Monday, September 19, 2011

காதல் மன்னன் - 2

(2) பருவக் கோளாறால் உண்டாகும் காதல்

உலகம் முழுவதும் பருவக் கோளாறால் உண்டாகும் காதலே அதிகம். இதற்கு மருத்துவ ரீதியாக சொல்லப்படும் ஆன்ட்ரோஜன், எஸ்ட்ரோஜன் சமாச்சாரங்களே காரணமாகும். நம் உடலில் உண்டாகும் வேதியியல் மாற்றங்களே இதற்கு காரணம். இந்த காலத்தில், பருவ வயதில் உண்டாகும் காதல் நிலையானவை இல்லை. பெரும்பாலும் அது ஒரு இன்ஃபாச்சுவேஷன் தான். பருவ வயது மதி மயக்கம் என்று இதனை சொல்லலாம். இந்த வயதில் நடைபெறும் தசா புத்திகளுக்கும் இந்த விஷயத்தில் பெரும் பங்கு உண்டு. இந்த வயதில், நல்ல தசா, புத்தி நடை பெற்று வந்தால், அவர்கள் இந்த பருவ வயது மதி மயக்கத்தில் சிக்காமல், படிப்பில் கவனம் செலுத்தி, முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.

ஜோதிட ரீதியாக ஆராயும் பொழுது இந்த பருவ வயது காதல் மயக்கத்திற்கு, பின் வரும் பல காரணங்கள் அமைவதாக நமக்கு புலப்படுகிறது.
* கோச்சார ரீதியாக ஏழரைச் சனியும், கண்டச் சனியும்,
* கோச்சார ரீதியாக குரு கெடுதலும்,
* கோச்சார ரீதியாக இராகு இராசி நாதனுடன் சேர்க்கை பெறுவதும்,
* கோச்சார ரீதியாக இராகு இராசி, 4-ஆம் இடத்திற்கு பெயர்வதும்,
* பருவ வயதில் வரும் சுக்கிர தசையும் (குட்டிச் சுக்கிரன்),
* தசா புத்தி ரீதியாக இராகு தசை நடப்பதும், சந்திர தசையில்-இராகு, சுக்கிர புத்தி, சுக்கிர தசையில்-இராகு புத்தி நடப்பதுவும், இந்த பருவ வயது மதி மயக்கத்திற்கான காரணங்களாக அமைகின்றன.

பொதுவாக மனோகாரகனான சந்திரன், ஜாதகத்தில் சுக்கிரன், இராகுவுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பது நல்லது. இந்த கூட்டணி லக்னாதிபதியுடன் ஏற்பட்டாலும் இதே நிலை தான். அப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும், அவர்களின் தசா புத்தி காலங்கள் பருவ வயதில் வராமல் இருக்க வேண்டும். அப்படி ஒரு மெகா கூட்டணி அமைந்து, அவர்களின் தசா புத்தி காலங்கள், பருவ வயதில் வந்து விட்டால், அவ்வளவு தான் ! இந்த காதல் படுத்தும் பாடு, அப்பப்பா சொல்ல இயலாது. கண்ணதாசனின் பின் வரும் கவிதை வரிகளே அதற்குச் சான்று.

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்; அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்; அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும் !

என்று கவியரசர் கடவுளை வம்புக்கு இழுக்கிறார். இந்த உலகம் காதலினால் வாழ்ந்தவர்களை நமக்கு அடையாளம் காட்டுவதை விட, தோற்றவர்களையே அடையாளம் காட்டி, அமர காவியமாக்கி நம்மை பயமுறுத்துகிறது.

அய்யா காதல், கத்திரிக்காய் சமாச்சாரம் நீங்கள் சொல்வது போல பருவ வயதில் மட்டும் தான் வருமா என்று கேட்கலாம். காதல் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். அப்படி வருவதற்கு, மேற்கூறிய ஜோதிட காரணங்கள் பொருந்தும். அப்படி நடுத்தர வயதிற்கு பிறகு வரும் காதலுடன் சின்ன வீடு சமாச்சாரங்களையும் சேர்த்து ஜாதகத்தில் ஆராயும் பொழுது அதற்கான விடை கிடைக்கும்.

மொத்தத்தில் காதல் என்பது நம்முடைய உடல், புத்தி, மனம் இவற்றிற்கு இடைப்பட்ட போராட்டம் என்பதே எமது கருத்தாகும்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com


2 comments:

senthilkumar said...

If 5th Lord in 7th or 7th lord in 5th also love feeling will rise.... ref: Biruhat Jataka.

ramkaran said...

5,7-ஆம் இடங்களுக்கு சுக்கிரன் தொடர்பு இருப்பது அவசியம். அதாவது, சுக்கிரன் 5-ஆம் அதிபதியாகவோ, 7-ஆம் அதிபதியாகவோ, 5-ல் சுக்கிரன், 7-ல் சுக்கிரன், 5,7ஆம் அதிபதிகள் சுக்கிரனுடன் கூடி நிற்பது அல்லது 5, 7 ஆம் அதிபதிகள் சுக்கிரன் சாரம் பெறுவது போன்ற பல காம்பினேஷன்களைச் சொல்லலாம். வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம், சுருக்கமாகத் தான் சொல்லியிருக்கிறது, அதனை நம்முடைய அனுபவம், ஆய்வுகளை வைத்து பலன் அறிய வேண்டும்.