கண்ணடித்து
கலக்கும் மூவர் என்ற இந்தத் தொடரில், இதுவரை கடந்த பதிவுகளில் குருவின் பார்வையைப்
பற்றி ஆராய்ந்தோம். இனி செவ்வாய் மற்றும் சனியின் பார்வைகளை ஆராய்வோம். நவ கிரகங்களில்
ஏன் இந்த மூவரைத் தேர்ந்தெடுத்தோம் என்று கடந்த பதிவுகளின் மூலம் அறிந்திருப்பீர்கள்.
இருப்பினும், புதியவர்களுக்காக மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்.
சூரியன்,
சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களும், தான் நிற்கும் இராசியிலிருந்து 7-ஆவது இராசியையும், அதில் இருக்கும் கிரகங்களையும் பார்க்க வல்லவர்கள்.
இவைகளில்
சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய இந்த மூன்று கிரகங்களும் ஒருவருக்கொருவர் பார்த்துக்
கொள்ள இயலாது. ஏனெனில், புதனும், சுக்கிரனும், சூரியனுக்கு மிக
அருகாமையில் உள்ள கிரகங்கள் என்பதால், அவைகள் சூரியனுக்கு
7-ஆம் இராசிக்கோ, அல்லது ஒருவருக்கொருவர் 7-ஆம் இராசிக்கோ
செல்வதில்லை. இதனால் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 7-ஆம் பார்வையை
பயன்படுத்தி இவர்கள் ஒருவருக்கொருவர் பார்க்க இயலாது, ஆனால் மற்ற கிரகங்களைப் பார்க்க
இயலும்.
இராகு,
கேதுவுக்கு 7-ஆம் பார்வை உண்டு என்று ஜோதிட நூல்கள்
கூறினாலும், இவைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று 180 பாகையில் சஞ்சரிப்பதால்,
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். இவர்களில் ஒருவர், வேறு ஏதோ ஒரு கிரகத்தைப்
பார்க்கிறார் என்றால், அந்த கிரகம் மற்றவருடன் சேர்க்கையில் உள்ளது என்றே பொருள்படுகிறது.
மேலும், இவர்கள் தாம் இருக்கும் வீட்டை தமதாக்கிக் கொண்டு, வீட்டின் அதிபதி மற்றும்
உடன் சேர்ந்துள்ள கிரகத்தின் பலனை வாங்கி கொடுக்க வல்லவர்கள் என்பதால், இந்த வகையில்
பலன் கூறினால் போதுமானது. இராகு, கேதுவின் பார்வை குறித்து ஆராய்வது அவசியமில்லை
என்றே கூறலாம். இதற்கு பதிலாக இவர்களுடன், சேரும் கிரக சேர்க்கை குறித்து ஆராய்வதே
சாலச் சிறந்தது.
மீதம்
இருக்கும் குரு, செவ்வாய், சனி ஆகிய இந்த மூன்று கிரகங்களே, கண்ணடித்துக் கலக்கும்
இந்தத் தொடரின் நாயகர்கள்.
குருவுக்கு
7-ஆம் பார்வையும் 5, 9-ஆம் சிறப்பு பார்வையும்
உண்டு.
சனிக்கு
7-ஆம் பார்வையும், 3, 10-ஆம் சிறப்பு பார்வையும்
உண்டு.
செவ்வாய்க்கு
7-ஆம் பார்வையும், 4, 8-ஆம் சிறப்பு பார்வையும்
உண்டு.
இந்த மாதிரி
சிறப்பு பார்வைகள் இருப்பதால்தான், இந்த மூன்று கிரகங்களும் பார்வை ஆராய்ச்சியில் முக்கியத்துவம்
பெறுகின்றன. கடந்த பதிவுகளில் குருவின் நல்ல, தீய பார்வைகளை விளக்கியிருந்தோம். பலன்கள்
அறிய கடைபிடிக்க வேண்டிய விதிகளை எழுதியிருந்தோம். அந்த விதிகள் மற்ற கிரகங்களுக்கும்
பொருந்தும். சுருங்கக் கூறின் :
ஒரு கிரகத்தின்
பாவாதிபத்தியத்தை பொருத்து அவரை சுபர், அசுபர் என்று கூற வேண்டும்.
ஜாதகத்தில்
அந்த கிரகம் வீற்றிருக்கும் வீட்டைப் பொருத்து, தன்னுடைய குணத்தை மாற்றிக் கொண்டு,
பார்வையால் நன்மை, தீமைகளை பலன்களாகத் தரும்.
அந்த கிரகத்தின்
காரகத்துவம், பாவாதிபத்தியம், சார, நவாம்ச பலம் இவற்றோடு, எந்த கிரகத்தின் வீட்டில்
உள்ளதோ அந்த கிரகத்தின் குணத்தையும் கலந்து தன்னுடை தசா-புக்தி காலத்திலும், மற்ற தசைகளின்
புக்திகளிலும் பலன்களைத் தரும்.
அந்த கிரகம்
எந்த வீடுகளின் மீது பார்வை செலுத்துகிறதோ, அந்த வீடுகளின் பலன்களையும் தரும்.
மேற்கண்ட
இந்த முக்கிய விதிகளைப் பயன்படுத்தி, குருவைப் போலவே மற்ற கிரகங்களுக்கும் பார்வையின்
மூலம் கிடைக்கும் பலன்களை தாங்களாகவே ஆராய்ந்து அறிய வேண்டும்.
இனி கண்ணடித்து
கலக்கும் இந்த மூவரின் திருவிளையாடல்களைக் காணலாம்.
முதலில்
குரு – செவ்வாயின் ஒரு பார்வை விளையாட்டைப் பார்க்கலாம்.
// ல
//
|
செ
|
||
குரு
|
இந்த மகர
லக்ன ஜாதகத்தில், 4, 11 க்கு அதிபதியான
செவ்வாய் துர்ஸ்தானமான 8-ல் நின்று, உக்கிர
பார்வையால் குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார். அதோடு லாபஸ்தானமான 11-ஆம் வீட்டையும்
(அதுவே பாதகஸ்தானமுமாகிறது), தைரிய ஸ்தானமுமான 3-ஆம் வீட்டையும்
பார்க்கிறார். இந்த அளவில், செவ்வாயின் பார்வையை மட்டும் வைத்து பலன் கூற முற்பட்டால்,
அது சரியாக வருமா என்பது ஆராய்ச்சிக்குரியதே !
ஏனெனில்,
மகர லக்னத்திற்கு பாதகாதிபதியான செவாய் 8-ல் இருந்து, செவ்வாய்
தோஷத்தை உண்டு பண்ணுவார், என்று மேலோட்டமாக சொல்லலாம். தன்னை ஒருவர் பார்ப்பது தெரியாமல்,
ஒரு செயலை மனிதர்கள் செய்யலாம், ஆனால் கிரகங்கள் செய்யுமா?
திருவிழா
அல்லது திருமண விழாக்களில், தன்னை ஒருவன் சைட் அடிப்பது தெரியாமல், தேமே என்று ஒரு
பெண் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பது போல, இந்த ஜாதகத்தில் ராசி அடிப்படையில்
வலுவாக, ஆட்சியில் இருக்கும் குரு தன்னை பார்ப்பது தெரியாமல், செவ்வாய் குடும்ப ஸ்தானத்தை
பார்த்துக் கொண்டிருப்பதனால் என்ன செய்து விட முடியும்?
குரு பகவானை,
விரயாதிபதி என்ற நிலையில் வைத்து பாவ ஆய்வு செய்யாமல், பார்வை பற்றிய ஆராய்ச்சியில்,
பொதுவில் ஒரு சுபகிரகமாகவும், ஆட்சி நிலையிலும் உள்ள குரு, 8-ல் உள்ள செவ்வாயை பார்ப்பதால், செவ்வாய் தோஷ நிவர்த்தி ஏற்படுகிறது
என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். குரு ஆட்சி, உச்சத்தில் இல்லையென்றாலும் கூட பரவாயில்லை,
நட்பு வீட்டில் இருந்தாலும், கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும், இராசியில் கெட்டு
நவாம்சத்தில் பலம் பெற்று இருந்தாலும், இதனை தோஷ நிவர்த்தி என்றுதான் சொல்லவேண்டும்.
செவ்வாய் தோஷ ஜாதகம் என்று கூறக்கூடாது. ஜோதிடர்கள் இது போன்று ஏதாவது, நிவர்த்தி ஜாதகத்தில்
உள்ளதா என்று, நன்கு ஆராய்ந்த பிறகே செவ்வாய் தோஷத்தைப் பற்றி வாயைத் திறக்க வேண்டும்.
முடிந்த வரையில், இரு மனதை ஒரு மனதாக்கி, திருமணம் செய்து வைத்து புண்ணியம் தேடிக்
கொள்ளவதே, ஜோதிடத்தின் மூலம் நாம் செய்யும் சமூகப் பணியாகும்.
மீண்டும்
சந்திப்போம்
கற்றல்
! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com