எளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ
Wednesday, August 24, 2011
காதல் மன்னன் - 1
காதலைப் பற்றி சொல்லாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். காதல் என்ற சொல்லுக்கு பல வகையில், பல கோணத்தில் வரையறை கொடுக்கலாம். கண்டதும் காதல், காணாமலே காதல் என்று பல வகைக் காதலைப் பகுத்துணரலாம். ஒரு நாட்டின் கலாச்சாரம் சார்ந்த சமூகம், காதலை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்து காதலின் தன்மை வகைப்படுத்தப்படுகிறது. அதாவது காதல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட அந்த நாட்டின் கலாசாரத்திற்கு முக்கியப்பங்கு உண்டு.
காதல் ஏற்படக் காரணம் என்ன?
இயற்கையான காதல் தோன்றுவதற்கு முக்கிய காரணிகள் 4 என்பதே எமது ஆய்வு.
(1) புற அழகை வைத்து உண்டாகும் காதல்
(2) பருவக் கோளாறால் உண்டாகும் காதல்
(3) ஒருமித்த கருத்தொற்றுமையால் உண்டாகும் காதல்
(4) மேற்கூறிய 3 காரணங்களும் இல்லாமல், எப்படி சந்தித்தோம் என்றே தெரியவில்லை, காதல் ஏற்பட்டுவிட்டது, என்று அவர்களும் குழம்பி நம்மையும் குழப்பும் காதலர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலான கார்ப்பொரேட் மற்றும் வியாபாரக் காதல்களும் குழப்பம் உள்ளவைகளே ! இனி இவற்றை எல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.
(1) புற அழகை வைத்து உண்டாகும் காதல்
ஒரு தமிழ்ப்படத்தில் கதாநாயகி தன்னை வெளிப்படுத்தாமல், காதலனுக்கு அவனுடைய செல்பேசிக்கு குறுந்தகவல் கொடுத்துக்கொண்டே இருப்பாள். அவனும் அவள் சொல்லும் இடமெல்லாம் சென்று அவளைத் தேடிப்பிடிக்க முயற்சி செய்து, களைத்துப் போய்விடுவான். இறுதியில் அவள் தற்கொலை செய்யும் முன்பாக ஒரு தகவலை அனுப்புவாள். ”நீ என்னை சந்தித்தாய் ஆனால் என்னிடம் பேசவில்லை, நீ கற்பனை செய்த மாதிரி நான் அழகாக இல்லை என்பதால், என்னை அடையாளம் காண உன்னால் இயலவில்லை. என் அருகில் இருந்த வேறு யாரோ ஒரு பெண்ணிடம் என் பெயரைச் சொல்லி கேட்டாய். அவள் என்னை விட அழகாக இருந்த காரணத்தால் அவளிடம் பேசினாய். ஆனால் பக்கத்தில் இருந்த என்னிடம் நீ பேசவில்லை, என்னை நீ அடையாளம் காணவில்லை. காதல் என்பது அழகு சார்ந்த விஷயம் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்டேன். அழகு என்னிடம் இல்லாததால் நான் காதலிக்க தகுதியற்றவள். அதனால் என்னை மாய்த்துக்கொள்ள விரும்புகிறேன்”, என்று கடைசி தகவலை அனுப்பி விட்டு இறந்து போவாள். இந்தக் கதை மூலமாக “காதல் அழகு என்பதை வைத்து மட்டுமே வருவது” என்ற கருத்தை இயக்குனர் வலியுறுத்தினார். ஆனால் இந்தப் படம் தோல்வி அடைந்தது. இயக்குனரின் கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் தான் தோல்வி அடைந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பிரச்சினையே வேறு. கடைசிவரையில் கதாநாயகியைக் கண்ணிலேயே காட்டவில்லை. பின்ன எப்படிப்பா படம் ஓடும்??
இன்றும் பல படங்களில், கதாநாயகன் தான் செல்லும் திருமண விழாவில் அல்லது வேறு ஏதேனும் ஒரு விழாவில் ஒரு அழகானப் பெண்ணைக் கண்டவுடன், காதல் வயப்பட்டு, விவரங்களை தன் அருகில் இருக்கும் நண்பேன்டா டீமில் விசாரிக்கச் சொல்வதை நாம் பார்க்கிறோம். பெரும்பாலான சரித்திரக் காதல், அழகு தொடர்பு உடையவைதான். இதற்கு உதாரணமாக அமராவதி, மும்தாஜ், கிளியோபாட்ரா போன்ற அழகிகளைச் சொல்லலாம். மும்தாஜின் அழகில் மயங்கிய ஷாஜகான் அவளுக்காக உலக அதிசயமான தாஜ்மஹாலை கட்டிய விஷயம் அனைவரும் அறிந்ததே ! அதே ஷாஜகான் சவுதியால் முஸ்லீமாக பிறந்திருந்தால் அவருக்கு இந்த காதல் வந்திருக்காது. பெண்ணின் அழகு முகத்தைப் பார்த்தால்தானே, அவள் அழகில் மயங்கி காதல் வயப்பட அங்கே தான் பெண்ணின் முகத்தைப் பார்க்க இயலாதே! 2006 க்கு பிறகு நடந்த நில ஆக்கிரமிப்பை ஜெயா அரசு முடுக்கி விட்டது போல (சத்தியமா 2006 க்கு முன்பு தமிழ்நாட்டில் நில ஆக்கிரமிப்பே நடக்கல சாமி! ), அழகிகள் ஆக்கிரமிப்பு என்பதை மொகலாய ஆட்சியிலிருந்து தொடங்க வேண்டும். சினிமா இயக்குனர்களுக்கு நிறைய கதைகள் கிடைக்கும்.
காதலைத் தொடங்க அழகு ஒரு காரணமாக இருந்தாலும், அதுவே வாழ்க்கைக்கு பல பாதகங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆரம்பத்தில் தென்றல் வீசிய பலருடைய காதல் வாழ்க்கையில் பின்னர் புயல் அடிக்கத் தொடங்கி விடுகிறது. அழகு தந்த காதல் பின்னர் அலங்கோலமாகி விடுகிறது. பல சினிமா நட்சத்திரங்களின் காதல் வாழ்க்கை இவ்வாறு தான் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.
என்னய்யா ஜோசியரே ! ஜோதிடம் கற்க வந்த எங்களுக்கு காதல் டியூஷன் எடுக்கிறீர்கள் என்று அன்பர்கள் கேட்கலாம். காதலின் வகைகளை நன்றாகத் தெரிந்து கொண்டால் தான், ஒருவரின் ஜாதகத்தில் இவருக்கு எந்த வகை காதல் வாழ்க்கை அமையும் என்று கூற இயலும். அதற்காகத் தான் இவ்வளவு பெரிய பில்ட் அப் ! பொறுத்தருளவும்.
அழகு என்ற சொல்லுக்கு தொடர்புடைய சொற்களாக தமிழ், முருகன், இயற்கை, மலர், குழந்தை, பெண் என்று தமிழ் அகராதிகள் விளக்கம் தரலாம். ஆனால் ஜோதிடத்தில் அழகு என்ற சொல்லுக்கு தொடர்புடையவர் எனில் அது நம்முடைய காதல் மன்னன் சுக்கிரன் என்று சொன்னால் அது மிகையாகாது. அதற்கு அடுத்த படியாக “வதனமே சந்திர பிம்பமோ” என்று கவிஞர்கள் பாடிய சந்திரனைச் சொல்லலாம். ஜாதகத்தில் இவர்கள் நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டுதான் இந்தக் காதல் சமாச்சாரம்.
காதல் மன்னன் இனியும் வருவான் ...
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
Tuesday, August 9, 2011
ஜோதிடத்தில் குரு
குரு காரகத்துவம்
தனம், புத்திரோற்பத்தி, சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான். அறிவு, ஞானம் போன்றவற்றிற்கு மூலகாரணமும் இவரேயாவார். தென் தமிழ்நாட்டில், திருமண வயதில் உள்ள பெண்ணின், பையனின் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி எப்பொழுது வியாழ நோக்கம் வரும்? என்று கேட்பார்கள். அதாவது, கோட்சாரத்தில் வியாழபகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்த்தால் திருமணத்திற்கு உரிய சிறந்த நேரம் வந்துவிட்டது என்று பொருள், டும் டும் கொட்ட வேண்டியதுதான். அதனைத்தான் வியாழநோக்கம் என்று கூறுவார்கள்.
குரு தசா
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக குரு தசை வரும். குரு தசை மொத்தம் 16 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 16 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 16 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் ”கர்ப்பச்செல்” என்று குறிப்பிடுவார்கள். குரு தசையில் குரு – காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு பலன்களாக நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பாவ (Bhava) அடிப்படையில், குரு தரும் பலன்களும் நடைபெறும்.
இனி ஜோதிட ரீதியாக குருவின் பயோடேட்டாவை பார்க்கலாம்.
குரு - பயோடேட்டா
ஆட்சி பெறும் ராசி | தனுசு, மீனம் |
உச்சம் பெறும் ராசி | கடகம் |
நீச்சம் பெறும் ராசி | மகரம் |
நட்பு பெறும் ராசிகள் | மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம், |
சமம் (நியூட்ரல்) | கும்பம் |
பகை பெறும் ராசிகள் | ரிஷபம், மிதுனம், துலாம் |
மூலத்திரிகோணம் | தனுசு |
சொந்த நட்சத்திரம் | புனர்பூசம், விசாகம், பூரட்டாதி |
திசை | வடக்கு |
அதிதேவதை | பிரம்மன் |
ஜாதி | பிராமணன் |
நிறம் | மஞ்சள் |
வாகனம் | யானை |
தானியம் | கடலை |
மலர் | முல்லை |
ஆடை | மஞ்சள், பொன்னிறம் |
ரத்தினம் | புஷ்பராகம் |
செடி / விருட்சம் | அரச மரம் |
உலோகம் | தங்கம் |
இனம் | ஆண் |
அங்கம் | இதயம் |
நட்பு கிரகங்கள் | சூரியன், சந்திரன், செவ்வாய் |
பகை கிரகங்கள் | புதன், சுக்கிரன் |
சுவை | இனிப்பு |
பஞ்ச பூதம் | நெருப்பு |
நாடி | வாதம் |
மணம் | ஆம்பல் |
மொழி | சமஸ்கிருதம், தெலுங்கு |
வடிவம் | உயரமானவர் |
குருவுக்குரிய கோயில் | திருச்செந்தூர், ஆலங்குடி |
குருவருள் கிடைக்க
ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய, மனதை ஒருமுகப்படுத்தி, தியானத்தில் வெற்றி பெற, குடும்பத்தில் தனலாபம், புத்திரச் செல்வம் போன்றவற்றை அடைய, பிள்ளைகள் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல், நல் வழியில் நடக்க, திருமண வயதை அடைந்த பின்னும் திருமணமாகாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் இனிது நடை பெற, தங்கு தடையின்றி கோவில் திருப்பணிகள் நிறைவேற குருவின் அருள் வேண்டும். இதற்கு, ஜோதிட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பின்வரும் நற்செயல்களை செய்து, குருவின் அருளைப் பெறலாம்.
· வியாழக்கிழமைகளில், பகலில் விரதம் இருந்து, மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று, தட்சிணா மூர்த்தியை வழிபடுவதன் மூலம் குருவின் அருளைப் பெறலாம்.
· வியாழக்கிழமைகளில், கொண்டக் கடலை சுண்டல் செய்து, பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் தானம் செய்வதாலும், குரு பகவானின் அருளைப் பெறலாம்.
· ஒரு ஏழைப் பெண்ணின் பிரசவ செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.
· ஒரு ஏழைக் குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.
· தாங்கள் படித்த பள்ளியின் ஆசிரியர் எவரேனும், ஓய்வு பெற்றவர் இருப்பின் அவரைத் தேடிச் சென்று வணங்கி, அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் செய்து, ஆசி பெறுவதால், குருவின் அருளைப் பெறலாம்.
· வியாழக்கிழமை மாலை வேளைகளில், வீட்டில் தீபத்தின் முன் அமைதியாக உட்கார்ந்து குருவே துணை என்று 108 முறையோ 1008 முறையோ அல்லது அதற்கு மேலோ மனதில் சொல்லி வந்தால் போதும், தங்கள் மனக்குழப்பத்தை தீர்த்து, குடும்பத்தில் அமைதியை நிலவச்செய்வார்.
· சிவனை வழிபடுபவர்கள் எனில் வேதத்தில் சொல்லப்பட்ட பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” என்ற மூல மந்திரத்தை மனதில் தியானித்தால் மௌன குருவான சிவனே, உங்களுக்கு வழித்துணையாக வருவார், இது உறுதி !
எல்லாம் சிவமயம் !! அன்பே சிவம் !!
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
அடுத்தப் பதிவு : காதல் மன்னன்
Monday, August 8, 2011
குரு - அறிவியல்

குரு (வியாழன்) (Jupiter) சூரியனிலிருந்து 5 ஆவதாக அமைந்துள்ள ஒரு கிரகமாகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். சூடான பாறையும், திரவ உலோகம் (Liquid Metal) சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. அதாவது ஒரு நாள் என்பது பூமியில் 24 மணி நேரம் என்றால், வியாழன் கிரகத்தில் ஒரு நாள் என்பது 9 மணி 50 நிமிடம்தான்.
சூரிய சுற்றுப்பாதையில்(Solar Orbit), சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 ஆண்டுகளுக்கு (Earth Years) ஒருமுறை சுற்றி வருகிறது. வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை (Mass) பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. இது பூமியின் ஈர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது. அதாவது பூமியில் 5 அடி உயரம் எகிறி குதிக்கக் கூடிய ஒருவரால் வியாழன் கிரகத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் எகிற இயலாது.
வியாழன் ஹைட்ரஜன் வாயுவாலும், ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ளது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ் சிவப்பு பிரதேசம் (Great Red Spot) உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலிலியோவால் 1610 ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 63 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. வியாழனின் இந்த 63 நிலவுகளில் மிகப் பெரிய நிலவு கானிமீடு (Ganymede) ஆகும். இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவாகும். இதன் அளவு, புதன் கிரகத்தை விட பெரியது.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com