Wednesday, May 18, 2011

ஜோதிடம் கற்கலாம் வாங்க -14

கிரகம், நட்சத்திரம், ராசி என்ற மூன்றும் இந்திய ஜோதிடத்தின் 3 தூண்கள் என கடந்த ஒரு பதிவில் கூறியிருந்தோம். அவை மூன்றிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பார்த்து வருகிறோம். கடந்த பதிவுகளில், கிரகங்களுக்கும், ராசிகளுக்கும் உள்ள தொடர்பையும், கிரகங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் உள்ள தொடர்பையும் பார்த்தோம். பாக்கி நட்சத்திரங்களுக்கும், ராசிகளுக்கும் உள்ள தொடர்பேயாகும். இதனையும் நாம் ஏற்கனவே தொடர்புபடுத்தியுள்ளோம். நட்சத்திரங்களுக்கும், ராசிகளுக்கும் உள்ள தொடர்பைக் காண இங்கே சொடுக்கவும்.

இந்த மூன்றிற்குமான தொடர்புகளை பல முறை படித்து தெளிதல் நன்றாகும். ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்கள், இவைகள் மட்டுமே. இந்த மூன்றிற்கான கணிதங்களையும், பயன்பாடுகளைப் பற்றியும், எழுதத் தொடங்கினால் 30,000 பக்கங்களுக்கும் அதிகமான ஒரு புத்தகமாக ஆகிவிடும். அப்பொழுதும் அது முழுமை பெறுமா என்று சொல்ல இயலாது. அவ்வளவு விஷயங்கள் எழுதலாம்.

மூன்றையும் தனித் தனியாக அலசுவோம். முதலில் 9 கிரகங்களைப் பற்றி பார்ப்போம்.

முக்கிய கிரகங்களாக உலக அளவில் 7 கிரகங்களே பேசப்பட்டு வந்தன. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகும். அதனால் தான் வார நாட்கள் 7 என்றும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கிரகத்தின் பெயரையும் வைத்தனர். இந்திய ஜோதிடத்தில் இந்த 7 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட ராசிகளை நம் முன்னோர்கள் அடையாளம் கண்டனர். ஜோதிட மேதை வராஹமிஹரர் தனது பிருஹத் ஜாதகம் என்ற வடமொழி நூலில் இந்த 7 கிரகங்களைப் பற்றியே எழுதியுள்ளார். அவருடைய காலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அவர் இந்த 7 கிரகங்களுக்கே தனது கிரந்தம் முழுவதிலும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இன்றைய காலத்திலும் அவரின் பிருஹத் ஜாதகம் என்ற நூலையே ஜோதிட வல்லுனர்கள் ஆதார நூலாக (ரெஃப்ரன்ஸ்) பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவருக்கு முன்பும், அவருக்கு பின்பும் எழுதப்பட்ட பல கிரந்தங்களில் இராகு, கேதுக்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழிலும் அதற்கான சான்றுகள் உள்ளன. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சைவ சமய 63 நாயன்மார்களில், முக்கியமான நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் தனது கோளறு பதிகத்தில், இராகு கேதுக்களைப் பற்றியும் பாடியுள்ளார். தற்போதைய மேலை நாட்டு ஜோதிடத்தில், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இந்தியாவிலும் ஒரு சிலர் இதற்கும் ஜாதகத்தில் இடம் கொடுத்து பலன் சொல்லி வருகின்றனர்.

மேலும் நம்மவர்கள் கிரகங்களின் துணைக் கோளையும் (உப கிரகம்), சேர்த்து பலன் சொல்லி வருகின்றனர். துணைக் கோட்களில் முக்கியமான துணைக்கோள், சனிக்கு சொந்தமானது. அந்த துணைக் கோளின் அளவு சந்திரனைவிடப் பெரியது. ஆங்கிலத்தில் அதனை டைட்டான் என்று சொல்லுவார்கள். இதனை கலிலியோவுக்கு பின்பு வந்த ஒரு டச்சு விண்வெளி ஆய்வாளர் Christiaan Huygens 1655-ல் கண்டுபிடித்தார். தமிழில் இந்த மிக முக்கியமான சனியின் துணைக்கோளை மாந்தி என்று அழைக்கிறோம். ஆயிரக் கணக்கான வருடங்களாக இதனை ஜாதகத்தில் நாம் கணித்து, பலன் கூறி வருகிறோம். பெரும்பாலும் வட இந்திய ஜோதிடர்கள் மாந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தென்தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் மாந்தியுடன் தான் ஜாதகத்தைக் கணிப்பார்கள். இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு கிரகத்தைப் பற்றியும் தனித்தனியாக பார்க்கலாம். அடுத்தப் பதிவில் குடும்பத்தலைவர் சூரியனைப் பற்றி பார்க்கலாம்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com
எமது அடுத்தப் பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க -15



6 comments:

Moorthy said...

Very Good Work and Good Intention!

Thanks

S.Moorthy - Chennai

ராஜா said...

ஜோதிடம் தொடர்பான பதிவுகளை ஜோதிடம் என்ற lable இன் கீழ் பதியவும்

ramkaran said...

//ராஜா said...
ஜோதிடம் தொடர்பான பதிவுகளை ஜோதிடம் என்ற lable இன் கீழ் பதியவும்//
வருகைக்கும், யோசனைக்கும் நன்றி !

In Quest of Justice... said...

ஜோதிடம் கற்கலாம் வாங்க -15 என்ன ஆச்சு!

V.R.Ravichandran said...

நாம் தீ வினைகள் பல செய்திருந்தாலும் நவ நாயகர்களை மனமுருகி வழிபட்டு கோள்கள் மூலம் வரும் துன்பங்களை குறைத்துகொள்ளமுடியும் இதை என் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்

ramkaran said...

வருகைக்கு நன்றி ! ஜோதிட மென்பொருள் தயாரிப்பில் அதிக நேரம் மற்றும் உழைப்பை செலுத்துவதால் தொடர்சசியாக பதிவுகள் எழுத இயலவில்லை . ஒவ்வொரு பிறவியும் நம்மைப் பக்குவப்படுத்திக்கொள்ளவே !