Thursday, September 13, 2012

கண்ணடித்து கலக்கும் மூவர் – 4


கடந்த பதிவில் குரு பார்வையை ஆராய வேண்டி ஒரு எடுத்துக்காட்டு கொடுத்திருந்தேன். அந்த ஜாதகருக்கு குரு தரும் பலன்களை ஆகா ஓகோ என்று எழுதியிருந்தோம். அடுத்து வரும் எடுத்துக்காட்டில் குரு பார்வை செய்யும் சேட்டைகளை பார்க்கலாம்.

குரு
 // ல //இது ஒரு மகர லக்ன ஜாதகம், 3, 12-ஆம் வீடுகளுக்கு உரிய குரு துர்ஸ்தானமான 6-ல், நின்றுகொண்டு, தனது 5-ஆம் பார்வையால் 10-ஆம் வீட்டையும், 7-ஆம் பார்வையால் 12-ஆம் வீட்டையும், 9-ஆம் பார்வையால் 2-ஆம் வீட்டையும் பார்க்கிறார்.

இதன் பலன்

வியாபாரம், தொழில் செய்ய வேண்டி அதிக கடன்களை வாங்குவார். சில பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்கலாம் என்ற நினைத்து, அவ்வாறு விற்க இயலாமல் போகலாம். குடும்ப செலவுகளை கட்டுபடுத்த முடியாமல் ஜாதகர் திணறுவார். குடும்பச் செலவு அதிகமாகும். நல்ல காரியங்களுக்கு, வாரி வழங்கி தானம் செய்து விட்டு தனக்கில்லாமல் திண்டாடும் நிலைக்கு உள்ளாவார். ஒரே ஆறுதல், சுபகாரியங்களுக்காக செலவு செய்வார். அதுவும் கடன் வாங்கித்தான் செலவு செய்வார். குழந்தைகள் வகையில் கடன் வாங்காமல், எந்த ஒரு விஷயத்தையும் செய்ய இயலாது. மேலும், ஜாதகர் தம்முடன் பிறந்தவர்களுக்கு, எவ்வளவு செய்தாலும், அவர்கள் நன்றி மறப்பர். அவர்களுக்காகவும் கடன்பட நேரிடும்.

மேற்கண்ட இந்த இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலம், குரு பார்வையைப் பற்றி தெரிந்து கொண்ட விஷயங்கள் என்னவெனில் :
(1)    குரு பார்க்க கோடி நன்மை என்ற பொது விதி எல்லா ஜாதகத்திற்கும் பொருந்தாது.

(2)    பிறவிப் பயனை அனுபவிக்க முடியாமல் போய் விடக்கூடாது, என்ற கருணையின் அடிப்படையில், தோஷ நிவர்த்தி இவர் பார்வையால் ஏற்படும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவும் தோஷ நிவர்த்தி என்பது அடிப்படை வாழ்வுரிமை அவ்வளவே.

(3)    குருவின் பாவாதிபத்தியத்தை பொருத்து அவரை சுபர், அசுபர் என்று கூற வேண்டும்.

(4)    ஜாதகத்தில் அவர் வீற்றிருக்கும் வீட்டைப் பொருத்து, தன்னுடைய குணத்தை மாற்றிக் கொண்டு, பார்வையால் நன்மை, தீமைகளை பலன்களாகத் தருவார்.

(5)    குருவின் காரகத்துவம், பாவாதிபத்தியம், சார, நவாம்ச பலம் இவற்றோடு, எந்த கிரகத்தின் வீட்டில் உள்ளாரோ அவருடய குணத்தையும் கலந்து தன்னுடை தசா-புக்தி காலத்திலும், மற்ற தசைகளின் புக்திகளிலும் பலன்களைத் தருவார்.

(6)    அவர் எந்த வீடுகளின் மீது பார்வை செலுத்துகிறாரோ, அந்த வீடுகளின் பலன்களையும் தருவார்.

மேற்கூறிய ஜோதிட விதிகள் பொதுவாக எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும். மேலும் பல நுணுக்கமான, முக்கிய ஜோதிட விதிகள் உள்ளன, அவைகள் ஆரம்ப நிலையில், ஜோதிடம் பயில்பவர்களுக்கு இப்பொழுது அவசியம் இல்லை. பிறிதொரு சமயம் Advanced Predictive Astrology என்ற தலைப்பில் ஆராயலாம்.

மீண்டும் சந்திப்போம்
கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.comபிற்சேர்க்கை

அடிப்படை வாழ்வுரிமை.
அதாவது, அந்த குறிப்பிட்ட தோஷத்திலிருந்து தனது பார்வையால் குரு காப்பாற்றிவிடுவார் அவ்வளவே, மற்ற சமாச்சாரங்கள் எல்லாம் ஜாதகத்திற்கு ஏற்ப மற்ற கிரகங்கள்தான் கொடுக்க வேண்டும். இன்னும் எளிமையாக சொல்வதென்றால், சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவனை, எங்கிருந்தோ ஓடி வந்து தூக்கி காப்பாற்றி விட்டு செல்வார், ஆனால், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கித் தர மாட்டார். நீங்களே (நடப்பு தசா) தள்ளாடி நடந்து சென்று வாங்கிக்கொள்ள வேண்டியது தான் அல்லது மற்றவர்கள் (நடப்பு புக்தி),  உங்கள் மேல் பாவப்பட்டு வாங்கித் தருவார்கள். அப்படி எல்லாமும் அவரே தான் செய்ய வேண்டுமெனில், அவர் ஜாதக அடிப்படையில், சுப கிரகமாக இருந்து, சுப ஸ்தானங்களில் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஆனால் உதாரண ஜாதகத்தில் குரு அப்படியில்லை.


மீண்டும் சந்திப்போம் !

Tuesday, September 11, 2012

கண்ணடித்து கலக்கும் மூவர் - 3கண்ணடித்து கலக்கும் மூவர் என்ற இந்தத் தொடரில், கடந்த பதிவுகளில், இராகு, கேதுவுக்கு பார்வை இல்லை என்று பார்த்தோம். 

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களும், தான் நிற்கும் இராசியிலிருந்து 7-ஆவது இராசியையும், அதில் இருக்கும் கிரகங்களையும் பார்க்க வல்லவர்கள்.

இதில், சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ள இயலாது.

ஆக மீதி உள்ள கிரகங்கள், குரு, சனி, செவ்வாய் ஆகிய மூன்றும் தான். இதில்,

குருவுக்கு 7-ஆம் பார்வையும் 5, 9-ஆம் சிறப்பு பார்வையும் உண்டு.

சனிக்கு 7-ஆம் பார்வையும், 3, 10-ஆம் சிறப்பு பார்வையும் உண்டு.

செவ்வாய்க்கு 7-ஆம் பார்வையும், 4, 8-ஆம் சிறப்பு பார்வையும் உண்டு.

சிறப்பு பார்வைகள் பெற்ற குரு, சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் தான், கண்ணடித்து கலக்கும் மூவர் என்ற இத்தொடரின் நாயகர்கள். இந்தத் தொடரை தொடர்ந்து படித்து வருவதன் மூலம், நீங்களே புரிந்து கொள்வீர்கள், இவர்களின் பார்வை விளையாட்டுகளை. இனி இவர்கள் எப்படி கண்ணடித்து கலக்குகிறார்கள் என்று விவரமாகப் பார்க்கலாம்.


குரு பார்வை

முதலில் குருவை எடுத்துக் கொள்வோம். அவர் தான் இருக்கும் இடத்திலிருந்து, 5, 7, 9-ஆம் வீட்டையும் அதில் இருக்கும் கிரகத்தையும் பார்ப்பார். இயற்கையில் குரு சுபகிரகம் என்பதால், குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டாகியிருக்கலாம். இருப்பினும், அவரின் பாவாதிபத்தியத்தையும், அவர் இருக்கும் வீட்டிற்கு உள்ள தொடர்பையும், அவர் நிற்கும் சார, நவாம்ச பலத்தையும் வைத்து தான், அந்த குறிப்பிட்ட ஜாதகத்திற்கான சுபத்துவத்தைக் கூற இயலும். சில உதாரணங்களுடன் பார்க்கலாம்.  

குரு


// ல //
இந்த விருச்சிக லக்ன ஜாதகத்தில், 2, 5 ஆகிய பாவங்களுக்கு, அதிபதியான குரு மீனத்தில் ஆட்சி பெற்று, தனது 5-ஆம் பார்வையால் கடகத்தையும், 7-ஆம் பார்வையால் கன்னியையும், 9-ஆம் பார்வையால் விருச்சிகத்தையும் (லக்னம்) பார்வையிடுகிறார். குரு பார்வையிடும் ராசிகளை மஞ்சள் நிறத்தில் காட்டியுள்ளேன்.

இதன் பலன்: 
ஜாதகருக்கு இயற்கையாகவே பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும். போன ஜென்மத்தில் விதைத்த புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் அறுவடை செய்வார். ஜாதகருக்கு இறை நம்பிக்கை, நீண்ட ஆயுள், பெற்றோர்களின் வழி சொத்து, சுகமான வாழ்க்கை, நல்ல மக்கட்செல்வம், ஆண் வாரிசு, குடும்ப விருத்தி, பொருளாதர உயர்வு, செய் தொழிலில் லாபம், பருவத்தில் திருமணம், மாமன் வழியில் படித்த வாழ்க்கைத் துணை(வி), ஜோதிடத்தில் ஈடுபாடு போன்றவை அமையும். தந்தைக்கு யோகம் உண்டாகலாம். இந்த பலன்கள் குருவின் தசா புக்தி காலத்திலும், மற்ற சுப கிரக தசைகளில் குரு புக்தியிலும் நடைபெறும். 

அடுத்த வரும் பதிவுகளில், மேலும் பல எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். இந்த பலன்களை சுருக்கமாக தந்துள்ளேன். இந்த பலன்களை எப்படி கணிப்பது, அதற்கான விதி முறைகள் என்ன என்பதையும் அடுத்த பதிவில் காணலாம்.  

மீண்டும் சந்திப்போம்
கற்றல் ! தெளிதல் !! தெளிவித்தல் !!! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com 

பிற்சேர்க்கை :

பெரும்பாலும் எனது பதிவுகளில் யாருடைய நடையும் இருக்காது. அப்படி இருப்பதாக யாராவது கூறினால், நன்றி உடையவனாவேன். அது எனக்கு ஒரு சுய மதிப்பீடாக இருக்கும். பெரும்பாலான வலைத்தள பதிவர்கள், ஜோதிடப் புத்தகங்களில் உள்ளவற்றை கொஞ்சம் கொஞ்சமாக தட்டெச்சு செய்து, பதிவிடுகின்றனர். ஜோதிடம் அறிந்தவர்களுக்கு, அதை எளிதில் புரிந்துகொள்ள இயலும். அதற்கு ஜோதிட ஆர்வலர்கள் புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு போகலாமே! இன்னும் ஒரு சிலர், ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யக்கூட நேரமில்லாமல் (அப்படித்தான் அவர்கள் கூறுகிறார்கள்) அப்படியே ஆங்கிலத்தில் பதிவிடுகின்றனர். இன்னும் ஒருவர் தமிழில் வலைப்பூவை வைத்துக்கொண்டு, நான் ஆங்கிலத்தில் படித்து தான் எளிதாக ஜோதிடம் கற்றுக்கொண்டேன் என்று பெருமை வேறு. அப்படியென்றால், அவர் தமிழில் ஜோதிட புத்தகங்கள் சரியில்லை என்கிறாரா? அவ்வாறெனில், அந்த ஆங்கிலப் புத்தகங்களின் பெயர்களை சொல்லிவிட்டு போகலாமே! வருடக்கணக்காக பதிவிட வேண்டிய அவசியமில்லையே. அதற்கு தமிழில் ஒரு வலைப்பதிவு வேறு.  
வேறு சில பதிவாளர்கள், வேறு தளத்தில் பதிந்ததை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து இருப்பதையும் காண முடிகிறது. அந்த நகல் பதிப்பைப் பார்த்து அசல் புலம்புவதையும் பார்க்க நேருகிறது. அனைவரும் ஜோதிடம் கற்க வேண்டும் என்ற கொள்கையில் தானே, நல்லெண்ண அடிப்படையில் தானே, வலைத் தளத்தில் ஜோதிடம் கற்று கொடுக்கிறீர்கள். அசல் 100 பேருக்கு, கற்று கொடுத்தால், நகல் ஒரு 10 பேருக்கு கற்றுத் தரட்டுமே, கற்பிப்பது தானே உங்கள் கொள்கை, அதை நீங்கள் செய்தாலென்ன? அவர் செய்தால் என்ன?  அதற்கு புலம்பல் எதற்கு?
மனதில் தோன்றியதை சொன்னேன், யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. அப்படி யாரையாவது, காயப்படுத்தியிருந்தால், உடன் பிறவா சகோதரனாக எண்ணி மன்னிக்கவும்.  

Monday, September 3, 2012

கண்ணடித்து கலக்கும் மூவர் – 2


கடந்த பதிவில், இராகு, கேதுவுக்கு பார்வை இல்லை என்று பார்த்தோம். இந்தப் பதிவில் சில கிரகங்களின் பார்வை குறித்த ஆய்வை தொடரலாம்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களும், தான் நிற்கும் இராசியிலிருந்து 7-ஆவது இராசியையும், அதில் இருக்கும் கிரகங்களையும் பார்க்க வல்லவர்கள். 

எடுத்துக்காட்டாக, சூரியன் மேஷ இராசியில் நின்றுகொண்டு, மேஷத்திற்கு 7-ஆம் இராசியான துலா இராசியையும், துலாத்தில் ஏதேனும் கிரகம் இருந்தால், அந்த கிரகத்தையும் பார்ப்பார். இதைப்போலவே சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களும், தான் இருக்கும் இராசியிலிருந்து, 7-ஆம் இராசியையும், அதில் இருக்கும் கிரகங்களையும் பார்க்க வல்லவர்கள். இந்தப் பார்வையை, ஜோதிடர்கள் ஏழாம் பார்வை அல்லது சப்தம பார்வை என்று குறிப்பிடுவார்கள். இனி இந்த நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை, விவரமாக பார்க்கலாம்.


சந்திரன்

முதலில் சந்திரனை எடுத்துக் கொள்வோம், அவர் பௌர்ணமி நெருக்கத்தில் தான் சூரியனுக்கு 7-ஆம் இராசிக்கு வருவார். தோராயமாக இரண்டரை நாட்கள், இருவரும் கண்களால் கதை பேசிக் கொள்வார்கள். பிறகு, அவரவர் வேலையைப் பார்க்க சென்று விடுவார்கள். அதே நாட்களில் சந்திரன், புதனையும், சுக்கிரனையும் பார்த்தும் ஒரு ஹலோ சொல்லிவிடுவார். பக்கத்து வீட்டு அங்கிளுக்கு ஹலோ சொல்லும் போது, அதே சாக்கில் அவருக்கு பக்கத்திலேயே இருக்கும் பிள்ளைகளுக்கும் ஹலோ சொல்வதைப் போல என்று நினைத்துக் கொள்ளுங்கள். பதிலுக்கு, அவர்களும் சந்திரனுக்கு ஹலோ சொல்வார்கள் தமது 7-ஆம் பார்வையால். மற்ற நாட்களில் இவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் இல்லை. ஆனால், மற்ற கிரகங்களை, மற்ற நாட்களில், அவர்களின் நிலைகளுக்கேற்ப தனது 7-ஆம் பார்வையால், சந்திரன் பார்த்து விட வாய்ப்புள்ளது. சந்திரனின் பார்வையை, வளர்பிறை காலத்தில் சுபகிரக பார்வையாகவும், தேய் பிறை காலத்தில் அவரது பார்வையை அசுப கிரக பார்வையாகவும் எடுத்துக் கொள்வார்கள். வளர்பிறையோ, தேய்பிறையோ சந்திரன் மகரத்திலிருந்து, தன் சொந்த வீடான கடகத்தை பார்ப்பதை மட்டும், சுபத்துவமிக்க பார்வையாக ஏற்கலாம். எந்த ஒரு கிரகமும், தன்னுடைய சொந்த வீட்டை பார்ப்பது, நன்மை பயக்கும் என்ற ஜோதிட பொது விதிப்படி இது நன்மையே. ஆனால், சந்திரன் மகரத்தில் தீய கிரக சேர்க்கை பெறாமலிருக்க வேண்டும்.


சூரியன், புதன், சுக்கிரன்
சந்திரனுக்கு மட்டுமல்ல, இந்த மூன்று கிரகங்களுக்கும் கூட 7-ஆம் பார்வை இருப்பதாக இந்தப் பதிவின் தொடக்கத்தில் பார்த்தோம். இந்த மூன்று கிரகங்களும் தாம் இருக்கும் ராசிக்கு, 7-ஆம் இராசியையும், அந்த இராசியில் உள்ள கிரகங்களையும் பார்க்கும் என்று கூறினோம். ஆனால், இந்த மூன்று கிரகங்களும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள இயலாது. ஏனெனில், புதனும், சுக்கிரனும், சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கிரகங்கள் என்பதால், அவைகள் சூரியனுக்கு 7-ஆம் இராசிக்கோ, அல்லது ஒருவருக்கொருவர் 7-ஆம் இராசிக்கோ செல்வதில்லை. இதனால் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 7-ஆம் பார்வையை பயன்படுத்தி இவர்கள் ஒருவருக்கொருவர் பார்க்க இயலாது, ஆனால் மற்ற கிரகங்களைப் பார்க்க இயலும்.

ஒருவர், உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்து, சுக்கிரன் சூரியனை பார்க்கிறார், புதனை பார்க்கிறார், என்று கதையளந்தால், அவரிடமிருந்து உங்கள் ஜாதகத்தை உடனடியாக வாங்கிக் கொண்டு நான் வேறு ஒரு நல்ல ஜோதிடரை பார்க்கப் போகிறேன் என்று கூறி எஸ்கேப் ஆகிவிடவும். ஏதோ என்னால் இயன்ற உதவி, ஒரு இலவச அறிவுரை.

ஒரு வழியாக கண்ணடித்து கலக்கும் அந்த மூவர் யார் என்று யூகித்து இருப்பீர்கள். யூகிக்க இயலவில்லை என்றாலும் பரவாயில்லை, அடுத்த பதிவு வரை காத்திருக்கவும்.

மீண்டும் சந்திப்போம்

கற்றல் ! தெளிதல் !! தெளிவித்தல் !!! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
பிற்சேர்க்கை :

இராகு, கேது - ஜோதிடம் என்ற பதிவில், காம்பினேஷன் குறித்து கேட்டிருந்த கேள்விக்கு இப்பொழுது பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஒருவருக்கொருவர் எல்லா பாவங்களிலும், இருப்பதற்கான காம்பினேஷன்கள் வருவதில்லை. மூன்று பாவங்களுக்கு இடையிலேயே வீடு கட்டி விளையாடுவார்கள். அதாவது, சூரியன் 5-ஆம் பாவத்தில் இருப்பதாகக் கொள்வோமெனில், புதன் மற்றும் சுக்கிரன், 4, 5, 6 –ஆம் பாவங்களிலேயே இருக்கக் கூடும். அதாவது, சூரியனுக்கு முன் பாவத்திலேயோ அல்லது சூரியன் இருக்கும் பாவத்திலேயோ அல்லது அடுத்த பாவத்திலேயோ தான் இருக்கக்கூடும். கிரக ஸ்புடம் மற்றும் பாவ கணித ஆராய்ச்சி செய்து பார்க்கையில், அதிக பட்சமாக சூரியனுக்கு முன்பின், 3 வீடுகள் வரை செல்லவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் சில சம்ஸ்கிருத கிரந்தங்களில், சூரியனுக்கு, 4-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் என்று சொல்லப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. மிக மிக அரிதான காம்பினேஷனாக அது இருக்கும் (தியரிடிகலி பாஸிபிள்).
இளைஞர்களைக் கவர வேண்டியே சில இடங்களில் ஆங்கில கலப்பு இருக்கும், தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும். முகநூலில் ஒரு பதிவை தூய தமிழில் இட்டேன். உடனே ஒரு இளைஞர், அவருடைய கைப்பேசியில், தமிழ் எழுத்துரு சரிவரத் தெரியவில்லை என்று வருத்தப்பட்டு, அதற்கு ஒரு பின்னூட்டம் இட்டார். அதனை நான் வாசித்து விட்டு, கொஞ்சம் மெனக்கிட்டு, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒரு பதிவிட்டேன். உடனே வேறொரு இளைஞர், அதற்கும் ஒரு பின்னூட்டம் இட்டார். எவ்வாறு தெரியுமா?

Sir, enakku intha aangila padhivukku, artham puriyala. Aanaa etho nalla vishayam solringanu theriyuthu. Thayavu seythu intha pathivai Tanglishil idumaru kettukolkiren. Nanri

Tanglishil,  2 வரி எழுதியதற்கே எனக்கு தூக்கம் வந்துவிட்டது, ஒரு நாளெல்லாம் இந்த Tanglish -ஐ வைத்து எப்படிதான் பொழுது போக்குகிறார்களோ !

மீண்டும் சந்திப்போம் !