Tuesday, April 30, 2013

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா? பகுதி-6

தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ ஆய்வகம்

தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.

நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டுமல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998-ஆம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு எனக் கண்டுபிடிக்கப்பட்டது. நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும்.

கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது.

நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். தற்போது இந்த ஆராய்ச்சிக் கூடம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும்.

அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 டன் இரும்பிலான நியூட்ரினோ டிடெக்டர் அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும்.

சரி இதற்கு முன்னால் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் செயல்பட்டு வந்த இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்ன விதமான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும், உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும், இதனால் மக்களுக்கு என்ன பயன் என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விஷயங்கள் ஆகும்.

இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னவென்று பார்த்தால் தண்ணீர், விவசாயம், காற்று, இப்படி எல்லாம் மாசுபடும். இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மிகவும் ஆபத்தானது. இதில் கசிவுகள் எதுவும் ஏற்பட்டால் அடுத்து ஒரு போபால் உருவாகும் ஆபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தின் இயற்கையை கெடுக்க வந்த அரக்கனாகவே இதைப் பார்க்க முடிகிறது.

இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு எற்பட்டதன் விளைவால் மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சிக் கூடங்களை மற்ற நாடுகள் நடத்துகின்றன என்பதற்காக போட்டிக்கு நாமும் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. இது மக்களுக்கு தேவையான ஒரு ஆய்வாக இருந்தாலும் பரவாயில்லை.

மக்களின் அடிப்படைத் தேவைகளையே நிறைவு செய்யமுடியாத இந்தியா போன்ற நாடுகளுக்கு இது போன்ற ஆய்வகங்கள் தேவையில்லை.

மேலும் இது போன்ற அழிவுத் திட்டங்கள் எல்லாம் திட்டமிட்டு தமிழகத்தை நோக்கி நகர்த்தப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகம் வஞ்சிக்கப்படும் பட்டியல் தொடரும் ...


கற்றல்! தெளிதல்!! தெளிவித்தல்!!! என்ற கொள்கையுடன்


அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com

No comments: