Tuesday, March 26, 2013

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா? பகுதி-1


தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா? பகுதி-1

தமிழகம் தொடர்ந்து, மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்று ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் கூறுவதை, வெறும் அரசியலாகப் பார்க்க இயலாது. அது முற்றிலும் உண்மை என்று கடந்த பல ஆண்டுகளாக, தமிழகத்தில் நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது நிரூபணமாகிறது. தமிழக அரசியலில், கடந்த ஆட்சியாளர்களை, இப்போதைய ஆட்சியாளர்களும், இவர்களை அவர்களும் மாறி மாறி குற்றம் சொல்வதை, மத்திய அரசு மௌனமாக பார்த்தும் ரசித்தும் வந்தது, தமிழக மக்களும் இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று கூறி, தத்தமது அலுவல்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், மாணவர்களின் சமீபத்திய அறவழிப் போராட்டம், ஒட்டு மொத்த இந்தியாவையும், ஏன் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. மத்திய அரசு மாத்திரமல்ல, அனைத்து கட்சிகளுமே மிரண்டு விட்டன என்று சொன்னால் அது மிகையாகாது. இதுநாள் வரை, மூலைக்கு ஒருவராய் நின்று, மத்திய அரசை தங்கள் பாணியில் கேள்வி கேட்டவர்கள், இன்று, இரு பெரும் கட்சிகளும், ஏன் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த கட்சிகளும், ஒன்று சேர்ந்து, ஒரு விஷயத்தை, ஒரே நேரத்தில் கையில் எடுப்பதை நினைக்கும் போது, தமிழக மக்களுக்கு ஆனந்த கண்ணீர் வருவதில் வியப்பில்லை. மத்திய அரசு முழி பிதுங்கி நிற்கிறது.
  
மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்தும் எந்த ஒரு திட்டமும், தமிழர்களின் நலனுக்காக அல்ல. அதில் உள் குத்து இருப்பது, உள்ளங்கை நெல்லிக்கனி போல நமக்குத் தெரிகிறது. மாநில அரசை கலந்தாலோசித்து, மக்களின் கருத்தையறிந்து, பின் திட்டமிடப்படுவதில்லை. மத்திய அரசை ஆட்டுவிக்கும் படித்த அறிவு ஜீவிகளின் டெல்லி லாபியில் திட்டமிடப்படுகிறது. அவர்களுக்கு, தமிழர்களின் வாழ்வாதாரங்களோ, நலன்களோ கண்களுக்கு தெரிவதில்லை. இந்த தமிழினத்தை எப்படி பிச்சைக்காரனாக்குவது அல்லது அழிப்பது என்பது மட்டுமே, அவர்களின் குறிக்கோள், ஒன் பாயிண்ட் அஜெண்டா ! துன்பத்தில் இன்பம் காணும் அறிவுஜீவிகள். சுயநலவாதிகள். இனி நமது இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் காரணங்களை ஆராய்வோம்.

கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது, தென் தமிழக மக்களுக்கு கட்டப்படும் கல்லறை. சீனாவின் அச்சுறுத்தல், இலங்கையின் மேல் சீனாவுக்கு இருக்கும் காதல் போன்ற காரணங்களால், என்றைக்காவது ஒரு நாள், இலங்கையில் சீனா நிரந்தர இராணுவ மையம் அமைத்து விடும் என்று அறிந்த மத்திய அரசு, இலங்கையை மிரட்டுவதற்காக தமிழர்களுக்கு கட்டப்பட்ட கல்லறையே, கூடங்குளம் அணுமின் நிலையம். போர் என்று வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ, முதலில் தாக்கப்படுவது அந்த அணுமின் நிலையமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு தாக்கப்படுமேயானால், தமிழகத்தின் தென் பகுதியும், இலங்கையின் வட பகுதியும் கண்ணிமைக்கும் நேரத்தில், சுட்டெரிக்கப்பட்டு, சுடுகாடாகிவிடும். மொத்தத்தில், இலங்கையின் வடக்கு மாகாணமாக இருக்கட்டும், தமிழகத்தின் தென் மாவட்டங்களாக இருக்கட்டும், சாகப்போவது தமிழினமேயன்றி வேறல்ல. கூடங்குளமென்பது, இன்னொரு முள்ளி வாய்க்கால் ஆகிவிடும்.

30 ஆண்டுக்கு முன்பு போபாலில், மீத்தைல் ஐசோ சயனைட் வாயுக் கசிவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு இன்று வரை உரிய நீதி, கிடைக்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் நடந்த, இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கவில்லை. கூடங்குளத்தில் ஒரு விபத்து தெரிந்தோ, தெரியாமலோ நடந்து விட்டால் என்னாவது? ஐயகோ நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. 

கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்ப்பவர்கள், ரொம்ப நாட்களாக கேட்கும் முக்கியமான கேள்விகள் என்னவெனில், இந்த அணுமின் நிலையம் அமைக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், மாநிலம் எது? பிறகு இதனை கூடங்குளத்திற்கு, தமிழகத்திற்கு மாற்றியது யார்? இந்த மிக முக்கியமான கேள்விகளுக்கு இன்றுவரை மத்திய அரசிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. ஏன்??

நடைமுறையில் உள்ள மின் தட்டுப்பாட்டை மனதில் வைத்து, கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசோடு சுமூகமாகச் செல்லக் கூடாது என்பதே எமது கருத்தாகும். மக்களின் நியாமான கருத்து, கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். மக்களின் விருப்பமே பிரதானமாகும். இந்தி மாத்திரமல்ல, எந்த ஒரு விஷயத்தையும் மக்களின் விருப்பமின்றி திணிக்கக் கூடாது என்பதே மக்களாட்சியின் மாண்பாகும். முதல்வர் கூறியது போல, மக்களுக்காகத் தான் திட்டம். திட்டத்திற்காக மக்களல்லர். திட்டமிட்டு விட்டு அதற்காக மக்களை தயாராகச் சொல்வது, எந்த விதத்தில் நியாயம்.

இதற்கான தீர்வுகளை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம். 

மத்திய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படும் பட்டியல் தொடரும்..


கற்றல்! தெளிதல் !! தெளிவித்தல் !!! என்ற கொள்கையுடன்

இராம்கரன்


குறிப்பு:

இந்தப் பதிவின் நோக்கம், தமிழர்களின் நலனேயன்றி வேறில்லை. இதில் சிறிதும் அரசியல் இல்லை.

No comments: