Wednesday, March 20, 2013

தீர்மானமல்ல காரணம்

நல்ல பத்திரிக்கையின் ஒரு மோசமான தலையங்கம்

ஜோதிட ஆர்வலர்கள் மன்னிக்கவும் !

இந்தப் பதிவு ஜோதிடம் குறித்து அல்ல. இலங்கைத் துயரம் நடைபெற்ற,  இந்த சமகாலத்தில் வாழ்கின்ற ஒரு தமிழனின் உள்ளக் குமுறலே இந்தக் கட்டுரை.

26/1/2011 அன்று எழுதிய ஒரு பதிவில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்:
// எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய் என்று புத்தர் போதித்தார். ஆனால், அவரையே தெய்வமாக வழிபடும் ஒரு அரக்கர் கூட்டம், தென்னிலங்கையில், முள்ளி வாய்க்காலில், என்ன வெறியாட்டம் போட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அன்பு என்றால் 1 கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒரு கூட்டம், அன்பை போதிக்கும் புத்தனை வழிபடுகிறது. வெட்கக் கேடு! // என்று என் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியிருந்தேன்.

ஒரு நல்ல பத்திரிக்கையில், ஒரு மோசமான தலையங்கம் தீர்மானமல்ல காரணம் ! எழுதிய தலைக்கு வணக்கம் !
நான் தங்கள் பத்திரிக்கையின் 25 வருட வாசகன். சென்னையில் பல அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டங்களை நான் நேரில் பார்த்தவன், அவர்களின் பேச்சுக்களை கேட்டவன். எத்தனையோ முறை, கலைஞர் அவர்களின் பேச்சைக்கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பத்திரிக்கை செய்திகளை சுட்டிக்காட்டி, கலைஞர் பேச வேண்டிய சந்தர்ப்பம் வரும் போதெல்லாம், கட்சிசாரா பத்திரிக்கை என்று தினமணி பத்திரிக்கையை கையில் வைத்துக் கொண்டு அதன் தேதி, பக்கங்களை ஆதாரமாக பேசியதால் தங்கள் நடுவுநிலை மேல் நம்பிக்கைக் கொண்டு, தங்களின் நிரந்தர வாசகனாக மாறியவன் நான்.

ஆனால் சமீப காலமாக தாங்கள் எழுதிய பல தலையங்க கட்டுரைகள், என்னை வியப்பில் ஆழ்த்தின. எல்லாவற்றிற்கும் மேலாக, தாங்கள் இன்று எழுதிய தலையங்கம், என்னை திகைக்க வைக்கிறது. தாங்கள், துலாக் கோலை, தூக்கியெறிந்து விட்டு, சூட்டுக்கோலை கையில் எடுத்ததைப் போல் உள்ளது, இன்றைய தலையங்கம். தினமணியின் துலாக்கோலை ஆசிரியர்கள் மதிப்பிற்குரிய ஏ.என்.சிவராமனும், ஐராவதம் மகாதேவனும் தாங்கள், போகும் போது கொண்டு போய் விட்டார்களோ என அஞ்சுகிறேன். தங்களின் இன்றைய தலையங்கத்தை படிக்கும்போது, இப்படி நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு அரசியல்வாதி எழுதிய அல்லது தோட்டத்தில் யாரோ எழுதிக் கொடுத்த கட்டுரையை, எப்பொழுதும் கூறுவதுபோல, ஒரு குட்டிக் கதையுடன் கொடுத்ததை, தாங்கள் சுய நினைவு இல்லாமல், அச்சிட்டது போல தோன்றுகிறது. இடம் பொருள் புரிந்து கொள்ளாமல், நடப்பு சூழ்நிலை தெரியாமல், வெறும் ஆங்கில இலக்கிய அறிவை வெளிப்படுத்தவே, திமுகவை குற்றப்படுத்தவே, எழுதிய கட்டுரை போல இருக்கிறது இன்றைய தலையங்கம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், திமுகவின் நிலைப்பாடு தமிழர்கள் யாவரும் அறிந்ததே! 80களில் தொடங்கி, பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள். அதற்காக, கைது செய்யப்பட்டு, ஜெயிலுக்கும் போய் வந்தவர்கள். இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இரண்டு முறை தி.மு.க. ஆட்சியை இழந்தது, அதில் ஒருமுறை மாநில கவர்னரின் பரிந்துரையே இல்லாமல் ஆட்சி கலைக்கப்பட்டதை, பத்திரிக்கையாளர், அரசியல் நோக்கர் என்ற முறையில் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இதையெல்லாம், வசதியாக மறந்துவிட்டு தலையங்கம் தீட்டியதை எண்ணும்போது, அம்மாவுக்கு உள்ள செலக்டிவ் அம்னீஷியா என்னும் வியாதி, தங்களுக்கும் வந்து விட்டதோ என்று நினக்கத் தோன்றுகிறது. குற்றம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுத உட்கார்ந்த பிறகு, நல்ல விஷயங்கள் எங்கே நினைவுக்கு வரும். காமாலைக் கண்ணுக்கு, கண்டெதெல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்.

சமீப காலத்தில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள், திமுகவின் மேல் கோபப்பட, காரணம் என்னவெனில் முன்பு இருந்தது போல, 80-களில் இருந்தது போல,  தமிழீழ விஷயத்தில் திமுகவுக்கு அக்கறையோ அல்லது வேகமோ இல்லையென்பதுதான். சூடுண்ட பூனை அடுப்பண்டை போகாது என்ற பழமொழிக்கிணங்க கடந்த காலத்தில் அவர்கள் இரண்டு முறை ஆட்சியை இழந்து, அமரர் இராஜீவ் கொலையில் அநியாயமாக பழியைச் சுமந்து, இராஜீவ் கொலை வழக்கை விசாரித்த, ஜெயின் கமிஷனால் அவர்கள் விசாரிக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டது, இலங்கையில் அமைதியை நிலைநாட்டிவிட்டு (அப்படித்தான் அன்றைய மத்திய அரசு கூறி காமெடி செய்தது, அவர்கள் தமிழர் பகுதிக்குச் சென்று எதை நாட்டினார்கள் என்பது ஆண்டவ்னுக்கே வெளிச்சம், பகவான்கோ மாலும் ஹை) திரும்பிய அமைதிப்படையை, தமிழக முதல்வர் என்ற முறையில் வரவேற்க போகாதது, அது ஒரு குற்றமாகி, அவரை விசாரணைக்கு உட்படுத்தியது போன்ற எல்லாம் தான் காரணமாக இருக்க முடியும். ஒரு மாநிலத்தின் ஆட்சியை பிடிப்பது ஒரு எளிய காரியம் அல்லவே ! விருதுநகரில், இதே தமிழர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு சிறந்த பார்லிமண்டேரியன் வைகோவுக்கு தெரியும், ஆட்சியை பிடிப்பது எவ்வளவு கடினமான காரியமென்று.

இலங்கைப் பிரச்சினையில் அ.தி.மு.க. வின நிலைப்பாடு என்ன? இதுவரை என்றைக்காவது தெருவில் இறங்கி போராடியிருக்கிறார்களா? எவரேனும் கைது செய்யப்பட்டுள்ளார்களா? இலங்கைப் பிரச்சினைக்காக ஆட்சியை இழந்துள்ளார்களா? போர் என்றால், பலர் சாகத்தான் செய்வார்கள், என்று ஒரு வாசகத்தை திருவாசகமாக உதிர்த்ததைவிட வேறு என்ன பெரிதாக செய்து விட்டார்கள். ஈழத்தமிழர் விடியலுக்காக ஏதேனும் அமைப்பை உருவாக்கினார்களா, அதில் தன் சொந்தக்கட்சியை விடுத்து, வெளியில் உள்ளவர்களை தன்னுடன் இணைத்து, போராட்டம் செய்தார்களா? வட இந்தியர்களுக்கும், இலங்கைத் தமிழனின் துயரம் தெரிய வேண்டும் என்பதற்காக, அவர்களையும் இணைத்து போராட்டம் ஏதேனும் நடத்தினார்களா? அதனையும் ஆசிரியர், பட்டியலிட்டால், ஆளும்கட்சியின் பிரதான ஊது குழல் என்ற சிறப்பு பட்டமும் கிடைக்கும். இளம் வயதினருக்கு, சமூக வலைத்தளங்களில், தங்கிலீஷில் கருணாநிதியை திட்ட ஒரு வாய்ப்பாகவும் அமையும்.   

வைத்தியரே ! பதின்ம வயதில், படிக்கும் வயதில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ் உணர்வில், ஒன்று திரண்டிருக்கும் மாணவர்களைப் பார்க்கும் பொழுது, நடுவுநிலை தவறிய தங்களின் பத்திரிக்கை அரசியலால், இமய மலையின் கீழ் நிற்கும் எலியைப் போல எங்கள் பார்வைக்கு, தாங்கள் சுருங்கித் தெரிகிறீர்கள்.

தாங்கள் கூறிய அந்த ஷேக்ஸ்பியர் கதையை இலங்கை அதிபருக்கு, சிங்களத்தில் மொழிபெயர்த்து அனுப்பவும். அவருக்கே அந்தக் கதை மிகவும் பொருத்தமாக இருக்கும். மேலும் மலையாளத்தில் மொழி பெயர்த்து, தங்கள் குரூப்பின் மலையாளப் பத்திரிக்கையில் பிரசுரித்தால், களத்தில் நின்று, கொலைகார இலங்கை அரசுக்கு, தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக கொல்ல ஆலோசனை கொடுத்த, விஜய் நம்பியாரும், சதீஷ் நம்பியாரும் படித்து தெரிந்து கொண்டு, தங்களின் ஆங்கில இலக்கிய புலமைக்கு, பாராட்டு விழா நடத்துவார்கள். அதை விடுத்து, அந்தக் கதையை கலைஞருக்கு உவமையாக காட்டியது, ஆண்டவனுக்கே அடுக்காது !

ஒரு மாநில முதல்வரின், அதிகார வரம்பு என்னவென்று, படிக்காத பாமரர்களுக்கே இந்தக் காலத்தில் தெரியும்பொழுது, படித்த அறிவு ஜீவிகளான உங்களைப் போன்றவர்களுக்கு தெரியாதது வெடகப்பட வேண்டிய ஒன்று. ஒரு திரைபடத்தை மாநிலத்தில் திரையிட தடைவிதித்து, அதனால் ஒரு முதல்வர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. கோட்டைக்கே வந்து, பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை வரவழைத்து, அவசர அவசரமாக, தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று.

பக்கத்து மாநிலத்தில் தண்ணீர் வாங்க பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகாயத்திலிருந்து கூட கங்கையை கொண்டு வந்து விடலாம் போல, ஆனால் காவிரியை கொண்டு வர, ஆட்சிக்கு வந்து, 2 வருடங்கள் ஆகிவிட்ட்து, ஆனால் காவிரி வந்த பாடில்லை. இதுதான இன்றைய முதல்வர்களின் நிலை. ஒரு நாட்டின் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட கேரள, கர்நாடக மாநில அரசுகளை கண்டிக்க துப்பில்லாதது மத்திய அரசு. கருணாநிதி வாபஸ் வாங்கியிருந்தால், வேறு நாடான இலங்கை, இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்படாத, கொலைகார இலங்கை அரசு, போர் நிறுத்தம் செய்திருக்கும் என்ற தங்களின் தீர்க்க தரிசனத்தை எண்ணி, அதி மேதாவித் தனத்தை எண்ணி எண்ணி வியக்கிறேன்.

இன்று நடக்கவேண்டிய, எதிர்கொள்ள வேண்டிய விஷயத்தை பற்றிப் பேசாமல், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு, அறிவுரையும், எசரிக்கையும் செய்து, ஜனநாயகத்தின் ஒரு தூண் என நிரூபிக்காமல், என்றைக்கோ நடந்ததை இப்பொழுது, ஷேக்ஸ்பியர் கதையுடன் இன்று தலயங்கமாக எழுத வேண்டிய அவசியம் என்ன என்று தாங்கள் தெளிவு படுத்த வேண்டும். 

தயவு செய்து, பத்திரிக்கை தங்களின் கையில் இருப்பதற்காக, மான்புமிகு பொது ஜனத்தை முட்டாளாக நினைக்க வேண்டாம். நாங்கள் படித்தால் தான் அது பத்திரிக்கை, இல்லையெனில் அது வெறும் காகிதக் குப்பைதான்.

அம்மா முதல்வராக இருந்தால், ராஜபக்‌ஷே மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, போரை நிறுத்தியிருப்பாரோ, காமெடி பண்ணாதீங்க ஆசிரியரே !

எல்லாவற்றிற்கும் மேல், கூட்டணியை விட்டு தி.மு.க. வெளியே வந்ததற்கு அதிக கோபமும், வருத்தமும் பட வேண்டிய காங்கிரஸ் கட்சியை விட, அதிக கோபம் தங்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் வருவதை நினத்து, மனம் புல்லரிக்கிறது. மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று திமுகவே ஒரு நிலைபாட்டை எடுத்தபின், தாங்கள் எதற்காகவோ, யாருக்காகவோ பயந்து அவசர அவசரமாக இந்தத் தலையங்கம் எழுத வேண்டிய அவசியம் தான் என்ன என்ன?? அரசியல்வாதிகள் அரசியல் செய்வார்கள், ஆனால் நடுநிலைவாதியான தங்களுக்கான அவசியம்தான் என்ன்?

கூட்டணியில் இருந்து, சில பல காரணங்களால் வைகோவும், அதன்பின் காரியம் முடிந்த பின் கேப்டனும் கழட்டி விடப்பட்டார்கள், ஆனால் அதனை எந்தக்கட்சியும், எந்தப் பத்திரிக்கையும் கோபமாக விமர்சிக்கவில்லை, தலையங்கம் எழுதவில்லை, தி.மு.க.வும் போஸ்டர் அடிக்கவில்லை. ஆனால் இன்று நடப்பதென்ன? காங்கிரஸை கழட்டி விட்டதற்கு, திமுகவின் மேல் கோபப்பட்டு, அ.தி.மு,க போஸ்டர் ஒட்டுகிறது. காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை, அதிமுகவும், தலையங்கம் எழுதி தினமணியும் செய்கிறது. அனைத்தையும், மிஸ்டர் பொது ஜனம், கவனத்தோடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.  

யாரையோ திருப்திபடுத்த வேண்டி, அரசியல்வாதியின் மேடைப் பேச்சுக்களை விட மோசமான ஒரு கட்டுரை, தனி மனித தாக்குதல், வேறு நாட்டில் நடந்த, இனப்படுகொலைக்கு, கலைஞர்தான் காரணம் என்ற பொய்க்குற்றம் ஆகியவற்றை எழுதிய தினமணியின் இன்றைய தலையங்கம், தினமணியின் பத்திரிக்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக வரலாறு பதிவு செய்யும், என்பதை மறுப்பதற்கில்லை.

தங்களின் தலையங்கத்தில் தனிமனித வசைபாடுதான் இருக்கிறதே ஒழிய, தீர்மானத்திற்கான தீர்வுகள் சொல்லப்படவில்லை. இதிலிருந்தே தெரிகிறது, தங்களுக்கு, தமிழினத்தின் மேல் உள்ள அக்கறையின் அளவு..

தினமணியின் இப்போதைய உடனடித் தேவை, வைத்திக்கு வைத்தியம் செய்வதேயன்றி வேறொன்றுமில்லை.

கற்றல் ! தெளிதல் !! தெளிவித்தல் !!! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்

    


No comments: