Monday, February 21, 2011

நேமாலஜி என்றால் என்ன?

நேமாலஜி (பெயரியல்) – ஒரு ஆய்வு

பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, ஜோதிடத்தைப் பற்றி விழிப்புணர்வை உண்டாக்கவே, இந்தப் பதிவை எழுதுகிறேன். தனியார் தொலைக்காட்சிகளின் சில நிகழ்ச்சிகள், சில சமயம் தொல்லைக் காட்சிகளாகவும் மாறிவிடுகிறது. வருமானத்தை மட்டுமே குறியாக வைத்து, சில நிகழ்ச்சிகளுக்கு ஸ்லாட் கொடுத்து விடுகிறார்கள். அதில் ஒன்றுதான், நேமாலஜி என்ற நிகழ்ச்சி. அதாவது, உங்களுக்கு அதிர்ஷ்டகரமான பெயரை வைப்பது எப்படி? என்ற நிகழ்ச்சி. அதனை ஜோதிட நிகழ்ச்சி என்று சொல்ல மனமில்லாமல் தான் அதனை வெறும் நிகழ்ச்சி என்று சொல்லுகிறேன். ஜோதிடத்திற்கும், அதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

ஜோதிடத்தை கற்க இயலாதவர்கள், அதனை புரிந்து கொள்ள இயலாதவர்கள், ஆங்கில எழுத்துக்கள் 26 (A to Z) க்கும் 1 முதல் 9 வரை எண் மதிப்பு அளித்து, தொடக்கப் பள்ளி மாணவனாலேயே, மிக எளிதில் கூட்டி விடை சொல்லும் அளவுக்கு ஒரு கலையை இவர்களே உருவாக்கி, அதற்கு பெயர்-ஜோதிடம், பெயரியல், இன்னும் ஃபேஷனாக நேமாலஜி என்று பெயர் வைத்து பிழைப்பை தொடங்கிவிட்டார்கள். பெயர் மாற்றம் செய்தால், அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் என்று மக்களை ஏமாற்றும் எண்ணத்தில், கூவி கூவி அழைக்கிறார்கள். மக்களும் அறியாமையால் அவர்களிடம் சென்று பணத்தை தொலைத்து விட்டு, தாய், தந்தை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோரும் கூடி விழா எடுத்து, விரும்பி வைத்த பெயரையும் தொலைத்து விட்டு, சமூகத்தில் முகவரி இல்லாமல் அலைகிறார்கள். முகவரி என்றால் அட்ரஸ் மட்டும் என்று நினைக்காதீர்கள், எல்லாமும்தான் !!

அவ்வாறு பெயர் மாற்றம் செய்து, பெயர் மாற்றத்தால் பலன் அடையாமல், முகவரியை தொலைத்தவர்கள் நிறைய பேர். உங்களுக்கு மிகவும் தெரிந்த ஒரு சிலரை உதாரணத்திற்கு பார்ப்போம்.

டி.ராஜேந்தர் (சுருக்கமாக, செல்லமாக டி.ஆர். என்று அவரை திரை உலகம், ஒரு காலத்தில் கொண்டாடியது). 1980-90 களில் அவர் தனக்கென ஒரு பாணியை (ட்ரெண்ட் செட்டர்) உருவாக்கி புகழின் உச்சியை தொட்டார். அந்த புகழை அவர் அடைந்த பொழுதெல்லாம், அவருடைய பெற்றோர் வைத்த பெயர் தான் அதிர்ஷ்ட பெயராக இருந்ததாம். பிறகு அதே பெயர் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்ட்தாம். யாரோ ஒரு அறிவு ஜீவி சொன்னதைக் கேட்டு, விஜய டி ராஜேந்தர் என்று பெயர் வைத்து, தன்னுடைய முகவரியை தொலைத்து விட்டு அலைகிறார். எவ்வளவு நாட்கள் தான் அவர் பேசும் அடுக்கு மொழி வசனத்தை மக்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ட்ரெண்டை மாற்றாமல், தன் பெற்றோர் வைத்த பெயரை மாற்றியதால், இப்படி ஆனார். தன் அடையாளத்தை இழந்தார்.

அடுத்து எஸ். திருநாவுக்கரசு. இவர் புரட்சித் தலைவரின் அமைச்சரவையில், மிகவும் இளைய அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆரின் செல்லத் தம்பி. கட்சியில் அனைவரிடமும் செல்வாக்கு, அனைவராலும் விரும்பப்பட்டவராக இருந்தார். சொந்த தொகுதியில் சுயேட்சையாக நின்றே ஜெயிக்கும் அளவுக்கு, மக்கள் செல்வாக்கும் இருந்தது. தன் பெற்றோர் வைத்த பெயரால் நல்லாதான் இருந்தார். யாரோ ஒரு அறிவு ஜீவி, பெயரியல் நிபுணரோ, நிபுணியோ தெரியவில்லை, அவர் பெயரை திருநாவுக்கரசர் என்று பெயர் மாற்றம் செய்து, ஆடி போயி ஆவணி வந்தால் டாப்பாக வருவீர்கள் என்று வாழ்த்தி அனுப்பினார். என்ன ஆச்சு? எத்தனையோ ஆடி, ஆவணி போய் விட்டது. வருடம் மாறிக்கொண்டே இருப்பதைப் போல கட்சிதான் மாறிக்கொண்டே இருக்கிறார். அவர் அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் காணோம்.

ஜாதகப்படி நிகழும் தசா புத்தி மாற்றங்கள் தான், இவர்களின் உயர்வு, தாழ்வுக்கு காரணமாக இருக்க முடியும். பெயரை மாற்றினால் மட்டும் ஜாதகம் மாறிவிடுமா என்ன?

மக்களை ஏமாற்றுவதற்காக, புத்தகங்கள் வேறு எழுதி தள்ளுகிறார்கள். அதற்காக புகழ் பெற்ற தலைவர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பெயர்களையும் உதாரணத்திற்கு எடுத்து வைத்து ஆராய்கிறார்கள். அவர்களுடைய பெயர்களின் கூட்டு எண் இப்படி வருவதால் தான், இவர்கள் சாதித்தார்கள் என்று சப்பைக்கட்டு வேற. அதைப் போல் நீங்களும் மாற்றிக் கொண்டால், புகழ் அடையலாம் என்று ஆலோசனையும் தருவார்கள். அவர்கள் எல்லாம், அவர்களின் பெற்றோர் வைத்த பெயரால் தான் புகழ் அடைந்தார்களே தவிர, எந்த நேமாலஜிஸ்டிடமும் சென்று தன் பெயரை மாற்றிய பின் புகழ் அடைந்தவர்கள் அல்லர்.

தமிழ்நாட்டில் அன்று

ராஜா என்று சொன்னால்

இன்பத் தேன் வந்து பாயும் காதில்

உன்னிடம் அடகு வைக்கப்பட்ட

எத்தனையோ காதுகள் இன்னும்

மீட்கப்படாமலேயே உள்ளன

காட்டுக்குள் தேனீக்கள்

கூட்டுக்குள் வைத்ததை

பாட்டுக்குள் வைத்தவன்

நீ

சத்தியமா இது ஒரு புதுக் கவிதை தான், இளையராஜாவைப் பற்றி அடியேன் நினைத்ததும் ஒரு ஃபுளோவில் வந்து விட்டது, நமக்கும் கொஞ்சம் ரீமிக்ஸ் ஆசை இருக்குங்கோ !

ஆனால்

தமிழ்நாட்டில் இன்று

ராஜா என்று சொன்னால்

நம் வீட்டு வாசலில்

வந்து நிற்கும்

சி.பி.ஐ.

எப்படி இருக்கு இந்த ஹைக்கூ கவிதை?

நான் இந்த நேமாலஜிஸ்ட்டுகளை (பெயரியல் நிபுணர், நிபுணிகளை) கேட்கிறேன், 110 கோடி மக்கள் உள்ள நம்முடைய பாரத நாட்டில், குறைந்தது ஒரு லட்சம் ராஜாஇருப்பார்கள், எல்லோருக்குமா திஹாரில் இடம் கிடைக்கும்?

தமிழ் பத்திரிக்கைகள் தான் அவரை “ராசாஎன்று எழுதுகின்றன, அவருடைய official name (Raja) ராஜா தான், நேமாலாஜி ஆங்கில எழுத்துக்களை வைத்து தானே பலன் சொல்கிறார்கள். அதனால் தான் இந்த ஆய்வுக்காக அவரை ராஜா என்றே குறிப்பிடுகிறேன். வெறும் ராஜா என்று இருந்தவரை பத்திரிக்கையாளர்கள் ஸ்பெக்ட்ரம் ராஜா என்று மாற்றி விட்டார்கள், ஒரு வேளை அவர்களுக்கும் நேமாலஜி தெரியுமோ?

நேமாலஜி குறித்து ஆய்வு செய்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நம் நோக்கமாகும். யார் மனதையும் நோகடிப்பது எண்ணமல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும். மன்னிப்பு, எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்று சொல்லி கண் சிவக்காதீர்கள்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com

அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க -7

ஜோதிட நகைச்சுவை

(நேமாலஜிஸ்டும் சங்கரன் நாயரும்)

நேமாலஜிஸ்ட்: உங்கள் பெயரில் ரன் என்று இருப்பது நல்லதல்ல

சங்கரன் நாயர்: அதனால் எந்த கஷ்டம்னு, கூடுதலாயிட்டு பறையனும்

நேமாலஜிஸ்ட்: ரன் இருப்பதால் தான் நீங்கள் ஒரு ஊரில் நிற்பது இல்லை

சங்கரன் நாயர்: அப்ப எந்த செய்யனும்?

நேமாலஜிஸ்ட்: உங்கள் பெயரில் உள்ள ரன்-ஐ எடுத்து விட வேண்டும்

சங்கரன் நாயர்: அது பற்றல்ல, சங்கரனில் உள்ள ரன்னை எடுத்தால் சரியாவுனில்ல

நேமாலஜிஸ்ட்: பெயரில் மாற்றம் செய்தால் தான், உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்

சங்கரன் நாயர்: வேற எதாகிலும் மார்க்கம் உண்டா?

நேமாலஜிஸ்ட்: ம்ம்ம்... அப்படி என்றால், நாயர்-ஐ எடுத்து விடு

சங்கரன் நாயர்: அய்யோடா ! அதுவும் பற்றல்ல

நேமாலஜிஸ்ட்: ஜாதி அடையாளம் தானே எடுத்துவிடு

சங்கரன் நாயர்: இஸ்ரோ விஞ்ஞானி மாதவன் நாயரே ஜாதியை விடவில்லை ஆனால் எத்தனையோ ராக்கெட்டுகளை விட்டு விட்டார். எனிக்கு எடுக்காம் பற்றல்ல. அதை எடுத்தா பின்ன ஞான் மலையாளி அல்லாது போகும்

நேமாலஜிஸ்ட்: ஓ அது தான் உனக்கு பிரச்சினையா?

சங்கரன் நாயர்: உவ்வா

நேமாலஜிஸ்ட்: அப்ப ஒன்னு செய். நாயருக்கு பதில் குட்டி சேர்த்துக்கோ. சங்கரன் குட்டி, பெயரை பார்த்தாலே மலையாளி என்று தெரிந்து விடும்

சங்கரன் நாயர்: அது எங்கனயாம்?

நேமாலஜிஸ்ட்: யோவ் ! குட்டி என்றாலே கேரளா தான்யா எல்லோருக்கும் ஞாபகம் வரும். நீ ரொம்ப கேள்வி கேக்கற.

சங்கரன் நாயர்: ஞங்கள் அங்கனயாம்! கூடுதல் கொஸ்டீன் சோதிச்சு குறைவா ஜோலி செய்யுந்ந சுபாவமாம்

நேமாலஜிஸ்ட்: அது தான் எல்லொருக்கும் தெரியுமே! 99% படித்தவர்கள் நிரம்பிய மாநிலத்தில் தொழில் துறை எவ்வளவு வளர்ச்சியின்னு. 50-60 % படித்தவர்கள் உள்ள ஆந்திர, கர்நாடக, தமிழ்நாட்டில் உள்ளதைப் போல சாஃப்ட்வேர் ஃபீல்டின் வளர்ச்சி கேரளாவில் இல்லை என்பது உங்கள் உழைப்பில் மிக நன்றாகத் தெரிகிறது. ஓகே பெயரை மாத்தியாச்சு ஃபீஸை கொடு.

பின் குறிப்பு:

நேமாலஜிஸ்ட்டுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு, பெயர் மாற்றிய மகிழ்ச்சியில், சங்கரன் குட்டி வீட்டுக்குப் போனார். காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போதே, மனைவியிடம் பெயர் மாற்றம் பற்றி விவாதம் செய்து விட்டுதான் கிளம்பினார். இருந்தாலும் அவளை எப்படியும் சமாதானம் செய்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கையுடன் வீட்டை அடைந்து, கேட்டை திறந்தார். வழக்கம் போல அவருடைய செல்ல நாய்க்குட்டி வாலை ஆட்டிக்கொண்டு ஓடி வந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, நாய்க் குட்டியின் கழுத்தில், ஒரு சிறிய போர்டு தொங்கியது. அதில் இது மாடு என்று எழுதி இருந்தது. சங்கரன் குட்டிக்கு கோபம் வந்தது. கோபத்துடன் மனைவியிடம் கேட்டார். நினக்கு எந்த தலைக்கு சுகம் இல்லையா? பட்டியிட கழுத்தில் மாடு என்று போர்டு எழுதி மாட்டி வச்சிருக்க! மனைவி கோபமுடன் பார்த்தாள், நிங்களட பெயர் மாற்றத்துக்கு இது தான் என்ட பதில்.


9 comments:

Ramesh said...

திரு.இராம்கரன்,
நேமாலஜி குறித்து ஆய்வு செய்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நம் நோக்கமாகும். யார் மனதையும் நோகடிப்பது எண்ணமல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும். மன்னிப்பு, எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்று சொல்லி கண் சிவக்காதீர்கள்.
.......................ha ha ha haha ha .....!!!!!
அருமையான பதிவு நண்பரே..
நகைச்சுவை அருமை!!!
வாழ்த்துக்கள்....

Unknown said...

ராசா கவிதை சூப்பர் ஐயா !!!!!!!!

ramkaran said...

திரு. இரமேஷ் அவர்களே! வாழ்த்துக்கு மிக்க நன்றி ! தங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் ஊக்கமே என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. இந்த வலைப்பூவை வந்து பார்க்கும், படிக்கும் அனைவரும், தாங்கள் ரசித்த, விரும்பிய பகுதிகளையும், ஆலோசனைகளையும், சந்தேகங்களையும், பின்னூட்டமாக இட்டாலோ அல்லது மின் அஞ்சல் செய்தாலோ, மேலும் ஆராய்ச்சி செய்ய எனக்கு உற்சாகமாக இருக்கும். நிறை குறைகளை சுட்டிக் காட்டவும்.

நன்றி
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்

ramkaran said...

திரு. கிஷோர் அவர்களே! பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள் ! நான் முழு நேர கவிஞன் இல்லை. எவ்வளவோ எழுதறோம் ! ஒரு கவிதை எழுத முடியாதான்னா?

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

Murari said...

I enjoy reading your articles.

ramkaran said...

மிக்க நன்றி திரு. முராரி அவர்களே! தொடர்ந்து வாருங்கள், ஜோதிட பொக்கிஷத்தை அள்ளிச் செல்லுங்கள்.

அன்பன்
இராம்கரன்

Anonymous said...

super sir

Unknown said...

Very good one. Thanks for your info. i am not big believer in horoscope but your article makes clear scenes.

Unknown said...

i am not such big fish to trust with horoscope but your article clearly mentioning all. One question, you said in one article that, god can do best what ever your horoscope has then trust god. he will save us and give piece full life right ? I may be wrong but wanted to clarify.