எளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ
Friday, March 18, 2011
ஜோதிடம் கற்கலாம் வாங்க 8
Wednesday, February 16, 2011
ஜோதிடம் கற்கலாம் வாங்க - 6
நாழிகை கணக்கு பாரத நாட்டில் மட்டுமே ஆயிரக் கணக்கான வருடங்களாக கணிதத்தில், ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் காலக் கணக்கீடாகும்.
தற்பொழுது உலகளவில் பயன்பாட்டில் உள்ள மணி நிமிஷ கணக்கை முதலில் காணலாம்.
1 நாள் = 24 மணிகள்
1 மணி = 60 நிமிஷங்கள்
1 நிமிஷம் = 60 வினாடிகள்
வினாடியைப் பிரித்து, 60 ன் மடங்குகளாக சொல்வதற்கு காலக்கணக்கீட்டு முறையோ, பெயரோ மேலை நாட்டு கணிதத்தில் இல்லை. தற்பொழுது கணிப்பொறி காலத்தில் ஏதுவாக, மில்லி செகண்ட், மைக்ரோ செகண்ட், நேனோ செகண்ட் என்று 1 வினாடியைப் பிரித்து 1000ன் மடங்குகளாக சொல்லப்படுகிறது.
சரி, இப்பொழுது நாழிகை கணக்கீட்டைப் பார்க்கலாம்.
1 நாள் = 60 நாழிகை
1 நாழிகை = 60 வினாடி
1 வினாடி = 60 தர்ப்பரை
1 தர்ப்பரை = 60 விதர்ப்பரை
இப்படி போகுதய்யா நம்முடைய காலக் கணக்கீடு. இதற்கு மேலும் 60ன் மடங்குகள் உள்ளது. இந்தப் பதிவின் அளவு கருதியும், எல்லோரின் நேரமின்மை கருதியும் இது போதும் என்று கருதுகிறேன். சரி தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு வரலாம் !
1 நாளை ஆங்கில முறைப்படி 24 பாகமாக பிரிப்பது துல்லியமா? அல்லது இந்திய ஜோதிடவியல் கூறுவது போல 60 பாகமாக பிரிப்பது துல்லியமா? நாழிகை கணக்கு நமக்கு தெரியவில்லை என்பதற்காக, சீ ! சீ ! இந்த பழம் புளிக்கும் என்று ஏமாற்றத்தில் சொல்லும் புத்திசாலி நரியின் நிலைமையில் தான் நம்மில் பலர் இருக்கிறார்கள்.
அதனால், ஜோதிட காலக் கணக்கீட்டில் நாழிகை கணக்கே மிகவும் துல்லியமாகும், அவசியமாகும். ஒரு சில பஞ்சாங்க கணித வல்லுனர்கள் பொது மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, கொஞ்சம் சிரமப்பட்டு, கணிதம் செய்து, மணி நிமிஷங்களில் பஞ்சாங்கங்களை வெளியிடுகிறார்கள். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குவோமாக ! இப்படி காலத்திற்கேற்ப நம்மை புதுப்பித்துக் கொள்வதனால் தானய்யா இந்திய ஜோதிடவியல் தலை நிமிர்ந்து நிற்கிறது. உலக அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், திருக்கணித முறையை பயன்படுத்துகிறோம்.
ஜோதிடத்தில் நாழிகை கணக்கு அவசியமே ! அவசியமே ! என்று தீர்ப்பு சொல்லி இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்வோம்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
அடுத்த பதிவு : நேமாலஜி என்றால் என்ன?
ஜோதிட நகைச்சுவை
சகட யோகம்
ஜோதிடர்: உங்களுக்கு சகட யோகம் உள்ளது.
சங்கரன் நாயர்: சகட யோகம் எந்தா செய்யும்?
ஜோதிடர்: மேலே போய் பின்ன தலைகீழா கீழே வருவீங்க?
சங்கரன் நாயர்: எண்ட தொழிலை குறிச்சு... அது எங்கன தலை கீழாகும்னு பறையனும் !
ஜோதிடர்: நீங்க இப்ப என்ன வியாபாரம் செய்றீங்க ?
சங்கரன் நாயர்: ஞான் இப்போ “வைர” வியாபாரம் செய்யுன்னு
ஜோதிடர்: இனிமேல் நீங்க “ரவை” வியாபாரம் செய்ய வேண்டி வரும்.
சங்கரன் நாயர்: ஓ சகட யோகம் இப்படித்தான் தலை கீழா வேலை செய்யுமா? எண்ட குருவாயூரப்பா ! காத்து ரக்ஷிக்கனும் !
ஜோதிடர்: ஓ நாயரே ! அப்படியே குருவாயூரப்பனிடம் “முல்லைப் பெரியாறு அணையையும்” காத்து ரக்ஷிக்கனும்னு பிரார்த்தனை செய் !
Tuesday, February 15, 2011
பஞ்சாங்கம் என்றால் என்ன?
(1) வாரம் (2) நட்சத்திரம் (3) திதி (4) யோகம் (5) கரணம்
இனி இவைகளைப் பற்றி விளக்கமாக காண்போம்.
(1) வாரம் : என்பது ஞாயிறு முதல் சனி வரையான கிழமைகள் 7 ஐக் குறிக்கும்.
(2) நட்சத்திரம் : என்பது அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.
(3) திதி : என்பது ஒரு வானியல் கணக்கீடாகும். அதாவது, வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.
(4) யோகம்: வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.
(5) கரணம்: என்பது திதியில் பாதியாகும்.
பஞ்சாங்கத்தை பயன்படுத்துவது எப்படி?
உதாரணத்திற்கு பஞ்சாங்கத்தில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டிருந்தால், அதனை எப்படி புரிந்து கொள்வது என பார்க்கலாம். 3 ஏப்ரல் 2011 அன்றைய பஞ்சாங்க விவரத்தை வாசன் பஞ்சாங்கத்தில் இருந்து எடுத்து தருகிறோம். (நன்றி: வாசன் புக் ஹவுஸ்)
| ஆங்கிலம் | தமிழ் | கிழ | திதி (நா,வி) | நட்சத்திரம் (நா,வி) | யோகம் (நா,வி) | கரணம் (நா,வி) |
| ஏப் 3 | பங் 20 | ஞா | அமா 34 44 | உத்ரட்டாதி 20 33 | பிராம்யம் 8 32 | சதுஷ்பாதம் 1 40 |
முதல் நிரலில் (அதாம்பா first column) வருவது ஆங்கில தேதி, 2 வது நிரலில் வருவது அதற்கு இணையான தமிழ் தேதி, 3 வது நிரலில் வருவது அன்றைய கிழமை (ஞாயிறு), 4 வது நிரலில் வருவது அன்றைய திதி அமாவாசை (அன்றைய சூரிய உதயத்தில் இருந்து எவ்வளவு நாழிகை இருக்கும்), அடுத்து வருவது நட்சத்திரம், யோகம், கரணம் போன்றவைகளும் அன்றைய சூரிய உதயத்தில் இருந்து எவ்வளவு நாழிகை இருக்கும் என்ற விவரங்களை நமக்கு மிகவும் எளிமையாகத் தருகிறது. அன்றைய தினத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாழிகைக்கு பிறகு அடுத்தது தொடங்கும் என்று பொருள். அதாவது, நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால், உத்திரட்டாதி 34-44 நாழிகைக்கு பிறகு, அடுத்த நட்சத்திரமான ரேவதி தொடங்கும் என்று பொருள். இப்படியே திதி, யோகம், கரணம் போன்றவைகளையும் கண்டு கொள்ள வேண்டும்.
இடத்தை மிச்சப் படுத்துவதற்காக சுருக்கமாக கொடுத்திருப்பார்கள். அஸ்வினி என்பதற்கு பதில் அஸ் என்று கொடுத்திருப்பார்கள். அமாவாசை என்பதற்கு பதிலாக அமா என்றும் கொடுத்திருப்பார்கள். இதன் விரிவை புதியவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பஞ்சாங்கத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தில் கொடுத்து இருப்பார்கள். வாசன் பஞ்சாங்கத்தில், 79ஆம் பக்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள்.
முக்கியக் குறிப்புகள் :
(அ) ஜோதிட ரீதியாக ஒரு நாளின் தொடக்கம் என்பது அன்றைய தினத்தின் சூரிய உதய நேரமேயாகும்.
(ஆ) பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் யாவும் அன்றைய சூரிய உதய நேரத்தில் இருக்கும் ஆகாயக் காட்சியாகும்.
(இ) பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கால அளவு (நாழிகை, வினாடி அல்லது மணி, நிமிஷம்) அன்றைய சூரிய உதயத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.
(ஈ) மிக முக்கிய குறிப்பு என்னவெனில், மணி, நிமிஷம் என்பது நள்ளிரவு 00.00 வில் தொடங்குகிறது. ஆனால், நாழிகைகள் அன்றைய காலை சூரிய உதயத்தில்தான் தொடங்குகிறது. சூரிய உதயம் ஆண்டு முழுமைக்கும், எல்லா நாட்களுக்கும் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும்.
பெரும்பாலான பஞ்சாங்கங்கள் மணி, நிமிஷ அளவுகளிலேயே, இப்பொழுது கிடைக்கிறது. இருப்பினும், தெரிந்து கொள்ளுங்கள் 1 நாழிகை = 24 நிமிஷங்கள் ஆகும். மேற்கொண்டு உங்களுக்கு கூடுதல் தகவல் தேவைப்பட்டால், எம்மை தொடர்பு கொள்ளவும்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
உங்கள் அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க-6
ஜோதிட நகைச்சுவை :இப்பொழுது அரசியல் போராட்டங்கள் வலுத்து வருகிறது என்று நமக்கெல்லாம் தெரியும். எதெற்கெடுத்தாலும் தலைவர்கள் போராட்டம் அறிவிக்கிறார்கள். அப்படி ஒரு போராட்டம் கோவிலில் நடைபெறுகிறது (கற்பனைதான் சாமி!)
சங்கரன் நாயர் : "போகாதே!... போகாதேன்னு நவகிரக சன்னதியில நின்னு தொண்டர்கள் எதுக்கு கோஷம் போடறாங்க?"
தொண்டர் : ”தலைவர் ரொம்ப கவலைப்படுறார் !”
சங்கரன் நாயர் : ”தலைவருக்கு எந்தா பிரஷ்னம்?”
தொண்டர் : "குரு எட்டாம் வீட்டுக்கு போறாராம்... அதை தடுத்து நிறுத்தத்தான் இந்த மாபெரும் போராட்டாம் !!”
சங்கரன் நாயர் : ” உவ்வா ! நிங்களட தலைவருக்கு எட்டு வீடா? கொள்ளாம்!”
தொண்டர் : ”யோவ்! போய்யா நீ வேற, நேரம் காலம் தெரியாம ! ஜாதகத்தில் ராசிக்கு எட்டில் குரு பெயர்ச்சியாகிறார் ! தேர்தல் வெற்றி வாய்ப்பை பற்றி கவலைப் படுகிறார்”
சங்கரன் நாயர் : ”ஓ ! நிங்களுக்கு ஜோதிஷத்தில் எல்லாம் விஸ்வாசம் உண்டா?”
தொண்டர் : “எல்லா கட்சியிலும் நம்பிக்கை உண்டு நாயரே ! தேர்தலுக்கு விருப்ப மனு கொடுக்கும்போதே, விருப்ப மனுவுடன் 10ம், ஜாதகமும் இனைத்து தானே அங்கேயும் கொடுக்கிறார்கள். பெரிசா பேச வந்துட்ட இங்கே! ”