Wednesday, January 19, 2011

அறிமுகம்

இறைவன் மிகப் பெரியவன் !


என் இனிய தமிழ் மக்களே !

உங்களின் ஆன்மீக, ஜோதிட ஆர்வத்தையும், ஆராய்ச்சியையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளலாம். நிறை, குறைகளை நுட்பத்துடனும், ஆதாரத்துடனும் விவாதிக்கலாம். பொதுவாக, எல்லொருக்குமே தங்கள் ஜாதகத்தை கணிக்க வேண்டும், ஜாதக ரீதியாக எதிர் காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருப்பது இயற்கையே ! அதற்காக, உங்கள் ஜாதகத்தை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு, கேள்விகளை கேட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.
ஜோதிட நுட்பங்களை கற்று அறிந்த பின்னும், பல வித சந்தேகங்கள் எழக்கூடும், அந்த மாதிரி நண்பர்களுக்கு இந்த வலைப்பூ, தின்னத் தின்ன திகட்டாத தேவாமிர்தமாக இருக்கும். மற்ற நண்பர்களுக்கு, மருத்துவர் தரும் கசப்பான மருந்தாக இருப்பது போல் தொடக்கத்தில் தோன்றினாலும், போகப் போக அதன் பலன்களை எண்ணி வியப்பீர்கள். தொடர்ச்சியாக வருகை புரிவதன் மூலம், பல புதிய விஷயங்களை, புரியாத விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ளலாம். எளிய தமிழில் நீங்களும் ஜோதிடம் கற்கலாம்.

எமது நோக்கம்
இந்த வலைப்பூ தொடங்குவதற்கான நோக்கம் என்னவெனில், மக்களிடையே உள்ள அறியாமை என்ற இருளை அகற்றி, மனதில் நீண்ட காலமாக குடியிருக்கும் தோல்வி மனப்பான்மை, குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்றவைகளை அகற்றி, எதையுமே நல்லெண்ண அடிப்படையில் நோக்கும் (பாசிடிவ் அப்ரோச்) அறிவொளியை பாய்ச்சுவதே எமது நோக்கமாகும்.

எமது முழக்கம்
ஏமாற்றாதே ! ஏமாற்றாதே !
ஏமாறாதே ! ஏமாறாதே !

அன்பே சிவம் !
எல்லா உயிர்களும் இன்புற்றிருத்தல் -அன்றி
வேறொன்றறியேன் பராபரமே !

எல்லோரிடமும் அன்பு செலுத்துதல், தம்மால் இயன்ற உதவியை செய்தல், பசித்தவர்க்கு ஒரு பிடி உணவு கொடுத்தல், ஏழை மாணவர்க்கு கல்வி கற்க உதவி செய்தல், உயிர்க் கொலை புரியாமை போன்ற உயர் குணங்களே, நாம் கடவுளை நோக்கி எடுத்து வைக்கும் முதலடியாகும். நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பான். இதுவே, ஆன்மீகத் தேடலில் அலையும் நண்பர்களுக்கு, நான் கூறும் ரகசியம். அனைத்து மதங்களும், கொடை (தானம்) கொடுப்பதை அறிவுறுத்தி, ஊக்குவித்து, கடமை என்றும் போதிக்கின்றன. அதனால், இயன்றவரை, இல்லாதவர்க்கு உதவி செய்யுங்கள். இப்பிறவியில் நீங்கள் விளைவிப்பதை, இப்பிறவியிலும், எப்பிறவியிலும் நீங்கள் அறுவடை செய்து, அதன் பலனை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம். இது உறுதி !

அறிவே கடவுள் !
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் !
கற்றவனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு !
போன்ற கருத்துக்களை தமிழ்ச் சான்றோர்கள் நமக்கு தந்த வண்ணம் உள்ளனர்.
அன்னச் சத்திரம் ஆயிரம் கட்டினும்
ஆலயம் பதினாயிரம் நாட்டல் யாவினும்
புண்ணியங் கோடி- ஆங்கோர் ஏழைக்கு
எழுத்தறிவித்தலாகும்.

தாரக மந்திரம்
கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் !


நன்றி ! மீண்டும் சந்திப்போம் !
(அடுத்து வருவது: ஜாதகம் என்றால் என்ன?)

அன்பன்
இராம்கரன்
19 ஜனவரி 2011
tamiljatakam@gmail.com3 comments:

vasanthi kathalingam said...

Hats off to u! You were simply superb!Congrats!
God Bless you and your Family by Vasanthi Kathalingam

vasanthi kathalingam said...

சேவை தொடர வாழ்த்துக்கள் - வசந்தி காத்தலிங்கம்

Shanthi said...

தரமான தகவல் நிறைந்த வலைப்பூ, தொடர வாழ்த்துக்கள்- சாந்தி