Sunday, December 31, 2017

ஜோதிடப் பழமொழிகள்

ரோகிணி தாய் மாமனுக்கு ஆகாது ! 
=====================================

'ரோகிணி தாய் மாமனுக்கு ஆகாது! என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்து, ஐந்தாம் வீட்டுக்குரிய கிரகமும் பாவ கிரகங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே தாய் மாமனுக்கு ஆகாது. ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பிறந்து கம்சனை அழித்ததால் இந்தப் பழமொழி ஏற்பட்டது. இது எல்லோருக்கும் பொருந்தாது.

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் !
=====================================================
'ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்' என்று ஒரு பழமொழி உண்டு. நம் அனுபவத்தில் நாம் ஆராய்ந்து பார்த்ததில், இதில் சிறிதும் உண்மை இல்லை. இது பெண்கள் மீது சுமந்தப்பட்ட 'பழிமொழி'யாகும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாது என்பதிலும் எந்த உண்மையும் இல்லை.
‘ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்’ என்பதுதான் உண்மையாகும். அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து சந்திரனை குரு பகவான் பார்க்க, நல்ல தசா புக்தி கூடி வரும் காலத்தில் பிறந்தால் அரசாளும் யோகம் உண்டு. மூல நட்சத்திரம் 4 - ம் பாதத்தில் பிறந்தால் சத்துருக்களை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் இருக்கும்.

எனவே, மாமனாருக்கு ஆகாது என்று எண்ணி, மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களை ஒதுக்க வேண்டாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டில் மாமனார், மாமியாருடன் ஒற்றுமையாக வாழ்வதையும், மாமனார் நீண்ட ஆயுளுடன் இருப்பதையும் கண்கூடாக அநேக குடும்பங்களில் காணலாம்.

பூராடத்தில் நூலாடாது
=========================

இதைத் தவறாக அர்த்தம் செய்துகொண்டு, பூராட நட்சத்திரத்தில் பெண் பிறந்தால், அவளுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று ஒரு சிலர் கூறுவது வழக்கம். ஆனால், இதன் உட்பொருளே வேறு. நூல் என்பதைப் பாடப் புத்தகம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். அதாவது கல்வியில் ஆரம்பத்தில் அலட்சியமாக இருப்பார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும், ஆரம்பத்தில் மட்டும்தான். போகப்போக கல்லூரிக் கல்வியில் முதன்மையாக இருப்பார்கள்.

பலருக்கு, குடும்பச் சூழ்நிலை காரணமாகவோ உடல் நிலை காரணமாகவோ கல்வி தடைப்பட்டு, பின்னர் நல்ல விதமாக கல்வி அமையும். சிலர் இளங்கலையில் ஒரு பாடப்பிரிவிலும் முதுகலையில் மற்றொரு பாடப்பிரிவிலும் தேர்ச்சி பெறுவார்கள். படிப்பில் ஏற்படும் இந்தக் குழப்பத்தைத்தான், ‘பூராடத்தில் நூலாடாது’ என்று கூறியிருக்கிறார்களே தவிர,திருமணவாழ்க்கைக்கும் இந்தப் பழமொழிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை..

கற்றல் ! தெளிதல் !! தெளிவித்தல் !!!
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.comSaturday, January 14, 2017

பொங்க வாழ்த்துக்கள் !

உழவர் திருநாள் !
தைத் திங்கள் முதல்நாள் !
பொங்கல் திருநாள் ! வாழ்த்துக்கள் !!

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்து,
விவசாயிகள் நலம், வளம் பெற
விவசாயப் பொருளாதாரம் வளர்ச்சி பெற
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டி, வணங்குவோமாக !

வழக்கம் போல வாழ்த்துக்களைச் சொல்லி
சம்பிரதாயமாக கடந்து போக முடியவில்லை.

சாகுபடி செய்து அனைவருக்கும் உணவு தரும் விவசாயிகளை
சாகும்படி செய்யாமல் தடுப்பது அனைவரின் கடமையாகும்.

போர்க்கால அடிப்படையில் நீர்ப் பிடிப்பு பகுதிகளை, பொறியாளர்கள், அதிகாரிகள் பார்வையிட்டு குளம், ஏரி போன்றவைகளை சுத்தம் செய்து, தூர் வாரி, மழைத் தண்ணீரை வீணடிக்காமல் சேகரிக்க விரைவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே விவசாயிகளின் தற்கொலைக்கான தீர்வு !

ஓட்டுப் போட்ட மூலவர்கள் வீட்டில் முடங்கி கிடக்க
உற்சவர்கள் மக்கள் நல்வாழ்வு குறித்து கவலைப்படாமல் இருக்க;

திரும்பப் பெறும் அதிகாரம் இல்லாதவரை
அடுத்த தேர்தல் வரை
புலம்பித் தீர்க்க வேண்டியதுதான் என்று ஒரு சாரர் கலங்கி நிற்க;

ஓட்டுப்போட்ட ஒருநாள் எஜமானர்கள் குறிப்பாக இளம் எஜமானர்கள், அரசுகளுக்கு சவால்விடும் நிலையில் போராட்டங்களை தன்னெழுச்சியாக முன்னெடுப்பது;

ஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமல்லாது
விவசாயிகளுக்கும் சற்று ஆறுதலான, நம்பிக்கைத் தரும்  விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

போராடியே அனைத்து உரிமைகளையும் பெற முடியும் என்ற நிலைக்கு தமிழன் தள்ளப்படுள்ளதை நினைத்து, மனம் வேதனை அடைகிறது. கவிஞர் வாலியின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

நம்நாடு
அன்று அந்நியர்கள் கையில்
இன்று அரசியல்வாதிகள்
என்று மக்கள் கையில்?

போட்டித் தேர்வுகளிலும், பள்ளி, கல்லூரித் தேர்வுகளிலும் நல்ல முறையில் வெற்றி பெற, கடுமையாக உழைக்க வேண்டிய, கடுமையான பயிற்சிகளை செய்ய வேண்டிய காலகட்டத்தில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது, அவர்களை மேலோட்டமாக பாராட்டினாலும், அவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப் படாமல் இருக்க முடியவில்லை.

கற்றல் ! தெளிதல் !! தெளிவித்தல் !!!
என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்


குறிப்பு:

பொங்க வாழ்த்துக்கள் ! என்ற தலைப்பில் எழுத்துப் பிழை இல்லை. அந்த தலைப்பு ஒரு சாதரண மனிதனின் கோபத்தின் வெளிப்பாடு என்று சொல்லவும் வேண்டுமோ?