Thursday, August 25, 2011

தமிழ்ப் புத்தாண்டு - ஓர் அரசியல்

தமிழ்நாட்டில் எல்லா விஷயமும் அரசியல் ஆகிவிட்டது. தமிழர்களின் உயிராகட்டும், உடமைகளாகட்டும், கல்வியாகட்டும் அல்லது கட்டிடங்கள் ஆகட்டும் எல்லா விஷயங்களும் தற்பொழுது காழ்ப்புணர்ச்சி அரசியல் (அதாங்க ஈகோ பாலிடிக்ஸ்) ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் பொழுது, இன்னும் 4 மாதங்களுக்கு பிறகு வரப்போகும் தைத்திருநாளுக்கு (கடந்த அரசு தமிழ்ப் புத்தாண்டாக மாற்றிய தினம்) இப்ப என்னங்க அவசரம்? உங்களில் ஒருவனாக இருந்து அரசியல் ஆய்வு செய்யும் பொழுது கிடைத்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

வரும் 4 மாதங்களில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் ! ஏராளம் !! அடுத்து வரும் மாதங்கள் மழைக் காலங்கள். வானியல் அறிஞர்களின் ஆய்வுப்படி 5-10% சதவீதம் குறைவாகவே இந்த வருடம் பருவ மழை இருக்கும் என்று கூறுகிறார்கள். இதில் வேறு இலவச அரிசித்திட்டம் அறிவித்தாகிவிட்டது! விவசாயமே கேள்விக் குறியாகி வரும் நிலையில், அரிசியை எங்கே இருந்து பெறப்போகிறோம். புதிய அரசு வேறு தன்னிச்சையாக, மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் பல்வேறு இலவச திட்டங்களை தான் தோன்றித்தனமாக அறிவிக்கிறது. அறிவித்த பின் அதற்கு எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்வது என்று தெரியாமல், புரியாமல் திரு திருவென்று முழிக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் உறவை ஒரு நல்ல குடும்பத்தின் கணவன் - மனைவி உறவோடு ஒப்பிடலாம். அவர்களின் மக்களை, பொது மக்களோடு ஒப்பிடலாம். குடும்பத்தில் கணவன் - மனைவி பரஸ்பரம் புரிதலோடு இருந்தால் தான், வீட்டில் உள்ள குழந்தைகள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். கணவனுக்கு தெரியாமல், அவனிடம் கலந்து ஆலோசிக்காமல் மனைவி ஒரு பொருளை வாங்கினால், பற்றாக்குறை தானே ஏற்படும். பிறகு, கணவனிடம் பணத்திற்கு சண்டை போட்டால் குடும்ப நிலைமை என்னவாகும்? அதே நிலை தான் இன்றைக்கு ஜெயா அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சி ஏற்ற ஒரு மாத காலத்தில் டெல்லிக்கு சென்று தாங்கள் திட்டமிட்ட, கோரிக்கை வைத்த , தேவையான பணத்தை மத்திய திட்டக் கமிஷன் துணைத்தலைவர் அலுவாலியாவை சந்தித்து, போதுமான பணத்தைப் பெற்றுக்கொண்டு, வெளியே மகிழ்ச்சியுடன், ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, தமிழ் நாட்டுக்கு வந்தபின் 3 மாதத்தில் மீண்டும் மத்திய அரசை சட்டசபையில் காய்ச்சி எடுத்தால், என்னவென்று சொல்லுவது. டெல்லி கொடுத்த 1 வருடத்திற்கான பல்லாயிரம் கோடி பணம் 3 மாதத்திலேயே காலியா? ஆஹா என்ன திட்டமிடல்? அது சரி என்னத்த சொல்ல! உயர்நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே பழைய பாடத்திட்ட புத்தகங்களை கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு அடித்தவர் தானே. ஆனால் இப்பொழுது அதனை உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கொடுக்க இயலாது. “வடை போச்சே” என்று புலம்ப வேண்டியதாகி விட்டது. இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் கிடைக்கவில்லை. அதற்காக வைத்திருந்த பணத்தை தான் பழைய பாடத்திட்ட புத்தகங்கள் அடிக்க பயன்படுத்தி விட்டோம். இப்பொழுது பணம் பற்றாகுறை வேறு ! பால்காரனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை புடவைக் காரனுக்கு கொடுத்து விட்டு, பணம் பற்றாக்குறை என்று சொல்லி குடும்பத்தினரை கடுங்காப்பி (பால் இல்லாத டிக்காஷன் காபி) குடிக்க வைக்கும் ஒரு நல்ல குடும்பத்தலைவியின் நிலைதான் இன்று தங்கத் தலைவியின் நிலை. பால் இல்லா காபி குடிக்கும் நிலையில் தான் இன்று தமிழக மாணவர்களின் நிலை.

போர்க்கால அடிப்படையில் நீர்ப் பிடிப்பு பகுதிகளை, பொறியாளர்கள், அதிகாரிகள் பார்வையிட்டு குளம், ஏரி போன்றவைகளை சுத்தம் செய்து, தூர் வாரி, மழைத் தண்ணீரை வீணடிக்காமல் சேகரிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியிலிருந்து வாங்கி வந்த பல்லாயிரம் கோடி ரூபாயை உருப்படியாக பயன்படுத்தினாலே போதும், தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி விடலாம். எல்லாம் அரசியல் !

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அது போல ஆகிவிட்டது, தமிழ்நாட்டில் உள்ள திருடர்களின் நிலை. திருடர்களுக்கு இது கொண்டாட்டமான காலம். போலிஸூக்கு இது திண்டாட்டமான காலம். முன்னாள் ஆட்சியாளர்களை பழிவாங்க மொத்த தமிழ்நாட்டு போலீசும் அவர்கள் மேல் வழக்குப் போட திருப்பி விடப்பட்டதால், பொது மக்களுக்கு பேராபத்து, தூக்கம் தொலைந்தது. 10 வருடங்களுக்கு முன்பு இருந்த போலீஸ் எண்ணிக்கை தான் இன்றும் இருக்கிறது. சட்டசபையில் ”நான் ஆட்சி ஏற்றதும், தமிழ்நாட்டில் இருந்த அனைத்து ரவுடிகளும், திருடர்களும் ஆந்திரா சென்று விட்டார்கள்” என்று சொல்லி முடிக்குமுன் அவருடைய கட்சி சட்ட மன்ற உறுப்பினர் பழ. கருப்பையா வீட்டிலேயே திருட்டு, கொள்ளை நடந்து உள்ளது. மத்திய உள்துறை மந்திரி ப. சிதம்பரம் வீட்டிலேயும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சாமான்ய ஜனங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். நல்லா உப்பு, புளி, காரம் சாப்பிடும் ஆந்திராக்காரர்கள் சூடு சொரணை இல்லாதவர்கள் போல இருக்கிறார்கள். சட்ட சபையில் ஆந்திரா திருடர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மாநிலம் என்று ஜெ குறைத்து சொல்லியும் இன்றுவரை அதற்கு பதிலே இல்லை. என்ன செய்ய அவர்கள் சினிமா மாயையில் இருந்து இன்னும் விடுபடாமல், கதாநாயகனின் நடனத்தில் வரும் ”ஸ்டெப்லு” வைப் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியாளர்கள் தும்மிய, இருமிய போதெல்லாம் குற்றம் கண்டு பிடித்து, கண் சிவக்க உணர்ச்சி பொங்க, சவுண்ட் விட்டு பேசிய அண்ணன் விஜயகாந்து இப்பொழுது விஜயகோந்து ஆகிவிட்டார். வாயை திறப்பதே இல்லை. பல புதிய அமைச்சர்களின் செயல் பாடுகளை 1 ஆண்டுக்கு பார்ப்பாராம். என்னவோ இந்த ஆட்சியில் அமைச்சர்கள் சொல்லிதான் எல்லாம் நடப்பது போல சொல்கிறார். பதவி ஏற்ற 2 ஆவது நாளே சமச்சீர் கல்வித்திட்ட தடை சட்டத்தை சட்ட சபையில் கொண்டு வந்தார். கல்வி அமைச்சரின் பரிந்துரைப் படிதான் இந்த சட்டத்தை கொண்டு வந்தாரா? கல்வி அமைச்சர், கல்வியாளர்கள், படித்த மேதைகளிடம் ஆலோசித்து 1 வருடம் கழித்து சமச்சீர் கல்வி தேவை இல்லை என்று முடிவு செய்து அதன் பின் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றி இருக்கலாமே.

அண்ணன் விஜயகோந்து அவர்களே! 1 வருடம் அதிகப் பிரசங்கித்தனமாக பேச மாட்டேன் என்று நீங்கள் காண்டிராக்டில் கையெழுத்துப் போட்டிருப்பதாக மக்கள் பேசி வருகிறார்கள் என்பதை அறிவீர்களா? அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலுக்கும் சேர்த்து காண்ட்ராக்ட் போட்டு விட்டதால் 1 வருடத்திற்கு வாயை திறக்க மாட்டாராம், தமிழ் நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்து 1 வருடத்திற்கு வாயை திறக்க மாட்டேன் என்றுபேசுகிறார். மீறி அவர் பேசினால் காண்ட்ராக்ட் கேன்சல் ஆகிவிடும். இன்னும் நாலரை ஆண்டுகளுக்கு விஜயகோந்தின் தயவு ஜெக்கு தேவையில்லை, அதனை அறிந்து தான் ஊமைச் சாமியாகிவிட்டார். தற்பொழுது அதில் கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கெஞ்சியதால், 6 மாதங்கள் தள்ளுபடியாகிவிட்டது. இபொழுது 6 மாதம் வரை வாயை திறக்க மாட்டேன் என்று சொல்லி வருகிறார். அவருடைய பேச்சு விடிஞ்சாப் போச்சு என்ற நிலையில் தான் உள்ளது.

மேற்கூறியது போன்ற இன்னும் பல விஷயங்களில் இருந்து தமிழ்நாட்டு மக்களை திசை திருப்ப வேண்டி, சமச்சீர் வெற்றி கொண்டாட்டங்களில் இருந்து திசை திருப்ப வேண்டி, ஜெ அரசு தமிழ்ப் புத்தாண்டை கையில் எடுத்துள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இனி தமிழ்ப் புத்தாணடைப் பற்றிய சர்ச்சைக்கு வருவோம். ”மக்கள் நம்பிக்கையை சட்டம் மூலம் மாற்றுவது சரியல்ல”- சட்டசபையில் ஜெ. மிகச் சரியான பேச்சு. பாராட்டுக்கள்.

மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். அதாவது பூமி தன் நீள் வட்டப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் அந்த சமயத்தில் செல்வதால், சூரியனின் தாக்கம் பூமிக்கு அதிகம் ஏற்படும் காலமாகும். அக்காலகட்டத்தையே பொது மக்கள் சித்திரை கத்திரி வெயில் என்றும், அக்னி நட்சத்திரம் என்றும் கூறுகிறார்கள். சூரியனை வைத்தே நம் சூரியக் குடும்பம் இயங்குவதாலும், சூரியனின் அருகாமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த காலகட்டத்தை சித்திரை மாதம் என்றும் வருடத்தின் முதல் மாதம் என்றும் வானியல் வல்லுனர்கள் வகுத்து கொடுத்தனர். அதனை வானியல் சாஸ்திரப்படி காலம் காலமாக தமிழக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சூரியனை வைத்து ஆண்டை கணக்கிடும் முறையை சூர்யமானம் என்றும், சந்திரனை வைத்து கணக்கிடும் முறையை சந்திரமானம் என்றும் ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை வரும் பல இந்துப் பண்டிகைகள் சந்திரனின் நிலையை (நட்சத்திரம், திதி) வைத்தே கொண்டாடப்படுகிறது. இன்றும் இந்து மதகுருமார்கள் தங்கள் பிறந்த நாளை நட்சத்திரத்தை வைத்தே ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இந்த ஜெயந்திகள் வருடா வருடம் ஒரே நாளில் வருவதில்லை. அப்படியென்றால் அவர்கள் சூரியனை வைத்து ஆண்டு கணக்கீடுகள் செய்வதில்லை, இது ஜெவுக்கும் தெரியும். அன்பர்களுக்கு நான் கூறுவதில் ஐயப்பாடு இருந்தால், ஆழ்வார்கள், நாயன்மார்கள், இப்பொழுதுள்ள சங்கராச்சாரியார்கள், ஜீயர்களின் பிறந்த நாள் (ஜெயந்தி) கொண்டாட்டத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அப்படி என்றால் பொது மக்களுக்கு ஒரு ஆண்டுக்கணக்கு, மத குருமார்களுக்கு ஒரு ஆண்டுக்கணக்கா? அவர்களின் ஜெயந்திகளை, திருவிழாக்களை சூரியனின் ஆண்டுக் கணக்கில் கொண்டாட வேண்டும் என்று ஜெ இந்த சட்டத்தின் மூலம் வலியுறுத்துவாரா? ஜெயந்திகளாவது அவர்களுடைய பர்சனல் விழாக்கள் என்று வைத்துக் கொண்டாலும், திருவிழாக்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. அதனை மாற்ற இயலுமா? இது நடைமுறையில் சாத்தியப்படுமா?

வானியல் சாஸ்திரத்தில் சூரியனை வைத்து, 1 ஆண்டுக்கான பருவ நிலையை 2 அயனங்களாக பிரித்துள்ளனர். அதாவது சூரியன் வடக்கு அயனத்தில் பயணிக்கும் காலம் ( நார்த் டெக்லினேஷன்) உத்திராயணம் என்றும், தெற்கு அயனத்தில் பயனிக்கும் காலம் ( சௌத் டெக்லினேஷன்) தக்‌ஷிணாயனம் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது உத்திராயணக் காலம் மழை, குளிர் எல்லாம் முடிந்து சோம்பல் முறித்து உழைக்கத் தயாராகும் வெப்பக்காலமாகும். தக்‌ஷிணாயனக்காலம் உழைத்துக் கிட்டிய உணவு, பொருட்களை வைத்து மழைக்காலம் அதனைத் தொடர்ந்து வரும் குளிர்காலத்தில் கஷ்டப்படாமல், இயற்கையால் பாதிப்பு ஏற்படாமல், தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வாழும் காலமாகும். இந்த இயற்கை பருவ மாற்றத்தை, மனிதன் பயன் படுத்துகிறானோ இல்லையோ, சிற்றறிவு உள்ள எறும்புகளும், பறவைகளும் இன்ன பிற உயிரினங்களும் இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. மழைக்காலத்திற்கு தேவையானவற்றை சேமித்து வைத்துக்கொள்கின்றன. ஏனெனில் அவற்றிற்கெல்லாம் இந்த பாழாய்ப்போன அரசியல் தெரியாது.

சூரியன் மகர ராசிக்கு செல்லும் காலமே உத்திராயண காலத்தின் தொடக்கம் ஆகும். அதாவது தை மாதம் முதல் நாள். இதைத் தான் ஆந்திராவில், கர்நாடகாவில் இன்னும் பல மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றும், கேராளவில் மகர ஜோதி திருவிழா என்றும் பல கோவில்களில் கொண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் மார்கழி மாதத்தை அந்த ஆண்டின் கடைசி மாதமாகக் கருதி, இந்த ஆண்டு முழுமைக்கும் நலன் தந்த கடவுளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக பக்தி மாதமாக மாற்றி விட்டு எல்லா கோவில்களிலும் நன்றாக கல்லா கட்டுகிறோம். அதைப் போல சூரியன் கடக ராசிக்கு எண்ட்ரி கொடுப்பதை தக்‌ஷிணாயண காலத்தின் தொடக்கமாகும்.

மேலும் பஞ்சாங்கம் பார்ப்பவர்களுக்கு தெரியும், மகர சங்கராந்திக்கான பலன் கண்டிப்பாக கொடுத்திருப்பார்கள். ஜோதிட ரீதியாகவும், மகரத்திற்கு (தை) முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் தமிழ் நாட்டின் பூகோள அமைப்பின் படி வட கிழக்கு பருவ மழையை வைத்தே விவசாயம் நடைபெறுவதால் அவன் தை முதல் நாள் சூரியனுக்கு நன்றி தெரிவித்து வணங்கும் நாளாக, இயற்கையாக அமைந்து விட்டது. தை மாதம் அறுவடை முடிந்து நாலு காசு பார்த்து, நல்ல காரியங்களைத் தொடங்குவர். பல புலவர்களும் தை மாதத்தை ஒரு அழகிய பெண்ணாக முன்னிலை படுத்தி (தைப்பாவாய்) பாடியுள்ளனர்.

மேலும் மஹாபாரத்தை ஊன்றிப் படித்தால் (கையை ஊன்றி அல்ல!), அதில் பிதாமகர் பீஷ்மரின் உயிர் அவர் விருப்பப்பட்டால் தான் பிரியும். அவர் உத்தராயண புண்ணிய காலம் வரை உயிருடன் இருக்கத் தீர்மானித்திருந்தார். இப்படி மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து பெற்றிருந்தார். இப்படி உத்திராயணத்திற்கு(தைக்கு) பல சிறப்பு அம்சங்கள் உள்ளதால், தை 1 ஆம் நாளை தமிழ் வருட முதல் நாளாக மு.க. அறிவித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் அதை சட்டமாக இயற்றியது தவறு. மக்கள் விருப்பபடி கொண்டாடி மகிழட்டும்.

இனி கேரளாவை எடுத்துக்கொண்டால், பூகோள அமைப்பின் படி தென் மேற்கு பருவ மழையை வைத்தே விவசாயம் நடைபெறுவதால், சிம்ம சூரியனுக்கு (தக்‌ஷிணாயனம்) நன்றி தெரிவித்து வணங்கும் நாளாக, ஓணம் பண்டிகை இயற்கையாக அமைந்து விட்டது. மு.க.வும் கேரளத்தில் உழவர் தினம் என்பதால், மத அடிப்படையான பண்டிகை அல்ல என்பதாலும் தமிழ்நாட்டிற்கு அரசு விடுமுறை அறிவித்தார். பிறகு கேரளாவும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, பொங்கலுக்கு அங்கு விடுமுறை அறிவித்தது.

மு.க. தமிழ்ப் புத்தாண்டை மாற்றியது, ஒரு வெட்டி வேலை என்று பாமரர்கள் நினைக்கலாம். அப்படி என்றால், ஜெ செய்வதும் ஒரு வெட்டி வேலைதான். மு.க. மாற்றினார் என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இருக்கிற மக்கள் பிரச்சினைகளை விட்டு விட்டு இதற்கு சட்ட சபையில் நேரத்தை ஒதுக்கி யாரையோ திருப்தி படுத்துவதற்காக, எல்லோரின் கவனத்தையும் திசை திருப்புவதற்காகவே இந்த சட்ட திருத்தம். இதனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. மக்கள் தங்களுடைய நம்பிக்கைகு ஏற்ப, பண வசதிக்கேற்ப வழிபாடுகள், கொண்டாட்டங்களை கொண்டாடிக்கொள்வார்கள். இதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டாம் என்பதே எமது தாழ்மையான கருத்தாகும்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

Wednesday, August 24, 2011

காதல் மன்னன் - 1

காதல் என்றால் என்ன?

காதலைப் பற்றி சொல்லாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். காதல் என்ற சொல்லுக்கு பல வகையில், பல கோணத்தில் வரையறை கொடுக்கலாம். கண்டதும் காதல், காணாமலே காதல் என்று பல வகைக் காதலைப் பகுத்துணரலாம். ஒரு நாட்டின் கலாச்சாரம் சார்ந்த சமூகம், காதலை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்து காதலின் தன்மை வகைப்படுத்தப்படுகிறது. அதாவது காதல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட அந்த நாட்டின் கலாசாரத்திற்கு முக்கியப்பங்கு உண்டு.


காதல் ஏற்படக் காரணம் என்ன?

இயற்கையான காதல் தோன்றுவதற்கு முக்கிய காரணிகள் 4 என்பதே எமது ஆய்வு.
(1) புற அழகை வைத்து உண்டாகும் காதல்
(2) பருவக் கோளாறால் உண்டாகும் காதல்
(3) ஒருமித்த கருத்தொற்றுமையால் உண்டாகும் காதல்
(4) மேற்கூறிய 3 காரணங்களும் இல்லாமல், எப்படி சந்தித்தோம் என்றே தெரியவில்லை, காதல் ஏற்பட்டுவிட்டது, என்று அவர்களும் குழம்பி நம்மையும் குழப்பும் காதலர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலான கார்ப்பொரேட் மற்றும் வியாபாரக் காதல்களும் குழப்பம் உள்ளவைகளே ! இனி இவற்றை எல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.


(1) புற அழகை வைத்து உண்டாகும் காதல்
ஒரு தமிழ்ப்படத்தில் கதாநாயகி தன்னை வெளிப்படுத்தாமல், காதலனுக்கு அவனுடைய செல்பேசிக்கு குறுந்தகவல் கொடுத்துக்கொண்டே இருப்பாள். அவனும் அவள் சொல்லும் இடமெல்லாம் சென்று அவளைத் தேடிப்பிடிக்க முயற்சி செய்து, களைத்துப் போய்விடுவான். இறுதியில் அவள் தற்கொலை செய்யும் முன்பாக ஒரு தகவலை அனுப்புவாள். ”நீ என்னை சந்தித்தாய் ஆனால் என்னிடம் பேசவில்லை, நீ கற்பனை செய்த மாதிரி நான் அழகாக இல்லை என்பதால், என்னை அடையாளம் காண உன்னால் இயலவில்லை. என் அருகில் இருந்த வேறு யாரோ ஒரு பெண்ணிடம் என் பெயரைச் சொல்லி கேட்டாய். அவள் என்னை விட அழகாக இருந்த காரணத்தால் அவளிடம் பேசினாய். ஆனால் பக்கத்தில் இருந்த என்னிடம் நீ பேசவில்லை, என்னை நீ அடையாளம் காணவில்லை. காதல் என்பது அழகு சார்ந்த விஷயம் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்டேன். அழகு என்னிடம் இல்லாததால் நான் காதலிக்க தகுதியற்றவள். அதனால் என்னை மாய்த்துக்கொள்ள விரும்புகிறேன்”, என்று கடைசி தகவலை அனுப்பி விட்டு இறந்து போவாள். இந்தக் கதை மூலமாக “காதல் அழகு என்பதை வைத்து மட்டுமே வருவது” என்ற கருத்தை இயக்குனர் வலியுறுத்தினார். ஆனால் இந்தப் படம் தோல்வி அடைந்தது. இயக்குனரின் கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் தான் தோல்வி அடைந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பிரச்சினையே வேறு. கடைசிவரையில் கதாநாயகியைக் கண்ணிலேயே காட்டவில்லை. பின்ன எப்படிப்பா படம் ஓடும்??

இன்றும் பல படங்களில், கதாநாயகன் தான் செல்லும் திருமண விழாவில் அல்லது வேறு ஏதேனும் ஒரு விழாவில் ஒரு அழகானப் பெண்ணைக் கண்டவுடன், காதல் வயப்பட்டு, விவரங்களை தன் அருகில் இருக்கும் நண்பேன்டா டீமில் விசாரிக்கச் சொல்வதை நாம் பார்க்கிறோம். பெரும்பாலான சரித்திரக் காதல், அழகு தொடர்பு உடையவைதான். இதற்கு உதாரணமாக அமராவதி, மும்தாஜ், கிளியோபாட்ரா போன்ற அழகிகளைச் சொல்லலாம். மும்தாஜின் அழகில் மயங்கிய ஷாஜகான் அவளுக்காக உலக அதிசயமான தாஜ்மஹாலை கட்டிய விஷயம் அனைவரும் அறிந்ததே ! அதே ஷாஜகான் சவுதியால் முஸ்லீமாக பிறந்திருந்தால் அவருக்கு இந்த காதல் வந்திருக்காது. பெண்ணின் அழகு முகத்தைப் பார்த்தால்தானே, அவள் அழகில் மயங்கி காதல் வயப்பட அங்கே தான் பெண்ணின் முகத்தைப் பார்க்க இயலாதே! 2006 க்கு பிறகு நடந்த நில ஆக்கிரமிப்பை ஜெயா அரசு முடுக்கி விட்டது போல (சத்தியமா 2006 க்கு முன்பு தமிழ்நாட்டில் நில ஆக்கிரமிப்பே நடக்கல சாமி! ), அழகிகள் ஆக்கிரமிப்பு என்பதை மொகலாய ஆட்சியிலிருந்து தொடங்க வேண்டும். சினிமா இயக்குனர்களுக்கு நிறைய கதைகள் கிடைக்கும்.

காதலைத் தொடங்க அழகு ஒரு காரணமாக இருந்தாலும், அதுவே வாழ்க்கைக்கு பல பாதகங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆரம்பத்தில் தென்றல் வீசிய பலருடைய காதல் வாழ்க்கையில் பின்னர் புயல் அடிக்கத் தொடங்கி விடுகிறது. அழகு தந்த காதல் பின்னர் அலங்கோலமாகி விடுகிறது. பல சினிமா நட்சத்திரங்களின் காதல் வாழ்க்கை இவ்வாறு தான் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

என்னய்யா ஜோசியரே ! ஜோதிடம் கற்க வந்த எங்களுக்கு காதல் டியூஷன் எடுக்கிறீர்கள் என்று அன்பர்கள் கேட்கலாம். காதலின் வகைகளை நன்றாகத் தெரிந்து கொண்டால் தான், ஒருவரின் ஜாதகத்தில் இவருக்கு எந்த வகை காதல் வாழ்க்கை அமையும் என்று கூற இயலும். அதற்காகத் தான் இவ்வளவு பெரிய பில்ட் அப் ! பொறுத்தருளவும்.

அழகு என்ற சொல்லுக்கு தொடர்புடைய சொற்களாக தமிழ், முருகன், இயற்கை, மலர், குழந்தை, பெண் என்று தமிழ் அகராதிகள் விளக்கம் தரலாம். ஆனால் ஜோதிடத்தில் அழகு என்ற சொல்லுக்கு தொடர்புடையவர் எனில் அது நம்முடைய காதல் மன்னன் சுக்கிரன் என்று சொன்னால் அது மிகையாகாது. அதற்கு அடுத்த படியாக “வதனமே சந்திர பிம்பமோ” என்று கவிஞர்கள் பாடிய சந்திரனைச் சொல்லலாம். ஜாதகத்தில் இவர்கள் நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டுதான் இந்தக் காதல் சமாச்சாரம்.

காதல் மன்னன் இனியும் வருவான் ...

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

Tuesday, August 9, 2011

ஜோதிடத்தில் குரு

குரு காரகத்துவம்

தனம், புத்திரோற்பத்தி, சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான். அறிவு, ஞானம் போன்றவற்றிற்கு மூலகாரணமும் இவரேயாவார். தென் தமிழ்நாட்டில், திருமண வயதில் உள்ள பெண்ணின், பையனின் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி எப்பொழுது வியாழ நோக்கம் வரும்? என்று கேட்பார்கள். அதாவது, கோட்சாரத்தில் வியாழபகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்த்தால் திருமணத்திற்கு உரிய சிறந்த நேரம் வந்துவிட்டது என்று பொருள், டும் டும் கொட்ட வேண்டியதுதான். அதனைத்தான் வியாழநோக்கம் என்று கூறுவார்கள்.

குரு தசா

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக குரு தசை வரும். குரு தசை மொத்தம் 16 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 16 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 16 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் கர்ப்பச்செல்என்று குறிப்பிடுவார்கள். குரு தசையில் குரு காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு பலன்களாக நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பாவ (Bhava) அடிப்படையில், குரு தரும் பலன்களும் நடைபெறும்.

இனி ஜோதிட ரீதியாக குருவின் பயோடேட்டாவை பார்க்கலாம்.

குரு - பயோடேட்டா

ஆட்சி பெறும் ராசி

தனுசு, மீனம்

உச்சம் பெறும் ராசி

கடகம்

நீச்சம் பெறும் ராசி

மகரம்

நட்பு பெறும் ராசிகள்

மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்,

சமம் (நியூட்ரல்)

கும்பம்

பகை பெறும் ராசிகள்

ரிஷபம், மிதுனம், துலாம்

மூலத்திரிகோணம்

தனுசு

சொந்த நட்சத்திரம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

திசை

வடக்கு

அதிதேவதை

பிரம்மன்

ஜாதி

பிராமணன்

நிறம்

மஞ்சள்

வாகனம்

யானை

தானியம்

கடலை

மலர்

முல்லை

ஆடை

மஞ்சள், பொன்னிறம்

ரத்தினம்

புஷ்பராகம்

செடி / விருட்சம்

அரச மரம்

உலோகம்

தங்கம்

இனம்

ஆண்

அங்கம்

இதயம்

நட்பு கிரகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய்

பகை கிரகங்கள்

புதன், சுக்கிரன்

சுவை

இனிப்பு

பஞ்ச பூதம்

நெருப்பு

நாடி

வாதம்

மணம்

ஆம்பல்

மொழி

சமஸ்கிருதம், தெலுங்கு

வடிவம்

உயரமானவர்

குருவுக்குரிய கோயில்

திருச்செந்தூர், ஆலங்குடி

குருவருள் கிடைக்க

ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய, மனதை ஒருமுகப்படுத்தி, தியானத்தில் வெற்றி பெற, குடும்பத்தில் தனலாபம், புத்திரச் செல்வம் போன்றவற்றை அடைய, பிள்ளைகள் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல், நல் வழியில் நடக்க, திருமண வயதை அடைந்த பின்னும் திருமணமாகாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் இனிது நடை பெற, தங்கு தடையின்றி கோவில் திருப்பணிகள் நிறைவேற குருவின் அருள் வேண்டும். இதற்கு, ஜோதிட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பின்வரும் நற்செயல்களை செய்து, குருவின் அருளைப் பெறலாம்.

· வியாழக்கிழமைகளில், பகலில் விரதம் இருந்து, மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று, தட்சிணா மூர்த்தியை வழிபடுவதன் மூலம் குருவின் அருளைப் பெறலாம்.

· வியாழக்கிழமைகளில், கொண்டக் கடலை சுண்டல் செய்து, பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் தானம் செய்வதாலும், குரு பகவானின் அருளைப் பெறலாம்.

· ஒரு ஏழைப் பெண்ணின் பிரசவ செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.

· ஒரு ஏழைக் குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.

· தாங்கள் படித்த பள்ளியின் ஆசிரியர் எவரேனும், ஓய்வு பெற்றவர் இருப்பின் அவரைத் தேடிச் சென்று வணங்கி, அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் செய்து, ஆசி பெறுவதால், குருவின் அருளைப் பெறலாம்.

· வியாழக்கிழமை மாலை வேளைகளில், வீட்டில் தீபத்தின் முன் அமைதியாக உட்கார்ந்து குருவே துணை என்று 108 முறையோ 1008 முறையோ அல்லது அதற்கு மேலோ மனதில் சொல்லி வந்தால் போதும், தங்கள் மனக்குழப்பத்தை தீர்த்து, குடும்பத்தில் அமைதியை நிலவச்செய்வார்.

· சிவனை வழிபடுபவர்கள் எனில் வேதத்தில் சொல்லப்பட்ட பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாயஎன்ற மூல மந்திரத்தை மனதில் தியானித்தால் மௌன குருவான சிவனே, உங்களுக்கு வழித்துணையாக வருவார், இது உறுதி !

எல்லாம் சிவமயம் !! அன்பே சிவம் !!

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.comஅடுத்தப் பதிவு : காதல் மன்னன்

Monday, August 8, 2011

குரு - அறிவியல்


குரு (வியாழன்) (Jupiter) சூரியனிலிருந்து 5 ஆவதாக அமைந்துள்ள ஒரு கிரகமாகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். சூடான பாறையும், திரவ உலோகம் (Liquid Metal) சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. அதாவது ஒரு நாள் என்பது பூமியில் 24 மணி நேரம் என்றால், வியாழன் கிரகத்தில் ஒரு நாள் என்பது 9 மணி 50 நிமிடம்தான்.

சூரிய சுற்றுப்பாதையில்(Solar Orbit), சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 ஆண்டுகளுக்கு (Earth Years) ஒருமுறை சுற்றி வருகிறது. வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை (Mass) பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. இது பூமியின் ஈர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது. அதாவது பூமியில் 5 அடி உயரம் எகிறி குதிக்கக் கூடிய ஒருவரால் வியாழன் கிரகத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் எகிற இயலாது.

வியாழன் ஹைட்ரஜன் வாயுவாலும், ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ளது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ் சிவப்பு பிரதேசம் (Great Red Spot) உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலிலியோவால் 1610 ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 63 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. வியாழனின் இந்த 63 நிலவுகளில் மிகப் பெரிய நிலவு கானிமீடு (Ganymede) ஆகும். இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவாகும். இதன் அளவு, புதன் கிரகத்தை விட பெரியது.கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com