Monday, August 8, 2011

குரு - அறிவியல்


குரு (வியாழன்) (Jupiter) சூரியனிலிருந்து 5 ஆவதாக அமைந்துள்ள ஒரு கிரகமாகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். சூடான பாறையும், திரவ உலோகம் (Liquid Metal) சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. அதாவது ஒரு நாள் என்பது பூமியில் 24 மணி நேரம் என்றால், வியாழன் கிரகத்தில் ஒரு நாள் என்பது 9 மணி 50 நிமிடம்தான்.

சூரிய சுற்றுப்பாதையில்(Solar Orbit), சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 ஆண்டுகளுக்கு (Earth Years) ஒருமுறை சுற்றி வருகிறது. வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை (Mass) பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. இது பூமியின் ஈர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது. அதாவது பூமியில் 5 அடி உயரம் எகிறி குதிக்கக் கூடிய ஒருவரால் வியாழன் கிரகத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் எகிற இயலாது.

வியாழன் ஹைட்ரஜன் வாயுவாலும், ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ளது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ் சிவப்பு பிரதேசம் (Great Red Spot) உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலிலியோவால் 1610 ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 63 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. வியாழனின் இந்த 63 நிலவுகளில் மிகப் பெரிய நிலவு கானிமீடு (Ganymede) ஆகும். இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவாகும். இதன் அளவு, புதன் கிரகத்தை விட பெரியது.



கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com



No comments: