Showing posts with label sani. Show all posts
Showing posts with label sani. Show all posts

Tuesday, April 10, 2012

சங்கடம் தீர்க்கும் சனிபகவான் -3

 சனி - ஜோதிடம் 

இனி ஜோதிடத்தில் சனி பகவானின் பங்கு என்னவென்று பார்ப்போம். ராசி மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் சனி பகவான் மகரம், கும்பம் ஆகிய இராசிகளை ஆட்சி செய்கிறார். இந்த இராசிகளில் ஒன்றை லக்னமாகக் கொண்டு பிறப்பவர்களுக்கு சனிபகவான் லக்னாதிபதி ஆகிறார். பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திற்கும் லக்னாதிபதி வலுவுடன் இருக்க வேண்டும். லக்னாதிபதி வலுவற்று இருக்கும் எந்த ஜாதகத்திலும் பிற யோகங்கள் எத்தனை இருந்தாலும் அவை முழுமையாக செயல்படாது என்று சொல்லலாம். லக்னாதிபதி வலுவிழந்தும், சிலர் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு காரணம் அவர்களின் கடின உழைப்பாக இருக்கும்.  அந்த மாதிரி ஜாதகங்களைப் பார்த்தால் சனி பகவான் நல்ல நிலையில் இருப்பார். சனி பகவான், அவரை கடினமாக உழைக்க வைத்து முன்னேற்றிவிடுவார். மேலும் சனி பகவான் கெடாமல் இருந்தால், ஆயுள் ஆரோக்கியத்தையும் தந்தருள்வார். 


அதே சமயம் மகர, கும்ப லக்னங்களில் பிறந்தவர்களுக்கு, லக்னாதிபதி  சனி பகவான் ஆவதால் அவருக்கு கூடுதல் பொறுப்பு வருகிறது. அதாவது லக்னாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் போன்ற பல பொறுப்புகளை அவர் சுமக்க வேண்டி உள்ளதால், அவர் பலமாக இருக்க வேண்டும். இந்த லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் பலம் பெற்றாலே போதும் எல்லாம் கிடைத்து விடும்.   


அதெப்படி ஐயா எல்லாம் கிடைத்து விடும் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். முதலில் ஒரு ஜாதகத்தில் இராஜ யோகம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த இராஜ யோகத்தை தரும் கிரகத்தின் தசா ௮வருடைய ஆயுட்காலத்தில் வந்தால் தானே அவர் அந்த இராஜ யோகத்தை அனுபவிக்க முடியும். அதாவது ஜாதகர் அந்த இராஜ யோகத்தை அனுபவிக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டியவரே ஆயுள் காரகரான சனி பகவான் தான் என்று சொல்ல வருகிறேன். இதைத் தான் புத்திசாலித் தமிழர்கள் ஆயுளைத் தேடி ஆஸ்தியைத் தேடு என்றார்கள்.  


அதாவது ஒரு ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் முதலில்  ஆயுளைத் தான் தேட வேண்டும், பிறகு தான் யோகங்களை ஆராய வேண்டும் என்ற பொருளிலேயே இந்த பழமொழி வந்திருக்கும்.   


எந்தெந்த லக்னங்களுக்கு அவர் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறார் என்று பார்ப்போம்.  

மகர லக்னம் (+ + +)
லக்னாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக மிக  முக்கியத்துவம்  பெறுகிறார்.

கும்ப லக்னம் (+ + +)
லக்னாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக மிக  முக்கியத்துவம்  பெறுகிறார்

ரிஷப லக்னம் (+ +)
யோகாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக முக்கியத்துவம்  பெறுகிறார். 

துலா லக்னம் (+ +)
யோகாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக முக்கியம் பெறுகிறார். 

மிதுன லக்னம் (+ +)
ஆயுள் மற்றும், பாக்கிய ஸ்தானாதிபதி, ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக  முக்கியத்துவம்  பெறுகிறார்.

கடக லக்னம் (+ +)
களத்திர மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதி,  ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக மிக  முக்கியத்துவம்  பெறுகிறார். 

மற்ற லக்னங்களுக்கு (+)
ஆயுள்காரகன் மற்றும் தொழில்காரகன் என்ற அளவில் சனிபகவான் மிக முக்கியத்துவம்  பெறுகிறார். 

மொத்தத்தில் இதிலிருந்து ஒரு உண்மைத் தெரிகிறது. எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் சனி பகவான் கெடக்கூடாது. அவ்வாறு சனி பகவான் கெடாமல் இருந்தால், பாவ அடிப்படையில் அவர் தீயவராக இருந்தாலும், நீண்ட ஆயுளையும், கூடுதலாக உழைக்கும் எண்ணத்தையும் கொடுத்து ஜாதகரை முன்னேற்றி விடுவார் என்பதே எமது ஆய்வு. 

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

Thursday, January 5, 2012

சங்கடம் தீர்க்கும் சனி பகவான்

சனி பகவான் பொது


மனிதர்களாகிய நமக்கு பயம் என்பது கூடப் பிறந்தது. பயங்களிலேயே உச்சபட்ச பயம் என்பது, மரண பயம். ஆனால் அந்த மரண பயத்தை தரும் எமனுக்கு, எம தர்மராஜா என்று ஒரு பட்டம். ஏன் அவருக்கு, தர்மராஜா என்ற பட்டம்? அனைத்து மதங்களிலும், மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையை பற்றி மத குருமார்கள் பேசி இருக்கிறார்கள். பரலோக வாழ்க்கையைப் பற்றி ஏசுவும், ஜன்னத் பற்றி நபிகளும் பேசியிருப்பதனால், எல்லா மதங்களிலும் மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையை பற்றிய நம்பிக்கை இருப்பது தெளிவாகிறது.

பாரத நாட்டிலும், வேதம் மற்றும் உபநிஷத்துகள் இதைப்பற்றி கூறியுள்ளன. மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கை, உடல் தொடர்புடையது அல்ல. அது ஆன்மா தொடர்புடையது. ஆன்மா பண்பட்ட நிலையை, அதாவது முக்தி நிலையை அடைந்தால் மட்டுமே பரமாத்மாவுடன் சேர இயலும். இங்கே தான் ஆன்மாவை நன்கு சோதித்து, பரமாத்மாவுடன் சேரும் தகுதி உள்ளதா என்று அறிந்து அப்ரூவல் கொடுத்து ஹால் மார்க் முத்திரை இடும் பொறுப்பை எமதர்மனிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர் நாம் செய்த பாவ, புண்ணியத்தை, தர்ம, அதர்ம செயல்களை வைத்து தீர்மானிக்கிறார்.

தர்மத்தை நிலைநாட்ட அவர், விருப்பு வெறுப்பின்றி தன் கடமையை செய்வதால்தான் அவருக்கு தர்மராஜன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆன்மாவை சோதிக்கும்போது, அவர் தர நிர்ணயம் செய்கிறார். இது 24 கேரட்டா, 22 கேரட்டா அல்லது வெறும் 18 கேரட்தானா, என்று சோதித்து அறிந்த பின், அதனை தூய்மைபடுத்த வேண்டி, ஒரு பொற்கொல்லரிடம் அனுப்புகிறார். அந்த பொற்கொல்லர், அதனை, நெருப்பில் உருக்கி, தட்டி, தேய்த்து, என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ செய்து, அதனை சொக்கத் தங்கமாக மாற்றி விடுகிறார்.

இப்பொழுது புரிந்திருக்குமே ஆன்மாவை சொக்கத் தங்கமாக மாற்றும் அந்த பொற்கொல்லர் யார் என்று, அவர் வேறு யாருமல்ல, இந்தப் பதிவின் கதாநாயகன் சனி பகவான் தான்.

அவர் தான் நமக்கு பலவிதமான சோதனைகள், வேதனைகளைத் தந்து, நம்மை  சொக்கத்  தங்கமாக மாற்றுகிறார். இப்பொழுது புரிந்திருக்குமே, எம தர்மராஜனுக்கும், சனி பகவானுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) என்னவென்று. அதனால்தான் நவகிரகங்களில், சனிபகவானுக்கு ஆயுள்காரகன் என்ற அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்கள். இதுவே எம தர்மராஜனுக்கும், சனி பகவானுக்கும் உள்ள தொடர்பு.

எமதர்மராஜனுக்கு, எருமை மாட்டை வாகனமாக கொடுத்ததே, அவர் மெதுவாக வரட்டும் என்பதற்காகத்தான். சனிபகவானுக்கும் மந்தச்சனி என்று ஒரு பெயர் உண்டு, ஏனெனில் நவகிரகங்களில் அவர் தான் மிக மெதுவாக நகர்பவர். ஒரு இராசியிலிருந்து, அடுத்த இராசிக்கு இடம் பெயர சுமார் 2 ½ வருடம் எடுத்துக் கொள்கிறார். இராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்ற சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். அதாவது, உங்களுடைய இராசியிலிருந்து, கிளம்பி மீண்டும் உங்கள் இராசிக்கு வருவதற்கு, சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.


மேலும் பல விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

இராம்கரன்
tamiljatakam@gmail.com



Wednesday, January 26, 2011

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-4

4 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-3)

பாவத்தின் சம்பளம் மரணம். பாவ மன்னிப்பு கோருதல். உலகில் பிறந்த அனைத்து உயிர்களும், என்றோ ஒரு நாள் இறக்கத்தான் செய்யும், இதில் மனிதன் விதி விலக்கல்ல. அப்படி என்றால், 100 % மக்கள், எல்லோரும் பாவம் செய்கிறார்கள், அதனால் தான் மரணம் சம்பவிக்கிறது என்று சொல்லுகிறார்களா? பைபிள் வழி வந்த அனைத்து அப்போஸ்தலரும், கிறிஸ்துவும், அவர் சீடர்களும், போப் ஆண்டவர் உட்பட அனைவரும் பாவம் செய்தவர்கள்தான், அதனால் தான் அவர்களுக்கும் இறப்பு ஏற்படுகிறது, என்று ஒப்புக் கொள்கிறார்களா? கிறிஸ்து மீண்டும் உயிர்த்து எழுந்தார், அதனால் அவரைச் சொல்ல இயலாது, அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று வாதிடுவோரும் உளர். அவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் பதிவை பிறகு இடுகிறேன்.

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால், உலகில் எத்தனையோ குழந்தைகள் பல காரணங்களால் இறக்கின்றன. அக்குழந்தைகள் என்ன பாவம் செய்தன? அவ்வளவு சிறிய வயதில் பாவம் செய்ய இயலுமா? இதற்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன? அக்குழந்தைகள் போன ஜென்மத்தில் பாவம் செய்து இருக்கும், அதனால் இந்த ஜென்மத்தில், இந்த சிறிய வயதில் மரணம் நேருகிறது என்று சொல்லுவார்களோ? அப்படியென்றால், அவர்கள் முற்பிறவிப் பயன், ஊழ்வினை போன்ற பாரத நாட்டின், தத்துவங்களை, மெய்ஞானத்தை, ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தானே அர்த்தம். எனக்குத் தெரிந்த வரை, பைபிளிலும், அதனைத் தொடர்ந்து வந்த குரானிலும், பல பிறவிக் கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.

திருவள்ளுவர், ஊழ்வினைக்கு ஒரு அதிகாரம் ஒதுக்கியுள்ளார். ஜோதிட சாஸ்திரத்திலும், நமது ஞானிகள் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஜாதகத்தில் ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளார்கள். அதனைக் கொண்டு, உங்கள் முற்பிறவிப் பயனை அறிந்து கொள்ளலாம். முற்பிறவியின் வழியாக, இப்பிறவியில் உங்களுக்கு கிடைக்கும் யோக, அவயோகங்களை சொல்லலாம்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்த பதிவு:

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா-5