Monday, July 25, 2011

குழந்தைச் செல்வம் - ஓர் ஆய்வு

வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டாலே போதும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது, இந்தியாவின் மக்கள் தொகையைப் பார்த்தாலே தெரியவில்லையா, இதற்கு எதற்கய்யா ஜோதிடம் என்று கேட்போரும் உளர். இந்த வலைப்பூவின் நோக்கமே, மக்கள் மத்தியில் நிலவும் நெகடிவ் சிந்தனையைப் போக்கி, பாஸிடிவ் எண்ணத்தை வளர்ப்பதுதானே. எத்தனையோ தம்பதியினர் குழந்தைப் பேறு இல்லாமல், மனக்கவலையுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும், ஜோதிடர்களுக்கும், ஜோதிடத்தை கற்க வந்துள்ள உங்களைப் போன்ற ஆர்வலர்களுக்கும் இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.


கர்ப்பமும், மருத்துவமும்


ஒரு ஆரோக்கியமுள்ள ஆணின் விந்து திரவம் குறைந்தது 2 மி.லி. வெளிப்பட வேண்டும். அதில் 1 மி.லி.க்கு குறைந்தது 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதாவது ஒரு முறை வெளிப்படும் விந்துவில் சுமார் 40 மில்லியன் விந்தணுக்கள் குறைந்த பட்சம் இருக்க வேண்டும். அப்படி 40 மில்லியனுக்கு மேல் விந்தணுக்கள் உள்ள எந்த ஆணும் குழந்தை பெறத் தகுதியுள்ளவனே ! ஆனால், இந்த 40 மில்லியன் விந்தணு வீரர்களில், ஒருவரே பந்தயத்தில் ஜெயிக்கிறார். அவரே வெற்றி வீரர். அவரையே பெண்ணின் சினை முட்டை ஏற்றுக்கொள்கிறது. வழக்கமான தமிழ் சினிமாவில் வரும் வெற்றி பெற்ற ஹீரோவை ஹீரோயின் கிளைமாக்ஸ் காட்சியில் அணைப்பது போல, வெற்றி பெற்ற விந்தனுவை பெண்ணின் சினை முட்டை அணைத்து ஏற்றுக் கொள்கிறது. அப்படியெனில் ஒரு ஆண் ஒருதடவை வெளிவிடும் விந்தனுவைக்கொண்டு ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையையே உண்டு பண்ணலாம். கற்பனை செய்வது லூசுத்தனமாக இருந்தாலும், மருத்துவ அறிவியலின்படி சாத்தியமே !

ஆனால் ஒரு ஆரோக்கியமான பெண்ணிற்கு மாதத்திற்கு ஒரு சினை முட்டைதான் உற்பத்தியாகிறது. வெற்றி வீரரை ஏற்றுக்கொண்டவுடன், தற்காலிகமாக முட்டை உற்பத்தியை நிறுத்திக்கொள்கிறது. ரொம்ப அரிதாக ஒரே சமயத்தில் இரு முட்டைகளும், தயாராகி, இரு வீரர்களை ஏற்கும்பொழுது அது இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பாக அமைகிறது. ஆனால் பெண்ணின், சினை முட்டை உற்பத்திக்கு, அளவு உள்ளது. அதாவது பருவம் அடைந்ததிலிருந்து சுமார் 45-55 வயது வரைமட்டுமே, அதாவது மெனோபாஸ் வரும் வரை மட்டுமே சினைமுட்டை உற்பத்தி நடைபெறும், அதுவரை மட்டுமே கர்ப்பம்தரிக்க இயலும். ஒரு பெண் மெனோபாஸாகி தாய்மை அடைவதில் ஃபெயில் ஆகிறாள். 15 முதல் 50 வயது வரை சுமார் 35 வருடம், வருடத்திற்கு 12 எனில், 35 வருடத்திற்கு சுமார் 450 முட்டைகளே உற்பத்தி செய்ய இயலும். அதாவது மருத்துவ அறிவியலின்படி 450 குழந்தைகளை உருவாக்கலாம், பெற இயலாது. பெறுவது எனில் வருடத்திற்கு ஒன்று என சுமார் 45 குழந்தைகளைப் பெறலாம். மெனோபாஸ் அடைவதால் சினைமுட்டை உற்பத்திதான் நிற்கும் ஆனால், கர்ப்பபை குழந்தையை வளர்க்க ஏதுவாகத்தான் இருக்கும், மெனோபாஸுக்கு பின்பும் குழ்ந்தைப் பெறலாம் என்பது ஒரு புதிய தகவலே. Even after menopause the uterus is fully capable of carrying out a pregnancy. அதற்கு வேறு ஒரு பெண்ணின் சினை முட்டையை பயன்படுத்தலாம்.

ஒரு பெண்ணின் சினை முட்டையை எடுத்து ஆணின் விந்தணுக்களுடன் சோதனைக் குழாயில் சேர்த்து பின்பு பெண்ணின் கர்ப்பபைக்குள் வைத்து கருவை வளர்க்கலாம். இதனை ”படுக்காமல் பிள்ளை பெறுக்கொள்வது” என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதனை In vitro fertilisation (IVF) என்று கூறுவார்கள். இந்த முறை 1978ல் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு (2010), இந்த முறையை கண்டு பிடித்த Robert G. Edwards என்ற மருத்துவ விஞ்ஞானிக்கு நோபல் பரிசு கிடைத்தது. அவருக்கு ஒரு ராயல் சல்யூட். அகத்திய மாமுனியை முதல் சோதனைக்குழாய் குழந்தை என்று நம்மவர்கள் கூறுகிறார்கள். அவருக்கு கும்ப முனி என்று ஒரு பெயர் வரக் காரணம், அவர் கும்பத்தில் (சொம்பு) அவதரித்ததால் தான் என்று சொல்லுவார்கள். இது பற்றி கூடுதலாக தகவல் ஏதும் தெரிந்தால் எனக்கு கடிதம் போடவும்.

இவ்வளவு வாய்ப்புகள் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ அறிவியலின்படி இருக்கும் பொழுது, ஏனப்பா இந்த குழந்தைப்பேறின்மையைப் பற்றி கவலைப் பட வேண்டும்.

குழந்தைப்பேறு தாமதிக்க காரணங்கள்.

(1) இளம் தம்பதியினர் சில காலம் தாம்பத்திய வாழ்க்கையை நன்றாக அனுபவித்து விட்டு பிறகு குழந்தை பெற்று கொள்ளலாம் என்று முதல் இரவிலேயே தீர்மானித்து விடுகிறார்கள். ஆனால் பெற்றோர்களிடம் இதனை சொல்லாமல், எல்லோரையும் இனாவானா ஆக்கி விடுகிறார்கள். புத்திசாலிப் பிள்ளைகள். இது தெரியாமால் 2, 3 வருடங்களாக சில பெற்றோர்கள் கோவில், குளமாக ஏறி வருவதையும், சிலர் ஜோதிடருக்கு கப்பம் கட்டுவதையும் பார்த்திருக்கிறேன். ஒரு சில பெற்றோர்கள் மாப்பிள்ளை மீதும், சிலர் பெண்ணின் மீதும் குறைகூறி இரு குடும்பங்களும் முறைத்துகொண்டு இருப்பதையும் காணலாம். அதனால் இளம் தம்பதியினர் தங்களின் திட்டங்களை பெற்றோரிடம் வெளிப்படையாக சொல்வது நல்லது, வீண் பிரச்சினைகளை குறைக்க வழி வகுக்கும். அதே சமயம், அவர்களின் திருமணம், தாமதத்திருமணம் எனில், இந்த யோசனையைத் தவிர்ப்பது நல்லது. முதலில் குழந்தையைப் பெற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமாக இருக்கும். குழந்தைக்கு பிறகும், தாம்பத்திய வாழ்க்கையை இனிய முறையில் அனுபவிக்கலாம்.

(2) சில இளம் தம்பதியினர் தாமாகவே மருந்துக்கடைகளுக்கு சென்று காண்ட்ராசெப்டிவ் மாத்திரைகளை, கருத்தரிக்காமல் இருப்பதற்காக சாப்பிடுகிறார்கள். இது தவறாகும். நாளடைவில் ஹார்மோன் பாதிப்புகள் வரக்கூடும், எதிர்காலத்தில் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

(3) உண்டி சிறுத்தல் பெண்டிற்கு அழகு என்பது தமிழ்ச் சான்றோர்கள் வாக்கு. பெண்கள் இளம் வயதிலேயே மிகவும் குண்டாக இருப்பது, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று மருத்துவ புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உடற்பயிற்சியாலும், கொழுப்பான ஆகாரத்தை குறைப்பதாலும் பெண்கள் எடையை குறைக்கலாம். பொதுவாக குண்டான பெண்களுக்கு Body Mass Index (BMI) 19-25 க்கு மேல் இருப்பதால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு குறையலாம். எடை கூடுதல் காரணமாக விந்து பயணிக்கும் ஃபெலோப்பியன் குழாய் அழுத்தப்பட்டு பாதை தடைபடலாம்.

(4) டெலிவரியில் ஏற்படும் வேதனை காரணமாகவோ, பயத்தின் காரணமாகவோ பெண்கள் ஒத்துழைக்க மறுப்பதால், கர்ப்பம் தரிக்க கால தாமதமாகலாம். இப்பொழுது உள்ள பெரும்பாலான நகர்ப்புற டெலிவரிகள் சிஸேரியனாகவே உள்ளது. மயக்க மருந்து கொடுத்து, சிஸேரியன் செய்வதால் வலி உணர்வதற்கான வாய்ப்பே இல்லை. அதனால் கவலை வேண்டாம். சிஸேரியன் செய்வதால் தாய்க்கும் ஆபத்தில்லை, சேய்க்கும் ஆபத்தில்லை, டாக்டருக்கும் நல்ல வருமானம். அதனால் கவலையை விடவும்.

(5) ஆண்களிடம் உள்ள பயத்தின் காரணமாக பெண்கள் ஒத்துழைக்க மறுப்பதால், கர்ப்பம் தரிக்க தாமதமாகலாம். ஆண்கள் பெரும்பாலும் தன் முரட்டுதனத்தை, முதலிரவில் காட்டி பெண்களை பயமுறுத்தி விடுகிறார்கள். அதனால் பெண்கள் உடலுறவு என்றாலே அது வலி நிறைந்த உறவு என்று கருதி பயப்படுகிறார்கள். இந்த பயத்தைப் போக்குவது ஆணின் கடமையாகும். உடலுறவுக்கு முன்பு, நீண்ட நேரம், தொட்டு, தடவி அவளின் காம உணர்வைக்கூட்டி, கிளர்ச்சி அடைய வைத்து (stimulating by foreplay), அவள் உடலுறவுக்கு தயார் என்று தெரிந்த பிறகு உடல் உறவு கொள்வதே உத்தமமாகும். அப்பொழுது தான் ஃபெலோப்பியன் குழாய் நன்கு விரிவடைந்து விந்து பயணிக்க இடமளிக்கும். விந்து வந்தவுடன் வெளியில் எடுக்காமல் சிறிது நேரம் வைத்திருந்தால், மோடிலிடி குறைவாக இருக்கும் விந்து அணுக்களும் சிறிது சிறிதாக உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. பெண்ணும் உச்ச நிலையை அடையலாம். குழந்தையும் உருவாகும்.

ஆண், பெண்ணின் இனக்கவர்ச்சியே, காதலாகி, பின் காமமாகி, அதன் பின் அவர்களை பெற்றோர் என்ற உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. வெறும் ஆண், பெண் என்ற நிலை மாறி அன்னையும், பிதாவுமாகி, முன்னறி தெய்வமாகிறார்கள். இதுவே இயற்கைக்கு ஆண்டவன் இட்ட கட்டளையாகும்.


கர்ப்பமும் ஜோதிடமும்

குரு புத்திரகாரகன் என்று கடந்த பதிவுகளில் கண்டுள்ளோம். ஜாதகத்தில் புத்திர பாவம் என்று சொல்லக்கூடிய இடமே பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஆவதால், மக்கட் செல்வம் என்பது பூர்வ புண்ணிய அடிப்படையிலேயே அமைகிறது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. அவ்வாறே, பூர்வ புண்ணியம், புத்திர பாவம், புத்திர காரகன் குரு, எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகின்றன.

இப்படித்தான், ஒருவருடைய ஜாதகத்தில், பூர்வ புண்ணிய ஸ்தானம் மிக முக்கிய ஸ்தானமாகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் ஒருவருக்கு நன்றாக அமைந்துவிட்டால், கடந்த பிறவியில் அவர் விளைவித்தவற்றை, இந்த பிறவியில் அறுவடை செய்து, அனுபவிக்கிறார் என்று பொருள். இதன் தத்துவமே இந்த பிறவியிலாவது நன்மைகள் செய் ! அதன் பலனை பிறகு அனுபவிப்பாய் என்பதே.

கர்ப்பம் தரிப்பு தசா புத்தி அடிப்படையில் :

பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின், தசா புத்தி காலங்களே கர்ப்பமடைய ஏற்ற காலமாகும்.

ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தால், குருவின் தசா புத்தி காலங்களும் கர்ப்பமடைய ஏற்ற காலமாகும்.

பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின், தசையில், குரு புத்தியிலும் கர்ப்பமடையலாம்.

குரு தசையில், பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின் புத்தியிலும் கர்ப்பமடையலாம்.

ஜாதகத்தில் களஸ்திர ஸ்தானாதிபதியை குரு பார்த்தால், களஸ்திர ஸ்தானாதிபதியின் தசாகாலத்தில் வரும் குரு புத்தியிலும் கர்ப்பம்தரிக்கலாம்.

கர்ப்பம் தரிப்பு கோட்சார அடிப்படையில் (குரு பெயர்ச்சி):

கோட்சாரத்தில், ஜனன ஜாதகத்தில் குரு நின்ற இடத்துக்கு குருப் பெயர்ச்சியாகும் காலங்களிலும், ராசி அடிப்படையில் குரு ராசி நாதனை பார்க்கும் காலங்களிலும், ராசிக்கு 5ஆம் இடத்தைப் பார்க்கும் காலங்களிலும், புத்திர ஸ்தானாதிபதியைப் பார்க்கும் காலங்களிலும் கர்ப்பமடையலாம்.


சரி தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.

ஜோதிடரின் கடமை என்ன? ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை வைத்து அவர்களுக்கு குழந்தை உண்டா? இல்லையா? என்று கண்டு பிடித்து, எப்பொழுது குழந்தை பிறப்புக்கான வாய்ப்பு என்று கண்டு பிடித்து, ஜாதகத்தின் அடிப்படையில் அது 40 வயதிற்கு மேல் தான் உண்டாகும் என்று தெரிந்தால், ஜோதிடர் அவர்களை மருத்துவரிடம் சென்று மருத்துவ அறிவியலின் துணையால் கருத்தரிப்பு செய்து குழந்தைச் செல்வத்தைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அறிவுறுத்தலாம். இவ்வகையில் ஜோதிடர் சமூக அக்கறையுடன் ஜோதிடத்தை பயன்படுத்தலாம் என்பதே இந்த நாட்டாமையின் தீர்ப்பாகும். தீர்ப்பை மாற்ற சொல்பவர்கள், பின்னூட்டத்தில் அப்பீல் செய்யலாம்.


மருத்துவ அறிவியலின் மகத்தான சாதனைபெற்றோர் என்ற புனித ஸ்தானத்தை அடைந்த இவர்களை வாழ்த்துவோம் !
இவர்களின் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சிக்கு தலை வணங்குவோம் !!

60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்


கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்!
என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.comTuesday, July 19, 2011

குரு

குரு பொது

குரு பகவானை, வியாழன் என்று தமிழில் கூறுவார்கள். குரு பார்க்க கோடி நன்மை என்ற சொற்றொடரின் மூலம் குருவின் பெருமையை அறியலாம். இயற்கையில் முழுச் சுபகிரகம் என்பதாலேயும், சுமார் ஒரு வருடத்திற்கு ஒருமுறை ராசிவிட்டு ராசி மாறுவதாலும், ராசி அடிப்படையில் தீய வீடுகளுக்கு சென்றாலும், அவரது கருணைப் பார்வையால் சில வீடுகளுக்கு நன்மை ஏற்படும் என்பதாலும், கிரகப் பெயர்ச்சிகளில் குருபெயர்ச்சிக்கு ராசிபலன் எழுதி கல்லா கட்டும் ஜோதிடர்களும், அதனை ஆர்வத்துடன் வாங்கி படிக்கும் மக்களும் இவ்வாறு குருவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மற்ற இயற்கை சுப கிரகங்களான சுக்கிரன், புதன் போன்றவை மாதங்களுக்கு ஒரு ராசியாகவும், சந்திரன் இரண்டேகால் நாட்களுக்கு ஒரு முறையும் மாறுவதால் ராசி பலனில் முக்கியத்துவம் பெறுவதில்லை.

வெறும் குருபெயர்ச்சியை மட்டும் மனதில் வைத்து, எழுதப்படும் ராசிபலன்கள் பொய்யாகி விடக்கூடும். மற்ற முக்கிய கிரகப்பெயர்ச்சிகளான சனி (இரண்டரை வருடம்), இராகு, கேதுக்களின் (ஒன்றரை வருடம்) பெயர்ச்சிகளையும் ஆராய்ந்து, அனுசரித்து எழுதப் படும் ராசி பலன்களே பலிதமாகும். அது மட்டுமல்லாது ஜாதகரின் ஜாதக ஆராய்ச்சியும் மிக முக்கியமானது. எம்முடைய அனுபவத்தில், 10 முதல் 20 சதவீத பலன்களே பெயர்ச்சிகளால் நடைபெறுகிறது, 80 முதல் 90 சதவீத பலன்கள் அவரது ஜாதகத்தில் லக்னரீதியாக கிரகங்கள், அவற்றின் தசா புத்திகள் மூலமாகத் தரும் பலன்களே ஜாதகருக்கு ஏற்படும். ராசிபலன் புத்தகத்தை வாங்கி பார்த்தால், ராசிக்கு ஒன்றாக 12 ராசிகளுக்கும் குருபெயர்ச்சி பலன்கள் எழுதப்பட்டிருக்கும். மேஷ ராசியில் பிறந்தவரின் பலன்கள் எல்லா மேஷ ராசியினருக்கும் பொருந்தாது. ஏனெனில் ஜாதக அடிப்படையில் தசாநாதர்கள் வேறுவிதமான பலனை தந்து கொண்டிருப்பார்கள். சிலருக்கு ராசிபலன்கள் பொருந்துவது போல் இருந்தாலும் அதுவும் ஜாதக அடிப்படையில் தசாநாதர்கள் தரும் பலனாகவும் இருக்கலாம்.

அதனால் அன்பர்கள் பொதுவாக எழுதப்படும் ராசிபலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவரவர் ஜாதக ஆராய்ச்சியில் இறங்குவதே உண்மையை உணர வழி வகுக்கும். பெயர்ச்சிகளை விட தசாபுத்திகளே வலிமையுள்ளதாகும்.

ராசிபலன் நீங்களே பார்க்கலாம் (ராசி பலன் எழுதும் ஜோதிடர்கள் மன்னிக்கவும்) என்று ஒரு பதிவு இடுகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்.

ஏற்கனவே செவ்வாய் பற்றிய பதிவில் கருத்தரிப்பு (Fertility) பற்றி கூறியிருப்பேன். குரு புத்திரகாரகன். ஜாதகத்தில் குரு கெடாமல் இருந்தால், குரு புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்த்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு இருக்கும். குரு புத்திரஸ்தானத்தில் இருந்தாலும் குழந்தைப் பேறு இருக்கும் என்று சில ஜோதிடர்கள் கூறுவார்கள். சில லக்கினக்காரார்களுக்கு குரு பாவியாவதால் அவர் புத்திரஸ்தானத்தில் நிற்பதை நன்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் பாவார்த்த ரத்னகாரா என்ற ஜோதிட கிரந்தத்தின் படி காரகோ பாவ நாஸ்தி, ஏற்படவும் வாய்ப்புள்ளது. மொத்ததில் புத்திரஸ்தானத்தில் அவர் நிற்பதைவிட புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்ப்பதே சிறந்த நிலையாகும்.

குரு பார்க்க பல தோஷங்கள், நிவர்த்தியாகும் என்பது உண்மையென்றாலும் கூட, சிலருடைய ஜாதகத்தில் குருவே கேந்திராதிபத்திய தோஷம் போன்ற சில தோஷங்களையும் உண்டு பண்ணுகிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை. கஜகேசரி யோகம் போன்ற நன்மை தரும் சில யோகங்களையும், சகடயோகம் போன்ற நிலையற்ற பொருளாதார, வாழ்க்கையைத் தரும் யோகத்தையும் தர வல்லவர்.


குருவை அடுத்த பதிவில் நான் தொடர்கிறேன், நீங்களும் தொடருங்கள்.

குரு போற்றி

குணமிகு வியாழ குருபகவானே !

மணமுள வாழ மகிழ்வுடன் அருள்வாய்

பிரகஸ்பதி வியாழ பரகுரு நேசா !

கிரக தோஷமின்றி கடாக்‌ஷித் தருள்வாய்

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com


Monday, July 11, 2011

சுப, அசுப கிரகங்கள்

நன்மை, தீமை செய்யும் கிரகங்களை எவ்வாறு வகைப்படுத்துவது?

சுப, அசுப கிரகங்களை இரு வகையில் வகைப்படுத்தலாம். அவை:
(1) இயற்கையான சுப, அசுப கிரகங்கள்
(2) லக்ன அடிப்படையிலான சுப, அசுப கிரகங்கள்

இனி
விரிவாகப் பார்ப்போம்(1) இயற்கையான சுப, அசுப கிரகங்கள்


இயற்கையான சுபகிரகங்கள்
:
குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன்.

இயற்கையான அசுபகிரகங்கள்:
சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன்.(2) லக்ன அடிப்படையிலான சுப, அசுப கிரகங்கள்

வ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கு ஏற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடுகிறது. உதாரணத்திற்கு இயற்கையில் சுபனான குரு, மகர லக்னத்திற்கு பாவியாகி தீய கிரகமாகிறான். இதே போல் இயற்கையில் அசுப கிரகமான செவ்வாய், கடக லக்னத்திற்கு யோகம் செய்வராக மாறி, சுபத் தன்மை பெறுகிறார். இவ்வாறு மற்ற லக்னங்களுக்கும் சுப, அசுப கிரகங்களின் அட்டவணை தரப்பட்டுள்ளது. லக்ன அடிப்படையில் சில கிரகங்கள் மாரகர்களாக மாறுகின்றனர். மாரகர்கள், கொடியவர்கள், தீமை செய்பவர்கள். அவர்களே ஜாதகரின் மரணத்தை ஜாதக அடிப்படையில், சனிபகவானுடன் (ஆயுள்காரகன்) கூட்டணி அமைத்து தீர்மானிப்பவர்கள். சில மாரகர்கள் அவர்கள் ஜாதகத்தில் தாம் இருக்கும் இடத்தைப் பொறுத்து, மரணத்தை தராமல், மாரகத்திற்கொப்பாகிய கண்டத்தைக் கொடுப்பவர்கள். புதன் சில ஜாதகங்களில், தீய கிரகச் சேர்க்கையால் சுபலனையும், மாரகத்தையும் கலந்து செய்வதை அனுபவத்தில் காணலாம்.

லக்னம்

சுபர்

அசுபர்

மாரகர்

மேஷம்

சூரியன், குரு

புதன், சனி

புதன், சனி

ரிஷபம்

சூரியன், புதன், சனி

சந்திரன், குரு, சுக்கிரன்

சந்திரன், குரு, செவ்வாய்

மிதுனம்

குரு, சுக்கிரன், சனி

சூரியன், செவ்வாய், குரு

சூரியன், செவ்வாய், குரு

கடகம்

செவ்வாய், குரு

புதன், சுக்கிரன்

புதன், சுக்கிரன், சனி

சிம்மம்

சூரியன், சுக்கிரன் செவ்வாய்

புதன், சுக்கிரன்

சுக்கிரன், சனி, புதன்

கன்னி

புதன், சுக்கிரன்

சந்திரன், குரு, செவ்வாய்

சந்திரன், குரு, செவ்வாய்

துலாம்

புதன், சுக்கிரன், சனி

சூரியன், செவ்வாய், குரு

சூரியன், குரு

விருச்சிகம்

சூரியன், சந்திரன், குரு

செவ்வாய், புதன், சுக்கிரன்

புதன், சுக்கிரன்

தனுசு

சூரியன், செவ்வாய், புதன்

சுக்கிரன்

புதன், சுக்கிரன்

மகரம்

செவ்வாய், புதன், சுக்கிரன்

சந்திரன், குரு

சந்திரன், குரு

கும்பம்

சுக்கிரன், புதன், சனி

சந்திரன், செவ்வாய் , குரு

சந்திரன், செவ்வாய்

மீனம்

சந்திரன், செவ்வாய்

சூரியன், சுக்கிரன், சனி, புதன்

சூரியன், சுக்கிரன், சனி, புதன்


இந்த கட்டுரையின் மூலம் நாம் அறிந்துகொள்வது யாதெனில், எந்த ஒரு கிரகத்தையும், சுப கிரகம் என்றோ, அசுப கிரகம் என்றோ சட்டென்று முடிவு செய்ய இயலாது. ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வர இயலும்.

இயற்கை சுப கிரகங்களுக்கு சொந்தமான நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பொதுவாக சாத்வீக குணமுள்ளவராக இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் யோக வாழ்க்கையை அனுபவிக்க தக்க வயதில் வரும் தசைகளின் தசா நாதர்கள், லக்கின அடிப்படையில் சுப கிரகங்களாகி, ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பது மிக அவசியமாகும்.


கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com