Thursday, August 30, 2012

மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு


சரியான ஆன்மீகம் என்பது, மற்றவர்களின் நலனில் அக்கறை காட்டுவதும், அவர்களின் துன்பத்தைக் கண்டு, வாடுவதும் தான். என்னில் உள்ளவன், உன்னிலும் இருக்கிறான், என்பதை உணர்த்த வேண்டியே அன்பே சிவம் என்று நம் முன்னோர்கள் கூறிச் சென்றனர்.

இனி மாரடைப்பின் காரணமாக, வரும் ஆபத்தை எப்படி தவிர்ப்பது என பார்க்கலாம். 

மூன்றெழுத்து மந்திரம்   S T R
 
S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண விழாவில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது கூட, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம். ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R  அதாவது,  

SMILE (சிரிக்க சொல்வது),  
TALK (பேச சொல்வது), 
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)

போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். 

மேற்கூறிய இந்த மூன்றையும், இவர்களால் செய்ய இயலவில்லை என்றால், உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம். மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.

மேற்கூறிய இந்த மூன்றையும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதாவது, அவருடைய  நாக்கை நீட்ட சொல்ல வேண்டும், அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம். அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
கவனம் தேவை !

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர்களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள்.  


அன்பே சிவம் !


கற்றல் தெளிதல் தெளிவித்தல் என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

Tuesday, August 28, 2012

இராகு, கேது – ஜோதிடம்


இராகு, கேது இரண்டும் கடிகாரச் சுற்றுக்கு எதிர் சுற்றில் சுற்றி வருகின்றன. அதாவது மற்ற கிரகங்கள் சுற்றி வருவதற்கு எதிர் திசையில் சுற்றி வருகின்றன. ஏற்கனவே கடந்த பதிவில் கூறியது போல், இரண்டு புள்ளிகளும், பூமிக்கு அருகில் உள்ளதால், நமக்கு எதிர்திசையில் பயணிப்பது போல் இருக்கும். அதாவது, இரயிலில் பயணிக்கும் போது, அருகில் உள்ள பொருட்கள் நமக்கு எதிர் திசையில், ஓடி வருவது போல் இருக்கும். ஆனால் தூரத்தில் உள்ள மலைகள், நாம் போகும் திசையில் நம்முடன் வருவது போல் தோன்றும். இது நமக்கு தெரிந்த ஒரு நிகழ்வு. இதனை இயற்பியலில், சார்பியல் தத்துவம் என்று கூறுவார்கள். நவீன இயற்பியலின் தந்தை ஐன்ஸ்டீன், இதைப் போன்ற பல நிகழ்வுகளை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்க முயன்றார். இதை நம்முடைய முன்னோர்கள், மிகவும் திறமையாக, முப்பரிமாணத்தில் கோள்களின் இயக்கங்களை கற்பனை செய்து, ரூம் போட்டு டிஸ்கஸ் செய்து உருவாக்கிய கதாநாயகர்கள் தான், இந்த இராகுவும், கேதுவும். 

இவைகள் மாத்திரம் இல்லாமல், இன்னும் பல ஜோதிட (வானியல்) நிகழ்வுகளான கிரக அஸ்தமனங்கள், கிரக யுத்தம், கிரக வக்கிரம் போன்றவைகள் எல்லாம், சார்பியல் தத்துவத்துடன் தொடர்பு உள்ளவைகள்தான்.

உலகத்தில் உள்ள அனைத்து வானியல் ஆய்வாளர்களும், நாஸா உட்பட, இராகு, கேது பற்றி அறிந்து வைத்து இருக்கிறார்கள், அவைகளைப் பயன்படுத்தி கணக்கீடுகளும் செய்துதான் வருகிறார்கள். இவைகளை வேறு பெயரில் குறிப்பிடுகிறார்கள் அவ்வளவே! சுயமாக மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருதால், இதைப் பற்றி ஆராயும் போதுதான் இந்த விவரம் தெரிய வருகிறது. நமது கணிதத்தில் கிடைக்கப் பெறும், கிரக நிலைகளும், மற்ற நாடுகளின் வானியல் ஆய்வாளர்கள் (அந்த நாட்டு ஜோதிடர்கள் அல்லர்) வெளியிடும் கிரக நிலைகளையும் ஒப்பிடும்போது, நமக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்கிறேன். 

இன்னும் வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்து தான் ஜாதகம் கணிப்பேன், என்று அடம் பிடிக்கும் ஜோதிடர்களை நினைத்தால், எனக்கு மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது. சில ஊர்களில் உள்ள ஜோதிடர்கள் கம்ப்யூட்டரில் கணித்த ஜாதகங்களை ஏறெடுத்து கூட பார்ப்பதில்லை. ஒருவேளை புரியாததால் செய்யும் சமாளிஃபிகேஷனோ என்று நினைக்கத் தோன்றுகிறது. திருக்கணிதம் மூலம் கணிக்கும் கிரகநிலைகள் மற்ற நாட்டவரின் கிரக நிலைகளுடனும் நெருங்கி வருகிறது. அப்படி ஒப்பு நோக்கும் போது தான் அவர்கள் இராகு, கேதுவை குறிப்பிடுவதை அறிந்தேன். அவர்களும் கணக்கீடு செய்கிறார்கள், ஆனால் அவர்கள் நாம் கொடுக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை அவ்வளவே. நவீன திருக்கணித முறையைப் பயன்படுத்தாத ஜோதிடர்களுக்காகவே, திருவள்ளுவர் ஒரு திருக்குறளை எழுதி உள்ளார். அவருக்கு வேற வேலை என்ன? எல்லாத்தையும் எழுதி வைத்து விட்டு போய் விட்டார், நாம் தான் கன்னியாகுமரியில், சுனாமி வந்த போது கூட அசையாமல், வீராப்புடன் நின்ற அவரது சிலையை பராமரிக்க காசு இல்லாமல், வருமானத்திற்காக டாஸ்மாக் நடத்தி வருகிறோம், அதுவும் வருடாந்திர இலக்கு வைத்து, வெட்கக் கேடு! 

இனி ஜோதிடத்திற்கு வருவோம், இராகு, கேது ஒன்றுக்கொன்று 180 பாகை இடைவெளியில், கடிகார எதிர் சுற்றில் (ஆண்டி கிளாக்வைஸில்) சுற்றி வருகிறது. மற்ற கிரகங்கள் எல்லாம் அங்கிள் கிளாக்வைஸில் சுற்றுகிறதா? என்று கேட்காதீர்கள், அப்படி கேட்பவர்களை பென்ச் மேல் நிக்க வைத்துவிடுவேன். வட்டத்திற்கு 360 பாகை என்பதால், 180 பாகை சரியாக எதிரில் வரும், அதாவது 7-ஆவது ராசியாக வரும். அதாவது, இராகு மேஷ ராசியில் இருந்தால், கேது துலா ராசியில் இருப்பார், அவ்வளவுதாங்க. இவர்களுக்கு, ஒரு ராசிக்கு ஒன்றரை ஆண்டுகள் என்ற கணக்கில், 12 இராசிகளையும் ஒரு சுற்று சுற்றி வர ஏறக்குறைய 18 ஆண்டுகள் ஆகிறது. இராகு, கேதுவுக்கு ஆட்சி வீடுகள் இல்லை. அதனால், இவர்களுக்கு பாவாதிபத்தியம் கிடையாது. எந்த பாவத்தில், நிற்கிறார்களோ, அந்த பாவத்தை தனதாக்கிக்கொண்டு, அதிகாரம் செலுத்த வல்லவர்கள். மேலும், உடன் யாராவது சேர்ந்தால், தொலைந்தார்கள். அவர்களை டம்மியாக்கிவிட்டு, அவர் செய்ய வேண்டிய வேலையை, இவர்கள் செய்வர். இராகு, கேது தரும் ஜாதக பலனை கூறும் பொழுது, ஒருவரை விட்டு விட்டு சொன்னால் சரியாக வராது. ஜோடியாகத்தான் ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டும். கண்கள் இரண்டு காட்சி ஒன்றே என்பதைப் போல, பலன் கூற வேண்டும்.

கிரக சேர்க்கைகளை கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்யும் பொழுது, மிகுந்த கவனம் தேவை. மற்ற கிரகங்களைப் போல, இந்த இராகு, கேதுக்களுக்கு For  {……}  Loop அல்லது DO … CONTINUE, Loop-ல் காம்பினேஷன்களை எழுத இயலாது. சில Combination-களை,  Exclude செய்வதற்காக  conditional statement  நிறைய எழுத வேண்டி வரும். அதாவது கேது 1-ல் இருக்கும் போது, மற்ற கிரகங்கள் 12 பாவங்களில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இராகு 7-ல் மட்டுமே இருக்க இயலும். இதுபோல் சனி 1-ல் இருக்கும் போது கேது, எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கேது எங்கு இருக்கிறதோ, அதற்கு 7-ஆம் வீட்டில்தான் இராகு இருக்கும். இவ்வாறாக நிறைய conditional statement எழுதனும். இதுபோன்ற பிரச்சினைகள் வேறு கிரகங்களுக்கு இல்லையா என்று கேட்கலாம். இதுபோன்ற பிரச்சினைகள் வேறு இரண்டு கிரகங்களுக்கும் உண்டு. அவை புதன் மற்றும் சுக்கிரன். அது எப்படி? என்று யோசித்து வையுங்கள், வரும் பதிவுகளில், ஆராயலாம்.

அசுவினி, மகம், மூலம் – போன்ற நட்சத்திரங்களை கேது ஆள்கிறார். இந்த நட்சத்திரங்களை ஜென்ம நட்சத்திரமாகக் கொண்டு ஜனித்த ஜாதகருக்கு, தொடக்க தசையாக கேது மகாதசை வரும்.
திருவாதிரை, சுவாதி, சதயம் - போன்ற நட்சத்திரங்களை இராகு ஆள்கிறார். இந்த நட்சத்திரங்களை ஜென்ம நட்சத்திரமாகக் கொண்டு ஜனித்த ஜாதகருக்கு, தொடக்க தசையாக இராகு மகாதசை வரும்.
இராகு, கேதுக்கு பார்வை இருப்பதாகவும், ஆட்சி வீடுகள் உள்ளதாகவும் மிகவும் அரிதாக சில ஜோதிட நூல்களில், சொல்லப்பட்டுள்ளன. இதனை அனைவரும், ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இராகுவுக்கு ரிஷபமும், கேதுவுக்கு விருச்சிகமும் உச்ச வீடுகள் என்பதை, பெரும்பாலான ஜோதிடர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். மீண்டும் திருவள்ளுவரை வம்புக்கு இழுக்க வேண்டியுள்ளது. அந்தக் குறளை பிற்சேர்க்கையில் விளக்கி உள்ளேன்.
  
மீண்டும் ஒரு முறை இராகு, கேதுவிற்கான முக்கிய ஜோதிட விதிகளை தருகிறேன்.
(அ) இராகு, கேது ஒன்றுக்கொன்று சம சப்தமத்தில், மற்ற கிரகங்களுக்கு எதிர் திசையில் சுற்றுகிறது. 
(ஆ) இராகு, கேதுவுக்கு ஆட்சி வீடுகள் இல்லை, அதனால் பாவாதிபத்தியம் இல்லை, எந்த பாவத்தில், நிற்கிறார்களோ, அந்த பாவத்தை சொந்தமாக்கிக் கொண்டு, அதிகாரம் செலுத்த வல்லவர்கள்.
(இ) கிரக சேர்க்கையில், எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும், அவர்களின் பலத்தையும் இவர்களுடன் சேர்த்துக் கொண்டு, அந்த கிரகத்தின் காரகத்துவம் மற்றும் பாவ பலன்களை இவர்களின் தசா, புக்தி காலத்தில் வழங்குவார்கள்.
(ஈ) அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களை கேது ஆள்கிறார்.
(உ) திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களை இராகு ஆள்கிறார்.
(ஊ) இராகுவுக்கு ரிஷபமும், கேதுவுக்கு விருச்சிகமும் உச்ச வீடுகளாகும். 
(எ) இராகு, கேதுவுக்கு பார்வைகள் கிடையாது.
இப்போதைக்கு இது போதும், மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.comபிற்சேர்க்கை :
அந்த திருக்குறள் இதுதான்:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், ஒரு பெண் எனில், சவுதியில் தங்கி இருக்கும் வரை, வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது, பர்தா அணிய வேண்டும். இல்லையெனில், பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள். எல்லா வளைகுடா நாடுகளிலும், நோன்பு மாதத்தில், பொது இடங்களில் தண்ணீர் பருகுவதோ, உணவு உண்பதோ, நோன்பு இருப்பவர்களை வெறுப்பேத்துவதாக, நினைத்து, உள்ளே போட்டுவிடுவார்கள். ஊரோடு, ஒத்துப் போக வேண்டும்! ஊருடன் பகைக்கின், வேருடன் கெடும்! என்ற பழமொழிகளும் இந்தக் குறளுடன் பொருந்தி, பழக்கத்தில் உள்ளது. அனைவருக்கும் பொருந்துவதால் தான், திருக்குறளை உலகப் பொது மறை என்று போற்றுகிறோம்.
அதனால் வாக்கிய பஞ்சாங்கம் பயன்படுத்துவோர், தயவு செய்து திருக்கணித முறைகளை சீர் தூக்கி பார்த்து, உலகத்துடன் ஒட்டி வாழ வேண்டும் என்று, சிரம் தாழ்த்தி வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்.