Wednesday, September 28, 2011

காதல் மன்னன் - 4

முந்தைய பதிவுகளிலிருந்து ....

காதல் ஏற்படக் காரணம் என்ன?


இயற்கையான காதல் தோன்றுவதற்கு முக்கிய காரணிகள் 4 என்பதே எமது ஆய்வு.
(1) புற அழகை வைத்து உண்டாகும் காதல்
(2) பருவக் கோளாறால் உண்டாகும் காதல்
(3) ஒருமித்த கருத்தொற்றுமையால் உண்டாகும் காதல்
(4) மேற்கூறிய 3 காரணங்களும் இல்லாமல், வரும் காதலை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஒரு வீடு உண்டு. அதாவது லக்னத்தில் இருந்து 5 ஆம் இடம். இந்த பாவத்தை ஆராய்ச்சி செய்யும் பொழுது பல ஆச்சரியமான விஷயங்கள் தெரிய வரும். இந்த 5 ஆம் வீட்டிற்கு எந்த வகையிலாவது காதல் மன்னன் சுக்கிரன் சம்பந்தம் ஏற்பட்டால், எந்த காரணமுமில்லாமல் காதல் ஏற்படும். அதாவது இந்த பிறவியை வைத்து காரணங்களை ஆராய இயலாது. போன பிறவியின் விட்ட குறை, தொட்ட குறை ஏதாவது இருக்கும். பெருங்காய டப்பாவை கழுவி காய வைத்தாலும் பல நாட்களுக்கு அதன் வாசம் இருக்கும். அது போல புதிய பிறவிகள் எடுத்தாலும், முந்தைய பிறவியின் வாசம் இருக்கவே செய்யும். இதனை பல நாடுகளிலும் ஆராய்ந்து உறுதிபடுத்தி இருக்கிறார்கள். தமிழிலும் “நெஞ்சம் மறப்பதில்லை” போன்ற திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இவைகள் எல்லாம் கதைகள் என்று சொன்னாலும், உலகப் பொது மறை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர், திருக்குறளில் “ஊழ்வினை” என்று ஒரு அதிகாரம் ஒதுக்கி முற்பிறவிப் பயனைப் பற்றி எழுதியுள்ளார். ஜோதிட அறிவியலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ஒதுக்கியுள்ளது. இந்த ஸ்தானத்துடன் சுக்கிரன் தொடர்பு ஏற்படின் இந்த வகையான காதல் ஏற்படும். அதாவது,

(1) மிதுன, மகர லக்கினகாரர்களுக்கு சுக்கிரனின் வீடான துலாம், ரிஷபம் முறையே பூர்வ புண்ணிய ஸ்தானமாகிறது. இந்த லக்கின காரர்களுக்கு இவ்வகையான முன் ஜென்மத்தில் விட்ட குறை, தொட்ட குறையான காதல் ஏற்படலாம்.

(2) விருச்சிக லக்னகாரர்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானமான மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால், இவ்வகை காதல் ஏற்படலாம்.

(3) மற்ற லக்கினகாரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் நிற்பதாலும் இவ்வகை காதல் ஏற்படலாம்.

(4) அந்தந்த லக்கினங்களுக்கு 5ஆம் அதிபதி, காதல் மன்னன் சுக்கிரனுடன் கூட்டணி அமைத்தாலும், இவ்வகை காதல் ஏற்படலாம். ஆனால் இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்று ஜாதகத்தை ஆராய்ந்தே கூற இயலும்.

(5) காதல் மன்னன் சுக்கிரன் 5ஆம் அதிபதியின் சாரத்தைப் பிடித்தாலும், அல்லது 5 ஆம் அதிபதி, சுக்கிரனின் சாரத்தைப் பிடித்தாலும், இவ்வகை காதல் ஏற்படலாம். (சாரம் என்றால் லுங்கி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள், இது நட்சத்திர சாரமாகும்)

இவ்வாறு சமூக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல காரணங்கள் காதலுக்கு சொல்லப்படுகிறது. வேறு ஏதாவது காரணங்கள் இருப்பின், வாசகர்கள் என்னுடன் இந்த வலைப்பூவில் பகிர்ந்துகொண்டால் நன்றியுடையவன் ஆவேன்.

புதிதாக கேள்வி-பதில் பகுதியை தொடங்கலாம், என்று ஆலோசித்துக் கொண்டு இருக்கிறேன். இது பற்றிய தங்களுடைய மேலான கருத்தைத் தெரிவிக்குமாறு, வேண்டிக்கொள்கிறேன்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com




எமது அடுத்தப் பதிவு: சுக்கிரன் பற்றிய பல விஷயங்களைப் பார்ப்போம்

Wednesday, September 21, 2011

காதல் மன்னன் - 3

(3) ஒருமித்த கருத்தொற்றுமையால் உண்டாகும் காதல்

பெரும்பாலும் இந்த வகையான காதல், நல்ல மெச்சூரிட்டி, அறிவு முதிர்ச்சி, வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அனுபவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரே எண்ணம், சிந்தனை, கொள்கை கொண்ட ஆண், பெண் இருவருக்கும் இடையே ஏற்படுவதாகும். திருமணம் ஆன தம்பதியருக்கு இடையே இவ்வகை காதல் ஏற்படுமாயின் மிகவும் சிறப்பாக இருக்கும். ஜகத்குரு ஆதி சங்கரர் தன்னுடைய அத்வைத தத்துவத்தை பரப்பி வரும்பொழுது, வேறு ஒரு தத்துவஞானியான (மீமாம்ச தத்துவஞானி) குமாரில பட்டரின் சீடரான மதன மிஸ்ராவுடன் ஒரு முறை தர்க்கம் செய்ய நேரிட்டது. மதன மிஸ்ராவின் மனைவி, உபய பாரதி, அவளும் ஒரு சிறந்த அறிவாளி, பட்டி மன்ற நீதிபதியாக தலைமை வகித்தார். 15 நாட்களாக தர்க்கம், விவாதம் நடந்து வந்தது. எங்கே கணவன் தோற்று விடுவானோ என்ற பயத்தில், உபய பாரதி விவாதத்தின் குறுக்கே நுழைந்து காமத்திற்கும், காதலுக்கும் என்ன வேறுபாடு என்று ஆதி சங்கரரிடம் கேட்டாள். அவளுக்கு நன்றாகத் தெரியும், இம்மாதிரியான கேள்விக்கு நிஜ பிரம்மாச்சாரியான ஜகத் குருவுக்கு பதில் சொல்ல இயலாது என்று, அவர் தோற்றால், கணவன் காப்பாற்றப்படுவான் என்ற எண்ணத்தில் கேட்கக் கூடாத அப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டாள். அதற்கு ஆதிசங்கரரோ நாளை பதில் சொல்வதாக, சொல்லி வாய்தா வாங்குகிறார். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வாய்தா வாங்கியதாக ஆதிசங்கரருடைய வாழ்க்கை வரலாற்றை படிக்கும் போது தெரிய வருகிறது. இன்றைய அரசியல்வாதிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிறகு அவர் ஞானதிருஷ்டியின் மூலமாக, பதில் அறிய விழைகிறார். அவருக்கு பதில் கிடைக்கவில்லை. சில விஷயங்களை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும், அது கடவுளுக்கு மட்டுமல்ல காமத்திற்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வருகிறார். வேறு நாட்டு மன்னன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது பாம்பு கடித்து இறந்ததை தெரிந்து அவனுடைய உடலில் (கூடு விட்டு கூடு பாயும் வித்தையால்) நுழைந்து, அவனுடைய மனைவியுடன் ஓர் இரவு இருந்து விட்டு, மறு நாள் மீண்டும் தம் உடலில் புகுந்து, தர்க்கத்திற்கு வந்து காமத்திற்கும், காதலுக்கும் என்ன வேறுபாடு என்று கூறுகிறார். தர்க்கம் செய்த மன்னன் தோற்கிறார். போட்டியில் வெற்றி பெற்றதால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி மன்னன் துறவறம் பூண்டு அவரின் பிரதான சீடர் ஆகிறார்.

சங்கரரின் ஆய்வுப்படி, உண்மையான காதல் என்பது, காமத்தின் பூரண நிலை என்று சொல்கிறார். அதாவது திருமணத்திற்கு முன்பு, ஆண் பெண் சேர்க்கைக்கு முன்பு வரை இருப்பது காமம் தான்; காதல் அல்ல என்றும் தம்பதியர் உடலாலும், உள்ளத்தாலும், இரண்டற கலந்து, கருத்து வேறுபாடுகளைக் களைந்து, கருத்தொற்றுமையுடன் வாழும் வாழ்க்கையே சிறந்த காதல் வாழ்க்கையாகும் என்று சொல்கிறார். காமத்திற்கு பின்புதான் உண்மையான காதல் தொடங்குகிறது என்பதே அவருடைய வாதமாகும்.

இனி ஜோதிட ரீதியாக ஆராய்வோம். காதல் மன்னன் சுக்கிரனுக்கு, லக்னாதிபதியோ அல்லது ஏழாம் அதிபதியோ நட்பு கிரகமாக இருந்தால் இவ்வகை காதல் உண்டாகும். பெண்ணின் லக்னாதிபதியும், ஆணின் களத்திர ஸ்தானாதிபதியும் அல்லது ஆணின் லக்னாதிபதியும், பெண்ணின் களத்திர ஸ்தானாதிபதியும் நட்பு கிரகங்களாக இருப்பினும், இவ்வகை நெருக்கம் ஏற்படும்.

கட்டுரையின் நிறைவாக நான் சொல்ல வருவது என்னவென்றால், திருமணத்திற்காக காத்துக்கொண்டு இருக்கும் இளம் வயதினர், காதல் செய்யத் துடிப்பவர்கள், அவசரப்படாமல், திருமணம் வரை காத்திருந்து, திருமணத்திற்கு பின்பு, ஒருவரை ஒருவர் காதலிப்பதே சிறந்த காதலாக அமையும் என்று கூறி வாழ்த்தி, இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com


Monday, September 19, 2011

காதல் மன்னன் - 2

(2) பருவக் கோளாறால் உண்டாகும் காதல்

உலகம் முழுவதும் பருவக் கோளாறால் உண்டாகும் காதலே அதிகம். இதற்கு மருத்துவ ரீதியாக சொல்லப்படும் ஆன்ட்ரோஜன், எஸ்ட்ரோஜன் சமாச்சாரங்களே காரணமாகும். நம் உடலில் உண்டாகும் வேதியியல் மாற்றங்களே இதற்கு காரணம். இந்த காலத்தில், பருவ வயதில் உண்டாகும் காதல் நிலையானவை இல்லை. பெரும்பாலும் அது ஒரு இன்ஃபாச்சுவேஷன் தான். பருவ வயது மதி மயக்கம் என்று இதனை சொல்லலாம். இந்த வயதில் நடைபெறும் தசா புத்திகளுக்கும் இந்த விஷயத்தில் பெரும் பங்கு உண்டு. இந்த வயதில், நல்ல தசா, புத்தி நடை பெற்று வந்தால், அவர்கள் இந்த பருவ வயது மதி மயக்கத்தில் சிக்காமல், படிப்பில் கவனம் செலுத்தி, முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.

ஜோதிட ரீதியாக ஆராயும் பொழுது இந்த பருவ வயது காதல் மயக்கத்திற்கு, பின் வரும் பல காரணங்கள் அமைவதாக நமக்கு புலப்படுகிறது.
* கோச்சார ரீதியாக ஏழரைச் சனியும், கண்டச் சனியும்,
* கோச்சார ரீதியாக குரு கெடுதலும்,
* கோச்சார ரீதியாக இராகு இராசி நாதனுடன் சேர்க்கை பெறுவதும்,
* கோச்சார ரீதியாக இராகு இராசி, 4-ஆம் இடத்திற்கு பெயர்வதும்,
* பருவ வயதில் வரும் சுக்கிர தசையும் (குட்டிச் சுக்கிரன்),
* தசா புத்தி ரீதியாக இராகு தசை நடப்பதும், சந்திர தசையில்-இராகு, சுக்கிர புத்தி, சுக்கிர தசையில்-இராகு புத்தி நடப்பதுவும், இந்த பருவ வயது மதி மயக்கத்திற்கான காரணங்களாக அமைகின்றன.

பொதுவாக மனோகாரகனான சந்திரன், ஜாதகத்தில் சுக்கிரன், இராகுவுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பது நல்லது. இந்த கூட்டணி லக்னாதிபதியுடன் ஏற்பட்டாலும் இதே நிலை தான். அப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும், அவர்களின் தசா புத்தி காலங்கள் பருவ வயதில் வராமல் இருக்க வேண்டும். அப்படி ஒரு மெகா கூட்டணி அமைந்து, அவர்களின் தசா புத்தி காலங்கள், பருவ வயதில் வந்து விட்டால், அவ்வளவு தான் ! இந்த காதல் படுத்தும் பாடு, அப்பப்பா சொல்ல இயலாது. கண்ணதாசனின் பின் வரும் கவிதை வரிகளே அதற்குச் சான்று.

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்; அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்; அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும் !

என்று கவியரசர் கடவுளை வம்புக்கு இழுக்கிறார். இந்த உலகம் காதலினால் வாழ்ந்தவர்களை நமக்கு அடையாளம் காட்டுவதை விட, தோற்றவர்களையே அடையாளம் காட்டி, அமர காவியமாக்கி நம்மை பயமுறுத்துகிறது.

அய்யா காதல், கத்திரிக்காய் சமாச்சாரம் நீங்கள் சொல்வது போல பருவ வயதில் மட்டும் தான் வருமா என்று கேட்கலாம். காதல் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். அப்படி வருவதற்கு, மேற்கூறிய ஜோதிட காரணங்கள் பொருந்தும். அப்படி நடுத்தர வயதிற்கு பிறகு வரும் காதலுடன் சின்ன வீடு சமாச்சாரங்களையும் சேர்த்து ஜாதகத்தில் ஆராயும் பொழுது அதற்கான விடை கிடைக்கும்.

மொத்தத்தில் காதல் என்பது நம்முடைய உடல், புத்தி, மனம் இவற்றிற்கு இடைப்பட்ட போராட்டம் என்பதே எமது கருத்தாகும்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com