Wednesday, September 21, 2011

காதல் மன்னன் - 3

(3) ஒருமித்த கருத்தொற்றுமையால் உண்டாகும் காதல்

பெரும்பாலும் இந்த வகையான காதல், நல்ல மெச்சூரிட்டி, அறிவு முதிர்ச்சி, வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அனுபவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரே எண்ணம், சிந்தனை, கொள்கை கொண்ட ஆண், பெண் இருவருக்கும் இடையே ஏற்படுவதாகும். திருமணம் ஆன தம்பதியருக்கு இடையே இவ்வகை காதல் ஏற்படுமாயின் மிகவும் சிறப்பாக இருக்கும். ஜகத்குரு ஆதி சங்கரர் தன்னுடைய அத்வைத தத்துவத்தை பரப்பி வரும்பொழுது, வேறு ஒரு தத்துவஞானியான (மீமாம்ச தத்துவஞானி) குமாரில பட்டரின் சீடரான மதன மிஸ்ராவுடன் ஒரு முறை தர்க்கம் செய்ய நேரிட்டது. மதன மிஸ்ராவின் மனைவி, உபய பாரதி, அவளும் ஒரு சிறந்த அறிவாளி, பட்டி மன்ற நீதிபதியாக தலைமை வகித்தார். 15 நாட்களாக தர்க்கம், விவாதம் நடந்து வந்தது. எங்கே கணவன் தோற்று விடுவானோ என்ற பயத்தில், உபய பாரதி விவாதத்தின் குறுக்கே நுழைந்து காமத்திற்கும், காதலுக்கும் என்ன வேறுபாடு என்று ஆதி சங்கரரிடம் கேட்டாள். அவளுக்கு நன்றாகத் தெரியும், இம்மாதிரியான கேள்விக்கு நிஜ பிரம்மாச்சாரியான ஜகத் குருவுக்கு பதில் சொல்ல இயலாது என்று, அவர் தோற்றால், கணவன் காப்பாற்றப்படுவான் என்ற எண்ணத்தில் கேட்கக் கூடாத அப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டாள். அதற்கு ஆதிசங்கரரோ நாளை பதில் சொல்வதாக, சொல்லி வாய்தா வாங்குகிறார். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வாய்தா வாங்கியதாக ஆதிசங்கரருடைய வாழ்க்கை வரலாற்றை படிக்கும் போது தெரிய வருகிறது. இன்றைய அரசியல்வாதிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிறகு அவர் ஞானதிருஷ்டியின் மூலமாக, பதில் அறிய விழைகிறார். அவருக்கு பதில் கிடைக்கவில்லை. சில விஷயங்களை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும், அது கடவுளுக்கு மட்டுமல்ல காமத்திற்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வருகிறார். வேறு நாட்டு மன்னன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது பாம்பு கடித்து இறந்ததை தெரிந்து அவனுடைய உடலில் (கூடு விட்டு கூடு பாயும் வித்தையால்) நுழைந்து, அவனுடைய மனைவியுடன் ஓர் இரவு இருந்து விட்டு, மறு நாள் மீண்டும் தம் உடலில் புகுந்து, தர்க்கத்திற்கு வந்து காமத்திற்கும், காதலுக்கும் என்ன வேறுபாடு என்று கூறுகிறார். தர்க்கம் செய்த மன்னன் தோற்கிறார். போட்டியில் வெற்றி பெற்றதால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி மன்னன் துறவறம் பூண்டு அவரின் பிரதான சீடர் ஆகிறார்.

சங்கரரின் ஆய்வுப்படி, உண்மையான காதல் என்பது, காமத்தின் பூரண நிலை என்று சொல்கிறார். அதாவது திருமணத்திற்கு முன்பு, ஆண் பெண் சேர்க்கைக்கு முன்பு வரை இருப்பது காமம் தான்; காதல் அல்ல என்றும் தம்பதியர் உடலாலும், உள்ளத்தாலும், இரண்டற கலந்து, கருத்து வேறுபாடுகளைக் களைந்து, கருத்தொற்றுமையுடன் வாழும் வாழ்க்கையே சிறந்த காதல் வாழ்க்கையாகும் என்று சொல்கிறார். காமத்திற்கு பின்புதான் உண்மையான காதல் தொடங்குகிறது என்பதே அவருடைய வாதமாகும்.

இனி ஜோதிட ரீதியாக ஆராய்வோம். காதல் மன்னன் சுக்கிரனுக்கு, லக்னாதிபதியோ அல்லது ஏழாம் அதிபதியோ நட்பு கிரகமாக இருந்தால் இவ்வகை காதல் உண்டாகும். பெண்ணின் லக்னாதிபதியும், ஆணின் களத்திர ஸ்தானாதிபதியும் அல்லது ஆணின் லக்னாதிபதியும், பெண்ணின் களத்திர ஸ்தானாதிபதியும் நட்பு கிரகங்களாக இருப்பினும், இவ்வகை நெருக்கம் ஏற்படும்.

கட்டுரையின் நிறைவாக நான் சொல்ல வருவது என்னவென்றால், திருமணத்திற்காக காத்துக்கொண்டு இருக்கும் இளம் வயதினர், காதல் செய்யத் துடிப்பவர்கள், அவசரப்படாமல், திருமணம் வரை காத்திருந்து, திருமணத்திற்கு பின்பு, ஒருவரை ஒருவர் காதலிப்பதே சிறந்த காதலாக அமையும் என்று கூறி வாழ்த்தி, இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com


No comments: