சினிமாவுக்குத் தேவையான தகுதிகள்
சினிமாவுக்குத் தேவையான தகுதிகளாக, பொதுவாக எதனையும் குறிப்பிட இயலவில்லை. ஏனெனில் சினிமாவின் அசுரத்தனமான வளர்ச்சியில், தகுதிகள் கால அளவில் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு ஜோதிடருக்கு, சினிமாவை ஜோதிடத்துடன் தொடர்புபடுத்த, ஜாதகரின் தொழிலை நிர்ணயம் செய்ய இந்த தகுதிகள் தேவைப்படுகிறது.
காளிதாஸ் (1931) முதல் தமிழ் பேசும் சினிமாவுக்கு இப்பொழுது 80 வயதாகிறது. இப்படத்திலிருந்து ஒரு 20 வருட காலம் சினிமாவின் தகுதியாக வாய்ப்பாட்டு திறமையும், கணீரென்ற குரலும், இசையறிவும், பெண்கள் எனில் இத்திறமைகளுடன், நடனத்தில் தேர்ச்சியும், அழகும் தகுதிகளாக இருந்தன.
பராசக்தி (1952) முதல் தமிழ் சினிமாவில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. அதற்கு வித்திட்டவர் கலைஞர் மு.கருணாநிதி. முதல் படத்திலேயே கதாநாயகன் ஆகி சூப்பர் ஸ்டார் ஆனார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைஞரின் வசனம் பேசியதால், நடிகர் திலகமும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் தமிழக மக்களால் பேசப்பட்டனர். ஒரே படத்தில் 100 க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டிருந்த படங்களை விட்டு விட்டு தமிழக மக்கள், நல்ல வசனங்கள் உள்ள படங்களை விரும்பத் தொடங்கினர். வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்திற்கு வசனம் எழுதிய ஜாவர் சீதாராமனும், இரத்தக் கண்ணீர் படத்துக்கு வசனம் எழுதிய திருவாரூர் தங்கராசுவும் கூட மிகவும் பேசப்பட்டார்கள். இந்த காலகட்டத்தில், நடிகர் நடிகைகளின் தகுதிகளாக நன்றாக தமிழ் வசனம் உச்சரிக்கக் கூடியவராக இருந்தால் போதும். பாடத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பின்னனி பாடகர்கள் அறிமுகம் ஆகிக்கொண்டிருந்த காலகட்டம். நாயகன், நாயகிக்கு இசையறிவு அவசியம் இல்லை. பாடலுக்கு வாயசைத்தால் போதும்.
ஆனால் தற்போதுள்ள சினிமா சூழ்நிலையே வேறு. பாடல் மட்டும் அல்லாது வசனத்துக்கே வாயசைத்தால் போதும் என்ற நிலை. பேச்சுக்கும், பின்னனி கொடுக்க வேண்டிய நிலை. இதற்கு காரணம் சினிமா மொழிகடந்த ஒரு கலை என்பதால் தான். இன்று பின்னனி குரல் கொடுத்து புகழ் அடைந்தவர்களும் ஏராளம். இன்றைய நிலையில் நாயகன், நாயகிகளுக்கு முக்கிய தகுதியாக இருப்பது, பெற்றோரின் அடையாளமே. வாரிசு நடிகர், நடிகைகளும், தொழில் நுட்ப கலைஞர்களும் ஏராளம். வாரிசு அடையாளம் இல்லாமல் வெற்றி நடை போடுபவர்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவார்களா, வெற்றியை தக்க வைத்துக் கொள்வார்களா என்பதும் சவாலே. இப்பொழுது, பின்புலம் இல்லாமல் தொடர்பவர்கள் மிக அரிதே.
அதனால் இப்பொழுது ஒரு ஜாதகத்தைப் பார்த்து அவர் சினிமாத் துறையில் ஜொலிப்பாரா என்று கூற அந்த ஜாதகத்தில் பலவித கிரக அமைப்புகளை ஆராய வேண்டும். பெற்றோரின் நிலையையும், சகோதர சகோதரிகளின் நிலையையும் ஆராய்ந்த பின், கிரக நிலைகளை வைத்து அவர் கலைச்சேவை செய்வாரா? வெற்றியடைவாரா என்று கூற வேண்டும். காலத்திற்கு ஏற்ப மாற்றி யோசித்தாலே, ஜோதிட ஆய்வு வெற்றி பெறும். நம்முடைய ஜோதிட ஆய்விற்கு சினிமாத்துறையைச் சேர்ந்த பலரின் ஜாதகத்தை விருப்பு, வெறுப்பின்றி வரும் பதிவுகளில் ஆராயலாம். பெரும்பாலும், நடிகைகளின் ஜாதகங்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. வயது தெரிந்துவிடும் என்பதால், அவர்கள் பிறந்த வருடத்தை வெளிப்படுத்தாமலே, பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்கள். தெரிந்தவர்கள் அனுப்பி வைத்தால், ஆராயலாம்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
அடுத்தப் பதிவு : சினிமாவும், ஜோதிடமும் -2
No comments:
Post a Comment