Sunday, July 6, 2014

பொறுப்பின்மையின் உச்சம் !

கடந்த வாரம், சீமாந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள நாகரம் என்கிற கிராமத்தில், "கெயில்' நிறுவனத்தின் நீர்ம பெட்ரோலியக் குழாயில் ஏற்பட்ட வாயுக் கசிவின் விளைவால் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்திருக்கின்றனர். பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிராமம் முழுவதுமே எரிந்து சாம்பலாகி விட்டது.

இரண்டு நாள்களாகவே பெட்ரோலிய வாயுவின் மணம் வீசுவதாகவும், நீர்ம பெட்ரோலியக் குழாய்களில் கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அந்த கிராமத்தவர்கள் முன்வைத்த புகாரை "கெயில்' நிறுவன அதிகாரிகள் சட்டை செய்யாமல் விட்டிருக்கின்றனர். வாயுக் கசிவு காணப்பட்ட இடத்தை களிமண்ணால் மூடி அதன்மீது மண்ணைப் பரப்பிவிட்டுப் போனதாகத் தெரிகிறது. அதிகாலையில் ஒருவர் தனது டீக்கடையில் பாலைக் காய்ச்சுவதற்காக தீக்குச்சியைப் பற்ற வைத்ததுதான் தாமதம், எரிமலை வெடித்துச் சிதறியது போல, நெருப்பு கிராமத்தைப் பற்றிக் கொண்டது. அடுத்த இரண்டு மணி நேரம் நாகரம் கிராமமும் அதைச் சுற்றியுள்ள ஐந்து ஏக்கர் சுற்றுப்புறமும் நெருப்பின் கோரத் தாண்டவத்தில் எரிந்து சாம்பலாயின.

இதுவரை, இந்தியாவில் நிகழ்ந்த எரிவாயுக் குழாய் வெடிப்பு விபத்துகளில் இதுதான் மிகவும் கோரமானது. ஏறத்தாழ 20 ஆண்டுகள் பழைமையான எரிவாயுக் குழாய்களை மாற்றாமல் இருந்ததும், புகார் தெரிவிக்கப்பட்ட பிறகும்கூட மெத்தனமாக நடந்து கொண்டதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

கடந்த மாதத்தில் நடந்திருக்கும் மூன்றாவது பெரிய எரிவாயு விபத்து இது. முதலில் மித்தல் எனர்ஜி லிமிடெட்டின் பதிண்டா சுத்திகரிப்பு ஆலையில் ஒரு சிறிய தீவிபத்து நடந்தது. கடந்த ஜூன் 12ஆம் தேதி சத்தீஸ்கரிலுள்ள ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா தொழிற்சாலையில், எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் மரணமடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம், விசாகப்பட்டினத்திலுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். இப்படித் தொடர் விபத்துகள் நிகழ்ந்தும், புகார் தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் ஏன் மெத்தனமாக இருந்தார்கள் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

வளர்ச்சிக்கு பெட்ரோலிய எரிவாயு அவசியம் என்பதும், நீர்ம எரிபொருள், ஆபத்தான நீர்மங்கள் போன்றவற்றை உற்பத்தியாகும் இடங்களிலிருந்து பயன்படுத்தப்படும் இடங்களுக்கும் நகர்ப்புறங்

களுக்கும் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வது தவிர்க்க முடியாதது என்பதும் மறுக்க முடியாத நிஜம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னேயே, அமெரிக்காவில் சிகாகோ நகருக்குப் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் எரிவாயு கொண்டு செல்வது தொடங்கிவிட்டது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் எப்போதாவது ஒரு முறை வாயுக்கசிவு ஏற்படுவதும், சில விபத்துகள் நேரிடுவதும் பதிவாகி இருக்கின்றன. ஆனால், அங்கே மக்கள் தொகை குறைவு என்பதால், எரிவாயுக் கசிவு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல், அந்த நாடுகளில் இதுபோன்ற எரிவாயு குழாய்கள் கூடுமானவரை விவசாய நிலங்கள் வழியாகக் கொண்டு செல்லப்படுவதில்லை.

கெயில் நிறுவனம் இதுவரை 8,000 கி.மீ. நீளத்திற்கு எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்களை நிறுவி இருக்கிறது. மேலும் 6,000 கி.மீ. நீளத்திற்கான குழாய்களை மண்ணுக்குள் பதிப்பதற்கான

பூர்வாங்கப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களில் "கெயில்' நிறுவனத்தின் பாதுகாப்புச் செயல்பாடுகளை கவனிக்கும்போது, எரிவாயுக் குழாயின் ஒவ்வொரு சென்டி மீட்டரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்குமோ என்கிற பயம் ஏற்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து பெங்களூரூ வரையிலும் ரூ.45,000 கோடி செலவில் குழாய்கள் போடப்பட்டு விட்டன. அடுத்ததாக கொச்சி வரை நீட்டிப்பதாக இருந்த திட்டம், தமிழக விவசாயிகள் மேற்கொண்ட நியாயமான போராட்டத்தால் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. "கெயில்' நிறுவனத்தின்

பராமரிப்புத் திறமையைப் பார்க்கும்போது, திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டாலும்கூடத் தவறில்லை என்று தோன்றுகிறது.

பெட்ரோலிய எண்ணெய் துறையின் பாதுகாப்பு இயக்குநரகம் என்று ஓர் அமைப்பு, மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது. பெட்ரோலியம் தொடர்பான அனைத்து அமைப்புகளும் முறையான பாதுகாப்புடன் செயல்படுகின்றனவா என்று தணிக்கை செய்ய வேண்டியது இந்த இயக்குநரகத்தின் பொறுப்பு. அதற்கும் போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதுபோன்ற நிலை நீடித்தால், உயிரிழப்புகள் ஏற்படத்தான் செய்யும்!

நன்றி : தினமணி, 06 ஜூலை 2014.

முன்பே ஒரு பதிவில் இதன் ஆபத்தை குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளோம். அந்தப் பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

கற்றல்! தெளிதல் !! தெளிவித்தல் !!! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

1 comment:

manavai james said...

அன்புள்ள அய்யா அவர்களுக்கு,

வணக்கம்.எனது ‘வலைப்பூ’ பக்கத்தைப் பார்வையிட்டு கருத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in