சனி - ஜோதிடம்
இனி ஜோதிடத்தில் சனி பகவானின் பங்கு என்னவென்று பார்ப்போம். ராசி மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் சனி பகவான் மகரம், கும்பம் ஆகிய இராசிகளை ஆட்சி செய்கிறார். இந்த இராசிகளில் ஒன்றை லக்னமாகக் கொண்டு பிறப்பவர்களுக்கு சனிபகவான் லக்னாதிபதி ஆகிறார். பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திற்கும் லக்னாதிபதி வலுவுடன் இருக்க வேண்டும். லக்னாதிபதி வலுவற்று இருக்கும் எந்த ஜாதகத்திலும் பிற யோகங்கள் எத்தனை இருந்தாலும் அவை முழுமையாக செயல்படாது என்று சொல்லலாம். லக்னாதிபதி வலுவிழந்தும், சிலர் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு காரணம் அவர்களின் கடின உழைப்பாக இருக்கும். அந்த மாதிரி ஜாதகங்களைப் பார்த்தால் சனி பகவான் நல்ல நிலையில் இருப்பார். சனி பகவான், அவரை கடினமாக உழைக்க வைத்து முன்னேற்றிவிடுவார். மேலும் சனி பகவான் கெடாமல் இருந்தால், ஆயுள் ஆரோக்கியத்தையும் தந்தருள்வார்.
அதே சமயம் மகர, கும்ப லக்னங்களில் பிறந்தவர்களுக்கு, லக்னாதிபதி சனி பகவான் ஆவதால் அவருக்கு கூடுதல் பொறுப்பு வருகிறது. அதாவது லக்னாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் போன்ற பல பொறுப்புகளை அவர் சுமக்க வேண்டி உள்ளதால், அவர் பலமாக இருக்க வேண்டும். இந்த லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் பலம் பெற்றாலே போதும் எல்லாம் கிடைத்து விடும்.
அதெப்படி ஐயா எல்லாம் கிடைத்து விடும் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். முதலில் ஒரு ஜாதகத்தில் இராஜ யோகம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த இராஜ யோகத்தை தரும் கிரகத்தின் தசா ௮வருடைய ஆயுட்காலத்தில் வந்தால் தானே அவர் அந்த இராஜ யோகத்தை அனுபவிக்க முடியும். அதாவது ஜாதகர் அந்த இராஜ யோகத்தை அனுபவிக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டியவரே ஆயுள் காரகரான சனி பகவான் தான் என்று சொல்ல வருகிறேன். இதைத் தான் புத்திசாலித் தமிழர்கள் ஆயுளைத் தேடி ஆஸ்தியைத் தேடு என்றார்கள்.
அதாவது ஒரு ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் முதலில் ஆயுளைத் தான் தேட வேண்டும், பிறகு தான் யோகங்களை ஆராய வேண்டும் என்ற பொருளிலேயே இந்த பழமொழி வந்திருக்கும்.
எந்தெந்த லக்னங்களுக்கு அவர் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறார் என்று பார்ப்போம்.
மகர லக்னம் (+ + +)
லக்னாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக மிக முக்கியத்துவம் பெறுகிறார்.
கும்ப லக்னம் (+ + +)
லக்னாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக மிக முக்கியத்துவம் பெறுகிறார்
ரிஷப லக்னம் (+ +)
யோகாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக முக்கியத்துவம் பெறுகிறார்.
துலா லக்னம் (+ +)
யோகாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக முக்கியம் பெறுகிறார்.
மிதுன லக்னம் (+ +)
ஆயுள் மற்றும், பாக்கிய ஸ்தானாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக முக்கியத்துவம் பெறுகிறார்.
கடக லக்னம் (+ +)
களத்திர மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக முக்கியத்துவம் பெறுகிறார்.
மற்ற லக்னங்களுக்கு (+)
ஆயுள்காரகன் மற்றும் தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக முக்கியத்துவம் பெறுகிறார்.
மொத்தத்தில் இதிலிருந்து ஒரு உண்மைத் தெரிகிறது. எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் சனி பகவான் கெடக்கூடாது. அவ்வாறு சனி பகவான் கெடாமல் இருந்தால், பாவ அடிப்படையில் அவர் தீயவராக இருந்தாலும், நீண்ட ஆயுளையும், கூடுதலாக உழைக்கும் எண்ணத்தையும் கொடுத்து ஜாதகரை முன்னேற்றி விடுவார் என்பதே எமது ஆய்வு.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
1 comment:
தகவலுக்கு நன்றி
Post a Comment