Wednesday, February 23, 2011

ஜோதிடம் கற்கலாம் வாங்க – 7


GMT என்றால் என்ன?

இந்தப் பதிவை எழுதுவதற்கான அவசியத்தை முதலில் சொல்லி விடுகிறேன். எனது நண்பர் ஒருவர் துபாயில் டாட் நெட் டெவலப்பராக உள்ளார். என்னுடன் கணிணி மென்பொருள் குறித்தும், ஜோதிடம் குறித்தும் அடிக்கடி ஆலோசனை செய்பவர். அமெரிக்காவில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு, யாரோ நண்பர் கொடுத்தார் என்பதற்காக தன்னுடைய விவரத்தையும், இதுவரை செய்த புராஜக்ட் விவரங்களையும், தன்னுடைய அனுபவத்தையும் விவரமாக மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். அமெரிக்காவில் அவர் இருக்கிறார், அவரின் மனைவி தமிழ்நாட்டில் மென்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். எனது

நண்பர் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, அவர்கள் இருவரின் மின்னஞ்சல் பரிவர்த்தனைகளை குறித்து என்னுடன் ஆலோசனை செய்தார். 3, 4 மின்னஞ்சல் பரிவர்த்தனைகளுக்கு பின், நண்பரிடம் தொலைபேசியில் இண்டர்வியூ செய்ய விரும்பி, அவருடைய தொலைபேசி எண்ணையும், எந்தக் கிழமையில், நேரத்தில் பேசினால் உங்களுக்கு பேச ஏதுவாக இருக்கும் என்றும் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அதற்கு எனது நண்பர், வெள்ளி, சனிக்கிழமைகள் தனக்கு ஓய்வு நாட்கள் என்றும், இண்டர்வியூக்கு தோதான நேரத்தை, அதே நேரம் அமெரிக்காவில் இருக்கும் அவருக்கும் சரியாக வருமா என்றும் ஆராய்ந்து, என்னுடன் பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை செய்த அனுபவத்தில், நேரத்தை GMT–ல் தெரிவித்து இருந்தார். இதுவரை பதிலே வரவில்லை, போன் அழைப்பும் இல்லை. மீண்டும் ஒரு முறை அதே மின்னஞ்சலை தட்டி விட்டு பார்த்தார். நோ ரெஸ்பான்ஸ்! மீண்டும் மின்னஞ்சல் அனுப்ப அவருக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. என்ன பிரச்சினையாக இருக்கும்? 3, 4 மின்னஞ்சல்கள் நல்லாதானே 3 வாரங்களாகப் போய்க் கொண்டு இருந்தது, பதிலும் வந்து கொண்டு இருந்தது. தொலைபேசி எண்ணையும், நேரத்தையும் கேட்டாரே, பேசிவிட்டு ரிஜக்ட் செய்து இருந்தாலும் பரவாயில்லையே! வேறு ஆள் கிடைத்து விட்டதாக சொல்லி பெட்டர் லக் நெக்ஸ் டைம் என்று அந்த மேதாவி வாழ்த்தி இருந்தாலும் பரவாயில்லையே! என்று புலம்பி தள்ளி விட்டார். பிறகு நான் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி உங்கள் மேல் எந்த தவறும் இல்லை, அவருக்கு தான் நீங்கள் கூறிய GMT நேரம் தெரியவில்லை போல, அதனால் அவர் தான் வருத்தப் பட வேண்டும் என்று கூறியவுடன் சிரித்து விட்டார். நம்முடைய நோக்கமே அறிமுகப் பதிவில் கூறியதைப் போல பாஸிடிவ் மனநிலையை உருவாக்குவது தானே!



அமெரிக்க இந்திய மேதாவி தன் அறியாமையை மறைப்பதற்காக அவர் கடைபிடித்த எஸ்கேபிஸம் என்றுதான் சொல்ல வேண்டும்.



சரி இனி சப்ஜெக்ட்டுக்கு வருவோம். GMT என்றால் என்ன? GMT என்பது Greenwich Mean Time என்பதன் சுருக்கமேயாகும். இங்கிலாந்தில் லண்டன் அருகில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தை (அங்கு தான் ராயல் அப்ஸர்வேட்டரி உள்ளது) ஒரு ஆதாரமாக (reference) வைத்து உலகில் உள்ள நாடுகளுக்கு எல்லாம் நேர வித்தியாசத்தை கணக்கீடு செய்வதற்காக ஏற்படுத்தினார்கள். International Meridian Conference in 1884-ல் நடந்த போது கிரீன்விச்சை ஆதாரமாக கொள்ள முடிவெடுத்தார்கள். உதாரணத்திற்கு கும்மிடிபூண்டி எங்கப்பா இருக்கு என்று கேட்டால், சென்னைக்கு அருகில் 30 கி.மீ. வடக்கே உள்ளது என்று சென்னையை ஆதாரமாக (reference) வைத்து சொல்லுவோம்.

அதைப்போல எல்லா நாடுகளின் நேரத்தையும் கிரீன்விச்சை ஆதாரமாக வைத்து சொல்கிறோம். இந்திய நேரமானது 5 மணி 30 நிமிடம் கிரீன்வீச்சில் உள்ள நேரத்தைவிட கூடுதலாக இருக்கும். அதனை சுருக்கமாக +5.30 GMT என்று குறிப்பிடுவார்கள். அதாவது இந்தியாவில் மாலை 5.30 மணி எனில் கிரீன்வீச்சில் மதியம் 12.00 மணியாக இருக்கும். பொதுவாக இந்தியர் எல்லோருக்கும் +5.30 GMT என்பது தெரிந்திருக்கும். ஆனால் மற்ற நாடுகளின் GMT நேர வித்தியாசம் அவ்வளவாக தெரியாது. சிங்கப்பூரில் வேலை செய்பவருக்கு சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் உள்ள நேர வித்தியாசம் தெரியும், GMT நேர வித்தியாசமும் தெரிந்திருக்கலாம், ஆனால் அவரிடம் லிபியாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கேளுங்கள் தெரியாது என்றுதான் சொல்லுவார். இந்த மாதிரியான குழப்பத்தில்தான் அவர் போன் செய்யவில்லையோ! இருப்பினும் நண்பருக்கு நல்ல எதிர்காலம் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோமாக!



எல்லாம் சரி அந்த 5.30 மணி நேர வித்தியாசத்தை எப்படி கணக்கிடுவது? அடுத்த பதிவில் பார்க்கலாமா?

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க -8

ஜோதிட நகைச்சுவை

ஆசிரியர் : பூமி தன்னைத்தானே சுற்றி, சூரியனைச் சுற்றுமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுற்றி பூமியைச் சுற்றுமா?

மாணவர் : ????

ஆசிரியர் : என்னப்பா பதிலை சொல்லு

மாணவர் : அடப் போங்க சார். எனக்குத் தலையைச் சுத்துது.

ஆசிரியர் : சரி உனக்கு இலக்கணமாவது தெரியுதான்னு பார்க்கலாம்

மாணவர் : சரி கேளுங்க !

ஆசிரியர் : முருகன் வீட்டுக்குப் போனான். இது என்ன காலம்?

மாணவர் : அது அவன் நல்ல காலம் சார்!

ஆசிரியர் : இது எனக்கு போதாத காலம், உனக்கு பாடம் சொல்லித் தர வந்தேனே

மாணவர் : சரி என்னை கேட்டது போதும். இப்ப நான் கேட்கிறேன்

ஆசிரியர் : சரி கேள்

மாணவர் : உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா?

ஆசிரியர் : தெரியும்

மாணவர் : பூமிக்கு ஜோஸ்யம் சொல்லுங்க, பார்க்கலாம்

ஆசிரியர் : பூமிக்கு எப்படிடா ஜோஸ்யம் சொல்றது?

மாணவர் : நீங்கதான சார் பூகோள பாடம் எடுக்கும்போது, பூமிக்கு கடக ரேகை, மகர ரேகை, பூமத்திய ரேகை எல்லாம் இருக்குன்னு சொன்னீங்க

ஆசிரியர் : நீ ஒழுங்கா படிக்காத! ஆனால் வாத்தியாரை மடக்குறதிலேயே குறியா இரு

மாணவர் : எனக்கு பிடித்த சப்ஜெக்ட் கணக்கு தான். அதில கேளுங்க சார்

ஆசிரியர் : சரி உன் வீட்டுக்கு புதியதாக உன் அப்பாவுடைய நண்பர் குடும்பத்தினர் விருந்துக்கு வந்திருக்கிறார்கள்

மாணவர் : சரி

ஆசிரியர் : உன் அப்பா உன்னிடம் 10 பிஸ்கட் கொடுத்து அவர்களுக்கு கொடுக்க சொல்கிறார்

மாணவர் : என் மேலே ரொம்ப நம்பிக்கை சார் எங்கப்பாவுக்கு

ஆசிரியர் : அதுல 2 மாலாக்கும், 3 ப்ரியாவுக்கும், 2 ரேவதிக்கும் குடுத்தா உனக்கு என்ன கிடைக்கும்?

மாணவர் : புதுசா 3 கேர்ள் பிரண்ட்ஸ் கிடைப்பாங்க சார்!


(இதில் எங்கே ஜோதிடம் இருக்கிறது என்று கேட்பது, என் காதில் விழுகிறது, அதற்கான விடை அடுத்த பதிவில் காணலாம். எங்கே நீங்க கெஸ் பண்ணுங்க பார்க்கலாம் !)



Monday, February 21, 2011

நேமாலஜி என்றால் என்ன?

நேமாலஜி (பெயரியல்) – ஒரு ஆய்வு

பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, ஜோதிடத்தைப் பற்றி விழிப்புணர்வை உண்டாக்கவே, இந்தப் பதிவை எழுதுகிறேன். தனியார் தொலைக்காட்சிகளின் சில நிகழ்ச்சிகள், சில சமயம் தொல்லைக் காட்சிகளாகவும் மாறிவிடுகிறது. வருமானத்தை மட்டுமே குறியாக வைத்து, சில நிகழ்ச்சிகளுக்கு ஸ்லாட் கொடுத்து விடுகிறார்கள். அதில் ஒன்றுதான், நேமாலஜி என்ற நிகழ்ச்சி. அதாவது, உங்களுக்கு அதிர்ஷ்டகரமான பெயரை வைப்பது எப்படி? என்ற நிகழ்ச்சி. அதனை ஜோதிட நிகழ்ச்சி என்று சொல்ல மனமில்லாமல் தான் அதனை வெறும் நிகழ்ச்சி என்று சொல்லுகிறேன். ஜோதிடத்திற்கும், அதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

ஜோதிடத்தை கற்க இயலாதவர்கள், அதனை புரிந்து கொள்ள இயலாதவர்கள், ஆங்கில எழுத்துக்கள் 26 (A to Z) க்கும் 1 முதல் 9 வரை எண் மதிப்பு அளித்து, தொடக்கப் பள்ளி மாணவனாலேயே, மிக எளிதில் கூட்டி விடை சொல்லும் அளவுக்கு ஒரு கலையை இவர்களே உருவாக்கி, அதற்கு பெயர்-ஜோதிடம், பெயரியல், இன்னும் ஃபேஷனாக நேமாலஜி என்று பெயர் வைத்து பிழைப்பை தொடங்கிவிட்டார்கள். பெயர் மாற்றம் செய்தால், அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் என்று மக்களை ஏமாற்றும் எண்ணத்தில், கூவி கூவி அழைக்கிறார்கள். மக்களும் அறியாமையால் அவர்களிடம் சென்று பணத்தை தொலைத்து விட்டு, தாய், தந்தை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோரும் கூடி விழா எடுத்து, விரும்பி வைத்த பெயரையும் தொலைத்து விட்டு, சமூகத்தில் முகவரி இல்லாமல் அலைகிறார்கள். முகவரி என்றால் அட்ரஸ் மட்டும் என்று நினைக்காதீர்கள், எல்லாமும்தான் !!

அவ்வாறு பெயர் மாற்றம் செய்து, பெயர் மாற்றத்தால் பலன் அடையாமல், முகவரியை தொலைத்தவர்கள் நிறைய பேர். உங்களுக்கு மிகவும் தெரிந்த ஒரு சிலரை உதாரணத்திற்கு பார்ப்போம்.

டி.ராஜேந்தர் (சுருக்கமாக, செல்லமாக டி.ஆர். என்று அவரை திரை உலகம், ஒரு காலத்தில் கொண்டாடியது). 1980-90 களில் அவர் தனக்கென ஒரு பாணியை (ட்ரெண்ட் செட்டர்) உருவாக்கி புகழின் உச்சியை தொட்டார். அந்த புகழை அவர் அடைந்த பொழுதெல்லாம், அவருடைய பெற்றோர் வைத்த பெயர் தான் அதிர்ஷ்ட பெயராக இருந்ததாம். பிறகு அதே பெயர் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்ட்தாம். யாரோ ஒரு அறிவு ஜீவி சொன்னதைக் கேட்டு, விஜய டி ராஜேந்தர் என்று பெயர் வைத்து, தன்னுடைய முகவரியை தொலைத்து விட்டு அலைகிறார். எவ்வளவு நாட்கள் தான் அவர் பேசும் அடுக்கு மொழி வசனத்தை மக்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ட்ரெண்டை மாற்றாமல், தன் பெற்றோர் வைத்த பெயரை மாற்றியதால், இப்படி ஆனார். தன் அடையாளத்தை இழந்தார்.

அடுத்து எஸ். திருநாவுக்கரசு. இவர் புரட்சித் தலைவரின் அமைச்சரவையில், மிகவும் இளைய அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆரின் செல்லத் தம்பி. கட்சியில் அனைவரிடமும் செல்வாக்கு, அனைவராலும் விரும்பப்பட்டவராக இருந்தார். சொந்த தொகுதியில் சுயேட்சையாக நின்றே ஜெயிக்கும் அளவுக்கு, மக்கள் செல்வாக்கும் இருந்தது. தன் பெற்றோர் வைத்த பெயரால் நல்லாதான் இருந்தார். யாரோ ஒரு அறிவு ஜீவி, பெயரியல் நிபுணரோ, நிபுணியோ தெரியவில்லை, அவர் பெயரை திருநாவுக்கரசர் என்று பெயர் மாற்றம் செய்து, ஆடி போயி ஆவணி வந்தால் டாப்பாக வருவீர்கள் என்று வாழ்த்தி அனுப்பினார். என்ன ஆச்சு? எத்தனையோ ஆடி, ஆவணி போய் விட்டது. வருடம் மாறிக்கொண்டே இருப்பதைப் போல கட்சிதான் மாறிக்கொண்டே இருக்கிறார். அவர் அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் காணோம்.

ஜாதகப்படி நிகழும் தசா புத்தி மாற்றங்கள் தான், இவர்களின் உயர்வு, தாழ்வுக்கு காரணமாக இருக்க முடியும். பெயரை மாற்றினால் மட்டும் ஜாதகம் மாறிவிடுமா என்ன?

மக்களை ஏமாற்றுவதற்காக, புத்தகங்கள் வேறு எழுதி தள்ளுகிறார்கள். அதற்காக புகழ் பெற்ற தலைவர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பெயர்களையும் உதாரணத்திற்கு எடுத்து வைத்து ஆராய்கிறார்கள். அவர்களுடைய பெயர்களின் கூட்டு எண் இப்படி வருவதால் தான், இவர்கள் சாதித்தார்கள் என்று சப்பைக்கட்டு வேற. அதைப் போல் நீங்களும் மாற்றிக் கொண்டால், புகழ் அடையலாம் என்று ஆலோசனையும் தருவார்கள். அவர்கள் எல்லாம், அவர்களின் பெற்றோர் வைத்த பெயரால் தான் புகழ் அடைந்தார்களே தவிர, எந்த நேமாலஜிஸ்டிடமும் சென்று தன் பெயரை மாற்றிய பின் புகழ் அடைந்தவர்கள் அல்லர்.

தமிழ்நாட்டில் அன்று

ராஜா என்று சொன்னால்

இன்பத் தேன் வந்து பாயும் காதில்

உன்னிடம் அடகு வைக்கப்பட்ட

எத்தனையோ காதுகள் இன்னும்

மீட்கப்படாமலேயே உள்ளன

காட்டுக்குள் தேனீக்கள்

கூட்டுக்குள் வைத்ததை

பாட்டுக்குள் வைத்தவன்

நீ

சத்தியமா இது ஒரு புதுக் கவிதை தான், இளையராஜாவைப் பற்றி அடியேன் நினைத்ததும் ஒரு ஃபுளோவில் வந்து விட்டது, நமக்கும் கொஞ்சம் ரீமிக்ஸ் ஆசை இருக்குங்கோ !

ஆனால்

தமிழ்நாட்டில் இன்று

ராஜா என்று சொன்னால்

நம் வீட்டு வாசலில்

வந்து நிற்கும்

சி.பி.ஐ.

எப்படி இருக்கு இந்த ஹைக்கூ கவிதை?

நான் இந்த நேமாலஜிஸ்ட்டுகளை (பெயரியல் நிபுணர், நிபுணிகளை) கேட்கிறேன், 110 கோடி மக்கள் உள்ள நம்முடைய பாரத நாட்டில், குறைந்தது ஒரு லட்சம் ராஜாஇருப்பார்கள், எல்லோருக்குமா திஹாரில் இடம் கிடைக்கும்?

தமிழ் பத்திரிக்கைகள் தான் அவரை “ராசாஎன்று எழுதுகின்றன, அவருடைய official name (Raja) ராஜா தான், நேமாலாஜி ஆங்கில எழுத்துக்களை வைத்து தானே பலன் சொல்கிறார்கள். அதனால் தான் இந்த ஆய்வுக்காக அவரை ராஜா என்றே குறிப்பிடுகிறேன். வெறும் ராஜா என்று இருந்தவரை பத்திரிக்கையாளர்கள் ஸ்பெக்ட்ரம் ராஜா என்று மாற்றி விட்டார்கள், ஒரு வேளை அவர்களுக்கும் நேமாலஜி தெரியுமோ?

நேமாலஜி குறித்து ஆய்வு செய்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நம் நோக்கமாகும். யார் மனதையும் நோகடிப்பது எண்ணமல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும். மன்னிப்பு, எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்று சொல்லி கண் சிவக்காதீர்கள்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com

அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க -7

ஜோதிட நகைச்சுவை

(நேமாலஜிஸ்டும் சங்கரன் நாயரும்)

நேமாலஜிஸ்ட்: உங்கள் பெயரில் ரன் என்று இருப்பது நல்லதல்ல

சங்கரன் நாயர்: அதனால் எந்த கஷ்டம்னு, கூடுதலாயிட்டு பறையனும்

நேமாலஜிஸ்ட்: ரன் இருப்பதால் தான் நீங்கள் ஒரு ஊரில் நிற்பது இல்லை

சங்கரன் நாயர்: அப்ப எந்த செய்யனும்?

நேமாலஜிஸ்ட்: உங்கள் பெயரில் உள்ள ரன்-ஐ எடுத்து விட வேண்டும்

சங்கரன் நாயர்: அது பற்றல்ல, சங்கரனில் உள்ள ரன்னை எடுத்தால் சரியாவுனில்ல

நேமாலஜிஸ்ட்: பெயரில் மாற்றம் செய்தால் தான், உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்

சங்கரன் நாயர்: வேற எதாகிலும் மார்க்கம் உண்டா?

நேமாலஜிஸ்ட்: ம்ம்ம்... அப்படி என்றால், நாயர்-ஐ எடுத்து விடு

சங்கரன் நாயர்: அய்யோடா ! அதுவும் பற்றல்ல

நேமாலஜிஸ்ட்: ஜாதி அடையாளம் தானே எடுத்துவிடு

சங்கரன் நாயர்: இஸ்ரோ விஞ்ஞானி மாதவன் நாயரே ஜாதியை விடவில்லை ஆனால் எத்தனையோ ராக்கெட்டுகளை விட்டு விட்டார். எனிக்கு எடுக்காம் பற்றல்ல. அதை எடுத்தா பின்ன ஞான் மலையாளி அல்லாது போகும்

நேமாலஜிஸ்ட்: ஓ அது தான் உனக்கு பிரச்சினையா?

சங்கரன் நாயர்: உவ்வா

நேமாலஜிஸ்ட்: அப்ப ஒன்னு செய். நாயருக்கு பதில் குட்டி சேர்த்துக்கோ. சங்கரன் குட்டி, பெயரை பார்த்தாலே மலையாளி என்று தெரிந்து விடும்

சங்கரன் நாயர்: அது எங்கனயாம்?

நேமாலஜிஸ்ட்: யோவ் ! குட்டி என்றாலே கேரளா தான்யா எல்லோருக்கும் ஞாபகம் வரும். நீ ரொம்ப கேள்வி கேக்கற.

சங்கரன் நாயர்: ஞங்கள் அங்கனயாம்! கூடுதல் கொஸ்டீன் சோதிச்சு குறைவா ஜோலி செய்யுந்ந சுபாவமாம்

நேமாலஜிஸ்ட்: அது தான் எல்லொருக்கும் தெரியுமே! 99% படித்தவர்கள் நிரம்பிய மாநிலத்தில் தொழில் துறை எவ்வளவு வளர்ச்சியின்னு. 50-60 % படித்தவர்கள் உள்ள ஆந்திர, கர்நாடக, தமிழ்நாட்டில் உள்ளதைப் போல சாஃப்ட்வேர் ஃபீல்டின் வளர்ச்சி கேரளாவில் இல்லை என்பது உங்கள் உழைப்பில் மிக நன்றாகத் தெரிகிறது. ஓகே பெயரை மாத்தியாச்சு ஃபீஸை கொடு.

பின் குறிப்பு:

நேமாலஜிஸ்ட்டுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு, பெயர் மாற்றிய மகிழ்ச்சியில், சங்கரன் குட்டி வீட்டுக்குப் போனார். காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போதே, மனைவியிடம் பெயர் மாற்றம் பற்றி விவாதம் செய்து விட்டுதான் கிளம்பினார். இருந்தாலும் அவளை எப்படியும் சமாதானம் செய்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கையுடன் வீட்டை அடைந்து, கேட்டை திறந்தார். வழக்கம் போல அவருடைய செல்ல நாய்க்குட்டி வாலை ஆட்டிக்கொண்டு ஓடி வந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, நாய்க் குட்டியின் கழுத்தில், ஒரு சிறிய போர்டு தொங்கியது. அதில் இது மாடு என்று எழுதி இருந்தது. சங்கரன் குட்டிக்கு கோபம் வந்தது. கோபத்துடன் மனைவியிடம் கேட்டார். நினக்கு எந்த தலைக்கு சுகம் இல்லையா? பட்டியிட கழுத்தில் மாடு என்று போர்டு எழுதி மாட்டி வச்சிருக்க! மனைவி கோபமுடன் பார்த்தாள், நிங்களட பெயர் மாற்றத்துக்கு இது தான் என்ட பதில்.


Wednesday, February 16, 2011

ஜோதிடம் கற்கலாம் வாங்க - 6

நாழிகை கணக்கு அவசியமா?

நாழிகை கணக்கு பாரத நாட்டில் மட்டுமே ஆயிரக் கணக்கான வருடங்களாக கணிதத்தில், ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் காலக் கணக்கீடாகும்.

தற்பொழுது உலகளவில் பயன்பாட்டில் உள்ள மணி நிமிஷ கணக்கை முதலில் காணலாம்.
1 நாள் = 24 மணிகள்
1 மணி = 60 நிமிஷங்கள்
1 நிமிஷம் = 60 வினாடிகள்
வினாடியைப் பிரித்து, 60 ன் மடங்குகளாக சொல்வதற்கு காலக்கணக்கீட்டு முறையோ, பெயரோ மேலை நாட்டு கணிதத்தில் இல்லை. தற்பொழுது கணிப்பொறி காலத்தில் ஏதுவாக, மில்லி செகண்ட், மைக்ரோ செகண்ட், நேனோ செகண்ட் என்று 1 வினாடியைப் பிரித்து 1000ன் மடங்குகளாக சொல்லப்படுகிறது.

சரி, இப்பொழுது நாழிகை கணக்கீட்டைப் பார்க்கலாம்.
1 நாள் = 60 நாழிகை
1 நாழிகை = 60 வினாடி
1 வினாடி = 60 தர்ப்பரை
1 தர்ப்பரை = 60 விதர்ப்பரை

இப்படி போகுதய்யா நம்முடைய காலக் கணக்கீடு. இதற்கு மேலும் 60ன் மடங்குகள் உள்ளது. இந்தப் பதிவின் அளவு கருதியும், எல்லோரின் நேரமின்மை கருதியும் இது போதும் என்று கருதுகிறேன். சரி தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு வரலாம் !

1 நாளை ஆங்கில முறைப்படி 24 பாகமாக பிரிப்பது துல்லியமா? அல்லது இந்திய ஜோதிடவியல் கூறுவது போல 60 பாகமாக பிரிப்பது துல்லியமா? நாழிகை கணக்கு நமக்கு தெரியவில்லை என்பதற்காக, சீ ! சீ ! இந்த பழம் புளிக்கும் என்று ஏமாற்றத்தில் சொல்லும் புத்திசாலி நரியின் நிலைமையில் தான் நம்மில் பலர் இருக்கிறார்கள்.

அதனால், ஜோதிட காலக் கணக்கீட்டில் நாழிகை கணக்கே மிகவும் துல்லியமாகும், அவசியமாகும். ஒரு சில பஞ்சாங்க கணித வல்லுனர்கள் பொது மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, கொஞ்சம் சிரமப்பட்டு, கணிதம் செய்து, மணி நிமிஷங்களில் பஞ்சாங்கங்களை வெளியிடுகிறார்கள். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குவோமாக ! இப்படி காலத்திற்கேற்ப நம்மை புதுப்பித்துக் கொள்வதனால் தானய்யா இந்திய ஜோதிடவியல் தலை நிமிர்ந்து நிற்கிறது. உலக அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், திருக்கணித முறையை பயன்படுத்துகிறோம்.

ஜோதிடத்தில் நாழிகை கணக்கு அவசியமே ! அவசியமே ! என்று தீர்ப்பு சொல்லி இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்வோம்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

அடுத்த பதிவு : நேமாலஜி என்றால் என்ன?

ஜோதிட நகைச்சுவை

சகட யோகம்

ஜோதிடர்: உங்களுக்கு சகட யோகம் உள்ளது.

சங்கரன் நாயர்: சகட யோகம் எந்தா செய்யும்?

ஜோதிடர்: மேலே போய் பின்ன தலைகீழா கீழே வருவீங்க?

சங்கரன் நாயர்: எண்ட தொழிலை குறிச்சு... அது எங்கன தலை கீழாகும்னு பறையனும் !

ஜோதிடர்: நீங்க இப்ப என்ன வியாபாரம் செய்றீங்க ?

சங்கரன் நாயர்: ஞான் இப்போ “வைர வியாபாரம் செய்யுன்னு

ஜோதிடர்: இனிமேல் நீங்க “ரவை வியாபாரம் செய்ய வேண்டி வரும்.

சங்கரன் நாயர்: ஓ சகட யோகம் இப்படித்தான் தலை கீழா வேலை செய்யுமா? எண்ட குருவாயூரப்பா ! காத்து ரக்‌ஷிக்கனும் !

ஜோதிடர்: ஓ நாயரே ! அப்படியே குருவாயூரப்பனிடம் “முல்லைப் பெரியாறு அணையையும்” காத்து ரக்‌ஷிக்கனும்னு பிரார்த்தனை செய் !