Tuesday, July 19, 2011

குரு

குரு பொது

குரு பகவானை, வியாழன் என்று தமிழில் கூறுவார்கள். குரு பார்க்க கோடி நன்மை என்ற சொற்றொடரின் மூலம் குருவின் பெருமையை அறியலாம். இயற்கையில் முழுச் சுபகிரகம் என்பதாலேயும், சுமார் ஒரு வருடத்திற்கு ஒருமுறை ராசிவிட்டு ராசி மாறுவதாலும், ராசி அடிப்படையில் தீய வீடுகளுக்கு சென்றாலும், அவரது கருணைப் பார்வையால் சில வீடுகளுக்கு நன்மை ஏற்படும் என்பதாலும், கிரகப் பெயர்ச்சிகளில் குருபெயர்ச்சிக்கு ராசிபலன் எழுதி கல்லா கட்டும் ஜோதிடர்களும், அதனை ஆர்வத்துடன் வாங்கி படிக்கும் மக்களும் இவ்வாறு குருவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மற்ற இயற்கை சுப கிரகங்களான சுக்கிரன், புதன் போன்றவை மாதங்களுக்கு ஒரு ராசியாகவும், சந்திரன் இரண்டேகால் நாட்களுக்கு ஒரு முறையும் மாறுவதால் ராசி பலனில் முக்கியத்துவம் பெறுவதில்லை.

வெறும் குருபெயர்ச்சியை மட்டும் மனதில் வைத்து, எழுதப்படும் ராசிபலன்கள் பொய்யாகி விடக்கூடும். மற்ற முக்கிய கிரகப்பெயர்ச்சிகளான சனி (இரண்டரை வருடம்), இராகு, கேதுக்களின் (ஒன்றரை வருடம்) பெயர்ச்சிகளையும் ஆராய்ந்து, அனுசரித்து எழுதப் படும் ராசி பலன்களே பலிதமாகும். அது மட்டுமல்லாது ஜாதகரின் ஜாதக ஆராய்ச்சியும் மிக முக்கியமானது. எம்முடைய அனுபவத்தில், 10 முதல் 20 சதவீத பலன்களே பெயர்ச்சிகளால் நடைபெறுகிறது, 80 முதல் 90 சதவீத பலன்கள் அவரது ஜாதகத்தில் லக்னரீதியாக கிரகங்கள், அவற்றின் தசா புத்திகள் மூலமாகத் தரும் பலன்களே ஜாதகருக்கு ஏற்படும். ராசிபலன் புத்தகத்தை வாங்கி பார்த்தால், ராசிக்கு ஒன்றாக 12 ராசிகளுக்கும் குருபெயர்ச்சி பலன்கள் எழுதப்பட்டிருக்கும். மேஷ ராசியில் பிறந்தவரின் பலன்கள் எல்லா மேஷ ராசியினருக்கும் பொருந்தாது. ஏனெனில் ஜாதக அடிப்படையில் தசாநாதர்கள் வேறுவிதமான பலனை தந்து கொண்டிருப்பார்கள். சிலருக்கு ராசிபலன்கள் பொருந்துவது போல் இருந்தாலும் அதுவும் ஜாதக அடிப்படையில் தசாநாதர்கள் தரும் பலனாகவும் இருக்கலாம்.

அதனால் அன்பர்கள் பொதுவாக எழுதப்படும் ராசிபலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவரவர் ஜாதக ஆராய்ச்சியில் இறங்குவதே உண்மையை உணர வழி வகுக்கும். பெயர்ச்சிகளை விட தசாபுத்திகளே வலிமையுள்ளதாகும்.

ராசிபலன் நீங்களே பார்க்கலாம் (ராசி பலன் எழுதும் ஜோதிடர்கள் மன்னிக்கவும்) என்று ஒரு பதிவு இடுகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்.

ஏற்கனவே செவ்வாய் பற்றிய பதிவில் கருத்தரிப்பு (Fertility) பற்றி கூறியிருப்பேன். குரு புத்திரகாரகன். ஜாதகத்தில் குரு கெடாமல் இருந்தால், குரு புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்த்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு இருக்கும். குரு புத்திரஸ்தானத்தில் இருந்தாலும் குழந்தைப் பேறு இருக்கும் என்று சில ஜோதிடர்கள் கூறுவார்கள். சில லக்கினக்காரார்களுக்கு குரு பாவியாவதால் அவர் புத்திரஸ்தானத்தில் நிற்பதை நன்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் பாவார்த்த ரத்னகாரா என்ற ஜோதிட கிரந்தத்தின் படி காரகோ பாவ நாஸ்தி, ஏற்படவும் வாய்ப்புள்ளது. மொத்ததில் புத்திரஸ்தானத்தில் அவர் நிற்பதைவிட புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்ப்பதே சிறந்த நிலையாகும்.

குரு பார்க்க பல தோஷங்கள், நிவர்த்தியாகும் என்பது உண்மையென்றாலும் கூட, சிலருடைய ஜாதகத்தில் குருவே கேந்திராதிபத்திய தோஷம் போன்ற சில தோஷங்களையும் உண்டு பண்ணுகிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை. கஜகேசரி யோகம் போன்ற நன்மை தரும் சில யோகங்களையும், சகடயோகம் போன்ற நிலையற்ற பொருளாதார, வாழ்க்கையைத் தரும் யோகத்தையும் தர வல்லவர்.


குருவை அடுத்த பதிவில் நான் தொடர்கிறேன், நீங்களும் தொடருங்கள்.

குரு போற்றி

குணமிகு வியாழ குருபகவானே !

மணமுள வாழ மகிழ்வுடன் அருள்வாய்

பிரகஸ்பதி வியாழ பரகுரு நேசா !

கிரக தோஷமின்றி கடாக்‌ஷித் தருள்வாய்

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com


2 comments:

S.BhuvaneswaraN said...

தங்களின் ஜோதிட தகவல்கள் உபயோகமாக உள்ளது.

கேந்திராதிபத்திய தோஷம் பற்றிய இன்னும் சில சந்தேகங்கள்:

உதாரனமாக, ஒரு ஜாதகப்படி கன்னி லக்னம்.
ஏழாம் அதிபதி குரு - ஆறாம் வீட்டில்,
ஏழில் சுக்ரன் உச்சம்பெற்று (தனியாக) - சனி பார்வையில்,
பத்தில் செவ்வாயுடன் கூடிய சனி பார்வையில் ஏழில் சுக்ரன்
அப்படியானால், 'காரகோ பாவ நாசாய' - இந்த ஜாதகத்தின்படி கேந்திராதிபத்திய தோஷம் உள்ளது என்று கொள்ளலாமா ? ஆம் என்றால், இதன் சாதக பாதக அம்சங்கள் பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள் ?

நன்றி !

ramkaran said...

திரு. புவனேஸ்வரன் அவர்களே! தாங்கள் கேந்திராதிபத்திய தோஷத்தையும், காரகோ பாவ நாஸ்தி என்ற ஜோதிட விதியையும் குழப்பிக் கொள்கிறீர்கள். இந்த இரண்டில், சில விதி விலக்குகளும் உண்டு. அடுத்து வரும் பதிவுகளை தொடர்ந்து படித்து வரவும். சற்று விளக்கமாக எழுதுகிறேன்.
நன்றி!

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்