறாரே என்று, தவறாகப் புரிந்து கொண்டு, நாடி ஜோதிடரிடம் போய் விடாதீர்கள். நோய்க்கு, ஜோதிட சாஸ்திரம், ரண-ருண ஸ்தானம் என்ற ஒரு வீட்டை, ஜாதகத்தில் ஒதுக்கியுள்ளது. அதனைக்கொண்டு, முன் கூட்டியே உங்களுக்கு வரக்கூடிய நோய்களை அறிந்து, உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளலாம். வருமுன் காப்பவனே அறிவாளி !

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்த பதிவு:

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-6


No comments: