Tuesday, November 29, 2011

மகர ஜோதி

”மகர ஜோதி” என்பது ஒரு அதிசயம் அல்ல. அது மனிதரால் ஏற்றப்படும் தீபம். பொன்னம்பல மேட்டில் இப்படிப்பட்ட ஒரு தீபத்தை ஏற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். "மகர ஜோதி' விவகாரத்தில் நடக்கும் மோசடியை வெளிக்கொரண வேண்டும் எனக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2011 ஜனவரி 14ஆம் தேதி சபரிமலை அருகே, புல்மேடுவில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 106 பேர் பலியாகினர். (இறந்தவர்களில் மலையாளிகளே இல்லை). இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் "மகர ஜோதியை மனிதர் யாராவது ஏற்றுகின்றனரா? இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மகர ஜோதி தோன்றுவது குறித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சேனல் எடமருகு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது : சபரிமலை பொன்னம்பல மேட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மகர ஜோதி தெரிகிறது. இதை அதிசயமானது மற்றும் புனிதமானது என, பல மாநில மக்கள் கருதுகின்றனர்.

அதனால், இந்த ஜோதியைக் காண, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் இந்த மகர ஜோதியானது, மூன்று முறை ஒளிந்து பின்னர் மறைந்து விடும்.

திட்டமிட்ட நாடகம்!

சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் தேவஸ்வம் போர்டும், இந்த மகர ஜோதியை அதிசயம் என்று கூறி வருவதால், இயற்கைக்கு முரணான இதைக் காண வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
மகர ஜோதி என்பது அதிசயம் அல்ல. கேரள மாநில மின்வாரியம் மற்றும் காவல்துறையினர், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுடன் இணைந்து நடத்தும் நாடகம்.

பெரிய பாத்திரத்தில் சூடத்தை (கற்பூரத்தை) ஏற்றி, பின்னர் அதை மூடி மறைத்து ஒளிருவது போல காட்டுகின்றனர். இது செயற்கையாக உருவாக்கப்படும் ஜோதியே.

மனிதரால் உருவாக்கப்படும் இந்த மகர ஜோதியை ஒரு அதிசயம் எனக் கூறி, மக்களிடையே மூடநம்பிக்கையைப் பரப்பி வருகின்றனர்.

இது அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 25ஆவது பிரிவுகளை மீறிய செயல்.
( அதுசரி, முல்லைப் பெரியாறு விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்களுக்கு இது எம்மாத்திரம்)

கடந்த 1999ஆம் ஆண்டில் மகர ஜோதியை காண வந்த பக்தர்கள் 53 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 106 பேர் பலியாகியுள்ளனர்.

எனவே, செயற்கையாக தீபத்தை ஏற்றி, அதை மகர ஜோதி எனக் கூறி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்ட , சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்குத் தடை விதிக்க வேண்டும்.

இந்த ஜோதி இயற்கையானது அல்ல என, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, கேரளா, தமிழகம், ஆந்திர, கர்நாடக மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடவுள் விஷயத்திலேயே ஒரு அரை நூற்றாண்டு தமிழகத்தையும், மற்ற மாநிலங்களையும் ஏமாற்றியவர்கள், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் மன்மோகன் சிங்கையும், சோனியாவையும் ஏமாற்றுவதா பெரிய விஷயம் !
சாமியே சரணம் அய்யப்பா ! அப்பப்பா !!

ஆதாரங்களுடன் கூடிய காணொலி :

http://www.youtube.com/watch?v=h0L9LkVj_vY&feature=related

http://www.youtube.com/watch?v=DDYp9htK0g8&feature=related

http://www.youtube.com/watch?v=L4zZvaff31I&feature=related


கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்!
என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com


Monday, November 28, 2011

திருவண்ணாமலை தீபமும், மகர ஜோதியும்


திருவண்ணாமலை தீபம்
இறைவன் பஞ்சபூதத்திலும் உள்ளார், என்பதை தற்போதைய இந்து மதமும், 5000 ஆண்டுகளுக்கு முந்தைய வடக்கே வாழ்ந்து, பின் தெற்கே இடம்பெயர்ந்த, சிந்து சமவெளி திராவிடர்கள் இயற்கையை வணங்கினர் என்று வரலாறும் கூறுகிறது. இயற்கையை நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்று 5 வகைகளாகப் பிரிக்கலாம். இதனைத்தான் பஞ்சபூதங்கள் என்று சொல்கின்றனர். இந்து புராண, இதிகாசங்களிலும், அக்னி தேவன், வருண பகவான், வாயு பகவான் என்று துறைத் தலைவர்களை (HOD - Head of Department), வேதகாலத்தில் அப்பாயின்மெண்ட் ஆர்டர் கொடுத்து பணியில் நியமித்தார்கள்.
இருப்பினும், தென்னிந்தியாவிற்கு வந்த திராவிடர்கள் இந்த HODகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று கருதியோ, தமது துறைகளை (மக்களின் நல்வாழ்வுக்காக) சரிவர கவனிப்பதில்லை என்று கருதியோ, அல்லது முதல்வர் செல்லில் நேரடியாக முறையிட்டால் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருதியோ, முதல்வரான, ஆதிமுதல்வரான, ஆதிமூலமான, சிவபெருமானையே இந்த பஞ்சபூதங்களையும் ஆளுமாறும், கூடுதல் பொறுப்பை ஏற்று மனித குலம் தழைக்க அருள் செய்யுமாறும் வேண்டத் தொடங்கினர்.

தென்னாட்டவர்க்குச் சிவனே போற்றி !
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

என்று சிவனை வேண்டினர். அதனை சிவனும் ஏற்று, மக்களுக்கு பஞ்சபூதங்களால் வரும் சோதனைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை வழங்க வேண்டியும், மக்களின் துயர் தீர்க்கவும் 5 முகாம்களை ஏற்படுத்தினார்.
நிலம் : காஞ்சிபுரம்
நீர் : திருவாணைக்காவல்
நெருப்பு : திருவண்ணாமலை
வாயு : காளஹஸ்தி
ஆகாயம் : சிதம்பரம்

இந்த பதிவில் நாம் அக்னி சொருபமாக திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவனையும், திருவண்ணாமலையின் சிறப்பையும் காணலாம். திருவண்ணாமலைக்கு வரலாறு உண்டு. திருவண்ணாமலைக் கோவில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் (சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு) சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகளும், தொல்பொருள் ஆய்வுகளும் கூறுகின்றன. கி.பி 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, அனைவரும் இன்றளவிலும் வியக்கின்ற திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர் வாழ்ந்த இலக்கியச் சான்றுகளும், வரலாறும் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகான் ரமண மஹரிஷ, யோகி ராம்சூரத்குமார் போன்ற பலரும் ஞானம் பெற்ற, சமயக் குரவர்களால் பாடப் பெற்ற தலம்தான் திருவண்ணாமலை. திருவண்ணாமலை ஒரு சிறிய மலைதான், சில மணி நேரங்களில் வலம் வந்துவிடலாம். ஆனால் இந்த மலையை, இதன் சிறப்பை உணர்ந்த பக்தர்கள் முழுப் பழமாக சாப்பிட்டால்தான் கூடுதல் பலன் அடையலாம் என்று திருவிளையாடலில், நாரதர் சொன்னதைப் போல, சிவனையும் வலம் வந்தது போலவும் ஆயிற்று, அக்னியையும் (தீபம்) வலம் வந்தது போலவும் ஆயிற்று, மகான்கள் தங்கி ஞானம் பெற்ற புனித மலையை வலம் வந்து அவர்களின் ஆசியையும் பெற்றது போலவும் ஆயிற்று என்று நினைத்து கிரி வலம் வந்து ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்து விடுகிறார்கள்.

கார்த்திகை மாதத்தில், வரும் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரம் வரும் நாளில், திருவண்ணாமலையில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி சிவனை அக்னி வடிவில் வழிபடுகிறோம். இந்த வழிபாட்டில் எந்த ஒரு ஒளிவும், மறைவும் இல்லை. குன்றில் இட்ட தீபத்தை தெள்ளத் தெளிவாக அனைவரும் காணலாம். இனி, கந்த புராணத்தையும் சற்று நோக்கலாம். அசுரனின் செயலால் கோபப்பட்ட, சிவன் அசுரனை அழிக்க வேண்டி நெற்றிக் கண்ணைத் திறந்ததாகவும், அதிலிருந்து 6 தீப்பொறிகள் வெளிவந்து சரவணப் பொய்கையில் விழுந்து, குளிர்வடைந்து 6 குழந்தைகளாக மாறியதாகவும், அந்த 6 குழந்தைகளை வளர்க்க (பார்வதி தேவி ஹவுஸ் ஒயிஃப் அல்ல, ஒர்க்கிங் உமன் என்பதால்) 6 பேபி சிட்டர்களை சிவன் பணியில் அமர்த்தியதாகவும், அவர்கள் நல்ல முறையில் பால முருகர்களை வளர்த்து, சிவ, பார்வதியிடம் ஒப்படைத்தபின், அவர்களை ஆசீர்வதித்த சிவன், நீங்கள் வானத்திலும், மனிதர் மனதிலும், நிலையான இடத்தைப் பெறுவீர்கள் என்று சொல்லி அவர்களை, 6 கார்த்திகை நட்சத்திரங்களாக மாற்றிவிட்டார் என்று கந்த புராணம் கூறுகிறது. பண்டைய ஜோதிட நூல்களிலும் அறுமீன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதையில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பார்வதி, சிவனுடன் இணைந்து, பின் பிள்ளை பெறவில்லை. அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர். இறைவன், இறைவி இணைந்து பிள்ளை பெறவேண்டும் என்றில்லை. அவர்கள் எல்லாவற்றையும், கடந்தவர்கள். ஏன் இதனை சொல்கிறேன் என்றால் பின்னால், மகரஜோதி கதைக்கு உதவலாம் என்பதால்தான்.

இவ்வாறு நட்சத்திரமானவர்கள் ஆறுமுகப்பெருமானை வளர்த்தவர்கள் என்பதால், முருகர் கோவிலிலும் கார்த்திகைத் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் அறுமீன்களை வெறும் கண்களாலேயே வானத்தில் பார்க்கலாம்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

அடுத்தப் பதிவு: தி கிரேட் மகரஜோதியைப் பற்றி ஆராயலாம்.