3 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-2)
மூன்றாவதாக, மற்ற மதத்திற்கும், நமக்கும் உள்ள வேறுபாட்டை அல்லது தனித்தன்மையை, இழந்து விடக்கூடாது என்ற எண்ணமும் ஒரு காரணமே! எந்த மதத்திற்கும் தனித் தன்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லா மதங்களும் போதிப்பது அன்பைத்தான், எல்லா மதங்களும் காட்டுவது இறைவனை சென்றடையும் வழியைத்தான். கிறிஸ்து போதிக்கும் அன்பை, உலகப் பொதுமறையாம் திருக்குறளில், திருவள்ளுவர் அன்புடைமை என்ற ஒரு தனி அதிகாரம் ஒதுக்கி அதில் 10 குறட்பாக்களை எழுதியுள்ளார். அவர் கிறிஸ்து காலத்திற்கு முற்பட்டவர் என்று வரலாறு கூறுகிறது. அதற்காக, அவரை நாம் ஒரு மதத் தலைவராகவோ, இறைவனுக்கு இணையாகவோ கூறவில்லை. (திருவள்ளுவரும் ஒரு கிறிஸ்துவரே என்று கூறுகிற, வரலாறு தெரியாத ஒரு கிறிஸ்துவக் கூட்டமும் தமிழ் நாட்டில் உண்டு. அதைப் பற்றி இன்னொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்). கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகள் முன்பு பிறந்த புத்தரும் ஒரு படி மேலே போய், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய் என்று போதித்தார். அவரையும் தெய்வமாக பாரத நாட்டில் வழிபடவில்லை. (ஆனால் அவரையே தெய்வமாக வழிபடும் ஒரு அரக்கர் கூட்டம், தென்னிலங்கையில், முள்ளி வாய்க்காலில், என்ன வெறியாட்டம் போட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அன்பு என்றால் 1 கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒரு கூட்டம், அன்பை போதிக்கும் புத்தனை வழிபடுகிறது. வெட்கக் கேடு!).
பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், நீ எந்த கடவுளை வழிபட்டாலும், என்னை வழிபட்டதாகவே அர்த்தம் என்று கூறுகிறார். இதனையே நம்முடைய பேரறிஞர் அண்ணா, “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!“ என்று ரத்தின சுருக்கமாக சொன்னார். பாரத நாட்டில், சுதந்திரமாக சிந்திக்கும் வாய்ப்பு அனைவருக்கும் இருந்ததால், தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக, எவ்வித பயமும் இன்றி, சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களாகவும், தமிழில் செய்யுட்களாகவும் பதிவு செய்துள்ளனர். சைவ சித்தாந்தம், இறைவனை மூன்று விதத்தில் (உருவம், அருவம், அருவுருவம்) வழிபட நமக்கு வழி காட்டுகிறது. இறைவனின் தொழிலாக, ஐந்தொழிலையும் (படைத்தல், காத்தல், அழித்தல், காட்டல், மறைத்தல்) நமக்கு உணர்த்துகிறது. அதனால், அருவ வழிபாடு என்பது தமக்கே உரிய, தம்முடைய மதத்திற்கே உள்ள தனித்தன்மை, என்று வாதிடும் ஒரு சில மத வாதிகளை என்னெவென்று சொல்ல? நம்முடைய அறிவுக்கு எட்டிய வரை, எந்த ஒரு சித்தரும், முனிவரும் கோவிலில் உட்கார்ந்து தவமிருந்ததாகத் தெரியவில்லை. காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் தனியே அமர்ந்து, தவம் இருந்து, தாம் இருக்கும் இடத்திற்கு, இறைவனை வரவழைத்தாகவே, அறிகிறோம். அருவ வழிபாட்டை அவர்கள், பின்பற்றியுள்ளனர். இன்றளவிலும், ஞானிகள் அருவ வழிபாட்டை கடை பிடித்து, முக்தி நிலையை அடைகின்றனர். அதனால் எந்த மதத்திற்கும் தனித்தன்மை என்று ஒன்று கிடையாது, வழி பாட்டு முறைகளும், பழக்க வழக்கங்களுமே வேறுபடுகிறது என்பது, என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.
கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்
உங்கள் அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
எமது அடுத்த பதிவு :
No comments:
Post a Comment