Monday, July 25, 2011

குழந்தைச் செல்வம் - ஓர் ஆய்வு

வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டாலே போதும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது, இந்தியாவின் மக்கள் தொகையைப் பார்த்தாலே தெரியவில்லையா, இதற்கு எதற்கய்யா ஜோதிடம் என்று கேட்போரும் உளர். இந்த வலைப்பூவின் நோக்கமே, மக்கள் மத்தியில் நிலவும் நெகடிவ் சிந்தனையைப் போக்கி, பாஸிடிவ் எண்ணத்தை வளர்ப்பதுதானே. எத்தனையோ தம்பதியினர் குழந்தைப் பேறு இல்லாமல், மனக்கவலையுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும், ஜோதிடர்களுக்கும், ஜோதிடத்தை கற்க வந்துள்ள உங்களைப் போன்ற ஆர்வலர்களுக்கும் இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.


கர்ப்பமும், மருத்துவமும்


ஒரு ஆரோக்கியமுள்ள ஆணின் விந்து திரவம் குறைந்தது 2 மி.லி. வெளிப்பட வேண்டும். அதில் 1 மி.லி.க்கு குறைந்தது 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதாவது ஒரு முறை வெளிப்படும் விந்துவில் சுமார் 40 மில்லியன் விந்தணுக்கள் குறைந்த பட்சம் இருக்க வேண்டும். அப்படி 40 மில்லியனுக்கு மேல் விந்தணுக்கள் உள்ள எந்த ஆணும் குழந்தை பெறத் தகுதியுள்ளவனே ! ஆனால், இந்த 40 மில்லியன் விந்தணு வீரர்களில், ஒருவரே பந்தயத்தில் ஜெயிக்கிறார். அவரே வெற்றி வீரர். அவரையே பெண்ணின் சினை முட்டை ஏற்றுக்கொள்கிறது. வழக்கமான தமிழ் சினிமாவில் வரும் வெற்றி பெற்ற ஹீரோவை ஹீரோயின் கிளைமாக்ஸ் காட்சியில் அணைப்பது போல, வெற்றி பெற்ற விந்தனுவை பெண்ணின் சினை முட்டை அணைத்து ஏற்றுக் கொள்கிறது. அப்படியெனில் ஒரு ஆண் ஒருதடவை வெளிவிடும் விந்தனுவைக்கொண்டு ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையையே உண்டு பண்ணலாம். கற்பனை செய்வது லூசுத்தனமாக இருந்தாலும், மருத்துவ அறிவியலின்படி சாத்தியமே !

ஆனால் ஒரு ஆரோக்கியமான பெண்ணிற்கு மாதத்திற்கு ஒரு சினை முட்டைதான் உற்பத்தியாகிறது. வெற்றி வீரரை ஏற்றுக்கொண்டவுடன், தற்காலிகமாக முட்டை உற்பத்தியை நிறுத்திக்கொள்கிறது. ரொம்ப அரிதாக ஒரே சமயத்தில் இரு முட்டைகளும், தயாராகி, இரு வீரர்களை ஏற்கும்பொழுது அது இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பாக அமைகிறது. ஆனால் பெண்ணின், சினை முட்டை உற்பத்திக்கு, அளவு உள்ளது. அதாவது பருவம் அடைந்ததிலிருந்து சுமார் 45-55 வயது வரைமட்டுமே, அதாவது மெனோபாஸ் வரும் வரை மட்டுமே சினைமுட்டை உற்பத்தி நடைபெறும், அதுவரை மட்டுமே கர்ப்பம்தரிக்க இயலும். ஒரு பெண் மெனோபாஸாகி தாய்மை அடைவதில் ஃபெயில் ஆகிறாள். 15 முதல் 50 வயது வரை சுமார் 35 வருடம், வருடத்திற்கு 12 எனில், 35 வருடத்திற்கு சுமார் 450 முட்டைகளே உற்பத்தி செய்ய இயலும். அதாவது மருத்துவ அறிவியலின்படி 450 குழந்தைகளை உருவாக்கலாம், பெற இயலாது. பெறுவது எனில் வருடத்திற்கு ஒன்று என சுமார் 45 குழந்தைகளைப் பெறலாம். மெனோபாஸ் அடைவதால் சினைமுட்டை உற்பத்திதான் நிற்கும் ஆனால், கர்ப்பபை குழந்தையை வளர்க்க ஏதுவாகத்தான் இருக்கும், மெனோபாஸுக்கு பின்பும் குழ்ந்தைப் பெறலாம் என்பது ஒரு புதிய தகவலே. Even after menopause the uterus is fully capable of carrying out a pregnancy. அதற்கு வேறு ஒரு பெண்ணின் சினை முட்டையை பயன்படுத்தலாம்.

ஒரு பெண்ணின் சினை முட்டையை எடுத்து ஆணின் விந்தணுக்களுடன் சோதனைக் குழாயில் சேர்த்து பின்பு பெண்ணின் கர்ப்பபைக்குள் வைத்து கருவை வளர்க்கலாம். இதனை ”படுக்காமல் பிள்ளை பெறுக்கொள்வது” என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதனை In vitro fertilisation (IVF) என்று கூறுவார்கள். இந்த முறை 1978ல் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு (2010), இந்த முறையை கண்டு பிடித்த Robert G. Edwards என்ற மருத்துவ விஞ்ஞானிக்கு நோபல் பரிசு கிடைத்தது. அவருக்கு ஒரு ராயல் சல்யூட். அகத்திய மாமுனியை முதல் சோதனைக்குழாய் குழந்தை என்று நம்மவர்கள் கூறுகிறார்கள். அவருக்கு கும்ப முனி என்று ஒரு பெயர் வரக் காரணம், அவர் கும்பத்தில் (சொம்பு) அவதரித்ததால் தான் என்று சொல்லுவார்கள். இது பற்றி கூடுதலாக தகவல் ஏதும் தெரிந்தால் எனக்கு கடிதம் போடவும்.

இவ்வளவு வாய்ப்புகள் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ அறிவியலின்படி இருக்கும் பொழுது, ஏனப்பா இந்த குழந்தைப்பேறின்மையைப் பற்றி கவலைப் பட வேண்டும்.

குழந்தைப்பேறு தாமதிக்க காரணங்கள்.

(1) இளம் தம்பதியினர் சில காலம் தாம்பத்திய வாழ்க்கையை நன்றாக அனுபவித்து விட்டு பிறகு குழந்தை பெற்று கொள்ளலாம் என்று முதல் இரவிலேயே தீர்மானித்து விடுகிறார்கள். ஆனால் பெற்றோர்களிடம் இதனை சொல்லாமல், எல்லோரையும் இனாவானா ஆக்கி விடுகிறார்கள். புத்திசாலிப் பிள்ளைகள். இது தெரியாமால் 2, 3 வருடங்களாக சில பெற்றோர்கள் கோவில், குளமாக ஏறி வருவதையும், சிலர் ஜோதிடருக்கு கப்பம் கட்டுவதையும் பார்த்திருக்கிறேன். ஒரு சில பெற்றோர்கள் மாப்பிள்ளை மீதும், சிலர் பெண்ணின் மீதும் குறைகூறி இரு குடும்பங்களும் முறைத்துகொண்டு இருப்பதையும் காணலாம். அதனால் இளம் தம்பதியினர் தங்களின் திட்டங்களை பெற்றோரிடம் வெளிப்படையாக சொல்வது நல்லது, வீண் பிரச்சினைகளை குறைக்க வழி வகுக்கும். அதே சமயம், அவர்களின் திருமணம், தாமதத்திருமணம் எனில், இந்த யோசனையைத் தவிர்ப்பது நல்லது. முதலில் குழந்தையைப் பெற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமாக இருக்கும். குழந்தைக்கு பிறகும், தாம்பத்திய வாழ்க்கையை இனிய முறையில் அனுபவிக்கலாம்.

(2) சில இளம் தம்பதியினர் தாமாகவே மருந்துக்கடைகளுக்கு சென்று காண்ட்ராசெப்டிவ் மாத்திரைகளை, கருத்தரிக்காமல் இருப்பதற்காக சாப்பிடுகிறார்கள். இது தவறாகும். நாளடைவில் ஹார்மோன் பாதிப்புகள் வரக்கூடும், எதிர்காலத்தில் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

(3) உண்டி சிறுத்தல் பெண்டிற்கு அழகு என்பது தமிழ்ச் சான்றோர்கள் வாக்கு. பெண்கள் இளம் வயதிலேயே மிகவும் குண்டாக இருப்பது, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று மருத்துவ புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உடற்பயிற்சியாலும், கொழுப்பான ஆகாரத்தை குறைப்பதாலும் பெண்கள் எடையை குறைக்கலாம். பொதுவாக குண்டான பெண்களுக்கு Body Mass Index (BMI) 19-25 க்கு மேல் இருப்பதால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு குறையலாம். எடை கூடுதல் காரணமாக விந்து பயணிக்கும் ஃபெலோப்பியன் குழாய் அழுத்தப்பட்டு பாதை தடைபடலாம்.

(4) டெலிவரியில் ஏற்படும் வேதனை காரணமாகவோ, பயத்தின் காரணமாகவோ பெண்கள் ஒத்துழைக்க மறுப்பதால், கர்ப்பம் தரிக்க கால தாமதமாகலாம். இப்பொழுது உள்ள பெரும்பாலான நகர்ப்புற டெலிவரிகள் சிஸேரியனாகவே உள்ளது. மயக்க மருந்து கொடுத்து, சிஸேரியன் செய்வதால் வலி உணர்வதற்கான வாய்ப்பே இல்லை. அதனால் கவலை வேண்டாம். சிஸேரியன் செய்வதால் தாய்க்கும் ஆபத்தில்லை, சேய்க்கும் ஆபத்தில்லை, டாக்டருக்கும் நல்ல வருமானம். அதனால் கவலையை விடவும்.

(5) ஆண்களிடம் உள்ள பயத்தின் காரணமாக பெண்கள் ஒத்துழைக்க மறுப்பதால், கர்ப்பம் தரிக்க தாமதமாகலாம். ஆண்கள் பெரும்பாலும் தன் முரட்டுதனத்தை, முதலிரவில் காட்டி பெண்களை பயமுறுத்தி விடுகிறார்கள். அதனால் பெண்கள் உடலுறவு என்றாலே அது வலி நிறைந்த உறவு என்று கருதி பயப்படுகிறார்கள். இந்த பயத்தைப் போக்குவது ஆணின் கடமையாகும். உடலுறவுக்கு முன்பு, நீண்ட நேரம், தொட்டு, தடவி அவளின் காம உணர்வைக்கூட்டி, கிளர்ச்சி அடைய வைத்து (stimulating by foreplay), அவள் உடலுறவுக்கு தயார் என்று தெரிந்த பிறகு உடல் உறவு கொள்வதே உத்தமமாகும். அப்பொழுது தான் ஃபெலோப்பியன் குழாய் நன்கு விரிவடைந்து விந்து பயணிக்க இடமளிக்கும். விந்து வந்தவுடன் வெளியில் எடுக்காமல் சிறிது நேரம் வைத்திருந்தால், மோடிலிடி குறைவாக இருக்கும் விந்து அணுக்களும் சிறிது சிறிதாக உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. பெண்ணும் உச்ச நிலையை அடையலாம். குழந்தையும் உருவாகும்.

ஆண், பெண்ணின் இனக்கவர்ச்சியே, காதலாகி, பின் காமமாகி, அதன் பின் அவர்களை பெற்றோர் என்ற உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. வெறும் ஆண், பெண் என்ற நிலை மாறி அன்னையும், பிதாவுமாகி, முன்னறி தெய்வமாகிறார்கள். இதுவே இயற்கைக்கு ஆண்டவன் இட்ட கட்டளையாகும்.


கர்ப்பமும் ஜோதிடமும்

குரு புத்திரகாரகன் என்று கடந்த பதிவுகளில் கண்டுள்ளோம். ஜாதகத்தில் புத்திர பாவம் என்று சொல்லக்கூடிய இடமே பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஆவதால், மக்கட் செல்வம் என்பது பூர்வ புண்ணிய அடிப்படையிலேயே அமைகிறது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. அவ்வாறே, பூர்வ புண்ணியம், புத்திர பாவம், புத்திர காரகன் குரு, எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகின்றன.

இப்படித்தான், ஒருவருடைய ஜாதகத்தில், பூர்வ புண்ணிய ஸ்தானம் மிக முக்கிய ஸ்தானமாகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் ஒருவருக்கு நன்றாக அமைந்துவிட்டால், கடந்த பிறவியில் அவர் விளைவித்தவற்றை, இந்த பிறவியில் அறுவடை செய்து, அனுபவிக்கிறார் என்று பொருள். இதன் தத்துவமே இந்த பிறவியிலாவது நன்மைகள் செய் ! அதன் பலனை பிறகு அனுபவிப்பாய் என்பதே.

கர்ப்பம் தரிப்பு தசா புத்தி அடிப்படையில் :

பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின், தசா புத்தி காலங்களே கர்ப்பமடைய ஏற்ற காலமாகும்.

ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தால், குருவின் தசா புத்தி காலங்களும் கர்ப்பமடைய ஏற்ற காலமாகும்.

பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின், தசையில், குரு புத்தியிலும் கர்ப்பமடையலாம்.

குரு தசையில், பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின் புத்தியிலும் கர்ப்பமடையலாம்.

ஜாதகத்தில் களஸ்திர ஸ்தானாதிபதியை குரு பார்த்தால், களஸ்திர ஸ்தானாதிபதியின் தசாகாலத்தில் வரும் குரு புத்தியிலும் கர்ப்பம்தரிக்கலாம்.

கர்ப்பம் தரிப்பு கோட்சார அடிப்படையில் (குரு பெயர்ச்சி):

கோட்சாரத்தில், ஜனன ஜாதகத்தில் குரு நின்ற இடத்துக்கு குருப் பெயர்ச்சியாகும் காலங்களிலும், ராசி அடிப்படையில் குரு ராசி நாதனை பார்க்கும் காலங்களிலும், ராசிக்கு 5ஆம் இடத்தைப் பார்க்கும் காலங்களிலும், புத்திர ஸ்தானாதிபதியைப் பார்க்கும் காலங்களிலும் கர்ப்பமடையலாம்.


சரி தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.

ஜோதிடரின் கடமை என்ன? ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை வைத்து அவர்களுக்கு குழந்தை உண்டா? இல்லையா? என்று கண்டு பிடித்து, எப்பொழுது குழந்தை பிறப்புக்கான வாய்ப்பு என்று கண்டு பிடித்து, ஜாதகத்தின் அடிப்படையில் அது 40 வயதிற்கு மேல் தான் உண்டாகும் என்று தெரிந்தால், ஜோதிடர் அவர்களை மருத்துவரிடம் சென்று மருத்துவ அறிவியலின் துணையால் கருத்தரிப்பு செய்து குழந்தைச் செல்வத்தைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அறிவுறுத்தலாம். இவ்வகையில் ஜோதிடர் சமூக அக்கறையுடன் ஜோதிடத்தை பயன்படுத்தலாம் என்பதே இந்த நாட்டாமையின் தீர்ப்பாகும். தீர்ப்பை மாற்ற சொல்பவர்கள், பின்னூட்டத்தில் அப்பீல் செய்யலாம்.


மருத்துவ அறிவியலின் மகத்தான சாதனைபெற்றோர் என்ற புனித ஸ்தானத்தை அடைந்த இவர்களை வாழ்த்துவோம் !
இவர்களின் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சிக்கு தலை வணங்குவோம் !!

60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்


கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்!
என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.comTuesday, July 19, 2011

குரு

குரு பொது

குரு பகவானை, வியாழன் என்று தமிழில் கூறுவார்கள். குரு பார்க்க கோடி நன்மை என்ற சொற்றொடரின் மூலம் குருவின் பெருமையை அறியலாம். இயற்கையில் முழுச் சுபகிரகம் என்பதாலேயும், சுமார் ஒரு வருடத்திற்கு ஒருமுறை ராசிவிட்டு ராசி மாறுவதாலும், ராசி அடிப்படையில் தீய வீடுகளுக்கு சென்றாலும், அவரது கருணைப் பார்வையால் சில வீடுகளுக்கு நன்மை ஏற்படும் என்பதாலும், கிரகப் பெயர்ச்சிகளில் குருபெயர்ச்சிக்கு ராசிபலன் எழுதி கல்லா கட்டும் ஜோதிடர்களும், அதனை ஆர்வத்துடன் வாங்கி படிக்கும் மக்களும் இவ்வாறு குருவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மற்ற இயற்கை சுப கிரகங்களான சுக்கிரன், புதன் போன்றவை மாதங்களுக்கு ஒரு ராசியாகவும், சந்திரன் இரண்டேகால் நாட்களுக்கு ஒரு முறையும் மாறுவதால் ராசி பலனில் முக்கியத்துவம் பெறுவதில்லை.

வெறும் குருபெயர்ச்சியை மட்டும் மனதில் வைத்து, எழுதப்படும் ராசிபலன்கள் பொய்யாகி விடக்கூடும். மற்ற முக்கிய கிரகப்பெயர்ச்சிகளான சனி (இரண்டரை வருடம்), இராகு, கேதுக்களின் (ஒன்றரை வருடம்) பெயர்ச்சிகளையும் ஆராய்ந்து, அனுசரித்து எழுதப் படும் ராசி பலன்களே பலிதமாகும். அது மட்டுமல்லாது ஜாதகரின் ஜாதக ஆராய்ச்சியும் மிக முக்கியமானது. எம்முடைய அனுபவத்தில், 10 முதல் 20 சதவீத பலன்களே பெயர்ச்சிகளால் நடைபெறுகிறது, 80 முதல் 90 சதவீத பலன்கள் அவரது ஜாதகத்தில் லக்னரீதியாக கிரகங்கள், அவற்றின் தசா புத்திகள் மூலமாகத் தரும் பலன்களே ஜாதகருக்கு ஏற்படும். ராசிபலன் புத்தகத்தை வாங்கி பார்த்தால், ராசிக்கு ஒன்றாக 12 ராசிகளுக்கும் குருபெயர்ச்சி பலன்கள் எழுதப்பட்டிருக்கும். மேஷ ராசியில் பிறந்தவரின் பலன்கள் எல்லா மேஷ ராசியினருக்கும் பொருந்தாது. ஏனெனில் ஜாதக அடிப்படையில் தசாநாதர்கள் வேறுவிதமான பலனை தந்து கொண்டிருப்பார்கள். சிலருக்கு ராசிபலன்கள் பொருந்துவது போல் இருந்தாலும் அதுவும் ஜாதக அடிப்படையில் தசாநாதர்கள் தரும் பலனாகவும் இருக்கலாம்.

அதனால் அன்பர்கள் பொதுவாக எழுதப்படும் ராசிபலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவரவர் ஜாதக ஆராய்ச்சியில் இறங்குவதே உண்மையை உணர வழி வகுக்கும். பெயர்ச்சிகளை விட தசாபுத்திகளே வலிமையுள்ளதாகும்.

ராசிபலன் நீங்களே பார்க்கலாம் (ராசி பலன் எழுதும் ஜோதிடர்கள் மன்னிக்கவும்) என்று ஒரு பதிவு இடுகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்.

ஏற்கனவே செவ்வாய் பற்றிய பதிவில் கருத்தரிப்பு (Fertility) பற்றி கூறியிருப்பேன். குரு புத்திரகாரகன். ஜாதகத்தில் குரு கெடாமல் இருந்தால், குரு புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்த்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு இருக்கும். குரு புத்திரஸ்தானத்தில் இருந்தாலும் குழந்தைப் பேறு இருக்கும் என்று சில ஜோதிடர்கள் கூறுவார்கள். சில லக்கினக்காரார்களுக்கு குரு பாவியாவதால் அவர் புத்திரஸ்தானத்தில் நிற்பதை நன்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் பாவார்த்த ரத்னகாரா என்ற ஜோதிட கிரந்தத்தின் படி காரகோ பாவ நாஸ்தி, ஏற்படவும் வாய்ப்புள்ளது. மொத்ததில் புத்திரஸ்தானத்தில் அவர் நிற்பதைவிட புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்ப்பதே சிறந்த நிலையாகும்.

குரு பார்க்க பல தோஷங்கள், நிவர்த்தியாகும் என்பது உண்மையென்றாலும் கூட, சிலருடைய ஜாதகத்தில் குருவே கேந்திராதிபத்திய தோஷம் போன்ற சில தோஷங்களையும் உண்டு பண்ணுகிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை. கஜகேசரி யோகம் போன்ற நன்மை தரும் சில யோகங்களையும், சகடயோகம் போன்ற நிலையற்ற பொருளாதார, வாழ்க்கையைத் தரும் யோகத்தையும் தர வல்லவர்.


குருவை அடுத்த பதிவில் நான் தொடர்கிறேன், நீங்களும் தொடருங்கள்.

குரு போற்றி

குணமிகு வியாழ குருபகவானே !

மணமுள வாழ மகிழ்வுடன் அருள்வாய்

பிரகஸ்பதி வியாழ பரகுரு நேசா !

கிரக தோஷமின்றி கடாக்‌ஷித் தருள்வாய்

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com


Tuesday, July 12, 2011

சமச்சீர் கல்வியும், புதனும்

புதன் பொது

பொதுவாக புதனை எழுத்தறிவிக்கும் இறைவன் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வு, கல்வியறிவு, தொழிலில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, நுண்ணறிவு, கணிதம் போன்றவற்றிற்கு புதனே அடிப்படையாகப் பொறுப்பேற்கிறார். புதன் வித்யாகாரகன். தனி மனிதனின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் பொறுப்பேற்கிறார். நாட்டின் கல்வித்துறையில் ஒரு மறுமலர்ச்சி அல்லது மாற்றம் அல்லது முன்னேற்றம் ஏற்படும் சமயங்களில், நாட்டை ஆட்சி செய்யும் மன்னன் அல்லது மன்னியின் (சத்தியமாக மன்னனின் பெண்பால் தாங்க) ஜாதகத்தில், புதனின் நிலையை உற்று நோக்கி மாற்றம் வருமா அல்லது ஏமாற்றம் வருமா என்று சொல்லி விடலாம்.

நாடு விடுதலை அடைந்த பிறகு, இப்பொழுது தான் தமிழ்நாட்டில் முதன் முறையாக இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதனை அட்ஜஸ்ட் செய்ய சனி, ஞாயிறுகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டாம். ஏனெனில், நீண்ட விடுமுறைக்கு பிறகும் இன்னும் பாடம் நடத்தத் தொடங்கவில்லை. குழந்தைகள் சமச்சீர் கல்விக்கு நன்றி சொல்லும் பொழுது, பெற்றோர்கள் மனதில் புழுங்கி அழுது கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் குழந்தை வயிற்று வலி, வாய் வலி என்று பொய் சொல்லி பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தாலும், குழந்தையின் அம்மா தர தர என்று இழுத்துக் கொண்டு சென்று பள்ளியில் விடுவது நாம் அன்றாடம் காலையில், காண்கின்ற காட்சியாகும். கண்டிப்புடன் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் டீச்சரும், நல்ல அம்மா என்று சொல்லி அம்மாவைப் பாராட்டி, அழும் குழந்தையை மிரட்டி, வாயைப் பொத்தி வகுப்பறையில் உட்கார வைத்துவிடுவார்.

ஆனால் இன்றைய நிலையே வேறு. இதுவரை புத்தகங்களை குழந்தைகள் கிழித்தது போக, இப்பொழுது டீச்சர்கள் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். 4 மாதங்கள் கழித்து, எங்கே உன்னுடைய புத்தகத்தில் 14ஆம் பக்கம் இல்லை என்று, டீச்சர் கேட்டால், நீங்கள் தான் கிழித்தீர்கள் டீச்சர் என்று சொல்லி குழந்தைகள் தப்பித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். இப்படி கல்வி நகைச்சுவையாகி விட்டது. வாழ்க சமச்சீர் கல்வி ! வாழ்க ஜனநாயகம் !

ஜோதிடரும் சமுதாயத்தில் ஒரு அங்கம் தான், ஆகாயத்திலிருந்து வந்தவரில்லை. அவருக்கும் சமூக அக்கறை உள்ளது. இப்பதிவில் அரசியல் எள்ளளவும் இல்லை.

இனி ஜோதிடத்திற்கு வருவோம். இனி மன்னியின் ஜாதகத்தை ஆராய்வோம். மன்னிக்கு லக்னம் மிதுனம். லக்னாதிபதி புதன். அவர் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்திருப்பது விசேஷம்தான். ஆனால் அவர் எந்த நிலையில் அங்கு அமர்ந்துள்ளார், வக்ர கதியில், சனிபகவானின் வீட்டில் உள்ளார். உடன் இருப்பவர் யார் தெரியுமா தி கிரேட் சூரிய பகவான். சூரிய பகவான் மிதுன லக்னத்திற்கு யார்? கடந்த பதிவில் உள்ள அட்டவணையை பார்க்கவும். மிதுன லக்னத்திற்கு சூரியன் பாவியாகிறார். அது மட்டுமல்லாமல், சனிபகவானின் வீட்டில், அதாவது பகைவன் வீட்டில் இருக்கிறார். இப்படியாக லக்னாதிபதியான புதபகவான், வித்தியாகாரகனான புதபகவான், வக்கிரம் பெற்று, பகை பெற்ற பாவியான சூரியனுடன் இருப்பதால்தான், உயர்தர கான்வெண்ட் பள்ளியில் படித்திருந்தாலும், வசதி, வாய்ப்புகள் இருந்தும், தொடர்ந்து கல்வியில் அவர் சுயமுன்னேற்றம் அடைய இயலவில்லை. நானும் எழுதப் போகிறேன் என்று சொல்லி, தனது எழுத்தாற்றலை நிரூபிப்பதாகக் கூறி 80-களில், துக்ளக்கில் சில மொழி பெயர்ப்பு கட்டுரைகளும், குமுதத்தில் தொடர்கதையும் சில நாட்கள் (வருடங்கள் அல்ல) எழுதினார். ஆனால் எழுத்துலகிலும் அவரால் தொடர்ந்து வெற்றி பெற இயலவில்லை. அதற்கு ஜாதக ரீதியில் புதனே காரணம்.

ஏற்கனவே 2003, மார்ச் மாதத்தில், இராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு அதில் சட்டசபை கட்டப்போகிறேன், என்றார். கல்லூரியை காலி செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு கல்லூரி மாணவிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 2 வாரங்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தமிழக வரலாற்றில் மாணவிகள் இவ்வளவு பெரிய போராட்டத்தை இதுவரை நடத்தியதில்லை. இதுதான் சாக்கு என்று மாணவர்களும், மாணவிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது, ஒரு தனிக்கதை. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, அந்தக் கல்லூரியை இடிக்க உயர்நீதி மன்றம் தடை விதித்தது.

ஆட்சி அதிகாரம் கிட்டினாலும், கல்வித்துறையில் அவரால் புரட்சி செய்ய இயலவில்லை. பெயர் கெட்டதுதான் மிச்சம். நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குட்டுப்படவே நேரிட்டது. ஈகோ உணர்ச்சியால் அவர் குற்றம் செய்தாலும், ஜாதகத்தில் வேறு பல யோகங்கள் இருப்பதால், தண்டனையை அவர் அனுபவிக்காமல் தமிழ்நாட்டுப் பள்ளிக்குழந்தைகளே அனுபவிக்கிறார்கள்.

ஆடுமாடு மேய்க்கும் சிறுவர்களை இழுப்பதற்காக கல்விக் கண் திறந்த காமராஜர், இலவசக் கல்வித்திட்டத்தையும், இலவச மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். அதனை மேலும் செம்மையாக்க வேண்டி, எம்.ஜி.ஆர் அவர்கள் சத்துணவு திட்டமாக மாற்றினார். அடுத்து வந்த மு.க. அவர்கள் அரசியல் எதிரி என்றும் பாராமல், ஈகோ பார்க்காமால் வாரத்திற்கு 3 முட்டைகளை சத்துணவோடு சேர்த்துக் கொடுத்தார். ஆனால் இன்று ஆடு, மாடுகளை இலவசமாகத் தருகிறேன் என்று சொல்வதால், மேய்க்க ஆள் இல்லாமல், சிறுவர்களை பள்ளிக்கு அனுப்புவதில் கிராமத்து பெற்றோர்களுக்கு சிரமம் இருக்கும். ஏற்கனவே விவசாயத்திற்கு தொழிலாளிகள் கிடைப்பது கடினமாக உள்ளது. அதனால் கிராமப் புறங்களில் கல்வி வளர்ச்சி குறைய வாய்ப்புண்டு என்று கல்வியாளர்களும், பொது ஜனங்களும், கருத்து தெரிவிக்கின்றனர்.

மீண்டும் ஜோதிடத்திற்கு வருவோம். இப்படி கேடு கெட்டுப் போன புதனைத் திருப்திபடுத்தவே பச்சை நிற உடைகளை அணிய ஆரம்பித்தார். புதனை திருப்தி படுத்த வேண்டியும், சமச்சீர் தலைவலியிலிருந்து விடுபட வேண்டியும், மாணவ, மாணவிகளும், ஆசிரிய பெருமக்களும் இனிமேல் பச்சை நிற சமச்சீருடையில்தான் வர வேண்டும் என்று கூடிய விரைவில் அரசின் சுற்றறிக்கை பறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே புத்தகங்களில் பல பக்கங்களை கிழிக்கச் சொல்லி ஆணையிட்டவர்கள் தானே.

இப்பொழுது புரிகிறதா ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு வித்யாகாரகன் புதன் எவ்வாறு பொறுப்பேற்கிறார் என்று. ஜாதக ரீதியாக ஏற்படும் ஈகோ பிரச்சினைகளை பிறிதொரு பதிவில் ஆராயலாம்.

புதன் அறிவியல்

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.

தோற்றத்தில் கிட்டத்தட்ட சந்திரனைப் போன்றது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக்(craters) கொண்டு விளங்குகிறது. சந்திரனைப் போலவே புதனுக்கும் காற்று மண்டலம் இல்லை. புதனுக்கு துணைக்கோள் கிடையாது. ஆனால், புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. இதன் புறப்பரப்பு வெப்பநிலையின் நெடுக்கம் (range) −183 °C முதல் 427 °C வரை உள்ளது.

புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974-1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது. இப்போதைக்கு புதனின் துணைக்கோள் என்றால் அது மெசஞ்சர் விண்கலம்தான்.

பூமியைப் போல மூன்றில் ஒரு பங்கு விட்டத்தைக் கொண்டது. அதன் புவியீர்ப்பு விசை பூமியை விட 4 மடங்கு குறைவே.

புதன் காரகத்துவம்

வித்யாகாரகன். கல்விக்கு அதிபதி. கணிதத்திற்கும், நுண்கலைகளுக்கும், தொழில் நுட்பத்திற்கும், நுண்ணறிவிற்கும் காரகனாவார். ஜோதிட அறிவு, ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற புதன் பொறுப்பேற்கிறார். தாய்மாமனுக்கும் இவரே காரகன். நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கும், சூதாட்டத்திற்கும் இவர் பொறுப்பேற்கிறார். பெரும்பாலும் தன் நிலையை அடிக்கடி மாற்றிக்கொள்வார். சுபகிரகங்களுடன் சேர்ந்தால் சுபராகவும், அசுப கிரகங்களுடன் சேர்ந்தால் தீயவராகவும் மாறிவிடுவார். கூட்டணி தர்மததைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். எப்படி வேண்டுமென்றாலும் மாறிக்கொள்வார்.

புதன் தசா

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக புதன் தசை வரும். புதன்தசை மொத்தம் 17 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 17 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 17 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் கர்ப்பச்செல் என்று குறிப்பிடுவார்கள். புதன் தசையில் புதன் காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பா (Bhava) அடிப்படையில், புதன் தரும் பலன்களும் நடைபெறும்.

இனி ஜோதிட ரீதியாக புதனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.

புதன் பயோடேட்டா

ஆட்சி பெறும் ராசி

மிதுனம், கன்னி

உச்சம் பெறும் ராசி

கன்னி

நீச்சம் பெறும் ராசி

மீனம்

நட்பு பெறும் ராசிகள்

ரிஷபம், சிம்மம், துலாம்,

சமம் (நியூட்ரல்)

மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்

பகை பெறும் ராசிகள்

கடகம்

மூலத்திரிகோணம்

கன்னி

சொந்த நட்சத்திரம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி

திசை

வடகிழக்கு

அதிதேவதை

விஷ்னு

ஜாதி

வைசியன்

நிறம்

பச்சை

வாகனம்

குதிரை

தானியம்

பச்சைப் பயறு

மலர்

வெண்காந்தள்

ஆடை

பச்சைப் பட்டு

இரத்தினம்

பச்சை மரகதம்

செடி / விருட்சம்

நாயுறுவி

உலோகம்

பித்தளை

இனம்

அலி

அங்கம்

கழுத்து

நட்பு கிரகங்கள்

சூரியன், சுக்கிரன்

பகை கிரகங்கள்

சந்திரன்

சுவை

உப்பு

பஞ்ச பூதம்

வாயு

நாடி

வாதம்

மணம்

கற்பூரம்

மொழி

தமிழ், கணிதம், ஜோதிடம்

வடிவம்

குள்ளர்

புதனுக்குரிய கோயில்

மதுரை சொக்கர்

புதன் போற்றி

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி !
பதந்தருள்வாய் பன்னொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி !

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com