Tuesday, April 30, 2013

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா? பகுதி-6

தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ ஆய்வகம்

தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.

நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டுமல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998-ஆம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு எனக் கண்டுபிடிக்கப்பட்டது. நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும்.

கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது.

நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். தற்போது இந்த ஆராய்ச்சிக் கூடம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும்.

அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 டன் இரும்பிலான நியூட்ரினோ டிடெக்டர் அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும்.

சரி இதற்கு முன்னால் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் செயல்பட்டு வந்த இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்ன விதமான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும், உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும், இதனால் மக்களுக்கு என்ன பயன் என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விஷயங்கள் ஆகும்.

இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னவென்று பார்த்தால் தண்ணீர், விவசாயம், காற்று, இப்படி எல்லாம் மாசுபடும். இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மிகவும் ஆபத்தானது. இதில் கசிவுகள் எதுவும் ஏற்பட்டால் அடுத்து ஒரு போபால் உருவாகும் ஆபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தின் இயற்கையை கெடுக்க வந்த அரக்கனாகவே இதைப் பார்க்க முடிகிறது.

இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு எற்பட்டதன் விளைவால் மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சிக் கூடங்களை மற்ற நாடுகள் நடத்துகின்றன என்பதற்காக போட்டிக்கு நாமும் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. இது மக்களுக்கு தேவையான ஒரு ஆய்வாக இருந்தாலும் பரவாயில்லை.

மக்களின் அடிப்படைத் தேவைகளையே நிறைவு செய்யமுடியாத இந்தியா போன்ற நாடுகளுக்கு இது போன்ற ஆய்வகங்கள் தேவையில்லை.

மேலும் இது போன்ற அழிவுத் திட்டங்கள் எல்லாம் திட்டமிட்டு தமிழகத்தை நோக்கி நகர்த்தப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகம் வஞ்சிக்கப்படும் பட்டியல் தொடரும் ...


கற்றல்! தெளிதல்!! தெளிவித்தல்!!! என்ற கொள்கையுடன்


அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com

Monday, April 29, 2013

வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? பகுதி - 5இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா அரிச்சந்திரா வெளியானதன் 100வது ஆண்டு விழாவை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவாக மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கொண்டாடி.கடந்த 25 ஏப்ரல் 2013 அன்று தொடங்கப்பட்ட இந்த கொண்டாட்டங்கள் 25 ஏப்ரல் 2013 வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் திரைப்படங்கள், ஆவணப்படங்களை திரையிடுதல், புத்தகங்கள் வெளியீடு, கருத்தரங்கள் மற்றும் நடிப்பு பட்டறைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பல்வேறு மொழிகளைச் சார்ந்த படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதில் இந்தி மொழிப் படங்கள் ஐந்தும், பெங்காலி மொழிப் படங்கள் இரண்டும், கன்னடம், ஒரியா, அசாமீஸ் உள்ளிட்ட மொழிகளில் தலா ஒரு படமும் திரையிடப்பட உள்ளன.

இதில் தமிழ்த்திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமைச்சகம் தமிழ் திரையுலகத்திடம் பாரபட்சம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்த்திரையுலகினர்,அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

வஞ்சிக்கப்படும் பட்டியல் தொடரும் ...

கற்றல்! தெளிதல் !! தெளிவித்தல்!!! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

Thursday, April 4, 2013

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா? பகுதி-4


எரிவாயுக் குழாய் பாதிப்பு திட்டம்


எரி வாயுக் குழாய்கள் அமைப்பதால், தமிழக விவசாயிகளுக்கு, பொது மக்களுக்கு ஏற்படும் தீமைகள் :

1.
கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் அமைப்பதனால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். 

2.
கெயில் நிறுவனம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் விவசாய நிலத்தின் பெரும்பகுதியின் நிலப் பயன்பாட்டு உரிமையினை பெறுவதால் விவசாயிகள் தங்களது நிலத்தில் உரிய விவசாயம் செய்ய இயலாமல் நிலத்தின் பெரும்பகுதியினை இழக்க நேரிடுவதுடன், எதிர்காலத்தில் நில மேம்பாட்டிற்குத் தேவையான எதையும் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும்.

3.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் வேளாண் நிலங்களின் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்கள் பதிப்பதனால் அந்த விவசாயிகளின் பொருளாதார நிலைமை மிகக் கடுமையாக பாதிப்படைவதுடன், அவர்கள் எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் நிலத்தில் தேவையான விவசாயப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்படும்.

4.
விவசாய நிலங்களின் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்கள் பதிப்பதனால் அந்நிலங்களின் மதிப்பு மிகக் கடுமையாக வீழ்ச்சியடையும்.

5.
கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் திட்டத்தில் கவரப்படும் விவசாய நிலங்களுக்கு வங்கிகள் கடன் தர முன்வருவதில்லை.

6.
கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல சாத்தியப்படக் கூடிய பகுதிகளிலும் விவசாயிகளின் கோரிக்கைகள் கெயில் நிறுவனத்தால் கருத்தில் கொள்ளப்படாமல், விவசாய நிலங்களின் வழியாகவே எரிவாயுக் குழாய் பதிக்க கெயில் நிறுவனம் முனைந்துள்ளது.

7.
இத்திட்டம் விவசாயிகளின் முழு மனதான ஒப்புதல் பெறாமலும், விவசாயிகளுக்கும் நில உரிமையாளர்களுக்கும் முறையான தகவல் அளிக்காமலும், கெயில் நிறுவனத்தினால் செயலாக்கம் செய்யப்பட்டது.

8.
இக்குழாய்கள் பதிப்பதனால் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு உருவாக்கிய அவர்களின் வீடுகள், கோழிப்பண்ணைகள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகும்.

9.
விவசாயிகளின் நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் பகுதியில் ஆழமாக வேரூன்றும் மரங்கள் வளர்க்கக் கூடாது என கெயில் நிறுவனம் தடை செய்வதால் தென்னை மரம் மற்றும் பழவகை மரங்களை சார்ந்துள்ள இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

10.
கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்த் தடம் சில இடங்களில் அனுமதி பெறப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகள், கல்வி நிறுவனங்கள் வழியாகச் செல்வதால் அவ்விடங்களில் எரிவாயுக் கசிவு அல்லது பெரும் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது.

மொத்தத்தில் தமிழ்நாட்டை சுடுகாடாக்க திட்டமிடப்படுகிறது !

நன்மைகள் என்ன? கொச்சினிலிருந்து பெங்களூருக்கு (தமிழகம் வழியாக) எரிவாயு கிடைக்கும். 

மத்திய அரசு ஒன்றை சிந்திக்க வேண்டும், திட்டங்களுக்காக மக்களா? அல்லது மக்களுக்காக திட்டங்களா?? சரியான கேள்வியை சரியான நேரத்தில் மத்திய அரசை நோக்கிக் கேட்ட தமிழக முதல்வருக்கு நன்றி !


மத்திய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படும் பட்டியல் தொடரும்..


கற்றல்! தெளிதல்! தெளிவித்தல் !! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்

Wednesday, April 3, 2013

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா? பகுதி-3


விவசாயத்தைக் குழிதோண்டி புதைக்கும் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டம்

கம்யூனிச நாடான சீனாவில், புதிய நெடுஞ்சாலை வழித்தடத்தை அமைக்க சர்வே எடுத்த பொழுது, ஒரு வயதான தம்பதியினரின் வீட்டை இடிக்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு எழுத்துப் பூர்வமாக அரசாங்கம் நோட்டிஸ் அனுப்பியது. ஆனால அந்த முதியவர்கள அரசாங்கம் வழங்கும் நஷ்ட ஈட்டில் தங்களுக்கு சம்மதமில்லை என்றும்எங்களுக்கு காலி செய்ய மனமில்லை என்றும், அந்த வீட்டில்தான தாங்கள் வசிக்க விரும்புவதாகவும், பதில் தெரிவித்தனர். அவர்களின் சம்மதமில்லாமல், வலுக்கட்டாயமாக, அவர்களை காலி செய்ய வேண்டாம் என்று அரசு முடிவு செய்து, அந்தக் கட்டிடத்திற்கு தொந்தரவு இல்லாமல், எந்த பாதிப்பும் இல்லாமல், சாலையை அமைத்துள்ளனர்.ஆதாரமாக இந்தப் பதிவின் கீழ் படத்தை இணைத்துள்ளேன், அதனை சொடுக்கிப் பார்க்கவும்.

ஆனால் நம்முடைய இந்தியத் திருநாடு, மக்களாட்சியில் உள்ள நாடு, விவசாயிகளின் விருப்பமில்லாமல், கலந்தாலோசிக்காமல், பரம்பரை பரம்பரையாக அவர்கள் விவசாயம் செய்து வரும், விளை நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளது. கேட்டால், மத்திய அரசு திட்டமிட்ட பின், கெஜட்டில் வெளியிட்டோம், அதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு வரவில்லை, அதனால் தான் தொடங்கினோம் என்று படித்த அறிவிஜீவிகள் டெல்லியில் இருந்துக் கொண்டு பேட்டி கொடுக்கிறார்கள். 

ஓட்டு பிச்சை கேட்க மட்டும், தெருத் தெருவாக வந்து மக்களை சந்திப்பீர்கள். ஆனால் மக்களுக்கு பாதகமான, விஷயத்திற்கு மக்களை சந்திக்காமல், டெல்லியில் கெஜட்டில் வெளியிட்டு விட்டு ஏ.சி.க்குள் அமர்ந்து கொள்வீர்கள். விவசாயிகள், தங்கள் வாழ்வாதரத்திற்காக வெய்யிலில் போராட வேண்டும், அப்படித்தானே!

7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு சாதகமாக, காவிரி பிரச்சினையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வக்கில்லை, 2 ஆண்டுகளில் திட்டம் தீட்டி, கெஜட்டில் வெளியிட்டு அடுத்தவன் விவசாய நிலத்தில் குழாய் பதிக்க வந்து விட்டீர்களாக்கும். நீங்கள் எல்லாம், கோட்டு சூட்டு போட்ட ... என்று நினைக்கத் தோன்றுகிறது. மனிதர்களாக நினைக்கத் தோன்றவில்லை. 

முதலில் உங்கள் சட்டத்தை, அப்பாவி ஏழை விவசாயிகள் பக்கம் நீட்டாதீர்கள். முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினைக்கு, உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்புகளை காலில் போட்டு மிதிக்கும், கர்நாடகா, கேரள அரசுகளிடம் சென்று உங்களின் சட்ட விசுவாசத்தைக் காட்டுங்கள்.
தமிழர்களுக்கு சாதகமான விஷயங்களை உடனே கெஜட்டில் வெளியிட மாட்டீர்கள், தமிழருக்கு பாதகமான, வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் உடனே கெஜட்டில் வெளியிடுவீர்களோ, என்னே உங்கள் ரூல் ஆஃப் லா, சட்டத்தின் ஆட்சி.  

வாழ்க இந்தியா ! வாழ்க ஜனநாயகம் ! வாழ்க இந்தியாவின் ஒருமைப்பாடு !!

மத்திய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படும் பட்டியல் தொடரும்..
கற்றல்! தெளிதல் !! தெளிவித்தல் !!! என்ற கொள்கையுடன்
இராம்கரன்Monday, April 1, 2013

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா? பகுதி-2


தமிழக மீனவர் பிரச்சினை

இரண்டு கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தாலி வீரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும், கேரள அரசும் திட்டவட்டமாக அறிவித்தது. இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இத்தாலி சென்ற அந்த வீரர்கள் இந்தியா திரும்பவில்லை.

இதற்கு பிரதமர் மன்மோகன் சிங், இத்தாலி அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். சோனியா காந்தி இத்தாலி துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

உச்சநீதிமன்றம் இரு வீரர்களுக்கும் உத்தரவாதம் அளித்த இத்தாலி தூதர் வெளிநாடு செல்வதற்கு அதிரடியாகத் தடை விதித்தது. அதன் பின் இத்தாலி அரசு பணிந்து, 2 வீரர்களையும் இந்தியாவுக்குத் திரும்பி அனுப்பியது.
இது இத்தாலிக்கான நிலை.

இனி, இலங்கையின் நிலையைப் பார்ப்போம்.
இதுவரை 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 


இந்திய அரசு இதுவரை இலங்கைக்கு எச்சரிக்கையும் விடுக்கவில்லை. தடுக்கவும் முயலவில்லை.

மார்ச் 13-ல் ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்றுவிட்டனர். தலைமன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 14-ல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
மார்ச் 18-ல் புதுக்கோட்டையைச் சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மார்ச் 13-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் உள்ள 19 மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து சனிக்கிழமைகூட மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் மத்திய அரசின் காதுகளில் விழுகிறதா?
தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட போதெல்லாம் மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதும், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் இலங்கையிடம் முறையிடுவதும் தொடர்கதையாக நீடித்து வருகிறது.

கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொலை செய்த இத்தாலி கடற்படையினர் தொடர்பாக இந்திய அளவில் பல்வேறு நிலைகளில் விவாதித்து, வேகம் காட்டும் மத்திய அரசு, தமிழக மீனவர்கள் 19 பேரின் சிறை நீடிக்கப்பட்டிருப்பதற்கு என்ன சொல்கிறது?

கேரள மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் பாரபட்சத்துடன் பார்ப்பது நியாயம்தானா?

ஒரு நிகழ்விலாவது கேரள மீனவர் - இத்தாலி கடற்படையினர் பிரச்னையில் பின்பற்றிய அணுகுமுறையும்வேகமும் தமிழக மீனவர் பிரச்னையில் கடைப்பிடிக்கப்பட்டது உண்டா?

தமிழ் இனப் படுகொலையை உள்நாட்டு விவகாரம் என்று சொல்லி தப்பிக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மக்களாக நினைக்கிறதா? இல்லையா ?

உடனடியாக நமக்குத் தெரிய வேண்டியது மத்திய அரசின் நோக்கம்தான் என்ன??

இவர்களின் எண்ணத்தை எந்த தகவல் உரிமைச் சட்டத்தைக் கொண்டு அறிவது?.

பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிவிட்டோமே தமிழர்களாகிய நாம் !!

மத்திய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படும் பட்டியல் தொடரும்..

கற்றல்! தெளிதல் !! தெளிவித்தல் !!! என்ற கொள்கையுடன்
இராம்கரன்


குறிப்பு:
இந்தப் பதிவின் நோக்கம், தமிழர்களின் நலனேயன்றி வேறில்லை. இதில் சிறிதும் அரசியல் இல்லை