Wednesday, June 8, 2011

சந்திரன்

சந்திரன் பொது

நம்முடைய, பாரத நாட்டின் ஜோதிடக்கலை சூரிய, சந்திரர்களை அடிப்படையாக வைத்தே ரிஷிமுனிகளாலும், ஜோதிட மேதைகளாலும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. சூரியனை விதி என்றும் சந்திரனை மதியென்றும் குறிப்பிடுவார்கள். சூரியனின் அன்றைய கதியை வைத்து லக்னத்தையும், சந்திரனின் நிலையை வைத்து ராசியையும் கணிக்கலாம். லக்னத்தை வைத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை, அமைப்பு என்ன என்றும், ராசியை வைத்து தற்கால கிரக நிலைகள் (கோச்சாரம்) தங்களுக்கு என்ன செய்யும் என்றும் கூறலாம். மேலும் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தசா புத்தி கணக்கீடுகளும், அதனைக் கொண்டு, உங்களின் வாழ்க்கையில் எந்த தசா காலத்தில் என்ன நடக்கும் என்றும் கூறலாம். தசா புத்திகள் நீங்கள் பயணம் செய்யும் பாதையை அமைத்து கொடுக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல. இந்தப் பாதையின் தொடக்கத்திற்கு யார் காரணம் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல நம்முடைய கிரேட் சந்திரன் தான்.

ஜாதகர் பிறக்கும் பொழுது, சந்திரன் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறாரோ, அந்த நட்சத்திரத்திற்கு சொந்தக்காரரின் தசையே தங்களின் ஆரம்ப தசையாக இருக்கும். இவ்வாறு, பிறந்தவுடன் உங்களுக்கு எந்த தசை தொடங்க வேண்டும் என்று தீர்மானிப்பவர் சந்திரனேயாவார். மேலும் பெரும்பாலான யோகங்கள் சந்திரனை வைத்தே கூறப்படுவதால் சந்திரனுக்கு நமது ஜோதிடத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. பஞ்சாங்க விஷயங்கள் (திதி, நட்சத்திரம் போன்றவை) சந்திரனை வைத்தே கணக்கீடு செய்யப்படுவதால், நமது ஜோதிடமுறையை லூனார் அஸ்ட்ரோலோஜி என்றும் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மேலைநாட்டு வெஸ்டர்ன் ஜோதிடத்தை சோலார் அஸ்ட்ரோலோஜி என்றும் கூறுவர்.

சந்திரன் அறிவியல்

நாம் ஏன் சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால், பூமிக்கு மிக அருகாமையில் இருப்பதால் தான். மிக அருகாமையில் இருப்பதால், பூமியின் மீதான அதன் தாக்கம் மிக அதிகம். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் அலைகள் பெரிதாவதும், கடல் மட்டம் உயர்வதும், நாம் அறிந்ததே. சந்திரனின் இந்த செயலால், மனிதன் அறிவியல் துணைக்கொண்டு டைடல் பவர் ஜெனரேஷன் என்ற முறையில் மின்சாரம் தயாரிக்கிறான்.

பூமியில் வாழும் மனிதர்கள் மீதான அதன் தாக்கம் மிக அதிகம். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் பல மனநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனை மனநோய் மருத்துவம் லுனாட்டிக் என்று குறிப்பிடுகிறது. இன்றும் தமிழக மக்கள் இழுத்துக்கொண்டு இருக்கும் பெரிசுகளை, அமாவாசை வரை தாங்குமா என்று கேட்பது வழக்கம்

சந்திரன் நமது துணைக் கோளாகும். அதாவது பூமி சூரியனை சுற்றி வருகிறது, ஆனால் சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. சந்திரன் பூமியை சுற்றுவதால், அது பூமிக்கு துணைக்கோளாகிறது. விட்ட அளவில் பூமியைவிட 4 மடங்கு குறைவு, எடையில் 81 மடங்கு குறைவு. அதன் புவியீர்ப்பு விசை பூமியை விட 6 மடங்கு குறைவு. ஒரு கிழவன் பூமியில் 2 அடி உயரம் எகிறி குதிக்கலாம் என்றால் சந்திரனில் 12 அடி உயரம் எகிறி குதிக்கலாம். ஓடி விளயாடு தாத்தா என்று பாடலாம். சமீபத்தில் நமது சந்திராயன் – 1, சந்திரனில் நீர் உறைந்து இருப்பதாக கண்டு பிடித்துள்ளது. வாழ்த்துவோம், சந்திராயன் திட்ட இயக்குனர், இஸ்ரோ விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களை, தமிழன் என்று பெருமைப்படுவோமாக.

சந்திரன் காரகத்துவம்

சந்திரன் மாத்ருகாரகன். ஜாதகரின் தாயின் நிலையை சந்திரனை வைத்து அறியலாம். அவனை மனோகாரகன் என்றும் நம்முடைய ஜோதிடம் கூறுகிறது. சந்திரனுக்கும், மனநிலை பிறழ்வுகளுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது என்று மருத்துவ அறிவியலும் ஏற்றுக் கொள்கின்றது, என்னே நமது ஜோதிடக்கலை. போட்டி, பொறாமை, ஈகோ போன்ற பலவித மன உணர்வுகளை, ஜாதகத்தில் சந்திரனின் நிலையை வைத்து அறியலாம். இந்த நட்சத்திரத்தில், இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்று பொதுப்பலன் கூறுவதும் சந்திரனை வைத்தே. இன்னும் பல விஷயங்களுக்கு சந்திரன் காரகன். பருத்தும், இளைத்தும் இருக்கும் உடல் அமைப்புக்கும், குளிர்ச்சியான நோய்களுக்கும், உறக்கத்திற்கும், புகழ், மச்சம், விவசாயம் போன்றவற்றிற்கும் சந்திரனே காரகன் ஆவார்.

சந்திர தசா

ரோகினி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சந்திர தசை வரும். சந்திர தசை மொத்தம் 10 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 10 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 10 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் கர்ப்பச்செல்என்று குறிப்பிடுவார்கள். சந்திர தசையில் சந்திரன் காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பா (Bhava) அடிப்படையில், சந்திரன் தரும் பலன்களும் நடைபெறும்.

இனி ஜோதிட ரீதியாக சந்திரனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.

சந்திரன் - பயோடேட்டா

ஆட்சி பெறும் ராசி

கடகம்

உச்சம் பெறும் ராசி

ரிஷபம்

நீச்சம் பெறும் ராசி

விருச்சிகம்

நட்பு பெறும் ராசிகள்

எல்லா ராசிகளும்

நட்பு கிரகங்கள்

சூரியன், புதன்

பகை பெறும் ராசிகள்

இல்லை

பகை கிரகங்கள்

இராகு, கேது

சொந்த நட்சத்திரம்

ரோகினி, ஹஸ்தம், திருவோணம்

மூலத்திரிகோணம்

ரிஷபம்

ஜாதி

வைசியன்

நிறம்

வெண்மை

வாகனம்

முத்து விமானம்

தானியம்

நெல்

மலர்

அல்லி

ஆடை

வெண்ணிற ஆடை

ரத்தினம்

முத்து

நிவேதனம்

வெண்ணெய்

செடி / விருட்சம்

முறுக்கு

உலோகம்

ஈயம்

இனம்

பெண்

அங்கம்

முகம், இடது கண், புருவம்

அதிதேவதை

பார்வதி

திசை

வடமேற்கு

சுவை

உப்பு

பஞ்ச பூதம்

நீர்

நாடி

சிலேத்துமம்

மணம்

சாம்பிராணி

மொழி

தமிழ்

வடிவம்

குள்ளமானவர்

சந்திரனுக்குரிய கோயில்

திருப்பதி


திங்கள் போற்றி

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி ! திருவருள் தருவாய்

சந்திரா போற்றி ! சத்குரு போற்றி!

சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி!

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com




எமது அடுத்தப் பதிவு : செவ்வாய்

4 comments:

Saamy said...

மிக மிக அருமை அன்பரே.

Saamy said...

அடுத்த பதிவு எப்போது அன்பரே.

ramkaran said...

பாராட்டுதலுக்கும், தாங்கள் மற்ற பதிவுகளில் தந்துள்ள வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள், தங்களுடைய நண்பர்களுக்கும், தெரிவியுங்கள், ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வை தமிழ்மக்களுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து உண்டாக்குவோம். வாரத்திற்கு ஒரு பதிவு இடுகிறேன். தேவைப்படின் கூடுதல் இடலாம்.
நன்றி

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்

nmkamalg said...

Nandri