Wednesday, June 29, 2011

செவ்வாய்

செவ்வாய் பொது

பொதுவாக செவ்வாய் கிரகம், ஜோதிட ரீதியாக பூமியில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கிறது. அதாவது பூமியில் ஏற்படும், நன்மை தீமைகளையும், இயற்கை சீற்றங்களையும், அழிவுகளையும் தற்கால கிரக அமைப்புகளை வைத்து (கோட்சாரம்) செவ்வாய் கிரகம் ஏற்படுத்துகிறது என்று கூறலாம். பி.வி. இராமன் போன்ற ஜோதிட மேதைகளும் இதனை ஆராய்ந்து எழுதியுள்ளனர். வட மொழியில் அங்காரகன் என்ற பெயரும் உண்டு. செவ்வாய் கிரகத்தை வைத்தே ஜாதகரின் திருமண வாழ்க்கையை கணிப்பதால் தான், இந்த கிரகத்தை வட இந்தியாவில் மங்கள் என்று குறிப்பிடுவார்கள். செவ்வாய் உடலில் உள்ள இரத்த அணுக்களை ஆள்வதால், தாம்பத்ய வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. செவ்வாயைக் கொண்டு ஒரு ஜாதகரின் வீரியத்தை அறியலாம். விந்தணுக்களின் வேகம் (Motility) ஜாதகத்தில் செவ்வாயின் நிலையப் பொறுத்தே அமைகிறது. கருத்தரிப்பதற்கு விந்தணுக்களின் எண்ணிக்கை (Quantity), வேகம் (Motility) இரண்டுமே முக்கிய காரணிகளாகும். விந்தணு உற்பத்தியை குரு பகவானும், வேகத்தை செவ்வாய் பகவானும் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதே எமது ஆய்வு.

இதனாலேயே செவ்வாய் தோஷம் என்பது திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது முக்கியத்துவம் பெறுகிறது. செவ்வாய் தோஷம் பற்றிய ஆய்வுகளை தனியாக பிறகு பதிவிடுகிறேன். தனி மனித ஒழுக்கம், நடத்தை ஆகியவற்றில் செவ்வாய்க்கு மிகுந்த பங்குண்டு. சாகசம், அல்லது ஏதோ ஒரு வகையில், துறையில் சாதனை செய்தவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்தோமானால் அதில் செவ்வாய் மற்றும் சனிபகவானின் தொடர்பு, கண்டிப்பாக இருக்கும்.

செவ்வாய் அறிவியல்

செவ்வாய் சூரியனிலிருந்து 4 வது கிரகமாக, சூரியனை சுமார் 687 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. (பூமி 365.25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது). அளவில், அது ஏறக்குறைய பூமியின் அளவேயாகும். புவியீர்ப்பு விசை பூமியை விட 3 மடங்கு குறைவே. 95 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடு உறைந்த நிலையில் அதன் மேற்பரப்பில் காணப்படுகிறது. இயற்பியலில் இதன் பெயர் உலர் பனிக்கட்டி (Dry ice). பக்தி, மாயாஜால படத்தில் இந்திர லோகத்தை காட்டும் போது புகை மண்டலம் மிதக்குமே, கனவு டூயட் காட்சிகளிலும் மேகம் போல மிதந்து வருமே, அதனை Dry ice பயன்படுத்தியே உண்டாக்குவார்கள். விண்வெளி விஞ்ஞானிகளால் அனுப்பபட்ட ஒரு விண்கலம் பிடித்த படத்தைக் காணும்போது, நமக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் அதன் மேற்பரப்பு சிவந்து காணப்படுகிறது. அதனால் தான் தமிழர்கள் அதற்கு செவ்வாய் என்று பெயர் வைத்திருப்பார்களோ !! ஆஹா என்னே நம்மவர்களின் அறிவுத்திறன். பெயர்க்காரணம் குறித்து தனித்தமிழ் ஆர்வலர்களின் ஆய்வுக்கு விட்டு விடுவோம். மேலும் செவ்வாயின் ஜோதிட பயோடேட்டாவைப் பார்த்தால், அதன் நிறம், மலர், ஆடை, உலோகம், இரத்தினம் இவை எல்லாம் சிவந்த நிறத்துடன் தொடர்புள்ளதாகவே காணப்படுகிறது.
செவ்வாய் காரகத்துவம்

பூமிகாரகன், சகோதரகாரகன், மங்கள காரகன், வீரம், போர்க்குணம், இராணுவம், காவல் துறை, இரத்தம், கோபம், வாகன மற்றும் தீ விபத்து, இரத்த காயம், கலகம், பூமியினால் உண்டாகும் யோகம், தொழில், விளையாட்டுத் துறை போன்றவற்றிற்கும் செவ்வாயே காரகனாவார்.

செவ்வாய் தசா

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக செவ்வாய் தசை வரும். செவ்வாய் தசை மொத்தம் 7 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 7 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 7 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் கர்ப்பச்செல்என்று குறிப்பிடுவார்கள். செவ்வாய் தசையில் செவ்வாய் காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பா (Bhava) அடிப்படையில், செவ்வாய் தரும் பலன்களும் நடைபெறும்.

இனி ஜோதிட ரீதியாக செவ்வாயின் பயோடேட்டாவை பார்க்கலாம்.

செவ்வாய் பயோடேட்டா

ஆட்சி பெறும் ராசி

மேஷம், விருச்சிகம்

உச்சம் பெறும் ராசி

மகரம்

நீச்சம் பெறும் ராசி

கடகம்

நட்பு பெறும் ராசிகள்

சிம்மம், தனுசு, மீனம்

சமம் (நியூட்ரல்)

ரிஷபம், துலாம், கும்பம்

பகை பெறும் ராசிகள்

மிதுனம், கன்னி

மூலத்திரிகோணம்

மேஷம்

சொந்த நட்சத்திரம்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

திசை

தெற்கு

அதிதேவதை

சுப்பிரமணியர்

ஜாதி

ஷத்திரியர்

நிறம்

சிவப்பு

வாகனம்

அன்னம்

தானியம்

துவரை

மலர்

செண்பகம், செவ்வரளி

ஆடை

சிவப்பு

இரத்தினம்

பவழம்

செடி / விருட்சம்

கருங்காலி

உலோகம்

செம்பு

இனம்

ஆண்

அங்கம்

கை, தோள்

நட்பு கிரகங்கள்

சூரியன், சந்திரன், குரு

பகை கிரகங்கள்

புதன், இராகு, கேது

சுவை

துவர்ப்பு, காரம்

பஞ்ச பூதம்

பூமி

நாடி

பித்த நாடி

மணம்

குங்கிலியம்

மொழி

தமிழ், தெலுங்கு, மராட்டி

வடிவம்

குள்ளமானவர்

செவ்வாய்க்குரிய கோயில்

வைத்தீஸ்வரன் கோயில்


செவ்வாய் போற்றி

சிறப்புறு மணியே செவ்வாய் தேவே !

குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ

மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி

அங்காரகனே அவதிகள் நீக்கு !

கந்த சஷ்டி கவசம்

சஷ்டி கவசத்தை தினமும் ஒரு முறையாவது மனதில் தியானித்து வருவோமானால், செவ்வாயால் ஏற்படும் தோஷத்தையும், விபத்துகளையும், ஆபத்துகளையும் தவிர்க்கலாம். தன்னையே கொல்லும் சினம் குறையும். இது உறுதி.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com


Tuesday, June 28, 2011

சினிமாவும், ஜோதிடமும் -1

சினிமாவுக்குத் தேவையான தகுதிகள்

சினிமாவுக்குத் தேவையான தகுதிகளாக, பொதுவாக எதனையும் குறிப்பிட இயலவில்லை. ஏனெனில் சினிமாவின் அசுரத்தனமான வளர்ச்சியில், தகுதிகள் கால அளவில் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு ஜோதிடருக்கு, சினிமாவை ஜோதிடத்துடன் தொடர்புபடுத்த, ஜாதகரின் தொழிலை நிர்ணயம் செய்ய இந்த தகுதிகள் தேவைப்படுகிறது.

காளிதாஸ் (1931) முதல் தமிழ் பேசும் சினிமாவுக்கு இப்பொழுது 80 வயதாகிறது. இப்படத்திலிருந்து ஒரு 20 வருட காலம் சினிமாவின் தகுதியாக வாய்ப்பாட்டு திறமையும், கணீரென்ற குரலும், இசையறிவும், பெண்கள் எனில் இத்திறமைகளுடன், நடனத்தில் தேர்ச்சியும், அழகும் தகுதிகளாக இருந்தன.

பராசக்தி (1952) முதல் தமிழ் சினிமாவில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. அதற்கு வித்திட்டவர் கலைஞர் மு.கருணாநிதி. முதல் படத்திலேயே கதாநாயகன் ஆகி சூப்பர் ஸ்டார் ஆனார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைஞரின் வசனம் பேசியதால், நடிகர் திலகமும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் தமிழக மக்களால் பேசப்பட்டனர். ஒரே படத்தில் 100 க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டிருந்த படங்களை விட்டு விட்டு தமிழக மக்கள், நல்ல வசனங்கள் உள்ள படங்களை விரும்பத் தொடங்கினர். வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்திற்கு வசனம் எழுதிய ஜாவர் சீதாராமனும், இரத்தக் கண்ணீர் படத்துக்கு வசனம் எழுதிய திருவாரூர் தங்கராசுவும் கூட மிகவும் பேசப்பட்டார்கள். இந்த காலகட்டத்தில், நடிகர் நடிகைகளின் தகுதிகளாக நன்றாக தமிழ் வசனம் உச்சரிக்கக் கூடியவராக இருந்தால் போதும். பாடத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பின்னனி பாடகர்கள் அறிமுகம் ஆகிக்கொண்டிருந்த காலகட்டம். நாயகன், நாயகிக்கு இசையறிவு அவசியம் இல்லை. பாடலுக்கு வாயசைத்தால் போதும்.

ஆனால் தற்போதுள்ள சினிமா சூழ்நிலையே வேறு. பாடல் மட்டும் அல்லாது வசனத்துக்கே வாயசைத்தால் போதும் என்ற நிலை. பேச்சுக்கும், பின்னனி கொடுக்க வேண்டிய நிலை. இதற்கு காரணம் சினிமா மொழிகடந்த ஒரு கலை என்பதால் தான். இன்று பின்னனி குரல் கொடுத்து புகழ் அடைந்தவர்களும் ஏராளம். இன்றைய நிலையில் நாயகன், நாயகிகளுக்கு முக்கிய தகுதியாக இருப்பது, பெற்றோரின் அடையாளமே. வாரிசு நடிகர், நடிகைகளும், தொழில் நுட்ப கலைஞர்களும் ஏராளம். வாரிசு அடையாளம் இல்லாமல் வெற்றி நடை போடுபவர்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவார்களா, வெற்றியை தக்க வைத்துக் கொள்வார்களா என்பதும் சவாலே. இப்பொழுது, பின்புலம் இல்லாமல் தொடர்பவர்கள் மிக அரிதே.

அதனால் இப்பொழுது ஒரு ஜாதகத்தைப் பார்த்து அவர் சினிமாத் துறையில் ஜொலிப்பாரா என்று கூற அந்த ஜாதகத்தில் பலவித கிரக அமைப்புகளை ஆராய வேண்டும். பெற்றோரின் நிலையையும், சகோதர சகோதரிகளின் நிலையையும் ஆராய்ந்த பின், கிரக நிலைகளை வைத்து அவர் கலைச்சேவை செய்வாரா? வெற்றியடைவாரா என்று கூற வேண்டும். காலத்திற்கு ஏற்ப மாற்றி யோசித்தாலே, ஜோதிட ஆய்வு வெற்றி பெறும். நம்முடைய ஜோதிட ஆய்விற்கு சினிமாத்துறையைச் சேர்ந்த பலரின் ஜாதகத்தை விருப்பு, வெறுப்பின்றி வரும் பதிவுகளில் ஆராயலாம். பெரும்பாலும், நடிகைகளின் ஜாதகங்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. வயது தெரிந்துவிடும் என்பதால், அவர்கள் பிறந்த வருடத்தை வெளிப்படுத்தாமலே, பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்கள். தெரிந்தவர்கள் அனுப்பி வைத்தால், ஆராயலாம்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

அடுத்தப் பதிவு : சினிமாவும், ஜோதிடமும் -2


Tuesday, June 21, 2011

ஆன்மீகமும், ஜோதிடமும்

ஆன்மீகம் என்றால் என்ன?

நம்மை இயக்கும் ஆன்மாவை அறிய, தேட வழிகாட்டும் இயலே ஆன்மீகம் ஆகும். ஆன்மாவுடன் தொடர்புடைய எந்த விஷயத்தைப் பற்றி சொன்னாலும் அது ஆன்மீகமே. ஆன்மீகம் என்பது, உடல் மற்றும் ஆன்மாவிற்கு இடையிலான வேறுபாட்டை அல்லது இருமைத் தன்மையை குறிக்கிறது. சத்து, அசத்து குறித்து ஆராய்வதே ஆன்மீகத்தின் நோக்கமாகும். ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படையான கேள்விகளுக்கு உள்ளுணர்வின் மூலம் விடைதேடும் முயற்சி ஆகும். அடிப்படையான கேள்விகள் என்றால், நான் யார்? எனக்கும் இந்த பிரபஞ்சத்திற்குமான தொடர்பு என்ன? போன்ற புதிரான கேள்விகளுக்கு விடை காண விழைவதே ஆன்மீகம் ஆகும்.


தத்துவம் என்றால் என்ன?


தத்துவம் என்பது ஒரு விஷயத்தைக் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, அதனால் பெறப்படும் முடிவை ஒட்டி தருவிக்கப்படும் கொள்கையே தத்துவமாகும். ஆன்மீகம் தன் உள்ளுணர்வால் அறிந்ததை தனக்குத்தானே சொல்லும்போதே அது தத்துவமாக ஆகிவிடுகிறது. அறிதலானது அந்த அறிதல் நிகழக்கூடிய அக்கணத்தில் கட்டற்றதாக வடிவமற்றதாக இருக்கிறது. அறிவாக அது மாற்றப்படும்போது அதற்கு எல்லையும் வடிவமும் உருவாகிவிடுகிறது. பேசப்பட்ட , கேட்கப்பட்ட விவாதிக்கப்பட்ட ஆன்மீகம் உடனேயே தத்துவம் ஆகிவிடுகிறது. அனுபவ நிலையில் அகத்தில் நிற்கும் ஆன்மீகமே தூயது. இதனை இவ்வாறு விளக்கலாம், அதாவது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆழ்ந்த மனநிலை ஆன்மீகம். அதை பிறருக்கு விளக்க அவர் சொல்லும் கதைகள் தத்துவம் ஆகிவிடுகின்றன.


மதம் என்றால் என்ன?


தத்துவம் மூலம் சொல்லப்பட்டதை, வாழ்க்கைமுறையாக மாற்றும் பொருட்டு நெறிகளும், ஒழுக்கங்களும், மரபுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிலைநிறுத்தவே கோவில், மடம், புனிதநூல் போன்ற பல அமைப்புகள் உருவாகின்றன. இந்த நெறிகளும், மரபுகளும், அமைப்புகளும் சேர்ந்ததே மதம் ஆகும்.


யோகம் என்றால் என்ன?


யோகம் என்ற சொல்லானது, பல துறைகளில் பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பகவத் கீதையில் பயன்படுத்தப்படும் யோகம் என்ற சொல்லானது, கடவுளை அடைய காட்டும் வழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் என்று யோகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பக்தி யோகம் என்றால், இறைவன் மேல் அளவு கடந்த பக்தி செலுத்துவதன் மூலம் யோகத்தை அடையலாம். பக்த பிரகலாதன், அபிராமி பட்டர், மஹாகவி காளிதாசர், கண்ணப்ப நாயனார் போன்றவர்களை பக்தி மூலமாக யோகத்தை அடைந்தவர்களுக்கு உதாரணமாகச் சொல்லலாம். பக்தி யோகத்திற்கு, கல்வி, குரு தீட்சை எதுவும் அவசியமில்லை, பாமரர்களுக்கும் இந்த யோகம் சாத்தியமே.
அடுத்தது கர்ம யோகம். தான் செய்யும் உயர்ந்த செயலால் இந்த யோகத்தை அடையலாம். தனக்கு இடப்பட்ட கடமையை ஒழுங்காக செய்வதன் மூலமும், பொறுப்பைத் தட்டி கழிக்காமல், உதாசீனப்படுத்தாமல், நல்ல எண்ணத்துடனும், உதவி மனப்பாண்மையுடனும் இருக்கும் எல்லோருக்கும் இது சாத்தியமே. இல்லறத்தில் நல்லறம் காண்பவர்களுக்கு இந்த யோகத்தை அடைவது மிக எளிதாகும். வெளியூர் சென்ற கணவன் திரும்பி வரும் வரை, பெற்றோரை மகனின் பிரிவை உணராத வகையில், அன்பாக பார்த்துக்கொள்ளும் மனைவிக்கு இந்த யோகம் கைவரப்பெறும். கலப்படமில்லா உணவுப் பொருட்களை நியாயமான விலையில், தராசில் சரியாக எடை போட்டு விற்கும் வியாபாரியும் கர்மயோகியே. தான் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் உள்ள எல்லா குழந்தைகளும், இலவசமாக கல்வி பெற திட்டம் வகுத்த பெருந்தலைவர் காமராஜர் ஒரு கர்மயோகியே. இராமகிருஷ்ணரின் பெரும்பாலான கதைகள் கர்ம யோகத்தை விளக்குவதாகவே உள்ளன.
அடுத்தது ஞான யோகம். ஞானத்தால் யோக நிலையை அடைவது. அறிவைக்கொண்டு, குருவின் உதவியால் அல்லது சுய முயற்சியால், தியானப் பயிற்சியால் அல்லது வேறு ஏதாவது ஒரு வகை முறையான பயிற்சியால் ஞானம் பெற்று யோகநிலையை அடைவது. பாரதத்தில் பெரும்பாலும், பிரணாயாமம், வாசி போன்ற முறைகளில் மூச்சை ஒழுங்கு படுத்தி மனதை ஒருமுகப்படுத்தி, தியானம் செய்து, குண்டலினி சக்தியை எழுப்பி, உள்ளொளி பெருக்கி யோகநிலையை அடைகிறார்கள். இராமயணத்தில் வரும் ஜனகரே (அதாங்க சீதாபிராட்டியின் வளர்ப்பு தந்தை) ஒரு சிவ யோகிதான் என்று கூறுகிறார்கள். தற்காலத்தில் உள்ள கார்ப்பொரேட் சாமிகள் அனைவரும், தியானத்தின் மூலம் யோகத்தை அடைய விழைகிறவர்களே.


இனி ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் யோகம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம். ஜோதிடத்தில் யோகம் என்று சொல்லப்படுவது சில குறிப்பிட்ட கிரக நிலைகளால் (பிளானடரி காம்பினேஷன்) ஜாதகருக்கு உண்டாகும் சிறப்பு பலன்களாகும். உதாரணத்திற்கு, இராகு கேதுக்களுக்கு இடைப்பட்ட ராசிகளில் மற்ற எல்லா கிரகங்களும் அமைந்து இருந்தால் அதனை காலசர்ப்ப யோகம் என்று கூறுவர். ஒன்பதாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் இணைந்து, சுபத்துவம் பெற்று, நல்ல ஸ்தானங்களில் அமைந்திருந்தால் அதனை தர்மகர்மாதிபதி யோகம் என்று கூறுவர். இன்னும் பல வித யோகங்களை பின் வரும் பாடங்களில் விளக்கமாக காணலாம். அதே சமயம் ஜோதிடத்தில் அந்த காம்பினேஷன் ஜாதகருக்கு நன்மை தரும் எனில் அதனை யோகம் என்றும் தீமை தரும் என்றால் அதனை அவயோகம் என்றும் கூறுவர்.


அறிவியல் என்றால் என்ன?

அறிவால் உணரப்படும் விஷயங்களை, ஆராய்ச்சி செய்து, விதிகளை அல்லது சூத்திரங்களை அமைத்து, கிடைக்கப்படும் முடிவுகளை, சரிபார்த்து, தகுந்த ஆதாரத்துடன் நிரூபிப்பதே அறிவியல் ஆகும். அதாவது ஆன்மீகம் என்பது அகப்பொருளை ஆராய்வது போல, அறிவியல் புறப்பொருளை ஆராய்கிறது.


ஜோதிடம் என்றால் என்ன?


ஆன்மீகம் மற்றும் தத்துவங்களை உள்ளடக்கிய ஒரு அறிவியலே ஜோதிடம் ஆகும். இதனை எப்படி அறிவியல் என்று கூறலாம், என கேட்பவரும் உளர். ஜோதிடமும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் வாழ்வியல் நிகழ்வுகளை, முன் கூட்டியே கூறி அதனை நிரூபணம் செய்வதால் அறிவியல் என்றே கூறலாம். சரி இப்பொழுது தலைப்பிற்கு வருவோம்.


ஆன்மீகமும், ஜோதிடமும்


உங்களை நீங்களே நன்றாக தெரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதே உண்மையான ஆன்மிகம். அனைத்திலும் கடவுளைக் காண்பது தான் மனிதனின் லட்சியம். அனைத்திலும் பார்க்க முடியாவிட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும். அது தானாக இருக்கும் போது, உன்னையே நீ அறிவாய் என்ற சாக்ரடிஸின் தத்துவம் மெய்ப்படுகிறது. உன்னிலும் நீ இறைவனைக் காணலாம். அதனையே வேதத்தில் “அஹம் பிரம்மாஸ்மி” என்று கூறுகிறார்கள். அண்டத்தில் உள்ளதெல்லாம் உன் பிண்டத்திலும் இருக்கிறது என்று தமிழில் கூறுவார்கள்.

உன்னையே நீ அறிய வேண்டுமெனில், அதற்கான சிறந்த வழியாக ஜோதிடத்தைக் கூறலாம். ஆம் உங்களுடைய ஜாதகத்தை வைத்து, உங்களையே நீங்கள் அறிந்து கொள்ளலாம். அறிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். ஆசையை அடக்கலாம், தவறான வழிகளில் செல்வதை தவிர்த்து, நேர் வழியில் நடை போடலாம். ஏமாற்றங்களை, ஆபத்துகளை தவிர்க்கலாம். தனக்கும், தனது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் தன்னால் என்ன செய்ய இயலும் என்று ஜாதகத்தை ஆராய்ந்து, அதற்கான வழிகளை அமைத்துக்கொள்ளலாம். எந்த வகையான யோகத்தை (பக்தி, ஞான, கர்ம யோகங்கள்) நீங்கள் அடைவீர்கள் என்றும் உங்கள் ஜாதகத்தை வைத்து சொல்லலாம்.
இன்னும் சொல்லப்போனால், ஆன்மீக ஆராய்ச்சியில் நீங்கள் ஈடுபட்டு, அதன் இலக்கை அடைய முடியுமா என்றும் கூறிவிடலாம். இதற்கு லட்சக்கணக்கான உதாரணங்களைக் கூற இயலும். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள், தன் சகோதரருக்காக(சேரன் செங்குட்டுவன்) அரியனையை விட்டுக்கொடுத்து, துறவறம் பூண்டு ஞானம் அடைந்து, ஆயிரக்கணக்கான வருடங்களானாலும் இன்றும் அவர் பெயர் நிலைத்து நிற்பதற்கும் ஜோதிடமே காரணம்.

அதனால் உன்னையே நீ அறிவாய். அதற்கு உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து தெளிவதில், தவறில்லை. ஜோதிடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டு என்பதே இந்த நாட்டாமையின் தீர்ப்பாகும். தீர்ப்பை மாத்து! என்று சொல்பவர்கள் பின்னூட்டத்தில் தகுந்த சான்றுடன் அப்பீல் (கமெண்ட்) செய்யலாம்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com


Wednesday, June 8, 2011

சந்திரன்

சந்திரன் பொது

நம்முடைய, பாரத நாட்டின் ஜோதிடக்கலை சூரிய, சந்திரர்களை அடிப்படையாக வைத்தே ரிஷிமுனிகளாலும், ஜோதிட மேதைகளாலும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. சூரியனை விதி என்றும் சந்திரனை மதியென்றும் குறிப்பிடுவார்கள். சூரியனின் அன்றைய கதியை வைத்து லக்னத்தையும், சந்திரனின் நிலையை வைத்து ராசியையும் கணிக்கலாம். லக்னத்தை வைத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை, அமைப்பு என்ன என்றும், ராசியை வைத்து தற்கால கிரக நிலைகள் (கோச்சாரம்) தங்களுக்கு என்ன செய்யும் என்றும் கூறலாம். மேலும் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தசா புத்தி கணக்கீடுகளும், அதனைக் கொண்டு, உங்களின் வாழ்க்கையில் எந்த தசா காலத்தில் என்ன நடக்கும் என்றும் கூறலாம். தசா புத்திகள் நீங்கள் பயணம் செய்யும் பாதையை அமைத்து கொடுக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல. இந்தப் பாதையின் தொடக்கத்திற்கு யார் காரணம் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல நம்முடைய கிரேட் சந்திரன் தான்.

ஜாதகர் பிறக்கும் பொழுது, சந்திரன் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறாரோ, அந்த நட்சத்திரத்திற்கு சொந்தக்காரரின் தசையே தங்களின் ஆரம்ப தசையாக இருக்கும். இவ்வாறு, பிறந்தவுடன் உங்களுக்கு எந்த தசை தொடங்க வேண்டும் என்று தீர்மானிப்பவர் சந்திரனேயாவார். மேலும் பெரும்பாலான யோகங்கள் சந்திரனை வைத்தே கூறப்படுவதால் சந்திரனுக்கு நமது ஜோதிடத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. பஞ்சாங்க விஷயங்கள் (திதி, நட்சத்திரம் போன்றவை) சந்திரனை வைத்தே கணக்கீடு செய்யப்படுவதால், நமது ஜோதிடமுறையை லூனார் அஸ்ட்ரோலோஜி என்றும் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மேலைநாட்டு வெஸ்டர்ன் ஜோதிடத்தை சோலார் அஸ்ட்ரோலோஜி என்றும் கூறுவர்.

சந்திரன் அறிவியல்

நாம் ஏன் சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால், பூமிக்கு மிக அருகாமையில் இருப்பதால் தான். மிக அருகாமையில் இருப்பதால், பூமியின் மீதான அதன் தாக்கம் மிக அதிகம். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் அலைகள் பெரிதாவதும், கடல் மட்டம் உயர்வதும், நாம் அறிந்ததே. சந்திரனின் இந்த செயலால், மனிதன் அறிவியல் துணைக்கொண்டு டைடல் பவர் ஜெனரேஷன் என்ற முறையில் மின்சாரம் தயாரிக்கிறான்.

பூமியில் வாழும் மனிதர்கள் மீதான அதன் தாக்கம் மிக அதிகம். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் பல மனநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனை மனநோய் மருத்துவம் லுனாட்டிக் என்று குறிப்பிடுகிறது. இன்றும் தமிழக மக்கள் இழுத்துக்கொண்டு இருக்கும் பெரிசுகளை, அமாவாசை வரை தாங்குமா என்று கேட்பது வழக்கம்

சந்திரன் நமது துணைக் கோளாகும். அதாவது பூமி சூரியனை சுற்றி வருகிறது, ஆனால் சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. சந்திரன் பூமியை சுற்றுவதால், அது பூமிக்கு துணைக்கோளாகிறது. விட்ட அளவில் பூமியைவிட 4 மடங்கு குறைவு, எடையில் 81 மடங்கு குறைவு. அதன் புவியீர்ப்பு விசை பூமியை விட 6 மடங்கு குறைவு. ஒரு கிழவன் பூமியில் 2 அடி உயரம் எகிறி குதிக்கலாம் என்றால் சந்திரனில் 12 அடி உயரம் எகிறி குதிக்கலாம். ஓடி விளயாடு தாத்தா என்று பாடலாம். சமீபத்தில் நமது சந்திராயன் – 1, சந்திரனில் நீர் உறைந்து இருப்பதாக கண்டு பிடித்துள்ளது. வாழ்த்துவோம், சந்திராயன் திட்ட இயக்குனர், இஸ்ரோ விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களை, தமிழன் என்று பெருமைப்படுவோமாக.

சந்திரன் காரகத்துவம்

சந்திரன் மாத்ருகாரகன். ஜாதகரின் தாயின் நிலையை சந்திரனை வைத்து அறியலாம். அவனை மனோகாரகன் என்றும் நம்முடைய ஜோதிடம் கூறுகிறது. சந்திரனுக்கும், மனநிலை பிறழ்வுகளுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது என்று மருத்துவ அறிவியலும் ஏற்றுக் கொள்கின்றது, என்னே நமது ஜோதிடக்கலை. போட்டி, பொறாமை, ஈகோ போன்ற பலவித மன உணர்வுகளை, ஜாதகத்தில் சந்திரனின் நிலையை வைத்து அறியலாம். இந்த நட்சத்திரத்தில், இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்று பொதுப்பலன் கூறுவதும் சந்திரனை வைத்தே. இன்னும் பல விஷயங்களுக்கு சந்திரன் காரகன். பருத்தும், இளைத்தும் இருக்கும் உடல் அமைப்புக்கும், குளிர்ச்சியான நோய்களுக்கும், உறக்கத்திற்கும், புகழ், மச்சம், விவசாயம் போன்றவற்றிற்கும் சந்திரனே காரகன் ஆவார்.

சந்திர தசா

ரோகினி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சந்திர தசை வரும். சந்திர தசை மொத்தம் 10 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 10 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 10 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் கர்ப்பச்செல்என்று குறிப்பிடுவார்கள். சந்திர தசையில் சந்திரன் காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பா (Bhava) அடிப்படையில், சந்திரன் தரும் பலன்களும் நடைபெறும்.

இனி ஜோதிட ரீதியாக சந்திரனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.

சந்திரன் - பயோடேட்டா

ஆட்சி பெறும் ராசி

கடகம்

உச்சம் பெறும் ராசி

ரிஷபம்

நீச்சம் பெறும் ராசி

விருச்சிகம்

நட்பு பெறும் ராசிகள்

எல்லா ராசிகளும்

நட்பு கிரகங்கள்

சூரியன், புதன்

பகை பெறும் ராசிகள்

இல்லை

பகை கிரகங்கள்

இராகு, கேது

சொந்த நட்சத்திரம்

ரோகினி, ஹஸ்தம், திருவோணம்

மூலத்திரிகோணம்

ரிஷபம்

ஜாதி

வைசியன்

நிறம்

வெண்மை

வாகனம்

முத்து விமானம்

தானியம்

நெல்

மலர்

அல்லி

ஆடை

வெண்ணிற ஆடை

ரத்தினம்

முத்து

நிவேதனம்

வெண்ணெய்

செடி / விருட்சம்

முறுக்கு

உலோகம்

ஈயம்

இனம்

பெண்

அங்கம்

முகம், இடது கண், புருவம்

அதிதேவதை

பார்வதி

திசை

வடமேற்கு

சுவை

உப்பு

பஞ்ச பூதம்

நீர்

நாடி

சிலேத்துமம்

மணம்

சாம்பிராணி

மொழி

தமிழ்

வடிவம்

குள்ளமானவர்

சந்திரனுக்குரிய கோயில்

திருப்பதி


திங்கள் போற்றி

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி ! திருவருள் தருவாய்

சந்திரா போற்றி ! சத்குரு போற்றி!

சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி!

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com
எமது அடுத்தப் பதிவு : செவ்வாய்