Tuesday, April 19, 2011

ஜோதிடம் கற்கலாம் வாங்க - 10

உள்ளூர் மணி (அ) சுதேசி மணி (LMT - Local Mean Time)

இந்தியாவுக்கு காலை 5.30 மணி என்றால், பாகிஸ்தானுக்கு காலை 5.00 மணி ஆக இருக்கும். அதாவது இந்தியாவின் GMT +5.30 , பாகிஸ்தானின் GMT +5.00, அதனால் இந்திய ஸ்டாண்டர்ட் நேரத்திற்கும், பாகிஸ்தான் ஸ்டாண்டர்டு நேரத்திற்கும் உள்ள வித்தியாசம் 30 நிமிடங்கள். எடுத்துக்காட்டாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்திற்கும், பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்திற்கும் இடைப்பட்ட நேர வித்தியாசம் 30 நிமிடங்கள். (இந்த இரு நகரங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு எவ்வளவு தெரியுமா? சுமார் 600 கி.மீ. மட்டுமே). இவ்வாறு 600 கி. மீ. தொலைவு உள்ள இரு நகரங்களுக்கும் இடையே 30 நிமிட வித்தியாசம் என்றால், பெரிய நாடான இந்தியாவிற்குள்ளேயே இருக்கும் நகரங்களான மும்பாய்க்கும், கல்கத்தாவுக்கும் (சுமார் 1800 கி.மீ. தொலைவு) எப்படிங்க ஒரே நேரமாக இருக்க முடியும்? ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

இந்திய ஸ்டாண்டர்ட் நேரம், எங்கே மிகச் சரியாக இருக்கும் தெரியுமா? உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரத்தில் மட்டுமே. ஏனெனில் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் கிரீன்விச்சிலிருந்து 82 பாகை 30 கலை கிழக்கே (ரேகாம்சம்) உள்ள அலகாபாத் நகரத்தைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது. 1 பாகைக்கு 4 நிமிடங்கள் என்ற அளவிலேயே கணக்கிட வேண்டும். 82 பாகை 30 கலை என்பதை 82.5 பாகை எனக்கொள்வோம் ( 30 கலை என்பது 1/2 பாகை என்பதால் .5 என்று எடுத்துக்கொள்வோம்), அப்படி என்றால் 82.5 x 4 நிமிடம் = 330 நிமிடங்கள் அதாவது 5 மணி 30 நிமிடங்கள். இப்படித்தான் இந்தியாவின் +5.30 GMT அலகாபாத் நகரத்தைப் பொறுத்து உருவானது. அதாவது கிரீன்விச்சில் நள்ளிரவு 00.00 மணி எனில் அலகாபாத்தில் காலை 5.30 மணியாக இருக்கும். இது தான் அலகாபாத் நகரின் உள்ளூர் மணி (LMT - Local Mean Time). இதையே பொது மக்களின் எளிய பயன்பாட்டிற்காக இந்தியா முழுமைக்கும் பயன்படுத்துமாறு இந்திய ஸ்டாண்டர்ட் நேரமாக (IST) அறிவிக்கப்பட்டது.

ஆக, நாம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் நேரம் அலகாபாத்தின் உள்ளூர் மணியாகும். ஆனால் அறிவியல் ரீதியாகவும், ஜோதிடவியல் ரீதியாகவும் பார்த்தோமானால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் உள்ளூர் மணி வேறுபடும். உள்ளூர் மணிதான் மிகச் சரியான, துல்லியமான நேரமாகும். அதனால் தான் ஜாதகம் கணிக்க உள்ளூர் நேரத்தை முதலில் கணக்கிடுவார்கள். அதற்கு நமக்கு கடந்த பதிவில் பார்த்த ரேகாம்சம் பயன்படுகிறது.

இப்பொழுது சென்னையின் உள்ளூர் மணி கணக்கிடுவோம். சென்னையின் ரேகாம்சம் 80° 17' E என கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கிரீன்விச்சிலிருந்து கணக்கிட்டோமெனில் 321 நிமிடங்கள் வரும். அதாவது 5 மணி 21 நிமிடங்களே வரும். அப்படி யெனில் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் 5 மணி 30 நிமிடமாக இருக்கும் போது, சென்னையில் உள்ளூர் நேரம் 5 மணி 21 நிமிடங்களாக இருக்கும். இதுதான் சென்னையின் மிக சரியான நேரமாகும். அதாவது சென்னையின் உள்ளூர் மணி அலகாபாத்தின் உள்ளூர் மணியை விட, அதாவது இந்திய ஸ்டாண்டர்ட் நேரத்தை விட 9 நிமிடம் குறைவாக இருக்கும். இவ்வாறு பல நகரங்களுக்கும், சரியான உள்ளூர் மணியைக் கணக்கிடலாம்.

என்ன தலை சுற்றுகிறதா? பல முறை படித்து, எழுதி கணக்கிட்டுப் பார்த்தால் எளிதில் விளங்கும்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்

எமது அடுத்தப் பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க -11



5 comments:

Anonymous said...

உங்களது வலைப்பூவில் IST மற்றும் Local time பற்றிய கட்டுரையைப் படித்தேன். பொதுவாகக் குழந்தை பிறந்ததும் கடிகாரம் பார்ப்பதுதான் வழக்கம். அவ்வாறானால், பின்னர் ஜாதகம் கணிக்கும்போது அதனுடன் உள்ளூர் நேரத்தை கூட்டியோ குறைத்தோ சரி செய்து கொள்ள வேண்டுமா?

ramkaran said...

ஜாதகம் கணிக்கும்போது, பிறந்த இடத்தை வைத்து, ஜோதிடர் நேர வித்தியாசத்தை அறிந்து அதன் பிறகு ஜாதகத்தை கணித்து விடுவார். நீங்கள் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம். ஜோதிடரிடம் IST நேரத்தை, அதாவது கடிகாரம் காட்டும் நேரத்தை கூறினாலே போதும். நீங்கள் தான் ஜாதக கணிதம் செய்யப் போகிறீர்கள் என்றால், எமது வலைப் பதிவை தொடர்ந்து படித்து வரவும், அதற்கான விவரங்களை தொடர்ந்து வரப்போகும் பதிவுகளில் காணலாம்.

அன்பன்
இராம்கரன்

Saamy said...

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் திரு. ராம்கரன் அவர்களே.


அட்ச, தீர்க்க ரேகை பற்றிய தகவல்கள் நன்றாகவும் சரியாகவும் உள்ளது.



மிகவும் அருமை.

Unknown said...

Sir my name sindhuja Coimbatore.i will apply divorce and I will like to second marriage on my family relation person .3years la oruthar ponu iruku.enaku divorce kedikuma.second marriage panalam nu solunga sir plz.my dob2.11.1994.time.11.25am

ramkaran said...

The personal life discussion can not be done publicly. Please contact 9943332323.