Tuesday, September 11, 2012

கண்ணடித்து கலக்கும் மூவர் - 3கண்ணடித்து கலக்கும் மூவர் என்ற இந்தத் தொடரில், கடந்த பதிவுகளில், இராகு, கேதுவுக்கு பார்வை இல்லை என்று பார்த்தோம். 

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களும், தான் நிற்கும் இராசியிலிருந்து 7-ஆவது இராசியையும், அதில் இருக்கும் கிரகங்களையும் பார்க்க வல்லவர்கள்.

இதில், சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ள இயலாது.

ஆக மீதி உள்ள கிரகங்கள், குரு, சனி, செவ்வாய் ஆகிய மூன்றும் தான். இதில்,

குருவுக்கு 7-ஆம் பார்வையும் 5, 9-ஆம் சிறப்பு பார்வையும் உண்டு.

சனிக்கு 7-ஆம் பார்வையும், 3, 10-ஆம் சிறப்பு பார்வையும் உண்டு.

செவ்வாய்க்கு 7-ஆம் பார்வையும், 4, 8-ஆம் சிறப்பு பார்வையும் உண்டு.

சிறப்பு பார்வைகள் பெற்ற குரு, சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் தான், கண்ணடித்து கலக்கும் மூவர் என்ற இத்தொடரின் நாயகர்கள். இந்தத் தொடரை தொடர்ந்து படித்து வருவதன் மூலம், நீங்களே புரிந்து கொள்வீர்கள், இவர்களின் பார்வை விளையாட்டுகளை. இனி இவர்கள் எப்படி கண்ணடித்து கலக்குகிறார்கள் என்று விவரமாகப் பார்க்கலாம்.


குரு பார்வை

முதலில் குருவை எடுத்துக் கொள்வோம். அவர் தான் இருக்கும் இடத்திலிருந்து, 5, 7, 9-ஆம் வீட்டையும் அதில் இருக்கும் கிரகத்தையும் பார்ப்பார். இயற்கையில் குரு சுபகிரகம் என்பதால், குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டாகியிருக்கலாம். இருப்பினும், அவரின் பாவாதிபத்தியத்தையும், அவர் இருக்கும் வீட்டிற்கு உள்ள தொடர்பையும், அவர் நிற்கும் சார, நவாம்ச பலத்தையும் வைத்து தான், அந்த குறிப்பிட்ட ஜாதகத்திற்கான சுபத்துவத்தைக் கூற இயலும். சில உதாரணங்களுடன் பார்க்கலாம்.  

குரு


// ல //
இந்த விருச்சிக லக்ன ஜாதகத்தில், 2, 5 ஆகிய பாவங்களுக்கு, அதிபதியான குரு மீனத்தில் ஆட்சி பெற்று, தனது 5-ஆம் பார்வையால் கடகத்தையும், 7-ஆம் பார்வையால் கன்னியையும், 9-ஆம் பார்வையால் விருச்சிகத்தையும் (லக்னம்) பார்வையிடுகிறார். குரு பார்வையிடும் ராசிகளை மஞ்சள் நிறத்தில் காட்டியுள்ளேன்.

இதன் பலன்: 
ஜாதகருக்கு இயற்கையாகவே பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும். போன ஜென்மத்தில் விதைத்த புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் அறுவடை செய்வார். ஜாதகருக்கு இறை நம்பிக்கை, நீண்ட ஆயுள், பெற்றோர்களின் வழி சொத்து, சுகமான வாழ்க்கை, நல்ல மக்கட்செல்வம், ஆண் வாரிசு, குடும்ப விருத்தி, பொருளாதர உயர்வு, செய் தொழிலில் லாபம், பருவத்தில் திருமணம், மாமன் வழியில் படித்த வாழ்க்கைத் துணை(வி), ஜோதிடத்தில் ஈடுபாடு போன்றவை அமையும். தந்தைக்கு யோகம் உண்டாகலாம். இந்த பலன்கள் குருவின் தசா புக்தி காலத்திலும், மற்ற சுப கிரக தசைகளில் குரு புக்தியிலும் நடைபெறும். 

அடுத்த வரும் பதிவுகளில், மேலும் பல எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். இந்த பலன்களை சுருக்கமாக தந்துள்ளேன். இந்த பலன்களை எப்படி கணிப்பது, அதற்கான விதி முறைகள் என்ன என்பதையும் அடுத்த பதிவில் காணலாம்.  

மீண்டும் சந்திப்போம்
கற்றல் ! தெளிதல் !! தெளிவித்தல் !!! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com 

பிற்சேர்க்கை :

பெரும்பாலும் எனது பதிவுகளில் யாருடைய நடையும் இருக்காது. அப்படி இருப்பதாக யாராவது கூறினால், நன்றி உடையவனாவேன். அது எனக்கு ஒரு சுய மதிப்பீடாக இருக்கும். பெரும்பாலான வலைத்தள பதிவர்கள், ஜோதிடப் புத்தகங்களில் உள்ளவற்றை கொஞ்சம் கொஞ்சமாக தட்டெச்சு செய்து, பதிவிடுகின்றனர். ஜோதிடம் அறிந்தவர்களுக்கு, அதை எளிதில் புரிந்துகொள்ள இயலும். அதற்கு ஜோதிட ஆர்வலர்கள் புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு போகலாமே! இன்னும் ஒரு சிலர், ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யக்கூட நேரமில்லாமல் (அப்படித்தான் அவர்கள் கூறுகிறார்கள்) அப்படியே ஆங்கிலத்தில் பதிவிடுகின்றனர். இன்னும் ஒருவர் தமிழில் வலைப்பூவை வைத்துக்கொண்டு, நான் ஆங்கிலத்தில் படித்து தான் எளிதாக ஜோதிடம் கற்றுக்கொண்டேன் என்று பெருமை வேறு. அப்படியென்றால், அவர் தமிழில் ஜோதிட புத்தகங்கள் சரியில்லை என்கிறாரா? அவ்வாறெனில், அந்த ஆங்கிலப் புத்தகங்களின் பெயர்களை சொல்லிவிட்டு போகலாமே! வருடக்கணக்காக பதிவிட வேண்டிய அவசியமில்லையே. அதற்கு தமிழில் ஒரு வலைப்பதிவு வேறு.  
வேறு சில பதிவாளர்கள், வேறு தளத்தில் பதிந்ததை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து இருப்பதையும் காண முடிகிறது. அந்த நகல் பதிப்பைப் பார்த்து அசல் புலம்புவதையும் பார்க்க நேருகிறது. அனைவரும் ஜோதிடம் கற்க வேண்டும் என்ற கொள்கையில் தானே, நல்லெண்ண அடிப்படையில் தானே, வலைத் தளத்தில் ஜோதிடம் கற்று கொடுக்கிறீர்கள். அசல் 100 பேருக்கு, கற்று கொடுத்தால், நகல் ஒரு 10 பேருக்கு கற்றுத் தரட்டுமே, கற்பிப்பது தானே உங்கள் கொள்கை, அதை நீங்கள் செய்தாலென்ன? அவர் செய்தால் என்ன?  அதற்கு புலம்பல் எதற்கு?
மனதில் தோன்றியதை சொன்னேன், யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. அப்படி யாரையாவது, காயப்படுத்தியிருந்தால், உடன் பிறவா சகோதரனாக எண்ணி மன்னிக்கவும்.  

2 comments:

Ramani said...

தங்கள் எழுத்து நடையும் சொல்லிச் செல்லும்
விதமும் மிகச் சிறப்பாகவே உள்ளன
நான் தொடர்ந்து தங்கள் பதிவுகளைப்
படித்து வருகிறேன்.தொடர வாழ்த்துக்கள்

ramkaran said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !