Tuesday, May 24, 2011

சூரியன்

சூரியன் பொது

தெய்வம் நாம் எளிதில் காணும், மனித உருவில் வந்து நம்மை காப்பாற்றியதாகவும், காப்பாற்றும் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அவதாரப் புருஷர்களின் நோக்கமும் மனித இனத்தை காப்பதே. ஆனால், உலகம் தோன்றிய நாளில் இருந்து, மனித இனம் மட்டுமல்லாது, அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றி வருபவர் என்றால் அது சூரியன் மட்டுமே என்றால் மிகையாகாது. சூரியன் நமது கண் கண்ட தெய்வம். நமது குடும்பத் தலைவர். போற்றுதலுக்குரியவர். அவரில்லையேல் நமது இவ்வுலகம் இல்லை. அவர் நம்முடைய நம்பிக்கை நட்சத்திரம். அவரை நம்பித்தான் நாம் அந்தரத்தில், அவரைச் சுற்றி வலம் வருகிறோம். சூரிய வழிபாடு, உலகில் உள்ள எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. பாரத நாட்டில், வேதங்களும், புராணங்களும் சூரிய வழிபாட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. சங்கரர் காலத்தில் 6 பிரதான மதங்கள் (ஷன்மதம்) இருந்ததாக அறியப்படுகிறது. அதில் ஒன்று சௌரம். அதில் சூரியனே வழிபடு கடவுள் ஆவார். தமிழில் இளங்கோவடிகள் “ஞாயிறு போற்றுதும் ...என்று தானே சிலப்பதிகாரத்தை தொடங்குகிறார்.

வைணவ மதத்தில் மஹாவிஷ்னுவின் தசாவதாரத்தில் மிக முக்கிய அவதாரமாக கருதப்படுவது ஸ்ரீராம அவதாரம். அந்த ஸ்ரீராமரே இராவணனுடன் போர் புரிவதற்கு முன்பாக, கண் கண்ட தெய்வமான சூரியனை வழிபட்டார் என்று இராமயணமே கூறுகிறது. வாழ்க்கையில் சாதிக்க, ஜெயிக்க ஸ்ரீராமஜெயம் எழுதி வருபவர்கள் இன்றளவிலும் ஏராளம். ஆனால் அந்த ஸ்ரீராமனோ தான் போரில் ஜெயிக்க சூரியனையே வழிபட்டார் என்று தெரிய வருகிறது. அதற்கு ஆதாரமாக இருப்பது இராமாயணமும், சூரியனை வழிபட வேண்டி அகத்தியர் ஸ்ரீராமருக்கு அருளிச் செய்த ஆதித்ய ஹிருதயமும்.

சூரியன் ஒரு பொதுவுடைமைவாதி. ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவாகத் தன் ஒளியை பாய்ச்சுகிறார். மழையைப் பொழிகின்றார். பஞ்ச பூதங்களுக்கும் ஆற்றல் தருபவர்.


சூரியன் அறிவியல்

இந்த பிரபஞ்சத்தில் மிகவும் இளையவர், 4.57 பில்லியன் ஆண்டுகளாக தன் கடமையை செய்து வருகிறார். இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தன் கடமையை செய்வார் என்று விண்வெளி விஞ்ஞானிகள், தமது ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். சூரியனைப் போல பல கோடி சூரியன்கள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது. திருமணத்திற்கு ஆயிரம் பேர் வந்தாலும், நமது பெற்றோருக்கே பாத பூஜை செய்து வணங்குவது நமது பண்பாடு அல்லவா ! அதைப் போல நம்முடைய குடும்பத்துக்கு தலைவர் என்ற முறையில் அவருக்கு தலை வணங்குவோமாக ! அறிவியல் சூரிய ஒளியில் 7 நிறங்கள் (VIBGYOR) உள்ளதாக கண்டுபிடித்தது. ஆனால், பாரத நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அவருக்கு வாகனமாக 7 குதிரைகள் பூட்டிய தேரை சிம்பாலிக்காக கொடுத்துள்ளமை சிந்தனைக்குரியதே !


சூரியன் காரகத்துவம்

காரகத்துவம் என்றால் அவருடைய ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள், அவருடைய சுபாவம், நேச்சர் என்றும் கூறலாம், கேரக்டர் என்றும் கூறலாம்.

சூரியனை ஆத்மகாரகன், பித்ரு(தந்தை)காரகன் என்று சொல்வோம். ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக்கொண்டு அறியலாம். சூரியனைக்கொண்டு அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி (லீடர்ஷிப்), தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.


சூரிய தசா

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சூரிய தசை வரும். சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 6 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 6 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். ஜோதிடத்தில் கர்ப்பச்செல்என்று குறிப்பிடுவார்கள். சூரிய தசையில் சூரியன் காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு ப்லன்களாக நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பா (Bhava) அடிப்படையில், சூரியன் தரும் பலன்களும் நடைபெறும்.

இனி ஜோதிட ரீதியாக சூரியனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.

சூரியன் பயோடேட்டா

ஆட்சி பெறும் ராசி

சிம்மம்

உச்சம் பெறும் ராசி

மேஷம்

நீச்சம் பெறும் ராசி

துலாம்

நட்பு பெறும் ராசிகள்

விருச்சிகம், தனுசு, மீனம்

சமம் (நியூட்ரல்)

மிதுனம், கடகம், கன்னி

பகை பெறும் ராசிகள்

ரிஷபம், மகரம், கும்பம்

மூலத்திரிகோணம்

சிம்மம்

சொந்த நட்சத்திரம்

கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

திசை

கிழக்கு

அதிதேவதை

அக்னி, சிவன்

ஜாதி

ஷத்திரியன்

நிறம்

சிவப்பு

வாகனம்

மயில், ஏழு குதிரைகள் பூட்டிய தேர்

தானியம்

கோதுமை

மலர்

செந்தாமரை

ஆடை

சிவப்பு நிற ஆடை

ரத்தினம்

மாணிக்கம்

நிவேதனம்

சர்க்கரைப் பொங்கல்

செடி / விருட்சம்

வெள்ளெருக்கு

உலோகம்

தாமிரம்

இனம்

ஆண்

அங்கம்

தலை, எலும்பு

நட்பு கிரகங்கள்

குரு, சந்திரன்

பகை கிரகங்கள்

சுக்கிரன், சனி

சுவை

காரம்

பஞ்ச பூதம்

நெருப்பு

நாடி

பித்த நாடி

மணம்

சந்தன வாசனை

மொழி

சமஸ்கிருதம், தெலுங்கு

வடிவம்

சம உயரம்

சூரியனுக்குரிய கோயில்

சூரியனார் கோயில், ஆடுதுறை, தஞ்சாவூர் - தமிழ்நாடு, கோனார்க் - ஒரிஸ்ஸா


ஞாயிறு போற்றி

சீலமாய் வாழ சீர்அருள் புரியும்

ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

சூரியா போற்றி! சுதந்திரா போற்றி!

வீரியா போற்றி! வினைகள் களைவாய்.

*********************************

குறிப்பு :

ஷன்மதங்கள்:

சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் இவைகளின் வழிபாட்டு கடவுள்கள் முறையே சிவன், விஷ்னு, சக்தி, முருகன், கணபதி, சூரியன்

VIBGYOR

Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red


கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் !

அன்பன்

இராம்கரன்


எமது அடுத்த பதிவு : சந்திரன்



2 comments:

Shanthi said...

அஸ்தமனம் ஆன சூரியன் உதிக்காது -என்று ஜெ. கூறியுள்ளாரே

ramkaran said...

என்னை எப்படியும் அரசியலில் இழுத்து விட முடிவு செய்துவிட்டீர்கள் போல! ஜெ. ”அஸ்தமனம் ஆன சூரியன் உதிக்காது” என்று சொன்னது தி.மு.க.வைத்தான் என்று நினைக்கிறேன். இருப்பினும் அதிகார போதை சில சமயம் “கண்ணை மறைக்கும்” என்று சொல்லுவார்கள். அவர் நேரிடையாகவே தி.மு.க. என்றே சொல்லி இருக்கலாம். சூரியனையே வம்புக்கு இழுத்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேல்; அவர் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர், சிம்ம ராசிக்காரர். ராசிநாதன் சூரிய பகவான். அவரே ராசிநாதனை வம்புக்கு இழுத்துள்ளார் என்றால் என்ன சொல்வது. அதிலும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் வேறு. சூரியன் உதிக்கவில்லை என்றால் இந்த உலகம் இருண்டு போகும் என்ற அடிப்படை அறிவியலை ஏன் மறந்தாரோ தெரியவில்லை!! நாளை ஜால்ரா தினசரிகளில் தலைப்பு செய்தியாக வராமல் இருப்பின் நன்று; அல்லது சிறுவர், சிறுமியர் அதனைப் படித்துவிட்டு “அம்மா” சொல்வது உண்மையா என்று அப்பாவிடம் கேட்டு, அப்பாவின் அறிவை சோதிப்பார்கள். பொறுப்பில் உள்ளவர்கள், ஜால்ரா அதிகாரிகள் எழுதி கொடுப்பதை அப்படியே வாசிக்காமல் இருப்பது நல்லது. உங்களைப் போன்ற பொது ஜனம் கமெண்ட் எழுதி, அதற்கு என்னை வேறு வம்புக்கு இழுத்து பதில் சொல்ல வைக்கிறீர்கள். பின்பு ஒரு பதிவில் அவருடைய ஜாதகத்தை ஆராயலாம். இப்போதைக்கு ஆளை விடுங்க ...