Wednesday, January 26, 2011

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-1

கடந்த பதிவில், ஜாதகம் பார்க்கக்கூடாது என்று சில மதத்தினர் கூறிய காரணங்களை எழுதியிருந்தேன். அந்த காரணங்களை அலசி ஆராய்ந்த பிறகு, மேலே சொன்ன தலைப்பிற்கு போகலாம் என்று நினைக்கிறேன். கடந்த பதிவைப் படிக்காதவர்கள் அதனைப் படித்து விட்டு இங்கு வரவும். அனைத்து காரணங்களையும் காண: இங்கே கிளிக் செய்யவும்

(1)
முதல் காரணத்திற்கான விளக்கம்:
புனித நூல்களில் சொல்லாத எத்தனையோ விஷயங்களை வாழ்க்கையில் அவர்கள் கடைபிடிக்கும் போது, ஜோதிடம் மட்டும் என்ன விதி விலக்கா? யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்பது எமது நோக்கமல்ல, ஆராய்வதே எமது நோக்கமாகும். புனித குரானில் சொல்லப்படாத எத்தனையோ விஷயங்களை, வழிபாட்டு முறைகளை சன்னி, ஷியா என்ற பிரிவுகளில் வெவ்வேறான வகைகளில் கடைபிடிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தர்க்காவில் வழிபாடு நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு, நாகூர் தர்க்கா (நம்முடைய ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பம், முஸ்லீமாக மாறிய இடம்), ஏர்வாடி தர்க்கா போன்ற தர்காக்களை வழிபாட்டு தலங்களாக மாற்றி விட்டார்கள். தர்காக்கள் வேறு, மசூதி (பள்ளி வாசல்) என்பது வேறு. தர்காக்கள் என்பது அவுலியாக்கள் (தமிழில் சித்தர்கள் என்றோ மகான்கள் என்றோ கூறலாம்) சமாதியான (அடக்கம் செய்யப்பட்ட) இடம். ஆனால் பள்ளிவாசல் என்பது, இறைவனை கூட்டுப் பிரார்த்தனை செய்யும் இடமாகும். புனித குரானில் எந்த இடத்தில், சமாதியில் அவுலியாக்களை வழிபடலாம் என்று எழுதப்பட்டுள்ளது? ஆனால் நடை முறையில், லட்சக்கணக்கான மக்கள் சென்று வழிபடுகிறார்கள்.

நமது நாட்டில் உள்ள புகழ் பெற்ற கோவில்கள் எல்லாவற்றிகும் அருகில், மிக அருகில், சித்தர்கள் வாழ்ந்ததாக சான்றுகள் உள்ளது. உதாரணத்திற்கு, பழனியில் போகர், புலிப்பாணி போன்ற சித்தர்களும், மருத மலையில் பாம்பாட்டி சித்தரும், சமீபத்தில் மக்கள், குறிப்பாக பெண்கள், குவியத் தொடங்கியுள்ள மேல்மருவத்தூர் கோவிலும் ஒரு சித்தர் பீடமே.
சித்தர்கள் தங்களின் மனதைக் கட்டுப்படுத்தி, ஒருமுகப்படுத்தி, கடுமையான விரதத்தாலும், தியானத்தாலும், தவமிருந்து தன்னுடைய இருப்பிடத்திற்கே, இறைவனை வரவழைத்து, துதித்து, வரங்களைப் பெற்று, சக்திகளைப் பெற்று, அதனைக் கொண்டு, மக்கள் துயர் தீர்த்தார்கள். அவர்கள் இருந்த, வழிபட்ட இடத்தில், இன்றளவும் அதிர்வுகள் (Spiritual vibrations) உள்ளதால், அவ்விடங்கள் வழிபாட்டு தலங்களாக மாறி புகழ் பெற்றது.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்த பதிவு: ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-2


No comments: