Saturday, August 25, 2012

இராகு, கேது – அறிவியல்

கண்ணடித்து கலக்கும் மூவரின் தொடருக்கு முன்பு, ஒரு இடைச்செருகல்.

வரும் பதிவுகளுக்கு, அவசியம் என்று கருதி, இந்தப் பதிவைத் தருகிறேன். இந்தப் பதிவில் இராகு, கேதுவைப் பற்றி சுருக்கமாக கூற விரும்புகிறேன். இராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல. ஆனால், முக்கிய வானியல் நிகழ்வுகளான சூரிய, சந்திர கிரகணங்களை கணிக்க உதவும் காரணிகள், சூத்திரதாரிகள். வானியல் தொலைநோக்கி இல்லாத காலங்களிலேயே, இந்த நிகழ்வுகளை முன்கூட்டியே அறிய வேண்டி தமிழன் கண்டுபிடித்த விண்ணியல் கணக்குகளின் சாதனைகளே, இந்த இராகு, கேது என்னும் மாறிகள்.

சந்திரன் பூமியை சுற்றி வரும் தளமும், பூமி சூரியனை சுற்றி வரும் தளமும் வெவ்வாறானவை. இரண்டு தளங்களும் ஒன்றுக்கொன்று சற்று சாய்வாக இருக்கிறது. இந்த இரண்டு தளங்களும், இரண்டு புள்ளிகளில், வெட்டிக்கொள்கின்றன (அல்லது சந்திக்கின்றன). அந்த புள்ளிகளே, இராகு, கேது.







மேலே உள்ள படத்தில் சிவப்பு நிற உருண்டைதான் சூரியன்.

நீல நிற உருண்டை பூமி, வெண்மை நிற சிறிய உருண்டை சந்திரன்.

பச்சை நிற நீள்வட்டம், பூமி சூரியனை சுற்றும் தளம், இது நிலையாக இருப்பதாகக் கொள்வோம்.

ஊதா நிற நீள்வட்டம், சந்திரன் பூமியை சுற்றும் தளம், இந்த தளம், பூமி நகர்வதால், இது ஒரு நகரும் தளம்.

இந்த இரண்டு தளங்களும், இரண்டு புள்ளிகளில், வெட்டிக் கொள்ளும்.

இந்த தளம், நகர்ந்துகொண்டே இருப்பதால், இந்த 2 வெட்டும் புள்ளிகளும், நகர்ந்து கொண்டே இருக்கும். அந்த இரண்டு நகரும் புள்ளிகளே, இராகு, கேது ஆகும். அவ்வளவு தாங்க.

இதில் கேது என்ற புள்ளியை சந்திரன், பவுர்ணமி தினத்தில் சந்திக்கும் போது, அன்று சந்திர கிரகணம். 
இராகு என்ற புள்ளியை சூரியன் அமாவாசை அன்று சந்திக்கும் போது அது சூரிய கிரகணமாகும்.

இனி அடுத்தப் பதிவில், ஜோதிடத்தில் இராகு, கேது பற்றி ஆராய்வோம்

மீண்டும் சந்திப்போம்
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
 

 

பிற்சேர்க்கை 

இராகு, கேதுவைப் பற்றி தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்ட சான்றுகள். முதலில் திருக்குறளை எடுத்துக் கொள்வோம். 

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

இதன் பொருள் கடந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் பதிவுக்கு தேவயான விளக்கம் என்னவெனில், திங்களைப் பாம்புகொண் டற்று என்ற வரியின் மூலம் வள்ளுவர், வானியல் பூர்வமான ஒரு நிகழ்வைப் பற்றி, கூறுகிறார். அது வேறு ஒன்றமல்ல, கிரகணத்தையே குறிப்பிடுகிறார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் வானியல் குறித்த, அறிவை வெளிப்படுத்துகிறார் வள்ளுவர். பல ஜோதிட மேதைகளால், தலையில் வைத்து கொண்டாடப்படும், வடமொழி நூலான பிருஹத் ஜாதகத்தில், இராகு, கேதுக்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால் ஜோதிடத்தில், முக்கியமாக கவனிக்கப்படும் 27 நட்சத்திரங்களில், இராகு, கேதுக்கு தலா 3 நட்சத்திரங்களை, மணடல் கமிஷன் வருவதற்கு முன்பே, இட ஒதுக்கீடு செய்து, தசா புக்திகளில் இராகுவுக்கு 18 ஆண்டுகளும், கேதுவுக்கு 7 ஆண்டுகளும் கொடுத்துள்ளனர்.

நற்றிணைப் பாடல் ஒன்றிலும் இராகு, கேது பற்றி கூறப்பட்டுள்ளது.

அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த
பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல


மேலும், திருஞான சம்பந்தர் எழுதிய கோளறு பதிகத்திலும், இராகு, கேதுவைப் பற்றி கூறியிருக்கிறார்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே 


மீண்டும் சந்திப்போம்

No comments: