Thursday, January 20, 2011

ஜாதகம் என்றால் என்ன?

ஜாதகம் என்றால் என்ன?
ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நாளன்று, பிறந்த நேரத்தில் வானில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகங்களின் இருப்பு நிலையைக் காட்டும் ஒரு பதிவு. இதனை எளிதில் விளங்கும்படி கட்டங்களில், விவரங்களை எழுதி வைப்பார்கள். நமது பூமியை ஆதாரமாக (reference) வைத்து, பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளியை (zodiac) 12 பாகங்களாகப் பிரித்து (12 ராசிகள்), எந்த கிரகம், எந்த பாகத்தில், அன்றைய தினத்தில், நேரத்தில் உள்ளது என்பதையே ராசி சக்கரம் (ராசிக் கட்டம்) உணர்த்துகிறது. ராசி என்பது 12 பாகத்தில் ஒரு பகுதி, இப்போதைக்கு ராசி என்றால் என்ன என்பதை இந்த அளவிற்கு புரிந்து கொண்டால் போதுமானது.

உடனே, என்னுடைய ராசி சிம்மம் என்று ஜோதிடர் சொல்கிறாரே, அப்படி என்றால் என்ன தலைவா? என்று கேட்கத் தோன்றும். பொதுவாக ஜோதிடர் சொல்லும், உங்களுடைய ராசி, பத்திரிக்கையில் வரும் வார ராசிபலன், மாத ராசிபலன் எல்லாம் எதனைக் குறிக்கிறது என்றால், “ஜென்ம ராசி”யைக் குறிக்கும். அடுத்த கேள்வி, ஜென்ம ராசி என்றால் என்ன?

ஜென்ம ராசி என்பது, பிறந்த நேரத்தில் ராசி சக்கரத்தில், எந்த ராசியில் சந்திரன் நிற்கிறாரோ, அந்த ராசி தான் உங்கள் ஜென்ம ராசியாகும். அதனால் இன்று முதல், உங்கள் ராசியை, ஜென்ம ராசி என்று கூறி பழகுங்கள். அப்படி என்றால் கோவில்களில், அர்ச்சனை செய்யும் பொழுது, அர்ச்சகர் உங்க நட்சத்திரம் சொல்லுங்கோ! என்று கேட்கிறாரே, அது என்ன?

நமக்கு மிகவும் அருகில் உள்ள கிரகம் சந்திரன். அருகில் உள்ளதால், அதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும், அதனால் அதன் இருப்பை துல்லியமாக கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. துல்லிய கணக்கீட்டிற்காக, மீண்டும் அண்ட வெளியை, 108 பாகமாக பிரித்து (அந்த 1 பாகத்தை, 1 பாதம் என்று இனி சொல்லுவோம்) அதில் எந்த பாகத்தில், (பிறந்த நேரத்தில்) சந்திரன் நிலை கொண்டுள்ளான் என்று குறிப்பார்கள். அதாவது, அண்ட வெளியை 12 பாகங்களாகப் பிரித்தால், அதன் 1 பாகத்தை ராசி என்றும், 108 பாகமாக பிரித்தால், அதன் 1 பாகத்தை, பாதம் என்றும் சொல்லுவோம்.

4 பாதத்திற்கு ஒரு பெயர் சூட்டினால் அது நட்சத்திரம் ஆகும். அப்படியென்றால் 108/4 = 27, அதாவது அண்டத்தை 27 நட்சத்திரமாக பிரித்து பெயர் சொல்லாம். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

27 நட்சத்திரம் தான் வான் வெளியில் உள்ளதா? என்று ஒரு அன்பர் கேட்பது காதில் விழுகிறது. பெயர் அப்படி தனித்தனியாக வைதுள்ளார்களே தவிர, ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திரக் கூட்டமாகும். உதாரணத்திற்கு கார்த்திகை என்பது 6 நட்சத்திரங்கள் சேர்ந்த ஒரு கூட்டமாகும். பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் அதனை அறுமீன் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். நமக்கு அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளார்கள்.

உங்கள் ஜாதகத்தில், 108 பாதத்தில் முதல் 4 பாததிற்குள், சந்திரன் நின்றால் நீங்கள் அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர், அதாவது உங்கள் “ஜென்ம நட்சத்திரம்” அஸ்வினி ஆகும். உதாரணத்திற்கு 3 வது பாதத்தில் சந்திரன் நின்றால், உங்கள் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகத்தில், அஸ்வினி-3 என்று குறிப்பிடுவார்கள். இனி அர்ச்சகர் கேட்கும் போது அஸ்வினி 3-ஆம் பாதம் என்றுதான் கூற வேண்டும்.
சரி நண்பர்களே ! இனி கோவிலில் அர்ச்சகர் கேட்கும் போது உங்கள் ஜென்ம நட்சத்திர, பாதம் என்னவென்று உங்கள் ஜாதகத்தை பார்த்து அதன் படி கூறுங்கள். பாதம் கண்டிப்பாக கூற வேண்டும்.

நன்றி ! மீண்டும் சந்திப்போம் !
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற தாரக மந்திரத்துடன்,

உங்கள் அன்பன்
இராம்கரன்,
20 ஜனவரி 2011
tamiljatakam@gmail.com

(அடுத்த பதிவு: ஜாதகம் பார்க்கக் கூடாது என்று சிலர் சொல்வதேன்?)

13 comments:

Unknown said...

//பாதம் கண்டிப்பாக கூற வேண்டும்//

ஏன் பாதத்தை கண்டிப்பாக கூற வேண்டும் என்பதன் விளக்கமென்ன?

ramkaran said...

நண்பர் கிஷோர் அவர்களே ! ஜோதிடக் கருத்துக்களை, ஆர்வத்துடன் படித்தமைக்கு, நன்றி ! தொடர்ந்து நம்முடைய எழுதுக்களை படித்து வரவும். அடுத்துவரும் ஜோதிடப் பாடங்களில், அதற்கான விளக்கத்தை தருகிறேன். அது பாடமாகவும் அமையும், உங்களுக்கு பதிலாகவும் அமையும்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கைடன்,
உங்கள் அன்பன்
இராம்கரன்

Saamy said...

பாடம் எளிமையாக புரியும்படி உள்ளது. நன்றி

Anonymous said...

அருமையான வழிகாட்டல் பதிவு .
குறிப்பாக பாதம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னது .
இது போன்ற நுட்பங்களை பொது சமாச்சாரங்கள் எல்லாம் தாண்டி
எதிர்பார்க்கிறோம். நன்றி !

bakiyaraj said...

என் பெயர் பாக்யராஜ் எனக்கு பிறந்தநாள் வருடம் நேரம் தெரியாது ராசியு நட்சத்திரம் தெரியாது .எப்படி அடையாளம் காண்பது உதவுங்களேன்

ramkaran said...

பாக்கியராஜ், ஜோதிடத்தில் பிரஸன்ன ஜாதகம் கணித்து, தங்களுக்கு பலன் கூறலாம். தங்களுக்கு அருகில், கே.பி. சிஸ்டம் தெரிந்த ஜோதிடர்கள் யாரேனும் இருந்தால் அணுகவும். கே.பி. சிஸ்டத்தில் ஆளும் கிரகங்களை கணித்து, ஹோரரி சார்ட் (பிரஸன்ன ஜாதகம்) உண்டாக்கி பலன் கூற இயலும்.

வாழ்க வளமுடன் !

விஸ்வா said...

அது என்ன தமிழ் ஜாதகம்?? வேத ஜோதிடம் தமிழில் இல்லையே?? ஜோதிடம் என்ற சொல் கூட தமிழ் சொல் இல்லையே?? பிறர் கண்டுபிடிப்புக்கு எமது பெயரை சூட்ட வேண்டாம்

ramkaran said...

அன்பர் விஸ்வா அவர்களே ! ஜோதிடம் என்பது அனைவருக்கும் பொதுவானது. மதம், மொழி, நாடு, எல்லைகள் கடந்தது. குறிப்பிட்ட ஒரு மொழிக்குள் அடக்க இயலாது. மேலும், தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாம். சமஸ்கிருதமே தமிழிலிருந்து வந்த ஒரு மொழியே ! இதனை சான்றுகளுடன் மொழியியல் ஆராய்சியாளர்கள் நிரூபித்து உள்ளனர். வேர்ச்சொல் அகராதி கிடைத்தால் படித்துப் பாருங்கள் . உலகு என்ற சொல்லை பல இடங்களில் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார் . உலக மற்றும் லோக என்ற சொற்களுக்கான தொடர்பை தங்களால் உணர முடிகிறதா ? தற்கால நடைமுறையில் முதல் சொல் தமிழ் என்றும் , இரண்டாம் சொல் சமஸ்கிருதம் என்றும் தாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றையும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதை விட , ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் பார்ப்பதை வழக்கமாகக் கொள்வது நலம்.

Priya subramani said...

பாதம் 1234 இவைகள் என்ன வேறு பாட்டை அளிக்கின்றது

Priya subramani said...

பாதம் 1234 எவ்வாறு வேறுபடுகின்றது? அதன் நன்மை தீமை என்ன?

Priya subramani said...

பாதம் 1234 இவைகள் என்ன வேறு பாட்டை அளிக்கின்றது

Alladdressiknow said...

Migavum arumaiyaaga ullathu! nandri!

ramkaran said...

// Priya subramani said...
பாதம் 1234 எவ்வாறு வேறுபடுகின்றது? அதன் நன்மை தீமை என்ன?//

ஒரு கிரகம் நிற்கும் பாதம் மாறினால், நவாம்ச சக்கரத்தில் அதன் நிலை மாறி விடும். அந்த கிரகம் தரும் ஜாதகப் பலன்களும் மாறிவிடும். பலன்கள் சொல்லும் போது, ராசிச் சக்கரத்தை மட்டும் ஆராய்ந்து பலன் சொன்னால் சரியாக வராது, நவாம்ச சக்கரத்தையும் ஆராய்ந்த பின், கூறும் பலன்களே சரியாக இருக்கும்.