Wednesday, August 24, 2011

காதல் மன்னன் - 1

காதல் என்றால் என்ன?

காதலைப் பற்றி சொல்லாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். காதல் என்ற சொல்லுக்கு பல வகையில், பல கோணத்தில் வரையறை கொடுக்கலாம். கண்டதும் காதல், காணாமலே காதல் என்று பல வகைக் காதலைப் பகுத்துணரலாம். ஒரு நாட்டின் கலாச்சாரம் சார்ந்த சமூகம், காதலை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்து காதலின் தன்மை வகைப்படுத்தப்படுகிறது. அதாவது காதல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட அந்த நாட்டின் கலாசாரத்திற்கு முக்கியப்பங்கு உண்டு.


காதல் ஏற்படக் காரணம் என்ன?

இயற்கையான காதல் தோன்றுவதற்கு முக்கிய காரணிகள் 4 என்பதே எமது ஆய்வு.
(1) புற அழகை வைத்து உண்டாகும் காதல்
(2) பருவக் கோளாறால் உண்டாகும் காதல்
(3) ஒருமித்த கருத்தொற்றுமையால் உண்டாகும் காதல்
(4) மேற்கூறிய 3 காரணங்களும் இல்லாமல், எப்படி சந்தித்தோம் என்றே தெரியவில்லை, காதல் ஏற்பட்டுவிட்டது, என்று அவர்களும் குழம்பி நம்மையும் குழப்பும் காதலர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலான கார்ப்பொரேட் மற்றும் வியாபாரக் காதல்களும் குழப்பம் உள்ளவைகளே ! இனி இவற்றை எல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.


(1) புற அழகை வைத்து உண்டாகும் காதல்
ஒரு தமிழ்ப்படத்தில் கதாநாயகி தன்னை வெளிப்படுத்தாமல், காதலனுக்கு அவனுடைய செல்பேசிக்கு குறுந்தகவல் கொடுத்துக்கொண்டே இருப்பாள். அவனும் அவள் சொல்லும் இடமெல்லாம் சென்று அவளைத் தேடிப்பிடிக்க முயற்சி செய்து, களைத்துப் போய்விடுவான். இறுதியில் அவள் தற்கொலை செய்யும் முன்பாக ஒரு தகவலை அனுப்புவாள். ”நீ என்னை சந்தித்தாய் ஆனால் என்னிடம் பேசவில்லை, நீ கற்பனை செய்த மாதிரி நான் அழகாக இல்லை என்பதால், என்னை அடையாளம் காண உன்னால் இயலவில்லை. என் அருகில் இருந்த வேறு யாரோ ஒரு பெண்ணிடம் என் பெயரைச் சொல்லி கேட்டாய். அவள் என்னை விட அழகாக இருந்த காரணத்தால் அவளிடம் பேசினாய். ஆனால் பக்கத்தில் இருந்த என்னிடம் நீ பேசவில்லை, என்னை நீ அடையாளம் காணவில்லை. காதல் என்பது அழகு சார்ந்த விஷயம் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்டேன். அழகு என்னிடம் இல்லாததால் நான் காதலிக்க தகுதியற்றவள். அதனால் என்னை மாய்த்துக்கொள்ள விரும்புகிறேன்”, என்று கடைசி தகவலை அனுப்பி விட்டு இறந்து போவாள். இந்தக் கதை மூலமாக “காதல் அழகு என்பதை வைத்து மட்டுமே வருவது” என்ற கருத்தை இயக்குனர் வலியுறுத்தினார். ஆனால் இந்தப் படம் தோல்வி அடைந்தது. இயக்குனரின் கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் தான் தோல்வி அடைந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பிரச்சினையே வேறு. கடைசிவரையில் கதாநாயகியைக் கண்ணிலேயே காட்டவில்லை. பின்ன எப்படிப்பா படம் ஓடும்??

இன்றும் பல படங்களில், கதாநாயகன் தான் செல்லும் திருமண விழாவில் அல்லது வேறு ஏதேனும் ஒரு விழாவில் ஒரு அழகானப் பெண்ணைக் கண்டவுடன், காதல் வயப்பட்டு, விவரங்களை தன் அருகில் இருக்கும் நண்பேன்டா டீமில் விசாரிக்கச் சொல்வதை நாம் பார்க்கிறோம். பெரும்பாலான சரித்திரக் காதல், அழகு தொடர்பு உடையவைதான். இதற்கு உதாரணமாக அமராவதி, மும்தாஜ், கிளியோபாட்ரா போன்ற அழகிகளைச் சொல்லலாம். மும்தாஜின் அழகில் மயங்கிய ஷாஜகான் அவளுக்காக உலக அதிசயமான தாஜ்மஹாலை கட்டிய விஷயம் அனைவரும் அறிந்ததே ! அதே ஷாஜகான் சவுதியால் முஸ்லீமாக பிறந்திருந்தால் அவருக்கு இந்த காதல் வந்திருக்காது. பெண்ணின் அழகு முகத்தைப் பார்த்தால்தானே, அவள் அழகில் மயங்கி காதல் வயப்பட அங்கே தான் பெண்ணின் முகத்தைப் பார்க்க இயலாதே! 2006 க்கு பிறகு நடந்த நில ஆக்கிரமிப்பை ஜெயா அரசு முடுக்கி விட்டது போல (சத்தியமா 2006 க்கு முன்பு தமிழ்நாட்டில் நில ஆக்கிரமிப்பே நடக்கல சாமி! ), அழகிகள் ஆக்கிரமிப்பு என்பதை மொகலாய ஆட்சியிலிருந்து தொடங்க வேண்டும். சினிமா இயக்குனர்களுக்கு நிறைய கதைகள் கிடைக்கும்.

காதலைத் தொடங்க அழகு ஒரு காரணமாக இருந்தாலும், அதுவே வாழ்க்கைக்கு பல பாதகங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆரம்பத்தில் தென்றல் வீசிய பலருடைய காதல் வாழ்க்கையில் பின்னர் புயல் அடிக்கத் தொடங்கி விடுகிறது. அழகு தந்த காதல் பின்னர் அலங்கோலமாகி விடுகிறது. பல சினிமா நட்சத்திரங்களின் காதல் வாழ்க்கை இவ்வாறு தான் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

என்னய்யா ஜோசியரே ! ஜோதிடம் கற்க வந்த எங்களுக்கு காதல் டியூஷன் எடுக்கிறீர்கள் என்று அன்பர்கள் கேட்கலாம். காதலின் வகைகளை நன்றாகத் தெரிந்து கொண்டால் தான், ஒருவரின் ஜாதகத்தில் இவருக்கு எந்த வகை காதல் வாழ்க்கை அமையும் என்று கூற இயலும். அதற்காகத் தான் இவ்வளவு பெரிய பில்ட் அப் ! பொறுத்தருளவும்.

அழகு என்ற சொல்லுக்கு தொடர்புடைய சொற்களாக தமிழ், முருகன், இயற்கை, மலர், குழந்தை, பெண் என்று தமிழ் அகராதிகள் விளக்கம் தரலாம். ஆனால் ஜோதிடத்தில் அழகு என்ற சொல்லுக்கு தொடர்புடையவர் எனில் அது நம்முடைய காதல் மன்னன் சுக்கிரன் என்று சொன்னால் அது மிகையாகாது. அதற்கு அடுத்த படியாக “வதனமே சந்திர பிம்பமோ” என்று கவிஞர்கள் பாடிய சந்திரனைச் சொல்லலாம். ஜாதகத்தில் இவர்கள் நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டுதான் இந்தக் காதல் சமாச்சாரம்.

காதல் மன்னன் இனியும் வருவான் ...

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

2 comments:

Jayadev Das said...

நாமா பொண்ணு தேடினா புற அழகைத்தான் பார்ப்போம், அது நிலைக்காது, பெத்தவங்க தேடினா அக அழகைப் பார்ப்பாங்க, அது நிலைக்கும். நன்றி நண்பரே!!

ramkaran said...

//திருமணத்திற்காக காத்துக்கொண்டு இருக்கும் இளம் வயதினர், காதல் செய்யத் துடிப்பவர்கள், அவசரப்படாமல், திருமணம் வரை காத்திருந்து, திருமணத்திற்கு பின்பு, ஒருவரை ஒருவர் காதலிப்பதே சிறந்த காதலாக அமையும்.// பார்க்க:

காதல் மன்னன் - 3

http://tamiljatakam.blogspot.com/2011/09/3.html