Wednesday, April 27, 2011

ஜோதிடம் கற்கலாம் வாங்க - 11

இந்திய ஜோதிடவியலின் 3 தூண்கள்
(3 Pillars of Indian Astrology)


இந்திய ஜோதிடம் கிரகம், நட்சத்திரம், ராசி என்ற 3 விஷயங்களை அடிப்படை தூண்களாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளது. மற்ற எல்லா ஜோதிட விஷயங்களும் இம்மூன்றின் மேல் நுட்பத்துடன் கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட கட்டிடமே.

கிரகங்கள் 9, நட்சத்திரங்கள் 27, ராசிகள் 12 இவைகளைப் பற்றிய முழு விபரங்களையும் ஒருவர் நன்கு அறிந்து, கணித்து, அதன் பயன்பாடுகளை ஜாதகத்திற்கு ஏற்றவாறு பலன் சொல்லத் தெரிந்தால் அவரே ஒரு சிறந்த ஜோதிடர் ஆவார்.

ஜோதிடம் என்பது ஒரு பெருங்கடல் என்றும், அப்பெருங்கடலை கடப்பது அவ்வளவு எளிதல்ல, அதை எல்லோராலும் கற்க, புரிந்து கொள்ள இயலாது என்றும் அதைக் கற்றுணர்ந்த சிலர், பலரிடம் சொல்லி பயமுறுத்தி வருகின்றனர். சிறிய வயதிலிருந்தே நமக்கு அவ்வாறு சொல்லி பழக்கப்படுத்திவிட்டதால் நமக்கு அவ்வாறு தோன்றுகிறது.

பெருங்கடலை கடக்க நமக்கு 3 அடிப்படை விஷயங்களே தேவை. படகு, துடுப்பு, படகோட்டி. ராசி என்னும் படகை, நட்சத்திரம் என்ற துடுப்பைக் கொண்டு, சரியான திசையில் செலுத்தும் படகோட்டியே கிரகமாகும்.

எப்படி படகு, துடுப்பு, படகோட்டி ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவைகளோ அதைப் போல கிரகம், நட்சத்திரம், ராசி இவைகள் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.

அவைகள் எப்படி தொடர்புடையன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

எமது அடுத்தப் பதிவு: ஜோதிடம் கற்கலாம் வாங்க - 12


Tuesday, April 19, 2011

ஜோதிடம் கற்கலாம் வாங்க - 10

உள்ளூர் மணி (அ) சுதேசி மணி (LMT - Local Mean Time)

இந்தியாவுக்கு காலை 5.30 மணி என்றால், பாகிஸ்தானுக்கு காலை 5.00 மணி ஆக இருக்கும். அதாவது இந்தியாவின் GMT +5.30 , பாகிஸ்தானின் GMT +5.00, அதனால் இந்திய ஸ்டாண்டர்ட் நேரத்திற்கும், பாகிஸ்தான் ஸ்டாண்டர்டு நேரத்திற்கும் உள்ள வித்தியாசம் 30 நிமிடங்கள். எடுத்துக்காட்டாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்திற்கும், பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்திற்கும் இடைப்பட்ட நேர வித்தியாசம் 30 நிமிடங்கள். (இந்த இரு நகரங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு எவ்வளவு தெரியுமா? சுமார் 600 கி.மீ. மட்டுமே). இவ்வாறு 600 கி. மீ. தொலைவு உள்ள இரு நகரங்களுக்கும் இடையே 30 நிமிட வித்தியாசம் என்றால், பெரிய நாடான இந்தியாவிற்குள்ளேயே இருக்கும் நகரங்களான மும்பாய்க்கும், கல்கத்தாவுக்கும் (சுமார் 1800 கி.மீ. தொலைவு) எப்படிங்க ஒரே நேரமாக இருக்க முடியும்? ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

இந்திய ஸ்டாண்டர்ட் நேரம், எங்கே மிகச் சரியாக இருக்கும் தெரியுமா? உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரத்தில் மட்டுமே. ஏனெனில் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் கிரீன்விச்சிலிருந்து 82 பாகை 30 கலை கிழக்கே (ரேகாம்சம்) உள்ள அலகாபாத் நகரத்தைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது. 1 பாகைக்கு 4 நிமிடங்கள் என்ற அளவிலேயே கணக்கிட வேண்டும். 82 பாகை 30 கலை என்பதை 82.5 பாகை எனக்கொள்வோம் ( 30 கலை என்பது 1/2 பாகை என்பதால் .5 என்று எடுத்துக்கொள்வோம்), அப்படி என்றால் 82.5 x 4 நிமிடம் = 330 நிமிடங்கள் அதாவது 5 மணி 30 நிமிடங்கள். இப்படித்தான் இந்தியாவின் +5.30 GMT அலகாபாத் நகரத்தைப் பொறுத்து உருவானது. அதாவது கிரீன்விச்சில் நள்ளிரவு 00.00 மணி எனில் அலகாபாத்தில் காலை 5.30 மணியாக இருக்கும். இது தான் அலகாபாத் நகரின் உள்ளூர் மணி (LMT - Local Mean Time). இதையே பொது மக்களின் எளிய பயன்பாட்டிற்காக இந்தியா முழுமைக்கும் பயன்படுத்துமாறு இந்திய ஸ்டாண்டர்ட் நேரமாக (IST) அறிவிக்கப்பட்டது.

ஆக, நாம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் நேரம் அலகாபாத்தின் உள்ளூர் மணியாகும். ஆனால் அறிவியல் ரீதியாகவும், ஜோதிடவியல் ரீதியாகவும் பார்த்தோமானால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் உள்ளூர் மணி வேறுபடும். உள்ளூர் மணிதான் மிகச் சரியான, துல்லியமான நேரமாகும். அதனால் தான் ஜாதகம் கணிக்க உள்ளூர் நேரத்தை முதலில் கணக்கிடுவார்கள். அதற்கு நமக்கு கடந்த பதிவில் பார்த்த ரேகாம்சம் பயன்படுகிறது.

இப்பொழுது சென்னையின் உள்ளூர் மணி கணக்கிடுவோம். சென்னையின் ரேகாம்சம் 80° 17' E என கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கிரீன்விச்சிலிருந்து கணக்கிட்டோமெனில் 321 நிமிடங்கள் வரும். அதாவது 5 மணி 21 நிமிடங்களே வரும். அப்படி யெனில் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் 5 மணி 30 நிமிடமாக இருக்கும் போது, சென்னையில் உள்ளூர் நேரம் 5 மணி 21 நிமிடங்களாக இருக்கும். இதுதான் சென்னையின் மிக சரியான நேரமாகும். அதாவது சென்னையின் உள்ளூர் மணி அலகாபாத்தின் உள்ளூர் மணியை விட, அதாவது இந்திய ஸ்டாண்டர்ட் நேரத்தை விட 9 நிமிடம் குறைவாக இருக்கும். இவ்வாறு பல நகரங்களுக்கும், சரியான உள்ளூர் மணியைக் கணக்கிடலாம்.

என்ன தலை சுற்றுகிறதா? பல முறை படித்து, எழுதி கணக்கிட்டுப் பார்த்தால் எளிதில் விளங்கும்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்

எமது அடுத்தப் பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க -11



Wednesday, April 13, 2011

ஜோதிடம் கற்கலாம் வாங்க - 9

அட்சாம்சம் (Latitude),

அடுத்தது அட்சாம்சம். எப்படி கிரீன்விச்சிலிருந்து கிழக்கே அல்லது மேற்கே எத்தனையாவது பாகையில் ஒரு நகரம் உள்ளது என்று ரேகாம்சம் (Longitude) என்ற ஆயத் தொலைவை வைத்து சொல்லுகிறோமோ, அவ்வாறே அட்சாம்சம் (Latitude), என்ற ஆயத்தொலைவையும் பயன்படுத்தினோம் என்றால் மிகச் சரியாக அந்த நகரத்தின் இருப்பிடம் தெரிந்துவிடும். அட்சாம்சத்தை பூமத்திய ரேகையை ஆதாரமாக வைத்து சொல்ல வேண்டும். அந்த நகரமானது பூமத்திய ரேகைக்கு வடக்கு அல்லது தெற்கில் உள்ளது என்று கூற வேண்டும். சென்னையின் அட்சாம்சம் 13 பாகை 4 கலை (வடக்கு).

இவ்வாறு, ஒரு நகரத்தின் இருப்பிடத்தை அட்சாம்சம் மற்றும் ரேகாம்சம் ஆகிய 2 ஐயும் கொண்டு துல்லியமாக அறிய முடியும். எதனால் இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் ஜோதிட கணிதத்திற்கு தேவைப்படுகிறது என்றால்,

(1) இந்திய ஜோதிடவியலை உலகில் உள்ள பல நாடுகளில் பிறந்தவர்களுக்கு பயன்படுத்த வேண்டுமெனில் இந்த விஷயங்கள் ஒரு ஜோதிடருக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

(2) பெரும்பாலும் பஞ்சாங்கத்தில், சூரிய உதயம் அந்த பஞ்சாங்கம் வெளியிடப்படும் நகரத்தைப் பொறுத்தே கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, வாசன் பஞ்சாங்கத்தில் சூரிய உதயம் சென்னையைப் பொறுத்தும், ஆற்காடு பஞ்சாங்கத்தில் வேலூரைப் பொறுத்தும், பாம்பு பஞ்சாங்கத்தில் திருநெல்வேலியைப் பொறுத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். சூரிய உதயத்தை வைத்தே இந்திய ஜோதிடத்தில் லக்னம் மற்றும் பல விஷயங்கள் கணிக்கப்படுவதால், சூரிய உதயம் மிக அவசியமாகும். அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருந்தால் உலகில் உள்ள எந்த இடத்துக்கும் எளிதாக சூரிய உதயம் பஞ்சாங்கத்தின் உதவியின்றி கணக்கிடலாம்.

(3) உள்ளூர் மணி (சுதேச மணி) (LMT - Local Mean Time) கணக்கிட இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருக்க வேண்டும்.

(4) நட்சத்திர ஹோராமணி(Sidereal Time), பாவஸ்புட கணிதம் போன்ற நுணுக்கமான கணக்கீடுகளுக்கும் இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருக்க வேண்டும்.

அதென்ன ஐயா உள்ளூர் மணி?

அடுத்தப் பதிவில் விவரமாகப் பார்க்கலாமா?

வெளியூர் பயணங்கள் காரணமாக தொடர்ச்சியாக பதிவுகள் இட இயலவில்லை. சிலர் மட்டுமே எனக்கு மின் அஞ்சல் அனுப்பி அடுத்த பதிவைப் பற்றி கேட்டிருந்தார்கள். அந்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி ! பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி !

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்தப் பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க-10