Showing posts with label graha. Show all posts
Showing posts with label graha. Show all posts

Wednesday, January 26, 2011

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-5

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-5

5 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-4)

இது பொதுவாக, அனைவருக்கும் வரும் பயம் தான். ஜாதகத்தில், உங்களுக்கு தோஷம் உள்ளது என்று கூறி, பணம் பறிப்பாரோ என்று பயப்படுவது இயற்கையே! பெரும்பாலான ஜாதகத்தில், தோஷம் இருப்பது அறிந்து நானும் வியப்புற்றுள்ளேன். தோஷம் இல்லாத ஜாதகத்தைப் பார்ப்பதே மிகவும் அரிது. நாம் இப்போது எடுத்துள்ள இப்பிறவி, போன ஜென்மத்தில் விதைத்ததை, இந்த ஜென்மத்தில் அறுவடை செய்யத்தானே! போன ஜென்மத்தில், புண்ணியம் செய்திருந்தால், இப்பிறவி எடுக்க அவசியம் இல்லையே. பிறவா நிலையை அடைந்து இருப்போம். கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ, பரலோகத்திலோ அல்லது ஜன்னத்திலோ இறைவன் அருகில் இருந்து, பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்து கொண்டு அல்லவா இருப்போம். அவதாரப் புருஷர்களான ஸ்ரீராமரின் ஜாதகமும், ஸ்ரீகிருஷ்ணரின் ஜாதகமும் தோஷம் உள்ள ஜாதகங்களே! அதனால், தோஷம் குறித்து பயப்படாமல், கவலைப்படாமல், இப்பிறவியை நன்கு அமைத்துக் கொண்டாலே போதும்.

தோஷம் உள்ள எல்லா ஜாதகத்திலும், ஏதோ ஒரு வகையில் தோஷ நிவர்த்தியும் அதே ஜாதகத்தில், இறைவன் அமைத்துக் கொடுத்திருப்பான். அதனை ஜோதிட வல்லுனர்கள், ஆராய்ந்து, அது எப்பொழுது நிவர்த்தியாகும் என்று தசா புத்தியையும், கோச்சாரத்தையும் ஆராய்ந்து சொல்லுவர், அதுவரை நீங்கள் சிறிது காத்திருக்க வேண்டும். அந்த காத்திருப்பு காலத்தில், இறைவனை மனசார வேண்டினாலே போதுமானது. ரிலீஸான அன்றே, பிளாக்கில் டிக்கட் வாங்கியாவது சினிமா பார்த்து விட வேண்டும், என்று நினைத்தால், அது உங்கள் தவறே! ஜோதிடர் தவறல்ல ! பரிகாரம் என்று சொல்லுவது, அதற்காக பணம் செலவு செய்வது, என்ற விஷயங்கள் எல்லாம், பிளாக்கில் டிக்கட் வாங்கி படம் பார்ப்பது போலத்தான் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.

மேற்கூறிய விளக்கங்கள் யாவும் தோஷத்திற்கு பொருந்துமேயொழிய, நோய்க்கு அல்ல. நோய் வந்தவுடன், உடனடியாக, அதற்கான காரணத்தையும், வைத்தியத்தையும் செய்ய வேண்டும். இதைத்தான் வள்ளுவர்,

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்று கூறினார். வள்ளுவர் நாடி, நாடி என்று சொல்கிறாரே என்று, தவறாகப் புரிந்து கொண்டு, நாடி ஜோதிடரிடம் போய் விடாதீர்கள். நோய்க்கு, ஜோதிட சாஸ்திரம், ரண-ருண ஸ்தானம் என்ற ஒரு வீட்டை, ஜாதகத்தில் ஒதுக்கியுள்ளது. அதனைக்கொண்டு, முன் கூட்டியே உங்களுக்கு வரக்கூடிய நோய்களை அறிந்து, உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளலாம். வருமுன் காப்பவனே அறிவாளி !

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்த பதிவு:

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-6


Thursday, January 20, 2011

ஜாதகம் என்றால் என்ன?

ஜாதகம் என்றால் என்ன?
ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நாளன்று, பிறந்த நேரத்தில் வானில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகங்களின் இருப்பு நிலையைக் காட்டும் ஒரு பதிவு. இதனை எளிதில் விளங்கும்படி கட்டங்களில், விவரங்களை எழுதி வைப்பார்கள். நமது பூமியை ஆதாரமாக (reference) வைத்து, பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளியை (zodiac) 12 பாகங்களாகப் பிரித்து (12 ராசிகள்), எந்த கிரகம், எந்த பாகத்தில், அன்றைய தினத்தில், நேரத்தில் உள்ளது என்பதையே ராசி சக்கரம் (ராசிக் கட்டம்) உணர்த்துகிறது. ராசி என்பது 12 பாகத்தில் ஒரு பகுதி, இப்போதைக்கு ராசி என்றால் என்ன என்பதை இந்த அளவிற்கு புரிந்து கொண்டால் போதுமானது.

உடனே, என்னுடைய ராசி சிம்மம் என்று ஜோதிடர் சொல்கிறாரே, அப்படி என்றால் என்ன தலைவா? என்று கேட்கத் தோன்றும். பொதுவாக ஜோதிடர் சொல்லும், உங்களுடைய ராசி, பத்திரிக்கையில் வரும் வார ராசிபலன், மாத ராசிபலன் எல்லாம் எதனைக் குறிக்கிறது என்றால், “ஜென்ம ராசி”யைக் குறிக்கும். அடுத்த கேள்வி, ஜென்ம ராசி என்றால் என்ன?

ஜென்ம ராசி என்பது, பிறந்த நேரத்தில் ராசி சக்கரத்தில், எந்த ராசியில் சந்திரன் நிற்கிறாரோ, அந்த ராசி தான் உங்கள் ஜென்ம ராசியாகும். அதனால் இன்று முதல், உங்கள் ராசியை, ஜென்ம ராசி என்று கூறி பழகுங்கள். அப்படி என்றால் கோவில்களில், அர்ச்சனை செய்யும் பொழுது, அர்ச்சகர் உங்க நட்சத்திரம் சொல்லுங்கோ! என்று கேட்கிறாரே, அது என்ன?

நமக்கு மிகவும் அருகில் உள்ள கிரகம் சந்திரன். அருகில் உள்ளதால், அதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும், அதனால் அதன் இருப்பை துல்லியமாக கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. துல்லிய கணக்கீட்டிற்காக, மீண்டும் அண்ட வெளியை, 108 பாகமாக பிரித்து (அந்த 1 பாகத்தை, 1 பாதம் என்று இனி சொல்லுவோம்) அதில் எந்த பாகத்தில், (பிறந்த நேரத்தில்) சந்திரன் நிலை கொண்டுள்ளான் என்று குறிப்பார்கள். அதாவது, அண்ட வெளியை 12 பாகங்களாகப் பிரித்தால், அதன் 1 பாகத்தை ராசி என்றும், 108 பாகமாக பிரித்தால், அதன் 1 பாகத்தை, பாதம் என்றும் சொல்லுவோம்.

4 பாதத்திற்கு ஒரு பெயர் சூட்டினால் அது நட்சத்திரம் ஆகும். அப்படியென்றால் 108/4 = 27, அதாவது அண்டத்தை 27 நட்சத்திரமாக பிரித்து பெயர் சொல்லாம். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

27 நட்சத்திரம் தான் வான் வெளியில் உள்ளதா? என்று ஒரு அன்பர் கேட்பது காதில் விழுகிறது. பெயர் அப்படி தனித்தனியாக வைதுள்ளார்களே தவிர, ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திரக் கூட்டமாகும். உதாரணத்திற்கு கார்த்திகை என்பது 6 நட்சத்திரங்கள் சேர்ந்த ஒரு கூட்டமாகும். பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் அதனை அறுமீன் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். நமக்கு அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளார்கள்.

உங்கள் ஜாதகத்தில், 108 பாதத்தில் முதல் 4 பாததிற்குள், சந்திரன் நின்றால் நீங்கள் அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர், அதாவது உங்கள் “ஜென்ம நட்சத்திரம்” அஸ்வினி ஆகும். உதாரணத்திற்கு 3 வது பாதத்தில் சந்திரன் நின்றால், உங்கள் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகத்தில், அஸ்வினி-3 என்று குறிப்பிடுவார்கள். இனி அர்ச்சகர் கேட்கும் போது அஸ்வினி 3-ஆம் பாதம் என்றுதான் கூற வேண்டும்.
சரி நண்பர்களே ! இனி கோவிலில் அர்ச்சகர் கேட்கும் போது உங்கள் ஜென்ம நட்சத்திர, பாதம் என்னவென்று உங்கள் ஜாதகத்தை பார்த்து அதன் படி கூறுங்கள். பாதம் கண்டிப்பாக கூற வேண்டும்.

நன்றி ! மீண்டும் சந்திப்போம் !
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற தாரக மந்திரத்துடன்,

உங்கள் அன்பன்
இராம்கரன்,
20 ஜனவரி 2011
tamiljatakam@gmail.com

(அடுத்த பதிவு: ஜாதகம் பார்க்கக் கூடாது என்று சிலர் சொல்வதேன்?)